privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

-

ரம்பம் முதல், போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி. தமிழக கிளைமாக்சில் வீரம் காட்டும் போலீசு போல அப்போதாவது சொரணையுடன் கொதிப்பார்கள் என்று பார்த்தால், ‘அம்மா, நீங்கப் போய் இப்படி செஞ்சுட்டீங்களே’ என்று பயபக்தியுடன் மன்றாடுகின்றனர் போலிகள்.

ஜெயாவும் போலி கம்யூனிஸ்டுகளும்
போயஸ் தோட்டத்தின் கதவை மூடும் கடைசி நேரம் வரை, இடது, வலது கம்யூனிஸ்டுகளை அவமானப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் ‘புரட்சி’த் தலைவி.

இதுகுறித்து கருத்து சொன்ன சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன், “ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்தியிருக்கிறார்கள்” என்று சொன்னார். இந்தக் கருத்து குறித்துதான் நாம் இங்கே பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் இக்கருத்தை இதற்கு முன்னரும் பலரும் பல சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு தினமலர் பத்திரிகை, ‘சோவியத் யூனியன் ஆகிறதா தமிழ்நாடு?’ என்று ஒரு தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இலவசப் பொருட்களை நிறைய வழங்குவதாலும், அரசாங்கமே நிறைய தொழில்களை நடத்த ஆரம்பித்துவிட்டதாலும் தமிழ்நாட்டை சோவியத்துடன் ஒப்பிட்டு எழுதி ‘அபாயம் எச்சரிக்கை’என்றது தினமலர். அதன் இறுதியில், ‘இதற்கு எல்லாம் காரணம் ஜெயலலிதாவை யாரோ தவறாக வழி நடத்துவதுதான்’ என்று முடித்திருந்தனர். அதே போல அம்மா விசுவாசத்தில் முதல் இடத்தில் இருக்கும் தினமணியும் தனது தலையங்கங்களில் ஜெயா ஆட்சியில் செய்யப்படும் தவறுகளெல்லாம் யாரோ தவறாக வழிநடத்தியவை என்றே பயபக்தியுடன் குறிப்பிடும்.

ஓரிரு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு கடைசி நேரத்தில் கடும் தொந்தரவு தந்தார் ஜெயலலிதா. விழாவை நிறுத்தப் பார்த்தார். பிரபாகரன் படங்கள் வைக்க தடை விதித்தார். விழா முடிந்த உடனேயே முற்றத்தின் சுற்றுச்சுவரை காவல்துறையை ஏவி தடாலடியாக இடித்துத் தள்ளினார்.

நியாயமாகப் பார்த்தால் தமிழ்த் தேசியவாதிகள் இதற்காக வெகுண்டு எழுந்து ஜெயலலிதா அரசை உண்டு, இல்லை என்று செய்திருக்க வேண்டும். ஆனால் மாவீரன் நெடுமாறனோ, “இந்த கொடுஞ்செயலை ஈழத் தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது” என்று ஆவி எழுப்புதல் கூட்டத்தில் பேசுவதைப் போல பேசினார். இடிப்பதற்கு துணை போன ஜேசிபி எந்திரங்களை ஆசை தீருமட்டும் கண்டித்தார்.

நாம் தமிழர் கட்சியின் சீமானோ, ‘இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்று ஒரே அடியாக போட்டார். நெடுமாறனும் பிறகு இதேக் கருத்தை கூறினார். அதாவது முற்றத்தை இடித்தது மத்திய உளவுத்துறையின் சதி வேலையாம். அந்த சதிக்கு ஜெயலலிதா இரையாகி விட்டாராம். மொத்தத்தில் முற்றம் இடிப்பில் ஜெயலலிதாவை, மத்திய உளவுத்துறை தவறாக வழிநடத்திவிட்டது என்கிறார்கள் இவர்கள்.

சோ-ஜெயா
‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’

இவர்கள் மட்டுமா… ‘ஜெயலலிதாவை சோ கும்பல் தவறாக வழி நடத்துகிறது’ என்று சசிகலா நடராஜனும், ‘மன்னார்குடி மாஃபியா கும்பல் அ.தி.மு.க.வை ஆக்கிரமித்து ஜெயலலிதாவை தவறாக வழிநடத்துகின்றனர்’ என்று சோ கும்பலும் சொல்லி வருகின்றனர். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதே பாட்டைப் பாடுகின்றன.

ஒரு சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் கூட ஊடகங்கள் மீது சகட்டுமேனிக்கு அவதூறு வழக்காக போட்டுத் தாக்கினார். டி.வி.யில் செய்தி வாசித்த பெண் மீது எல்லாம் வழக்கு. ரிமோட்டை கையில் வைத்து அந்த டி.வி. செய்தியைப் பார்த்தற்காக பொதுமக்கள் மீது வழக்குப் போடாததுதான் பாக்கி. ஆனால் அதற்குக் கூட ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. ’முதல்வரை சில சக்திகள் தவறாக வழிநடத்துகிறார்கள்’ என்றுதான் சொன்னார்கள்.

இப்படி எந்தப் பக்கம் பார்த்தாலும் ‘தப்பா வழிநடத்துறாங்க… தப்பா வழிநடத்துறாங்க’ என்று கூக்குரலிடுகிறார்களே… அவ்வளவு டம்மிபீஸா ஜெயலலிதா? மற்றவர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையா? ஜெயலலிதாவுக்கு என்று சொந்தப் புத்தி இல்லையா? ஒரு அப்பாவிப் பெண்ணை, படித்த பெண்ணை அதிகார வர்க்கமும், கிச்சன் கேபினட்டும் வழி நடத்தித்தான் ஜெயாவின் பாசிச நடவடிக்கைகள் வெளிப்பட்டனவா?

நேற்றைக்கு அரசியலில் காலடி எடுத்து வைத்த கத்துக் குட்டிகள் கூட இதைக் கேட்டு சிரிப்பார்கள். ஒருமுறை முடிவு செய்துவிட்டால் யார் பேச்சையும் கேட்க மாட்டார் இந்த அம்மையார். இதனால்தான் ஜெயாவை ஆதரிக்கும் தீவிர பார்ப்பனியவாதிகளோடு கூட அவருக்கு சில நேரங்களில் முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. சு சாமி, குரு மூர்த்தி, தினமலர், சோ என்று ஜெயாவின் முழு அரசியல் வாழ்க்கையிலும் அதை பார்க்கலாம்.

ஜெயா - தான்தோன்றித்தனம்
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது.

யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவின் குணமும், போக்கும் நாடறிந்தது. அமைச்சர்களை தூக்கி கடாசுவது முதல், கூட்டணிக் கட்சிகளை கடைசி நேரத்தில் கழுத்தறுப்பது வரையும் எதிலும் மற்றவர்களின் கருத்தை கேட்கக் கூட மாட்டார். நிலைமை இப்படி இருக்க ஜெயலலிதாவை ஏதோ ஓ.பி.எஸ். ரேஞ்சுக்கு இறக்கி வைத்து, ‘கேட்பார் பேச்சுக் கேட்டு நடப்பதாக’ சொல்வது கேட்பதற்கே அயோக்கியத்தனமாக இருக்கிறது.

ஜெயலலிதா ஒரு திணிக்கப்பட்ட தலைவர். சினிமாவின் புகழ் வெளிச்சத்தில் திடீரென எம்.ஜி.ஆரால் கட்சிக்குள் இழுத்து வரப்பட்டவர். கட்சியின் அணிகளிடையே பணியாற்றி கிளைக்கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம், மாநிலக் கழகம் என கீழிருந்து மேலாக வந்தவர் அல்ல. நேராக மேலே திணிக்கப்பட்டவர். ஓட்டரசியல் அதிகாரத்தை சுவைப்பதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கூட ஜெயலலிதாவுக்கு தெரியாது. கருணாநிதிக்கு இப்போது கூட தமிழ்நாட்டின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களின் பெயர் தெரியும்; அவர்கள் குறித்த வரலாறு தெரியும். ஆனால் ஜெயலலிதாவுக்கோ, தமிழ்நாட்டின் வட்டார நிலைமைகள், பகுதி வாரியான பிரச்னைகள் கூட தெரியாது. தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் பெயராவது தெரியுமா என்பது கூட சந்தேகமே.

இத்தகைய சூழலில்தான் ஜெயா தனது ஆட்சியை அதிகார வர்க்கம், பார்ப்பன சாணக்கியர்கள், உளவுத் துறை, கார்ப்பரேட் முதலாளிகள் முதலிய குழுக்களை வைத்து நடத்துகிறார். இதனால் இவர்கள் ஜெயாவை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று பொருளல்ல. இத்தகைய ஆளும் வர்க்கத்தின் நலனுக்கும் ஜெயாவின் நலனுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு வேளை நடைமுறை சிக்கல்கள் என்ற அளவில் வேண்டுமானால் அவர்கள் ஆலோசனையை ஜெயா ஏற்கலாம்.

கட்சி அணிகளை வைத்து சமூகத்தோடு தொடர்பு கொள்ள முடியாத ஜெயா அதிகார வர்க்கத்தை வைத்து மட்டும் தொடர்பு கொள்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டில் போலீஸ் ஆட்சி பகிரங்கமாக நடக்கிறது. ஒரு வகையில் உலகின் எல்லா பாசிஸ்டுகளின் ஆட்சியும் இப்படித்தான் இருந்திருக்கிறது. துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்து கொண்டு குண்டுகளை வைத்திருக்கும் திமிரில்தான் பாசிஸ்டுகளின் வீரம் அடங்கியிருக்கிறது.

ஜெயலலிதா : இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்து சாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன?

அடிப்படையில் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டுதான் ஜெயா இன்றும் செயல்படுகிறார். அதற்கு நேற்றைய ஆடு கோழி பலி தடைச் சட்டம் முதல் இன்றைய சிதம்பரம் கோவிலை தீட்சிதருக்கு கொடுத்தது வரை சான்றுகள் இருக்கின்றன. கோவில் யானைகளை முகாம் அமைத்து சித்திரவதை செய்வது, வாஸ்துவுக்காக கண்ணகி சிலையை இடிப்பது, கூட்டணி உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜோசியம் பார்ப்பது எல்லாம் ஜெயாவை தவறாக வழிநடத்தி வந்தவையா என்ன? தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் என்று ஜெயாவை இன்றும் இராம கோபாலன் போற்றுவதற்கும் என்ன காரணம்?

இது போக கருணாநிதி மற்றும் திமுக மேல் உள்ள தனிப்பட்ட பகையால்தான் அவர் தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார். அண்ணா நூலகத்தை மாற்ற முனைந்தார். சமச்சீர் கல்வியை எதிர்த்த வழக்கை நள்ளிரவில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார். இதிலிருந்து தெரிவது என்ன? ஜெயாவைப் பொறுத்தவரை அவரது தனிப்பட்ட ஆசை விருப்புகள் மட்டுமே வழி நடத்துகின்றன. அவை ஆளும் வர்க்கத்தின் நலனோடு ஒத்திசைவதால் அதிகார வர்க்கம், பார்ப்பன ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஜெயாவை ஆதரிக்கின்றன.

அவருக்குத் தெரிந்தது எல்லாம் ஆணைகள் பிறப்பிப்பது மட்டுமே. புகழ் வெளிச்சம், அதிகாரம், மேட்டுக்குடிப் பின்னணி எல்லாம் இணைந்து, துவக்கத்தில் இருந்தே கட்டளைகள் பிறப்பிக்கும் நபராக ஜெயலலிதா இருந்தார். யாருக்கும் கீழ்படிந்து அவருக்கு பழக்கம் இல்லை. தான் சொல்வதை ஏற்காதவர், காலில் விழுந்து வணங்காதோர், சுயமரியாதை உள்ளோர் அனைவரையும் கட்சியை விட்டு, பதவியை விட்டு தூக்கினார். தன் சொல்லை மறுப் பேச்சுக் கேட்காமல் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார். இவை அனைத்தும் ஒரு சர்வாதிகரிக்குரிய பண்புகள். ஆனால் இவற்றைதான் ஜெயலலிதாவின் தைரியம் என்று வர்ணிக்கிறார்கள், ஊடக மற்றும் அறிஞர் சொம்புகள்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிறகு வாபஸ் வாங்குவது, வாரம் ஒருமுறை மாவட்டச் செயலாளரையும், மாதம் ஒரு முறை மந்திரியையும் மாற்றுவது, ஒரு துளி மையில் கையெழுத்திட்டு 8 லட்சம் அரசுப் பணியாளர்களை வேலையை விட்டுத்தூக்குவது… போன்றவை தைரியமான செயல்களாம். என்றால், இப்போது இடதுசாரிகளை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதையும் கூட நாம் தைரியப் பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். அரசியலில் இருப்போருக்கு அவர்கள் ஓட்டுக்கட்சியே ஆனாலும் குறைந்தபட்சமாவது மக்களிடம் பயம் கொண்டிருக்க வேண்டும். அப்படி மக்களிடம் பயம் இல்லாதவர்தான் ஜெயா. இல்லையேல் எட்டு இலட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் காரியத்தை குலோப் ஜாமூன் சாப்பிடுவது போல செய்ய முடியுமா?

இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி
இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்?

இருப்பினும் இதெல்லாம் ஜெயாவின் தைரியம் என்று எதன் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள்? ஜெயலலிதா 91-96ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தபோது பேயாட்டம் போட்டாரே… அதை ஒரு எடுத்துக்காட்டாக சிலர் சொல்லக்கூடும். அதாவது அப்போது சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை சூழ்ந்துகொண்டு தவறாக வழிநடத்திவிட்டனர்’ என்று சோ, குருமூர்த்தி போன்றவர்கள் சொல்லவும் செய்தார்கள்; இப்போதும் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதற்கு காரணம், ‘இதுபோன்ற சூத்திரக் கூட்டத்தை கூட வைத்திருப்பதால்தான் கெட்டப்பெயர். நம்மவாளை உடன் வைத்துக்கொண்டால் எல்லா மொள்ளமாரித்தனத்தையும் நாசூக்காக செய்யலாம்’ என்பது அவர்களது அக்கறையின் பின் மறைந்திருக்கும் சேதி.

மேலும் விபத்தால் முதல்வரான ஜெயா அதற்கு வழியேற்படுத்திய அதிமுக கட்சியை சசிகலா கும்பலின் சாதிய செல்வாக்கை வைத்தே ஒரு அடியாட் படை போல உருவாக்க முடிந்தது. கட்சியை நடத்த ஊழல் பணமும், அரசியல் செல்வாக்கிற்கு இந்த அடியாட்படையும் அவருக்கு தேவையாக இருந்தன. இவையெல்லாம் சசிகலா அவரை தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் என்று சொல்வது அபாண்டம். அது உண்மையெனில் ஜெயா அரசியலுக்கே வந்திருக்க முடியாது. முதலமைச்சர் எனும் அதிகாரத்தை சுவைக்கும் வாய்ப்பை விரும்பும் நபர் அதை தக்கவைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விதி. அதிலும் அதிமுக எனும் அடிமைகள் கட்சியை புரட்சித் தலைவரிடமிருந்து சீதனாமாகப் பெற்றவருக்கு அது கூடுதல் நிபந்தனையும் கூட.

இதை விடுத்துப் பார்த்தாலும் நிஜமாகவே அப்போது மன்னார்குடி கும்பல்தான் ஜெயலலிதாவை ஆட்டுவித்தது என்று தீர்மானகரமாக சொல்ல முடியாது. ஏனெனில் எப்போதுமே ஒரு சர்வாதிகரிக்கு அருகில் இருப்பவர்கள், அவர்களது மனமறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். ஜெயலலிதாவின் மனதில் என்ன இருக்கிறது என்று படித்து அதற்கு இசைவாகவே சுற்றியிருப்பவர்கள் கருத்துச் சொல்வார்கள். அவர் விருப்பத்துக்கு மாறாக ஒருபோதும் இவர்கள் ஒரு வார்த்தையும் பேச மாட்டார்கள். இது  சசிகலா கும்பலுக்கும் பொருந்தும், சோ கும்பலுக்கும் பொருந்தும். ஆகவே சுற்றியிருப்பவர்கள் தவறாக வழி நடத்தினார்கள் என்பதை எப்போதும் ஏற்க முடியாது. மேலும் இந்த வழிநடத்துதலும், ஜெயாவின் மனக் கிடக்கையும், ஆளும் வர்க்கத்தின் நலனும் எந்த வேறுபாடின்றியும் ஒன்று சேர்ந்திருந்தன. ஒரு வேளை இவற்றில் ஏதாவது சிறு முரண்பாடு வந்தால் இறுதி முடிவை ஜெயாதான் எடுப்பார்.

இப்படி இருக்க திரும்பத் திரும்ப ’ஜெயலலிதா தவறாக வழிநடத்தப்படுவதாக’ சொல்வதன் காரணம்தான் என்ன? ஏனெனில், ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுகின்றனர். இது ஜெயாவை ஆதரிப்போர், எதிர்ப்போர் இருவருக்கும் பொருந்தும். உண்மையைச் சொன்னால் உள்ளே போக வேண்டியிருக்கும் அல்லது அம்மாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதனால் ஜெயலலிதா மூக்கிலேயே குத்தினாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு ’தவறாக வழிநடத்தியவரை’ தேடுகின்றனர். ’அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. என்னைத் தூண்டிவிட்டதும் நான் தான், மூக்கில் குத்தியதும் நான் தான்’ என்று பலமுறை அந்தம்மாவும் நிரூபித்துவிட்டார். ஆனால் கம்யூனிஸ்டுகளும், தமிழினவாதிகளும் மறுபடியும், மறுபடியும் அந்த அரூப பாத்திரத்தை நோக்கி அம்புவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஜெயா நல்லகண்ணு
‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததை மறந்துவிடக்கூடாது.

இந்த ஊடகங்களோ விஜயகாந்த் கிடைத்தால் மட்டும் நோண்டி நொங்கெடுக்கிறார்கள். அவர் அதிகம் படிக்காதவர். சுலபத்தில் டென்ஷன் ஆக்கலாம். என்ன கேட்டாலும் எதையோ ஒரு பதிலை அடித்துவிடுவார். ஜெயலலிதாவிடம் இப்படி கண்டதையும் கேட்டால் அவர் ‘அடித்து’விடுவார். அதனால் விஜயகாந்த்தை துரத்திப்பிடித்துக் கேட்பவர்கள்; கருணாநிதியிடம் எதையும் தயக்கமின்றி கேட்பவர்கள், மம்மியிடம் மட்டும் பம்முகிறார்கள். ஜெயலலிதாவின் பிரஸ்மீட்டில் மட்டும் பத்திரிகையாளர்களின் குரல்வளை வயிற்றுக்கும் கீழே போய்விடுகிறது. அவர்களின் மூளையே விமர்சனக் கேள்விகளை சுயதணிக்கை செய்துவிடுகிறது.

ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது மட்டும்தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம். அவர் முதல்வராக இல்லாத நிலையிலும் கூட அவரிடம் எதிர்மறை கேள்விகளை கேட்டுவிட முடியாது. ஆக, ஜெயலலிதா தெளிவான, தீர்மானமான கருத்துக்களை கொண்டுள்ளார். அவர் பார்ப்பன பாசிசத்தை தனது சித்தாந்தமாக வரித்திருக்கிறார். அதை உடைத்துப் பேச வக்கற்றவர்கள் யாருக்கும் பிரச்சினை இன்றி காற்றில் கத்தி வீசுகின்றனர்.

இதில் வினோதம் என்னவெனில், சொந்த சரக்கு இல்லாத கிளிப்பிள்ளை என ஜெயலலிதாவை குறிப்பிடும் இவர்கள்தான் ‘அம்முதான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும்’ என்பதில் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவை பிரதமர் ஆக்குவோம்’ என்று சில வாரங்களுக்கு முன்பு ஆர்.நல்லகண்ணு சூளுரைத்ததையும், ‘தமிழ் பிரதமர்’ என்று குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் ஜெயலலிதாவுக்கு சொம்பு தூக்குவதையும் மறந்துவிடக்கூடாது. எனில் இவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது.

ஜெயாவை யாரோ சிலர் தவறாக வழி நடத்துவது இருக்கட்டும். முதலில் ஜெயாவை விமரிசிக்க நினைத்தாலே உங்களுக்கு சிறுநீர் கழியும் உண்மையைச் சொல்வீர்களா?

–    வழுதி