privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஉக்ரைன்: அமெரிக்காவிற்கு சவால் விடும் ரசியா!

உக்ரைன்: அமெரிக்காவிற்கு சவால் விடும் ரசியா!

-

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள, முன்னாள் சோவியத் சோசலிச குடியரசாக இருந்து இப்போது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் உக்ரைன் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்? பக்கத்து நாடான ரசியாவின் பொருளாதார மற்றும் ராணுவ செல்வாக்கின் கீழ் இருக்க வேண்டுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய வேண்டுமா? என்பதுதான் இன்றைய உலகளாவிய மேலாதிக்கத்திற்கு சண்டை போடும் அரசியலின் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கேள்வி.

ஐரோப்பாவில் உக்ரைன்
ஐரோப்பாவில் உக்ரைன்

கடந்த பிப்ரவரி மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் உக்ரைனில் பதவி இழந்த ரஷ்ய சார்பு அதிபர் விக்டர் யனுகோவிச்சிடமிருந்து ‘மக்கள் எழுச்சி’ மூலம் பதவி பறிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட யனுகோவிச் தெருப்போராட்டங்கள் மூலம் பதவி இறக்கப்பட்டு மறு வாக்கெடுப்பில் எதிர்த்துப் போட்டியிட்ட “நமது உக்ரைன்” கட்சியைச் சேர்ந்த ஐரோப்பிய சார்பு விக்டர் யுஷென்கோ ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.

ஆனால், 2010-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் 48% வாக்குகளை அளித்து அதே விக்டர் யனுகோவிச்சை அதிபராக தேர்ந்தெடுத்தனர் உக்ரைனிய வாக்காளர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக் காலம் 2015 வரை இருந்தாலும், அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக கலவரங்களை நடத்திய “தந்தையர் நாடு கட்சி”யின் தலைமையிலான வலது சாரி மற்றும் நியோ நாஜிக் கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றி விட அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு தெற்கு ரசியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான தயாரிப்புகள் சென்ற ஆண்டு (2013) நவம்பர் மாதம் தொடங்கின. உக்ரைனை ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துடன் சேர்க்கும் முயற்சியில் குறிப்பாக ஜெர்மனியும் மற்றொரு பக்கம் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த ஒப்பந்தம் உக்ரைன் நலன்களுக்கு எதிரானதாக இருப்பதாகச் சொல்லி 2011-ம் ஆண்டு பேச்சு வார்த்தைகளை அதிபர் விக்டர் யனுகோவிச் முறித்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தால் உக்ரைனுக்கு ஆண்டுக்கு 20 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1.69 லட்சம் கோடி) இழப்பு ஏற்படும் நிலை இருந்தது. உலகின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் உக்ரைன் ஆண்டுக்கு 1 முதல் 1.5 கோடி டன் தானிய ஏற்றுமதி செய்கிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான ஒப்பந்தத்தின்படி 20,000 டன் தானியம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதி என்று வரம்பு விதிக்கப்பட்டது, பின்னர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது 20 லட்சம் டன் என்று அதிகரிக்கப்பட்டாலும், அதன்படி உக்ரைன் தனது தானிய ஏற்றுமதிகளை 80 சதவீதம் குறைத்துக் கொண்டு மற்ற மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

விக்டர் யனுகோவிச்
பதவி நீக்கப்பட்ட விக்டர் யனுகோவிச்

மேலும், உக்ரைனின் ஏற்றுமதிகளில் 80% ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் ரசியா உள்ளிட்ட முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளுடன் நடந்து வருகிறது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால், ரஷ்ய தலைமையிலான சுங்க ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும். இரண்டு கூட்டமைப்புகளிலும் ஒரே நேரத்தில் இருப்பது சாத்தியமற்றது.

இந்த சூழலில் ரசியாவுடனான உறவை ஆதரிக்கும் அதிபர் விக்டர் யனுகோவிச் கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மீண்டும் மறுத்தார். அதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தமது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்ய, உக்ரைனின் தலைநகர் கீவ் நகரத்தில் தெருப் போராட்டங்களை ஆரம்பித்தன.

ஐரோப்பிய ஆதரவு எதிர்க்கட்சிகள் தரப்பில் பாசிச கட்சிகளான ஸ்வோபோடா, டிரிசுப் போன்ற வலதுசாரி பயங்கரவாத குழுக்களும் போராட்டங்களில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த அமைப்புகள் யூதர்களுக்கும் ரஷ்யர்களுக்கும் எதிரான இன வெறுப்பை உமிழ்பவை; புதிய நாஜி கொள்கைகளை பிரச்சாரம் செய்பவர்கள். இந்த அமைப்புகளின் தொண்டர்கள் தலைநகர் கீவ் நகரின் “சுதந்திர மைதானத்தை” ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டனர்; கலவர எதிர்ப்பு போலீசை, பெட்ரோல் வெடிகுண்டு, துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களால் தாக்கினர்.

‘ஊழல் நிறைந்த, மக்கள் விரோத யனுகோவிச் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் அராஜகவாதிகள், கம்யூனிஸ்டுகள், ரஷ்யர்கள், யூதர்கள் போன்றவர்களை அனுமதிக்க முடியாது’ என்று அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்தனர். காரணம் அவர்கள் ஊழல் அரசை மட்டும் எதிர்ப்பதோடு ஐரோப்பிய, அமெரிக்க ஆதரவையும் நிராகரிக்கின்றனர்.

சீமாட்டி ஆஸ்டன்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன்

மேற்கத்திய ஊடகங்கள் இவற்றுக்கு யூரோ மைதான் போராட்டங்கள் என்று பெயர் சூட்டி “ஊழல் நிறைந்த சர்வாதிகார யனுகோவிச் ஆட்சிக்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டம்” என்று தூக்கிப் பிடித்தன.

டிசம்பர் மாதம் உக்ரைன் பொருளாதாரத்துக்கு ரசியா $25 பில்லியன் நிதி உதவி அறிவித்தது. மேலும் $5 பில்லியன் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சலுகை விலையில் வழங்கவும் முன் வந்தது. ஆனால், அதிபர் யனுகோவிச்சுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமாக்கப்பட்டன.

போராட்டக் காரர்களுக்கு மேற்கத்திய பணமும் ஆயுதங்களும் தடையின்றி வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. போராட்டக்காரர்கள் கட்டவிழ்த்து விட்ட வன்முறை கலவரங்களில் 88 பேர் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி சீமாட்டி ஆஸ்டன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நியூலாண்ட் ஆகியோர் போராடும் கும்பல்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். “இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் பலர் அரசு படையினரால் கொல்லப்படவில்லை, மாறாக எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்த தொலைதூர துப்பாக்கி குறியர்களால் (ஸ்னைப்பர்கள்) இறந்தார்கள்” என்ற தகவல், ஐரோப்பிய ஆதரவு எஸ்டோனிய வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது. மேலும், அந்த உரையாடல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கத்திய நாடுகளால் திட்டமிட்டு இயக்கப்படுபவை என்பதையும் உறுதி செய்தது.

பிப்ரவரி 21-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில் யனுகோவிச் அரசுக்கும் எதிர்க்கட்சி போராட்டக் காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஆண்டு பிற்பகுதியில் செப்டம்பருக்கும் டிசம்பருக்கும் இடையே அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் அது வரை இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறும் என்றும் 2004-ல் செய்யப்பட்ட சட்ட திருத்தங்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் உடன்படிக்கை ஏற்பட்டது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே இடைக்கால அரசு ஒன்றை அமைக்கவும், தேர்தலை சீக்கிரமாக நடத்தவும் முன் வந்திருக்கிறார்.

ஆனால், மேற்குலக ஆதரவு கலகக்காரர்களோ பிப்ரவரி 22-ம் தேதியே ஒப்பந்தத்தை கிழித்து எறிந்து விட்டு அதிகாரத்தை கைப்பற்றி விட்டனர். 1990-களில் உக்ரைனின் யுனைட்டட் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலராக இருந்து பின்னர் உக்ரைனிய பெருமுதலாளியாக உருவெடுத்து, நாட்டின் பிரதமராக பதவி ஏற்று, தற்போது ஊழல் குற்றங்களுக்காக சிறையிடப்பட்டிருந்த யூலியா டைமஷென்கோவின் “தந்தை நாடு கட்சி” சார்பில் 10 அமைச்சர்களும், புதிய நாஜி, ரஷ்ய வெறுப்பு ஸ்வோபோடா கட்சி சார்பில் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு, வர்த்தகம், கலாச்சாரம் போன்ற துறை அமைச்சர்களும் இந்த அமெரிக்க ஆதரவு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

உக்ரைன் இடைக்கால அரசு
உக்ரைன் இடைக்கால அரசுப் படைகள்

வலது தீவிர வாத அமைப்புகளின் உறுப்பினர்கள் ஊர்பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வெள்ளை இனவாத குழுக்கள் ஸ்வஸ்திகாவுக்கு பதிலாக பயன்படுத்தும் செல்டிக் சிலுவை, நாஜி ரகசிய போலீஸ் சின்னம் மற்றும் பிற ஹிட்லர் காலத்திய அடையாளங்களை அவர்கள் அணிந்து ரஷ்யர்களையும், யூதர்களையும் அழிப்பதற்கும், நாட்டை விட்டு துரத்துவதற்கும் பயங்கரவாத அடக்குமுறை பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். உக்ரைனின் தேசிய பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாடு இந்த பயங்கரவாத அமைப்புகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து எழுபதாயிரம் போலிஷ் மக்களையும், யூதர்களையும் இனப்படுகொலை செய்த, உக்ரைனிய இனவாத தலைவர் ஸ்டெபன் பணடேராவின் உருவப் படம் கீவ் நகரசபை மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லெனின் சிலை, சோவியத் காலச் சின்னங்கள் உடைத்து எறியப்பட்டு அவை இருந்த இடத்தில் நாஜி, பாசிச சின்னங்கள் வரையப்பட்டுள்ளன.

டெட்யானா சோர்னோவோல் என்ற வலது சாரி உக்ரைனிய இனவாத கூட்டமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர் அரசின் ஊழல் ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் மே மாதம் நடைபெறும் என்று அறிவித்திருக்கும் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசு அடுத்தடுத்து நாட்டின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வருகிறது. ஐ.எம்.எஃப்பிடம் $35 பில்லியன் கடன் கோரியிருக்கிறது; அமெரிக்க அரசிடமிருந்து $1 பில்லியன் உதவித் தொகையை பெறவிருக்கிறது; மேற்கத்திய நாடுகளின் இலக்குகளில் ஒன்றான உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ப்பதற்கான இணைப்பு ஒப்பந்தத்தை மார்ச் 17 அல்லது மார்ச் 21-ம் தேதி கையெழுத்திடப் போவதாக அறிவித்துள்ளது.

மேலும், 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட சிறுபான்மை இனத்தவருக்கும், மொழியினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. அதன்படி இனிமேல் உக்ரைனிய மொழி மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும்.

கிரீமியாவில் ஆர்ப்பாட்டம்
கிரீமியாவில் ஆர்ப்பாட்டம்

தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும், நாட்டை மேற்கத்திய நாடுகளின் பிடியில் ஒப்படைக்கும் இந்த நடவடிக்கைகளை நாட்டின் தெற்கு, தென்கிழக்கு பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். தென் கிழக்கில் உள்ள 15 லட்சம் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் கிரீமியா 1954-ம் ஆண்டு அப்போது சோவியத் குடியரசாக இருந்த உக்ரைனுடன் சேர்க்கப்பட்டிருந்தது. 1990-களில் சோவியத் யூனியன் வீழ்ந்து ரசியாவும், உக்ரைனும் தனி நாடுகள் ஆன பிறகு 1997-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கிரீமியாவில் அப்போது இருந்த கருங்கடல் பகுதி கப்பற்படையில், 82 சதவீதம்  ரசியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, செவஸ்தபோல் துறைமுகம் ரசியாவின் பயன்பாட்டில் விடப்பட்டது. அதற்கு பதிலாக உக்ரைனுக்கு நிதி உதவி, கடன் தள்ளுபடி வழங்கியதோடு ஆண்டு தோறும் பயன்பாட்டு கட்டணமும் ரசியா கட்டி வருகிறது.

சுய ஆட்சிப் பிரதேசமான கிரீமியா, உக்ரைனின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை தூக்கி எறிந்து விட்டு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது: உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவில் இணைவதற்கான கருத்துக் கணிப்பை மார்ச் 30-ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்தது. கிரீமியா மக்கள் படையினர் தெருக்களில் இறங்கி பலத்தை காட்டினர். ரசியா தனது வல்லரசு நலன்களையும் கிரீமியாவில் வாழும் ரஷ்ய மக்களையும் பாதுகாக்க கிரீமியாவுக்குள் ராணுவத்தை அனுப்ப முடிவு செய்தது.

ரசியாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்தன. கிரீமியா பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்துவது உக்ரைனிய அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்க அதிபர் விளக்கம் அளித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கலகம் செய்வது, நாஜி இனவாத கட்சிகள் அதிகாரத்தைப் பிடிப்பது எல்லாம் ஜனநாயகமாகக் கருதும் ஒபாமா, பிரிந்து போகும் உரிமையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஜனநாயக விரோதமாக கருதுகிறார்.

ரஷ்ய அதிபர் புடினின் சமாதானமான பேச்சுக்களை ஒதுக்கித் தள்ளிய அதிபர் ஒபாமா மார்ச் 6-ம் தேதி ரசியாவுக்கு எதிராக முதல் சுற்று பொருளாதார தடைகளை விதித்தார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. அமெரிக்க ஆயுதங்கள் பால்டிக் பகுதிக்கு அனுப்பப்பட்டு, போர்க்கப்பல்கள் கருங்கடல் பகுதியினுள் நுழைந்திருக்கின்றன. ஜூன் 3-ம் தேதி நடைபெறவிருந்த ஐரோப்பிய ஒன்றியம்-ரசியா உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் மேற்கத்திய கார்ப்பரேட்டுகள்தான் பாதிக்கப்படும் என்று ரசியா பதிலடி கொடுத்திருக்கிறது.

செவஸ்டபோலில் ரசிய கப்பல்கள்
கிரீமியாவின் செவஸ்டபோலில் ரசிய கப்பல்கள்

லகின் மிக வளமான விவசாய பகுதிகளில் ஒன்றான உக்ரைன் ரசியாவை ஒட்டிய ஸ்லேவிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தமிழ்நாட்டைப் போல சுமார் ஐந்து மடங்கு பெரியது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே உடையது (சுமார் 4 கோடி) . ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அளவில் பிரான்ஸ் நாட்டை விட பெரியதாகவும், ஜெர்மனியின் மக்கள் தொகையில் பாதியையும் கொண்டிருக்கிறது.

7 சதவீதம் முதல் 14 சதவீதம் புராதன உயிர்ச்சத்து அடங்கியிருக்கும் செர்னோஜெம் என்ற கருநிற மண் வகையின் உலகளாவிய அளவில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் உள்ளது. இந்த வகை மண் பெருமளவு ஊட்டச் சத்துக்கள் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், உயர் நீர் தேக்கு திறனும் கொண்டது. சோவியத் சோசலிச குடியரசுகளின் தானியம், இறைச்சி, பால், காய்கறிகள் உற்பத்தியில் 25% பங்களித்து வந்த உக்ரைன் சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டது.

ரசியாவில் நடந்த 1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உக்ரைன் சோசலிச குடியரசாக உருவாகி 1920-களில் உக்ரைனில் தேசிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அனைவருக்கும் அடிப்படை சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்பு, மற்றும் வேலை செய்யும் உரிமை, குடியிருக்கும் வீடு பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டன. நூற்றாண்டுகள் பழமையான ஏற்றத் தாழ்வுகள் ஒழித்துக் கட்டப்பட்டு பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. 1930-களில் தொழில்துறை உற்பத்தி 4 மடங்காக அதிகரித்தது. விவசாய கூட்டுப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது போலந்துடன் இருந்த உக்ரைனிய பகுதிகள் இணைக்கப்பட்டு வரலாற்றில் முதன்முறையாக உக்ரைன் தேசிய குடியரசு சோசலிச முறையில் உழைக்கும் மக்களுடையதாக உருவானது. பிற்போக்கு கலாச்சாரங்களை தூக்கிப் பிடிக்கும், மக்களை சுரண்டும் சிறுபான்மை வர்க்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் உணவுக் களஞ்சியமாக விளங்கிய உக்ரைனில் ஆயுதத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளும், சுரங்க மற்றும் தொழில்துறையில் பயன்படும் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் செழித்திருந்தன.

விக்டோரியா நியூலேண்ட்
கீவ் நகரில் ஐரோப்பிய மற்றும் யூராசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் விக்டோரியா நியூலேண்ட்

உதாரணமாக, தற்போது இந்தியாவின் நடுத்தர ரக ராணுவ போக்குவரத்து விமானங்கள் அனைத்தும் உக்ரைனில் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ரசியாவிலிருந்து பெறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்களுக்கான எஞ்சின்களை உக்ரைன்தான் வழங்குகிறது. இங்கே தயாராகும் கப்பல்களுக்கான எஞ்சின்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் இந்தியாவால் போடப்பட்டிருக்கிறது.

சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகு உக்ரைன் தனிநாடான அடுத்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 60% வீழ்ச்சியடைந்தது. 2000 ஆண்டுக்குப் பிறகு ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு ஏற்பட்டாலும், உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தால் 2009-ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 15% சுருங்கியது. வரலாற்று ரீதியாக சோவியத் சோசலிச குடியரசாக சாதித்த உச்சகட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவை உக்ரைன் மீண்டும் அடையவேயில்லை.

அரசியலில் நிலையின்மை, பொருளாதார நெருக்கடிகள், அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்களின் ஊழல் இவற்றுக்கெல்லாம் தீர்வு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதுதான் என்ற பிரச்சாரம் நடுத்தர வர்க்க மக்களிடையே ஓரளவு எடுபட்டது. ஆனால், ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து ‘சொர்க்கத்தில்’ திளைத்துக் கொண்டிருக்கும் ஸ்பெயின், கிரீஸ் மக்களை கேட்டால் அது எத்தகைய தீர்வு என்பதை உக்ரைன் மக்கள் புரிந்து கொள்ளலாம்.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகு உலகின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பரப்பில் உள்ள இயற்கை மற்றும் மனித வளங்களின் மீது அமெரிக்கா முதலான மேற்கத்திய நாடுகளின் லாப வேட்டை மறுக்கப்பட்டது, கம்யூனிச எதிர்ப்பு அரசியலாக உருவெடுத்து சோவியத் யூனியனுக்கு எதிராக பனிப்போர் நடத்தப்பட்டு வந்தது. உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் கம்யூனிசம்தான் காரணம் என்று பிரச்சாரம் செய்து கொரியா முதல் தாய்வான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் வரை ஜனநாயகத்தை நசுக்கி சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியாளர்களை அமர்த்தி ஆதரித்துக் கொண்டிருந்தது அமெரிக்கா.

அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா

1990-ல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு “இதுதான் வரலாற்றின் முடிவு” என்று முதலாளித்துவ அறிஞர்கள் கொக்கரித்தனர். அமைதி ஈவுத் தொகை (peace dividend) என்று மிச்சமாகப் போகும் பணத்தை என்ன செய்வது என்று கணக்கு போட்டனர்.

ஆனால், அமெரிக்கா முதலான மேற்கத்திய ஏகாதிபத்திய பொருளாதாரங்களுக்கு முழு உலகையும், முழு மக்களது உழைப்பையும் அபகரிப்பது, உயிர் வாழும் தேவையாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்க தலைமையிலிருக்கும் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஒவ்வொன்றாக தம்முள் இழுக்க ஆரம்பித்தன. போலந்து, லித்துவேனியா, லட்வியா, எஸ்டோனியா, செக் குடியரசு, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஹங்கேரி, ரொமேனியா, பல்கேரியா ஆகிய நாடுகளை மேற்கத்திய பொருளாதார, ராணுவ மண்டலங்களுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.

ராணுவ ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நேரடி ஆக்கிரமிப்புகளையும் எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்களையும் நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

எனவே, ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடான உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தேவைப்படுவதை விட நிதிமூலதன முதலாளிகளின் இலாப வேட்டைக்கும், மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கும் இடையிலான கடும் முரண்பாட்டில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உக்ரைன் தேவைப்படுகிறது என்பதுதான் நிதர்சனம்.

கிரீமியாவில் விவாதம்
மார்ச் 9-ம் தேதி செவஸ்டபோலில் நடந்த பேரணி ஒன்றில் ரசிய ஆதரவு உக்ரைனிய ஆதரவு குழுக்களிடையே வாக்குவாதம்.

உக்ரைன் விவசாய நிலங்களை வாங்குவதற்கு லாபகரமான 10 நாடுகளில் ஒன்று என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உக்ரைனில் விளைநிலங்களை அன்னிய நிறுவனங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தாலும், சட்ட விரோதமான நில கைப்பற்றல்கள் நடந்து வருகின்றன. உக்ரைனின் விவசாயத் துறையில் 1,600-க்கும் மேற்பட்ட மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் கால் பதித்திருக்கின்றன.

மறுபக்கத்தில் 2000-ம் ஆண்டு ரசியாவின் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடின், ரசியாவின் வல்லரசு தகுதியை மீண்டும் அடைய முயற்சிக்கிறார். மேலும் ரசிய ஆளும் வர்க்கமும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது. அதனால்தான் புடின் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறார்.

ரசிய தேசிய பெருமிதத்தை முன் வைத்து ரசியாவின் இயற்கை வளங்களை குறிப்பாக எண்ணெய் வளங்களை பயன்படுத்தி, ரஷ்ய பொருளாதாரத்தை ஓரளவு வலுப்படுத்தியிருக்கிறார் புடின். ரசிய முதலாளிகளின் சார்பில், ரசியாவின் அரசியல் செல்வாக்கை உலக அரங்கில் உயர்த்துவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கிறது ரசிய அரசு. சிரியாவில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஆசாத் அரசுக்கு ஆதரவு அளித்தது, அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடனுக்கு புகலிடம் அளித்தது போன்ற ரசியாவின் நடவடிக்கைகள் அமெரிக்க அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தன.

ரசியாவின் ஆளும் முதலாளிகள் தமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் செல்வாக்கு செலுத்த அமெரிக்காவுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.

இவ்வாறு மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், ரஷ்ய முதலாளிகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது உக்ரைன். இருப்பினும் இதன் முதன்மைக் குற்றவாளிகள் அமெரிக்க தலைமையிலான மேற்குலகம்தான்.

‘கம்யூனிசம்தான் சைத்தான், சோவியத் யூனியனை வீழ்த்தி முதலாளித்துவ ஜனநாயகத்தை உலகெங்கிலும் நிலைநாட்டி விட்டோம், இனிமேல் ஒரே அமைதி அமைதி’ என்று பாட்டு பாடிய முதலாளித்துவ அறிஞர்கள், இப்போது அமெரிக்கா உலகெங்கிலும் நடத்தி வரும் பொருளாதார, ராணுவ, அரசியல் ரீதியான ஜனநாயகப் படுகொலைகளுக்கு புதுப்புது விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். போரையும், பசியையும், படுகொலைகளையும் நடத்தி வருவது முதலாளித்துவம்தான் என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.

‘கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்கு பிறகு, உலகில் இனி போரே இல்லை’ என்று சிலர் மனப்பால் குடித்திருந்தாலும் அதற்கான வாய்ப்புகளை முதலாளித்துவம் எப்போதும் வழங்கவில்லை. போர்கள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை, அவற்றின் பொருளாதார மேலாதிக்கம் இல்லை என்பதை சோவியத் யூனியன் தகர்வுக்கு பிறகும் பார்த்து வருகிறோம். இதில் ஒற்றை ரவுடியாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வல்லரசு நலனை எதிர்த்து இப்போது ரசிய வல்லரசு களத்திற்கு வருகிறது. அந்த வகையில் ஏகாதிபத்தியங்களுக்கிடையே உள்ள முரண்பாடு போர்களை நிச்சயம் எழுப்பும். இனி உலகில் பனிப்போர், இல்லை, வல்லரசுகளின் பகிரங்கப் போர்தான் நடக்கும். போரைக் கொண்டு வரும் முதலாளித்துவத்தை நாம் அழிக்கும் வரை இந்த உலகை காக்க முடியாது.

–    செழியன்.

மேலும் படிக்க

  1. Very good coverage. Thanks Cheliyan & Vinavu.

    By the by,
    1. You could have avoided the word ‘சீமாட்டி’.
    2. //எகிப்து, துனீஷியா, லிபியா, பஹ்ரைன், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்களையும் நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.// This is little exaggerated.

  2. If america is not ruling like this, then countries like pakistan, china & srilanka will start their own style of dominating and threatening other countries by terrorism.

  3. //ஐரோப்பிய ஆதரவு பெலாருஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் உர்மாஸ் பேட், சீமாட்டி ஆஸ்டனிடம் பேசும் தொலைபேசி உரையாடல் மூலம் அம்பலமானது.//

    பெலாருஸ் அல்ல இஸ்டோனியா(Estonia).

  4. எனது கருத்துக்களை(It just had facts,not my opinion) வெளியிடவில்லை என்பதால் அவை பொய் ஆகி விடாது

    • ராமன் அவர்களே, இங்கு கட்டுரையின் மையப்பொருளோடு தொடர்புடைய விசயங்களை விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியமாக திரிந்து தகர்க்கப்பட்ட பிறகு முதலாளித்துவவாதிகள் சொன்ன போரில்லா உலகம் ஏன் சாத்தியமில்லை என்பதையே கட்டுரை இறுதியில் கேள்வி எழுப்புகிறது. உக்ரேன் பிரச்சினையில் தொடர்புடைய ரசியா மற்றும் அமெரிக்கா இரண்டுமே முதலாளித்துவ நாடுகள்தான். எனினும் ஏன் இந்த முரண்பாடு? இதை விடுத்து கம்யூனிசத்தையும் குறிப்பாக போலி கம்யூனிசம் இருக்கும் இன்றைய சீனா, வட கொரியாவை திட்ட வேண்டுமென்றால் அதற்குரிய பதிவுகளில் உங்கள் அறிவு அல்லது அறியாமையை காட்டலாம். இங்கே உங்களது மேலான சிந்தனைப்படி உக்ரைன் பிரச்சினையை எப்படி தடுக்கலாம் என்று தீர்வு கொடுத்தால் தடுமாறும் முதலாளித்துவம் உங்களைப் போன்ற அற உணர்வு சீறும் அறிஞர் பெருமக்களிடம் இருந்து ‘தீர்வினை’ பெறும். நன்றி

  5. வரலாற்றில் உக்கிரமான காலப்பகுதில் நாம் வாழ்கிறோம்.

    நாம் சோசலிஸ்ட்டா? மாக்ஸியவாதிகளா? என்பது அர்த்தமான கேள்வியாக பட வில்லை .தனியொருநாட்டில் சோசலிஸம் என்பவர்களுடன் எப்படித்தான் சோசலிஸிசத்தை பற்றி கலந்துரையாடுவது?.

    இதை விட்டு நீங்கள் மாக்ஸியவாதிகளா? என்கிற கேள்வியை

    எழுப்புங்கள் சிலவேளை பல உண்மைகள் புலனாகும்.

    உக்கிரேனில் புதுபிக்க பட்ட எழுச்சிகள் ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்க மூலதனத்திற்கும் சார்பானவை.இதில் அமெரிக்.ஐரோப்பிய தொழிலாளவர்க்கம் எந்த விதமான நன்மையும் அடையப்போவதில்லை.

    இது ஆரம்பம்தானே! இனிதானே பல கேள்வி ஞானங்கள் உதயமாகும் அதுவரை பொறுத்திருப்பது அவசியமாகும்.

    இருந்தும் தனியொருநாட்டில் சோசலிஸத்திற்கும் நிரந்தர சோசலிஸசக்திற்கும் உள்ள முரண்பாடுகளை கண்டறிவது அறிவுயீகளின் கடமையாகும்.

  6. ஐரோப்பிய இணைவுகள்-கூட்டு நடவடிக்கைகள் ஐரோப்பிய மக்களுக்கு உரியதல்ல என்பதை எவ்வளவு சத்தம் வர குரல் எழுப்ப முடியுமே அவ்வளவு சத்தம் வர குரல் எழுப்ப வேண்டும்.

    பஞ்சத்தில் எப்படிதான் பொதுகருத்தை சொல்லி பத்திரிக்கை நடத்துவது வினவு மாதிரி…இறுதியில் விரக்தி. தற்கொலை.

    இருந்தாலும் செழியன் போன்றவர்கள் இருக்கும் வரை இந்த நிலை ஏற்படமாட்டாது என நம்பலாம்.

    விஷயம் இது தான். முதாலித்துவத்திற்கு மூளைச் சலவையாலும் ஒரு வீதமானவர்களுக்கு சலுகைகள் வழங்குவதாலும் மனிதவரலாற்றை மாற்றி அமைக்க முடியும் என கனவுபால் குடிக்கிறார்கள்.

    உண்மையில் அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை.

    முதாலிளித்துவம் லாபவெறியை அடிப்படையாக கொண்டது.
    பாட்டாளிவர்கம் அப்படிப் பட்டதல்ல. அமெரிக்காவிலும் ஜேர்மனிலும் “தேவன் எப்பொழுது வருவான்” என தொழிலாள வர்க்கத் தலைமைக்காக காத்து நிற்கிறார்கள்.

    மாக்கிளும் ஒபாமாவும் துண்டைகாணேம் துணியைக் காணோம் என ஓடுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.

    இருந்தும் கட்டுபாடுயுள்ள வரையறுக்கிற போராட்டம் மிகமிக அவசியமானது.

    சுருக்கமாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

    சோவியத்யூனியன் மக்கள்சீனம் முழுமையாக தீர்ந்து விட வில்லை. அரையும் குறையுமாக சமதர்மத்திற்கான கேள்விகள் நியாயங்கள் இன்னமும் மண்டியே இருக்கிறது.

    ஏகாதிபத்தியம் இவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பட்டத்தில் எந்த நிபந்தனை இல்லாமல் உருக்குலைந்த ரஸ்சியாவோ சீனத்தையோ பாதுகாப்பது உலகத் தொழிலாளவர்கத்தின் கடமையாகும்.

    இந்த வாசகம் 1988-ம் ஆண்டு நான்காம் அகிலத்திற்கு தலைமை தாங்கும் அனைத்துலக குழுவினால் வெளியிடபட்ட அறிக்கை ஆகும்.

Leave a Reply to Tamilnesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க