privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசெல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்

செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்

-

திருச்சியில் பாய்லர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் 01.02.2014 திங்கட்கிழமை ஐம்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தை கண்டித்து செல்பொன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்தினர்.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சித்தார் வெசல்ஸ் என்கிற பாய்லர் கம்பெனி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ஏழு ஆலைகளை இயக்கி வருகிறது. திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள இந்நிறுவனத்தின் மாத்தூர் கிளையில் பணிபுரிந்துகொண்டிருந்த 56 ஒப்பந்த தொழிலாளர்களை நிர்வாகம்  திடீரென்று வேலை நீக்கம் செய்ய முடிவு செய்தது. இக்கிளையில் நிரந்தரத் தொழிலாளிகள் 144 பேர் பணிபுரிகின்றனர். வேலை நீக்கத்திற்கு, பொருளாதார மந்தத்தால் போதுமான ஆர்டர்கள் கிடைக்கவில்லை என்பது காரணமாக கூறப்பட்டது. வேலைநீக்க அறிவிப்பை தொழிலாளிகளிடம் கூறியபோது கடுமையாக எதிர்த்துள்ளனர். “இதை ஏற்கமுடியாது நாங்கள் வேலைக்கு வருவோம், வேலை தராவிட்டால் போராடுவோம்” என்று கூறியுள்ளனர்.

சித்தார் வெசல்ஸ்
சித்தார் வெசல்ஸ் நிறுவனத்தின் பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பின்னே தொழிலாளர்களின் இரத்தமும் சதையும் கலந்துள்ளது..

நிர்வாகம் நேரடியாக போலீசிடம் சென்றது. ‘ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிலரை வேலையிலிருந்து நீக்கியுள்ளோம். அவர்களால் வேலைக்கு வந்துகொண்டிருக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ஆபத்து உள்ளது. எனவே நிரந்தரத் தொழிலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பளிக்க வேண்டும்’ என்று கூறி மனு கொடுத்தது. முதலாளிகள் கூறியதால் ‘தொழிலாளிகளுக்கு பாதுகாப்பளிக்க’  திங்கட்கிழமை அதிகாலையிலேயே கீரனூர் டிஎஸ்பி தலைமையில் ஏராளமான போலீசார் ஆலையின் முன்பு குவிக்கப்பட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழக்கம் போல் காலை ஷிப்டிற்காக வந்தனர். ஆலை நிர்வாகமோ நீங்கள் அனைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறி உள்ளே விட மறுத்தது. அதை கண்டித்து தொழிலாளர்கள் ஆலையின் முன்பே முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தரத் தொழிலாளர்களையும் வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்து ஆதரவு கோரினர். ஆனால் ஆலை நிர்வாகம் நிரந்தரத் தொழிலாளிகளை ஒப்பந்தத் தொழிலாளிகளுடன் பேசவிடாமல் பத்திரமாக காப்பாற்றி உள்ளே அனுப்பி உற்பத்தியில் ஈடுபடுத்தியது.

ஆனால் நிரந்தர தொழிலாளிகளுக்கும் சித்தார் வெசல்ஸ் முதலாளிகள் தீபாவளி போனசிலும், சம்பளத்திலும் கூட பாக்கி வைத்துள்ளனர். எனவே உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிரந்தரத் தொழிலாளர்களும் மதியம் உற்பத்தியை நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். தங்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் பாக்கியையும், சம்பள பாக்கியையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினர். நிலுவையில் உள்ள சம்பளத்தையும், போனசையும் உடனடியாக வழங்கா விட்டால் தற்கொலை செய்துகொண்டு செத்துப் போவோம் என்று தொழிலாளர்களில் ஐம்பது பேர் ஆலை வளாகத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறினர்.

மேலே ஏறியவர்கள் மாலை வரை இறங்கவில்லை. நிர்வாகமும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. 6 மணிக்கு பிறகு தான் புதுக்கோட்டை மாவட்ட ஆர்.டி.ஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, பேச்சுவார்த்தையில் சம்பள பாக்கி, போனஸ் பாக்கியை வழங்க நிர்வாகம் உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினர்.

பாய்லர் தயாரிப்பில் BHEL-ஐ தவிர இந்தியா முழுவதும் வேறு யாரும் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் 25 வருடத்திற்கு முன்பு BHEL-ல் வேலை பார்த்த 7 அதிகாரிகள் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு வெளியேறினர். வெறும் ரூ 2 கோடி முதலீட்டைக் கொண்டு பாய்லர் தயாரிப்தற்கான சித்தார் வெசல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உழைத்து உரமேறிய கைகளால் இயந்திரங்களை இயக்கி, கண்களை அசர விடாமல் கண்விழித்து வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து கம்பெனியின் இலக்கை (டன்னேஜ்) அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் CVL-ன் ஏழு யூனிட்டுகளும். 2011-2012 ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ 2,400 கோடியையும், கிடைத்த லாபத்தையும் வைத்துகொண்டு சித்தார் அக்ரோ புட்ஸ், சித்தார் மருத்துவமனை என்று பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பின்னே தொழிலாளர்களின் இரத்தமும் சதையும் கலந்துள்ளது.

இந்நிறுவனம் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கண்டித்து ஜான்சன் டேவிட் என்கிற தொழிலாளி 2012-ம் ஆண்டு ஆலையின் முன்பே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

இப்போது அதே ஆலையில் 50 தொழிலாளிகள் சம்பளம் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என்று போராடியுள்ளனர். 56 ஒப்பந்தத் தொழிலாளிகளை வேலையிலிருந்து நீக்கி அவர்கள் வாழ்க்கையை அழித்திருக்கிறது நிர்வாகம்.

பொருத்தமாக அதே நாளில்தான் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தொழிலாளர்களைப் பற்றி பேசியுள்ளார். திங்கட்கிழமை சட்டப்பேரவையில் உரையாற்றிய ஜெயலலிதா தனது இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் 76.39 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் என்பதை சித்தார் வெசல்ஸ் தற்கொலைப் போராட்டங்களும், வேலையில்லை என்று கூறியதால் கையில் காசில்லாமல் அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்களிடம் எல்லாம் கடன் கேட்டும கிடைக்காமல், இரவில் பெய்து கொண்டிருந்த மழையிலேயே நனைந்து கொண்டு வீட்டுக்குச் சென்ற BYD தொழிலாளிகளின் போராட்டமும் நமக்கு உணர்த்தும்.

இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளி மற்றும் நிரந்தரத் தொழிலாளிகள் மட்டுமில்லாமல் அனைத்து துறை தொழிலாளிகளும் வர்க்கம் என்ற முறையில் போர்க்குணத்துடன் ஒன்று சேர்ந்து போராட வேண்டியது அவசியம்.

மறுகாலனியாக்கத்தின் ஆதாயத்தை முதலாளிகளும் அதன் சுமையை உழைக்கும் மக்களும் சுமப்பதின் விளைவுதான் தொழிலாளர்களின் இத்தகைய பணி பாதுகாப்பற்ற நிலைமை. சுமந்த தோள்கள் திருப்பி அடிக்கும் போது சவாரி செய்யும் முதலாளிகளும் அவர்களுடைய அரசும் கடையைக் காலி செய்து விட்டு நடையைக் கட்ட வேண்டும்.

மேலும் படிக்க