privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்என்.டி.சி தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்

என்.டி.சி தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்

-

த்திய அரசிற்குச் சொந்தமான தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையே டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டபடி

  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனே அமுல் படுத்த வேண்டும்;
  • கடந்த ஓராண்டாக தொழிலாளருக்கு வழங்கப்படாமல் இருக்கின்ற அரியர்சை உடனே வழங்க வேண்டும்.
  • வேலை ஒப்பந்த காலத்தை மூன்றாண்டுக்கானதாக கால நிர்ணயம் செய்ய வேண்டும்

ஆகிய மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் கடந்த 23/01/2014 அன்று தொடங்கிய பஞ்சாலைத் தொழிலாளர்களது வேலை நிறுத்தமானது நிர்வாகத்தின் வீம்பினால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு தமிழகத்தில் மட்டும் ஏழு ஆலைகள் உள்ளன. அதில் ஐந்து கோவையிலும் ஒன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலிலும் மற்றொன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியிலும் இயங்கி வருகிறது.

ஒரு தனியார் ஆலைக்கு நிகரான தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் என்.டி.சி நிர்வாகம், இம்முறை தொழிலாளர்களிடம் வசமாகச் சிக்கிக்கொண்டது. ஒவ்வொரு ஆலைக்கும் ஒவ்வொருவிதமான நடைமுறைகளை தங்களது விருப்பம் போல நடைமுறைப்படுத்திக் கொள்வது, ஒரு அரசு நிர்வாகமாக இருந்துகொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை வம்படியாக மீறுவது என ஆளில்லாக் காட்டில் ஆலவட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. தொழிலாளர் மீதான குறைந்த பட்ச அக்கறை கூட காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருப்பது என்.டி.சி ஆலையில் நிலவும் மோசமான ஒடுக்குமுறைச் சூழ்நிலையாகும்.

கோவைப்பகுதியில் நிர்வாகமானது சற்று அடக்கி வாசித்தாலும் காளையார்கோவிலிலும் கமுதக்குடியிலும் ஆட்டம் போடுகிறது. தாங்கள் போராடிப்பெற்ற உரிமைகள் என்னென்ன என்பதைக்கூட தொழிலாளர் அறிந்து வைத்திருக்கவில்லை. பிழைப்புவாதத்தில் பிழைப்பு நடத்தும் போலித் தொழிற்சங்கங்களும் இவற்றை தொழிலாளர்க்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. இருக்கும் உரிமைகள் என்னென்னவென்றே அறியாதபோது இழக்கும் உரிமைகள் பற்றி அறிந்திருக்க முடியுமா?

ஆனால், கடந்த நான்காண்டிற்கு முன்பிலிருந்து நிலைமைகள் மாறத் தொடங்கியிருக்கிறது. புஜதொமுவின் தோற்றத்திற்குப் பிறகு கோரிக்கைகள் அதன் உச்சகட்டம் நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. அதுபோலவே தொழிலாளிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியிலும் அதன் செயல்பாடுகள் நம்பிக்கை தரத் தொடங்கியுள்ளன.

இப்போதைய போராட்டம் கூட இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்களைப் போலல்லாது சங்க வித்தியாசம் பாராமல் அனைத்துத் தொழிலாளரும் தன்னுணர்வோடு போராட்டத்தைத் துவக்கினர். சில பிசிறுகள் இருந்தாலும் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இப்போராட்டத்தை நடத்த வேண்டும் என ஆரம்பம் முதலேயே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கமானது தொடர்ந்து முயற்சித்து வந்தது.

இன்னும் பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டிருக்கிறது. வேலை நிறுத்தத்தைக் கைவிட்டால்தான் ஏதேனும் பிச்சையாகத் தரப்படும் என நிர்வாகம் வீம்புகாட்டி வருகின்றது. வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்கு ஒருகோடி ரூபாய்களுக்கும் மேலாக உற்பத்தி இழப்பு நடைபெறுவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த வேலை நிறுத்தத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள இழப்பு நாளொன்றுக்கு பத்து லட்சம் ரூபாய்களுக்கும் மேல் என்பதை திமிர் கொண்ட நிர்வாகம் உணரவில்லை. அது இன்னும் பழைய நம்பியார் காலத்து வில்லன் போலவே நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில் காளையார் கோவில் காளீஸ்வரா மில் “பி” யூனிட்டிற்கு குறுக்கு வழியில் பொதுமேலாளராக வந்திருக்கும் சிவராம்ராஜ் வேலைநிறுத்தத்தை உடைப்பதற்காக வெளியூரிலிருந்த தனியார் ஆலைத் தொழிலாளர்களை ரகசியமாக நள்ளிரவில் அழைத்துவந்து மில்லை இயக்கினார். செய்தி கேள்விப்பட்ட தொழிலாளர் ஆலையின் முன் திரண்டனர். நிர்வாகத்தைக் கண்டித்தனர். வேலைக்கு வந்த தொழிலாளர்களிடம் நிலைமையை எடுத்துக் கோரினர். அதன் பின்னர் ஆலையை இயக்க சிவராம்ராஜால் முடியவில்லை. போராட்ட நிலைமையை விளக்கியும் பொதுமேலாளரைக் கண்டித்தும் காளையார் கோவில் ஆலையின் முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதென புஜதொமு முடிவு செய்து அனைத்துச் சங்கத் தொழிலாளரிடமும் ஆதரவு கோரியது. இதை ஏற்றுக் கொண்ட தொழிலாளர் அனைவரும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் 30/01/2014 அன்று காளையார்கோவில் மில்லின் முன்னால் நடைபெற்றது.

புஜதொமுவின் தோழர் சரவணன் தலைமையேற்றார். அடுத்துப் பேசிய ஆலைத்தொழிலாளி புஜதொமு தோழர் மருதுபாண்டியன் “இதுவரை ஒரு சி.எல்.ஆர் தொழிலாளியைக்கூட நிரந்தரம் செய்யாத அக்கறை காட்டாத பொதுமேலாளர் சிவராம்ராஜ் ஆலையைத் திறப்பதில் மட்டும் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.

அதன் பின்னர், கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் பழனிச்சாமி உரையாற்றினார். அதன்பிறகு பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், சமூகத்தின் அடிப்படை இயங்குசக்தியான தொழிலாளர் வர்க்கத்தை நாட்டின் ஆளும் வர்க்கமாக உயர்த்துவதுதான் புஜதொமுவின் பணி என்றார். அதன்பிறகு பேசிய தோழர் நாகராசன், தனியார்மய, தாராளமய, உலமயக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் தாங்கள் போராடிப்பெற்ற உரிமைகளைத் தொழிலாளி வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதையும், இதனால் அது மேலும் மேலும் துயரங்களை அனுபவித்து வருவதையும் விளக்கியதோடு தொழிலாளர் வர்க்கம் ஒரே சங்கமாக வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார். அதன்பிறகு பேசிய கோவை மண்டலப் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தோழர் ஜெகன்னாதன் நடைபெற்றுவரும் போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நிர்வாகத்தின் திமிரான போக்குகள் பற்றியும், எடுத்துக்கூறி தொழிலாளர்களை பல சங்கங்களாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளதை வைத்து இனி ஏமாற்ற முடியாது, அவர்கள் ஒரே சங்கமாக இணையும் காலம் வந்துவிட்டது என்றார். தொழிலாளர் உரத்தகுரலில் இடியென முழக்கிய முழக்கங்களோடு இறுதியாக புஜதொமு தோழர் தங்கவேலு நன்றிகூற ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.

இன்னும் தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களை நடத்த வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற தொழிலாளருக்கு தேவையானது ஒன்றே ஒன்றுதான். அது போலிகளை விலக்கி அசலை அணுக வேண்டிய கண்ணோட்டம். அதன் கட்டாயத்தை விரைவில் தொழிலாளர் உணர்வர். அப்படி உணர்ந்ததும் நாட்டின் நிலைமை நிச்சயம் தலைகீழாய் மாறும். மாறியே தீரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
செய்தியாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு.