Saturday, May 10, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 13/02/2014

ஒரு வரிச் செய்திகள் – 13/02/2014

-

செய்தி: இயற்கை எரிவாயு மீதான விலையை நிர்ணயப்பதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் மொய்லி, ரிலையன்ஸ்அதிபர் முகேஷஅம்பானி, முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளிதியோரா மீது விசாரணை நடத்த புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பி்றப்பித்தார்.

நீதி: இப்பேற்பட்ட வீரர்தான் புதுதில்லியில் மின்சார கட்டணத்தை உயர்த்தி, கூடுதலாக 10 மணிநேர பவர் கட் வரும் என்று அச்சுறுத்தும் அம்பானி நிறுவனத்தை விரட்ட முடியாது என்று ஒத்துக் கொண்ட சூரர். எஃப்ஐஆர்- போட்டுவிட்டு அதையே ஏகே 47 போல சவுண்டு விடுவதில் கேஜ்ரிவால்தான் டாப்பு.
__________

செய்தி: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள டீ கடையில் அமர்ந்து, நாட்டின் பல நகரங்களில் 1000 டீ கடைகளில் டி.டி.எச். தொழில்நுட்பம் மூலம் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

நீதி: இதே அகமதாபாத்தில் நரமாமிசக் கடைக்காரனாய் இசுலாமிய மக்களை வேட்டையாடிய அனுபவம் குறித்து இதே தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துரையாட மோடி தயாரா?
__________

செய்தி: “பார்லிமென்ட்டில் நடக்கும் அமளியை பார்த்து, என் இதயத்தில் ரத்தம் கசிகிறது” என, பிரதமர் மன்மோகன் சிங் உருக்கமாக கூறினார்.

நீதி: மிச்சமிருக்கும் நாட்களில் மக்களின் கால்வயிற்றுக் கஞ்சியையும் சுருட்டுவதற்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் அமளியில் நிற்கிறது. இந்த கொலவெறியைத்தான் இதயம், ரத்தம் என்று சென்டிமெண்டாக ரீல் விடுகிறார் அமெரிக்காவின் டீலர் மிஸ்டர் மன்மோகன் சிங்.
__________

செய்தி: மோடிக்கு ஆதரவாக, பாலிவுட் நடிகை மேக்னா படேல் என்பவர், அரை குறை ஆடையுடன், ஆபாச பிரசாரம் செய்தது போல், ராகுலுக்கு, லோக்சபா தேர்தலில் ஆதரவளிக்குமாறு, மும்பையை சேர்ந்த நடிகை, தனிஷா சிங் என்பவர், ஆபாச, ‘போஸ்’ கொடுத்துள்ளார்.

நீதி: இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்க்கையையும் உறிஞ்சி, ‘பாரதத் தாயை’ துகிலுரிந்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேச போட்டியிடும் தலைவர்கள் செய்யும் காரியத்திற்கு, இந்த அம்மண போஸ் ஆதரவு பொருத்தம்தானே பாஸ்?
_________

செய்தி: லோக்சபா தேர்தலுக்காக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில், “ஆதார்” அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர், நந்தன் நீலகேணியும் ஈடுபட்டுள்ளார்.

நீதி: ஓட்டுப் போடும் மக்களை வசியம் செய்ய, நாட்டு மக்களை உளவு பார்த்த ஆதார் கை கொடுக்கும் என்பதால், இந்த கார்ப்பரேட் பெருச்சாளியை வைத்து கதர் ராட்டை கட்சி செய்யும் அழுக்கு தந்திரம்.
_________

செய்தி: குஜராத் மாநில, முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், பா.ஜ.,விலிருந்து வெளியேறி, மோடிக்கு எதிராக செயல்பட்டவருமான, கேசுபாய் படேல், வயது 86, அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக, நேற்று அறிவித்துள்ளார்.

நீதி: இவருக்குப் பிறகுதான் மோடி எனும் கேடி முதலமைச்சர் ஆகி, நர வேட்டையாடி, பிரதமர் பதவி வரை துள்ளுகிறார் என்பதால் கேசுபாய்ஜிக்கு கண்டிப்பாக வரலாற்றில் இடம் உண்டு. அழாமல் நிம்மதியாக ஓய்வெடுங்கள் ஜி.
__________

செய்தி: தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், “படகோட்டி” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபலமான இரண்டு பாடல்களை, ராஜ்யசபா தலைவர், ஹமித் அன்சாரி முன், பாடிய படி நின்றார்.

நீதி: ஆளில்லாத அதிமுக கூட்டங்களுக்கு ரிக்கார்டு டான்ஸ் போட்டு கூட்டம் சேர்க்கும் கவர்ச்சி அரசியல்தான், பாராளுமன்றத்திலும் கூத்தடிப்பதால், தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லாமலே இருக்கலாம்.
__________

செய்தி: தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், பகல், 2:40 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. கூட்டத்தில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ள, பட்ஜெட் குறிததும், பட்ஜெட் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு, பதில் அளிப்பது குறித்தும் கூட்டம் 20 நிமிடங்கள் மட்டும் நடந்தது.

நீதி: அமைச்சர்கள் அத்தனை பேரும் காலில் விழுந்து தொழுவதற்கே 20 நிமிடங்கள் போதாது என்பதால் இது பட்ஜெட் மீட்டிங் அல்ல, பாதம் தொழும் பந்தி.
_________

செய்தி: ‘ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும், ‘கேப்டன்’ என்ற அடைமொழியை, அரசியல்வாதியான விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என, தமிழக உள்துறை செயலருக்கு, காந்தியவாதியும், முன்னாள் ராணுவ வீரருமான கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார்.

நீதி: கேப்டன் என்று கேட்கா விட்டாலும், சரக்கை தினசரி பார்க்கா விட்டாலும் அவரால் பேச முடியாது. மேஜர் சுந்தரராஜன், நட்சத்திர விடுதிகளின் பால் கேப்டன், ரெஸ்ட்டாரெண்ட் கேப்டன், மற்றும் கப்பல் கேப்டன்களையெல்லாம் கண்டு கொள்ளாத அண்ணன் கண்ணன் கோவிந்தராஜன் அவர்கள் பெரிய மனதுடன் எங்கள் கேப்டனை விட்டுவிட வேண்டும்.

__________

செய்தி: பேச்சு சுதந்திரம் பறிப்பு, மின்வெட்டு, தாது மணல் கடத்தல் உட்பட, பல விஷயங்களை பட்டியலிட்டு, 10 பக்க அறிக்கையுடன், பிரதமரிடம் முறையிட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். அதற்காக, 20 எம்.எல்.ஏ.க்களுடன் இன்றிரவு அவர் டில்லி செல்கிறார்.

நீதி: கூட்டணி பேரத்திற்காக பேச்சு சுதந்திரம், 10 பக்க அறிக்கை, 20 எம்எல்ஏக்கள் என்று சீன் போடுவது, யாருக்கும் தெரியாது எனுமளவுக்கு நம்பும் ‘கேப்டன்’ எந்தப் போரிலாவது வெல்ல முடியுமா?
___________

செய்தி: மதுரையை சேர்ந்த 14 பேர் உட்பட மாநிலத்தில் 28 பேர், லோக்சபா தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இவர்கள், ஓட்டுப்பதிவு நாளில் இருந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை கமிஷனிடம் தாக்கல் செய்யவில்லை. கணக்கை தாக்கல் செய்ய கமிஷன் நோட்டீஸ் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை.

நீதி: கணக்கு காட்டுமளவு செலவழித்திராத இந்த அனாமதேயங்களை தடை செய்து விட்டு, கள்ளக் கணக்கு காட்டும் கார்ப்பரேட் கட்சி பெருச்சாளிகளை காப்பாற்றி ஜனநாயக கடமையாற்றுகிறதாம் தேர்தல் கமிஷன்.
___________

செய்தி: நாளை, காதலர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்தியாவில் இருந்து 40 கோடி ரூபாய் மதிப்பில் கொய் மலர் ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீதி: மேலைநாடுகளில் இருந்து காதல் எனும் ஜனநாயகப் பண்பாட்டை நாம் இறக்குமதி செய்தது சரி என்றாலும், அவர்கள் காதலிப்பதற்கு நமது சுயசார்பு விவசாயத்தை புறக்கணித்து நீரையும், மண்ணையும் நாசப்படுத்தி பூ ஏற்றுமதி செய்வது தவறல்லவா?
__________

செய்தி: அரியானாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் மஞ்சு தாரா, பிறந்தது முதல் திரவ உணவு வகைகளை மட்டுமே உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். இருப்பினும், சராசரி மனிதர்களைப் போல், இவர், அனைத்து பணிகளையும் செய்கிறார். இவருக்கு “அசலாசியா” என்ற நோய் இருப்பதால் அவர் வயிறு, திட உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்வதில்லை என டாக்டர்கள் கூறினர்.

நீதி: இந்த அசலாசியா மருந்து மட்டும் இருந்தால் விண்ணைத் தொடும் விலைவாசி நோயிலிருந்து மக்களுக்கு விமோச்சனம் கிடைத்திருக்குமே!
_________

செய்தி: கல்லணையில், கரிகால சோழன் மணிமண்டபத்தை, வீடியோ கான்பரன்சிங்கில் முதல்வர் ஜெ. நேற்று திறந்து வைத்தார்.

நீதி: “புரட்சித் தலைவி அம்மாவின் ஆசி பெற்று மணிமண்டபம் அமையப் பெற்ற கரிகால் சோழன்” என்று இனி சோழ வரலாறு திருத்தி எழுதப்படும்.
__________

செய்தி: பாஜகவின் தேசிய செயலர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதி: தொலைக்காட்சிகள் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் காட்டுக் கத்தல்களையும், பொய்க் கூச்சல்களையும் போட்டுத் தாக்கி நம்மை மிரட்டும் தமிழிசை குறித்து புகார் கொடுத்தால் போலீசு விசாரிக்குமா?
___________

செய்தி: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றார் அக் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்.

நீதி: பிச்சை போடுவது எப்போது, எவ்வளவு என்பதை ‘புரட்சித் தலைவி’ இன்னும் முடிவு செய்யவில்லை என்பதைத்தான் வாய் தவறி இப்படி சொல்லிவிட்டார் தாபா.
__________

செய்தி: அரசியலில் வாரிசுகளை ஏன் உருவாக்கக் கூடாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நீதி: ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரிசு மட்டுமே உருவாக வேண்டும் என்பது இந்த கேள்வியில் மறைந்திருக்கும் ‘கண்டிஷன் அப்ளை’.
__________

செய்தி: கூவம் நதியை சீரமைக்க ரூ 3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

நீதி: சபாஷ்! 10 சதவீதம் கமிசன் போட்டாலும் 383 கோடி தரும் கூவம் இனி சாக்கடையல்ல, சந்தனம்!
____________

  1. //10 சதவீதம் கமிசன் போட்டாலும் 383 கோடி தரும் //

    10% means 10% at each and every level, i.e, Ministry, department, contractors, sub-contractors, Suppliers, MPs, MLAs, Ward councillors, etc. Finally the actual sum spent on the actual work would just be the 10% of the total sum.

  2. பத்து சதவீத கமிசன் எல்லாம் காமராசர் ஆட்சியோடு முடிந்து போனது.பத்து இருபதாகி பார்ப்பன ஜெயா ஆட்சியில் 40 ல் இருந்து 70 வரை போய்விட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க