Thursday, October 22, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் காவிரியில் தமிழ் நீர் பாய்ச்சிய கிருஷ்ணவேணி

காவிரியில் தமிழ் நீர் பாய்ச்சிய கிருஷ்ணவேணி

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 16

8-வது அல்லது 9-வது வகுப்பில் இருந்தேன். எந்த வகுப்பு என நினைவில் இல்லையெனினும், அது மதிய வேளை, தமிழ் பாடத்திற்கான நேரம் என்பது மட்டும் நினைவில் உள்ளது. அன்று தமிழ் ஆசிரியை எதுகை மோனை பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கவிதைகளில் அவற்றின் பயன்பாட்டினைப் பற்றி பேசும் போது, எனக்குள் “நாமளும் ஒரு கவிதை எழுதினா என்ன” என சட்டென ஒரு எண்ணம். அன்று வீட்டுக்கு திரும்பிய உடன், ஒன்று எழுதவும் செய்தேன். அந்த ‘கவிதை’ இன்றும் எப்படி நினைவில் உள்ளது என்பது புரியாத புதிர்.

“கண்டேன் ஒரு கனவு;
கனவில் நிகழ்ந்தது களவு
கனவில் கள்வன் திறந்தது கதவு
திறந்ததும் கலைந்தது கனவு”

எழுதி முடித்த உடன், அப்படி ஒரு அளவு கடந்த மகிழ்ச்சி! அப்பொழுது எனக்கு தெரிந்ததெல்லாம், ‘கவிதை என்பது ஒரே மாதிரியாக ஒலிக்கும் சொற்களில் முடியும் நான்கு வரி கொண்ட சொற்றொடர்’. அந்த விதத்தில், ‘நாமும் ஒன்று எழுதி விட்டோம்’ என்ற களிப்பு.

அம்மா அப்பாவிடம் காட்டி மகிழ்ந்தாலும், மிஸ் இடம் காட்டுவது ஒன்று மட்டுமே என் குறிக்கோளாக இருந்தது.

பொழுதும் விடிந்தது…பள்ளியினுள் நுழைந்த உடன், தமிழ் ஆசிரியையை பார்க்க விரைந்தேன். என் எழுத்துக்களை படித்த படியே, அவரின் முக பாவனை சற்றே மாறியது.

“பிடிக்கலையோ…இல்ல இதெல்லாம் ஒரு கவிதையானு நினைக்கறாங்களோ”, என்று கேள்விகள் சரமாரியாக மண்டைக்குள் ஓடிக்கொண்டிருக்க, “தொடர்ந்து தமிழ் படிப்பல்ல அனு; இதுமாதிரி நெறைய எழுது; எழுத எழுத புது புது சொற்கள் பயன்படுத்துவ…ஆனா எழுதறத கைவிடாத”, என்றார், ஒரு சோகமும் ஏக்கமும் கலந்த குரலில்.

எனக்கு அதற்கான பொருள் விளங்கவில்லை, பதினொன்றாம் வகுப்பு வரும் வரையில்.

பதினொன்றாம் வகுப்பில் என் இரண்டாம் மொழியை (second language) மாற்றிக்கொள்ள எல்லாப் பக்கத்தில் இருந்தும் அறிவுரைகளும், கட்டளைகளும் வந்த வண்ணம் இருந்தன.

“இல்ல…10 வருஷம் படிச்ச ஒரு மொழிய படிக்கறது ஈசி….இதுவே சமஸ்கிருதம் இல்ல பிரெஞ்ச்னா, அதுக்குன்னு தனியா மெனக்கெடனும். அந்த நேரத்துல இயற்பியல் இல்ல வேதியலில் கவனம் செலுத்தலாம்”, என்ற காரணத்தை கூறியபடி அனைவரின் வாயையும் அடைத்தேன்.

மொழி, கலாச்சாரம், சமூகம்
மொழி, கலாச்சாரம், சமூகம்

“பிரெஞ்ச் எடுத்தவன் எல்லாம் அப்ப முட்டாளா….அவன் மத்த பாடத்துல எல்லாம் நல்ல மார்க் வாங்கல”, என்ற பள்ளி முதல்வரின் யதார்த்தமான கேள்விக்கும், “எனக்கு அந்த ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்ல”, என கூறி மீண்டும் வாயடைப்பு. இதனால் அவரின் பார்வையில் ‘கெட்ட பொண்ணு ‘ ஆனதுடன், தமிழ் எடுத்த ஒரே காரணத்திற்காக அந்த வருடத்தின் ‘சிறந்த மாணவி’ பரிசையும் தவறவிட்டேன்.

பன்னிரெண்டாவது முடித்தேன்; ‘ நல்மதிப்பெண்கள் வாரி வழங்கும் மொழிகள்’ உதவியின்றி நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன்; பொறியியல் கல்லூரியிலும் இடம் பிடித்தேன்.

அன்று அனுபவசாலிகளை எதிர்க்க, அசாதாரணமான துணிச்சலை கொடுத்தது தமிழ் மொழியின் எளிமையும், “அத படிக்கறது ஒன்னும் கஷ்டமே இல்ல’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை எனக்குள் விதைத்த என் தமிழ் ஆசிரியை கிருஷ்ணவேணி அவர்களும் தான்.

வியக்கத்தக்க விஷயம் என்னவெனில், என் தாய் மொழியை காதலிக்க வைத்த தமிழ் ஆசிரியையின் தாய் மொழி தெலுங்கு.

பள்ளிக்காலத்தில், திருக்குறள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவேன், 10 மார்க் கேள்விகளுக்கு ‘200 சொற்களில் விடையளி அல்லது மனப்பாடப் பகுதியை அடிபிறளாமல் எழுது’ என்ற போதெல்லாம், மனப்பாடப் பகுதியையே விரும்பி எழுதினேன்.

அதற்கு காரணம், தமிழ் மொழி மீது இருந்த காதலாக மட்டும் இருந்திருக்க முடியாது. அது நிச்சயம் எனக்கு பிடித்த தமிழ் ஆசிரியைக்கு பிடிக்கவேண்டும் என்பதற்காக எடுத்த முயற்சிகளே!

இன்று திருமணமாகி இங்கு ஆஸ்திரேலியாவில் குடி உரிமை. புதிய இடம், புதிய மக்களுடன் தொடர்பு, மக்களுடன் பேசிப்பழக புதிய மொழி எனப் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. என் கணவன், சில நண்பர்கள் வழி பகுத்தறிவு சிந்தனைகளுக்கு அறிமுகம் கிடைத்தது. சாதியம், தலித் மக்களின் வாழ்க்கை அவலம், கடவுள் மறுப்பு பற்றிய மேடை பேச்சுகள் கணினியில் நிறைய கேட்க ஆரம்பித்தேன்.

ஆ ராஜா என்றவுடன் அனைவருக்கும் 2ஜி அலைக்கற்றை ஊழல் நினைவுக்கு வருவது போல், எனக்கு நினைவுக்கு வருவதெல்லாம், அவரின் சாதியம் பற்றிய ஒரு மேடைப் பேச்சும், அதனால் எனக்கு நிகழ்ந்த பல மனமாற்றங்களும். வினவு, கீற்று போன்ற வலைச்சரங்களும், ‘புதுமைப்பித்தன் கதைகள்’ போன்ற புத்தகங்களும் படிக்க ஆரம்பித்தேன்.

“பொண்ணுங்க ஹேப்பியாதான இருக்கோம்…பெண் விடுதலை, பெண்ணடிமை எல்லாம் தேவையில்லாத வெட்டிப்பேச்சு”,

“ஒரு சூப்பர் பவர் இல்லேனா எப்படி…யாருக்கு என்ன கெடைக்கணும்னு அவன் decide பண்றான்”,

“பிராமின்ஸ் நல்ல மார்க் எடுக்கறாங்கனா, அது அவங்க ஜீன்கள்ள இருக்கு”,

“குளோபலைசேஷன் மட்டும் இல்லேனா, சைனீஸ் உணவு, வெஸ்டர்ன் உடை  எல்லாம்…நமக்கு ஒரு கனவாவே இருந்திருக்கும்”,

போன்ற ஆபத்தான, அபத்தமான பல விஷ(ய)ங்கள், தவிடுபொடி ஆனது. சமூகம் பற்றிய என் பார்வையை பகிர்ந்துக்கொள்ள ஒரு வலைச்சரம் ஆரம்பிக்கும் ஆர்வத்தையும் தூண்டியது; பிதற்றல் பிறந்தது.

தாய் மொழி ஆனபோதிலும், அம்மொழியை விரும்பிப் படிக்கவும், அதை தொடர்ந்து படிக்கவும், எழுதவும், உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும் வழிவகுத்த என் தமிழ் ஆசிரியை கிருஷ்ணவேணி அவர்களுக்கு என் நன்றிகள். 15 வருடங்கள் பக்கம் ஆகி விட்டது. அடுத்த முறை இந்தியா வரும் போது, நிச்சயம் அவர்களை சந்திக்க வேண்டும்.

என் தமிழ் ஆசிரியை பற்றிய ஒரு பதிவு எழுத ஒரு சில முறை தோன்றிய போதிலும், வினவு தளத்தின் இந்த புது முயற்சியே அது நிறைவேற வழிவகுத்தது. நன்றி வினவு!

யாருக்குத் தெரியும்….இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், “we speak only English”, என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.

– அனுராதா
(பிதற்றல்)

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. தாய்மொழிக் கல்வி ஒன்றுதான் அறிவை வளர்க்க உதவும் . தாய்மொழியைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளால்தான் பிற மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ள முடியும் .உங்கள் மொழிப்பற்று மகிழ்ச்சியை அளிக்கிறது , வாழ்த்துகள் . தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட உங்கள் ஆசிரியருக்கும் வாழ்த்துகள் .

Leave a Reply to மணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க