privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அழகிரி மட்டுமா குற்றவாளி ?

அழகிரி மட்டுமா குற்றவாளி ?

-

திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட அழகிரி இப்போது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். திமுகவின் இயக்க விசையை தீர்மானிப்பது கொள்கையோ, மக்கள் நலனோ இல்லை என்பது அழகிரி விவகாரத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதி - அழகிரி
கருணாநிதியின் மகன், தென் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத இளவரசர் எனும் பதவியை வைத்து தேர்தலுக்குரிய பணத்தையும், வழிகளையும் உருவாக்குவதில் என்ன சாமர்த்தியம் தேவைப்படுகிறது?

அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட பிறகே அவரை அடாவடி என்று எழுதி வந்த ஊடகங்கள் அனைத்தும் அவரை போராளியாக சித்தரித்து அட்டைப்படக் கட்டுரைகளை வெளியிட்டன. பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியலின் கவர்ச்சியே இத்தகைய குழாயடிச் சண்டைகளை கிசுகிசுவாக வெளியிடுவதுதான். கூடுதலாக இது கல்லா கட்டும் மலிவான ஊடக தர்மமும் கூட. அடுத்து அழகிரியை கவனப்படுத்துவதின் மூலம் திமுகவின் செல்வாக்கை குறைக்கலாம். இது ‘அம்மாவுக்கு’ மகிழ்ச்சி தரும் என்பதால் அதிமுக அடிமை பத்திரிகைகள், இயல்பாகவே அழகிரிக்கு அதிக பக்கங்களை ஒதுக்கின.

ஏற்கனவே அஞ்சா நெஞ்சனென்று ஜால்ராக்களால் உசுப்பி விடப்பட்டு, அதை உண்மையென நம்பி, தற்போதைய ஊடக கவரேஜையும் அப்படி நம்பியிருக்கிறார் அழகிரி. அதாவது இவருக்கென திமுகவில் தனி செல்வாக்கு இருப்பது போலவும் அதை முழு தமிழ்நாடும் நம்புவதாகவும் அவர் கருதினார். இந்த உற்சாகத்தை ஊக்குவிக்கும் முகமாக தனது சந்திப்புகளில் மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங், வைகோ மற்றும் மற்றைய கட்சி தலைவர்கள், ரஜினி போன்றவர்களை சந்தித்து முடித்தார். இதனால் திமுக அலறும் என்பது அவரது எதிர்பார்ப்பு. அப்படி அலறவில்லை என்றாலும் ஒரு பயமாவது இருக்கும் என்பது அழகிரியின் நம்பிக்கை.

இப்படி பொறுக்க முடியாத அளவு போய்விட்ட பிறகு, தேர்தல் காலங்களில் தமது பெயர் காமடியாகவும், கண்றாவியாகவும் மாறிவிடும் என்று பயந்து திமுக தலைமை அழகிரியை நிரந்தரமாக நீக்கியிருக்கிறது. அழகிரியோ இதை எதிர்த்து நீதிமன்றம் போவதாகவும், கட்சி முழுக்க ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். அந்த வகையில் அழகிரி புராணம் ஊடகங்களில் தேர்தல் வரையிலும் வரத்தான் செய்யும். அதன்பிறகு அஞ்சா நெஞ்சன் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டாலும்  எந்த பத்திரிகையும் கண்டு கொள்ளப் போவதில்லை.

அழகிரிக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி ஏன் தரப்பட்டது? திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு அவர் கடுமையாக உழைத்ததுதான் என்கிறார்கள் திமுக கட்சிக்காரர்கள். எனில் இந்த உழைப்பை பல்வேறு தேர்தல்களில் பல்வேறு திமுக நபர்கள் காட்டியிருக்கும் போது அவர்களுக்கெல்லாம் இத்தகைய பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறதா என்ன?

வம்சம்
திமுகவின் பிரச்சினைகள் அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே உண்மை

திருமங்கலம் ஃபார்முலாவின் படி பணத்தை வாக்காளர்களுக்கு நேரடியாக அள்ளி விட்டதே ஒரு திருப்புமுனை. அதற்கு அழகிரியின் செல்வாக்கு பயன்பட்டிருக்கிறது. கருணாநிதியின் மகன், தென் தமிழ்நாட்டின் அறிவிக்கப்படாத இளவரசர் எனும் பதவியை வைத்து தேர்தலுக்குரிய பணத்தையும், வழிகளையும் உருவாக்குவதில் என்ன சாமர்த்தியம் தேவைப்படுகிறது?

கடைசி பத்தாண்டுகளில் திமுகவின் பிரச்சினைகள் அனைத்தும் கருணாநிதியின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே உண்மை. அழகிரி – ஸ்டாலின் போட்டி, தயாளு அம்மாள் வாரிசுகளுக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லி ராஜாத்தி அம்மாள் கனிமொழிக்கு பெற்ற பதவி, பொறுப்புகள், தமது பணபலம் – ஊடக பலத்தை வைத்து மிரட்டியும், பேசியும் ஆதாயம் பெறும் மாறன் சகோதரர்கள், அவர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட கலைஞர் டிவி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட கட்டிங் என்று இவைதான் கருணாநிதியையும், அறிவாலயத்தையும் சமீப ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன.

இந்த சூழலில்தான் அழகிரி எனும் போக்கிரி திமுக தலைவர்களில் ஒருவராக திணிக்கப்பட்டார். எல்லா மாவட்டங்களிலும் உள்ள திமுக பிரபலங்கள் அனைத்தும் அழகிரி, ஸ்டாலின் இரண்டு பேருக்கும் மரியாதை செய்வதையே முக்கிய கட்சிப் பணியாக கொண்டிருந்தனர். பின்னர் கொஞ்ச காலம் கனிமொழிக்கும் செய்ய வேண்டியிருந்தது. தினகரன் ஊழியர்கள் கொலை, தாகி கொலை, பொட்டு சுரேஷ் கொலை என அழகிரியின் ஆட்சி மண்டலத்துக்குள் நடந்த ‘சாதனைகளை’ உலகமே கண்டித்த போது திமுக தலைமை கண்டு கொள்ளாமல் இருந்தது.

அடாவடி அரசியலும், ரவுடி கும்பலும் இல்லாமல் கட்சி இல்லை என்பது திமுகவுக்கும் பொருந்தும் என்பதால் அழகிரி அங்கே அனாவசியமாக வளர்ந்தும் வளர வைக்கப்பட்டும் இருந்தார். இதற்காக திமுகவின் ஆட்சிக்காலங்கள் மற்றும் அதிகார உறவுகளை வைத்து அவரும், அவரது பினாமிகளும் ஏராளம் சொத்துக்கள், தொழில்களை உருவாக்கி விட்டனர். தற்போது அழகிரியின் ஆதரவாளர்கள் குறைந்து போனாலும் அவரது சொத்து சாம்ராஜ்ஜியத்திற்கு எந்த கேடும் இல்லை. மேலும் இன்று அவரை விட்டு போனவர்கள் யாரும் கொள்கைக்காக போகவில்லை என்பது உண்மையென்றால் அவர்கள் நாளையே திரும்பி வரக்கூடாது என்பதும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது. இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் பட்சத்தில் இந்த மறுசுழற்சி கொஞ்ச காலத்திற்கு நடக்கலாம்.

அழகிரி போஸ்டர்
இன்று அழகிரியை விட்டு போனவர்கள் யாரும் கொள்கைக்காக போகவில்லை என்பது உண்மையென்றால் அவர்கள் நாளையே திரும்பி வரக்கூடாது என்பதும் ஒரு கொள்கையாக இருக்க முடியாது

அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அஞ்சா நெஞ்சனின் வீரம், அஞ்சி ஓடும் கோழைத்தனம் என்பது நிரூபணமாகிவிட்டது. அதனால்தான் இன்று திமுகவை ‘வீரம்’ செறிந்து எதிர்த்து வருகிறார் அவர். இப்படி திமுகவின் சந்தர்ப்பவாத அரசியல் உருவாக்கிய அழகிரி, கருணாநிதியின் குடும்ப அரசியல் தோற்றுவித்திருக்கும் நோய் என்பதால் இதற்கு மருந்து இல்லை.

ரித்தீஷ் மற்றும் பிற திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை அருகில் வைத்துக் கொண்டே திமுக பணத்தை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து விட்டது என்கிறார் அழகிரி. மோடி, காங்கிரஸ், வைகோ அனைவரையும் புகழ்ந்து தள்ளுகிறார். அழகிரியின் மூடு அறிந்து தாங்களும் ஆதரவு கேட்கப் போவதாக காங்கிரசின் ஞானதேசிகனே அறிவித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் திமுவின் அரசியலுக்கு எதிரானது என்று பேசப்பட்டாலும் உண்மையில் அப்படி இல்லை. இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுகவோடு இருந்தவைதான் என்று அழகிரி திருப்பிக் கேட்கிறார்.

இரண்டு சந்தர்ப்பவாதங்கள் சந்தர்ப்பவாதமாக சண்டையிடும் போது அதில் கொள்கைக்கு என்ன வேலை இருக்க முடியும்? தற்போது அழகிரியின் நீக்கம், தேர்தல் குறித்த தேவையை ஒட்டித்தான் திமுகவிற்கு பயன்படும். இந்த தேர்தலிலும் அடுத்த தேர்தலிலும் வரும் வெற்றி தோல்வியை ஒட்டி இந்த தேவை மாற்றத்திற்குள்ளாகும். அதைத்தான் அழகிரி நம்பியிருக்கிறார். அதற்காகவே மற்றவர்களை சந்தித்து ஆதரவு தருகிறார்.

ஆகவே திமுகவில் ஜனநாயகமோ இல்லை கொள்கையோ, மக்கள் நலனோ இல்லை என்பது உண்மையென்றால் அழகிரியின் நீக்கம் கட்சிக்கட்டுபாட்டிற்காக அல்ல என்பதும் உண்மை. இல்லை இது கட்சிக்கட்டுப்பாட்டிற்காகத்தான் என்றால் கட்சி யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி வருகிறது. திமுகவின் மாவட்ட பகுதிகளில் உள்ளூர் குறுநில மன்னர்களும் அவர்களது வாரிசுகளும் கட்டுப்படுத்துவது போல மாநிலத் தலைமையை கருணாநிதியின் வாரிசுகள் கட்டுப்படுத்துகின்றனர். இதில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். அழகிரியோ, மாறன் சகோதரர்களோ, கனிமொழியோ அடுத்த படிகளில் இருக்கிறார்கள்.

அழகிரி
அழகிரியை நிரந்தர நீக்கம் என்று திமுக தலைமை தண்டித்திருக்கலாம். ஆனால் அந்த தண்டனை கருணாநிதிக்கு கிடையாதா?

தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் பிரச்சினைகளை விட குடும்ப பிரச்சினையே கருணாநிதியின் அன்றாட நேரத்தை அரிக்கும் அமிலமாக இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் கட்சியை தமது சுயநலத்திற்காகவாவது கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும் என்பதைத் தாண்டி திமுகவில் வேறு கட்டுப்பாடுகள் இல்லை. இதுதான் ஸ்டாலினுக்கு உள்ள பலம். ஆனாலும் இந்த பலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களின் கட்சி அமைப்பு தருகின்ற பலம் இல்லை என்பது அவருக்குள்ள பலவீனம்.

ஆகவே சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். அதனாலேயே வில்லன் நிலையிலிருந்த அழகிரியை இன்று கோபக்கார கதாநாயகன் நிலைக்கு உயர்த்திருக்கிறார்கள். விரைவிலேயே அது காமடி டிராக்காக மாற்றப்படும் என்றாலும் அழகிரி அதையும் ஒரு விளம்பரமாக எடுத்துக் கொள்வார். காரணம் அவரது அஞ்சா நெஞ்சம் அத்தனை அறிவு வறட்சியை உடையது.

கோவை செம்மொழி மாநாட்டின் முதல் வரிசைகளில் கருணாநிதியின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்த போது கருணாநிதியின் மனதில் ராஜ கம்பீரம் கொடிகட்டிப் பறந்திருக்கும். இந்தக் கொடிக்கு திமுகவின் அமைப்பு விதிகளோ இல்லை கட்சி தொண்டர்களோ எந்த விதியின் கீழ் இடமளித்திருந்தார்கள்?

ஆகவே அழகிரியை நிரந்தர நீக்கம் என்று திமுக தலைமை தண்டித்திருக்கலாம். ஆனால் அந்த தண்டனை கருணாநிதிக்கு கிடையாதா? அழகிரியாவது தனது வாரிசுகளை இன்னமும்  தென் தமிழக திமுகவின் இளவரசர்களாக அறிவிக்கவில்லை. ஆனால் கருணாநிதி?

  1. “”””””அழகிரியை கவனப்படுத்துவதின் மூலம் திமுகவின் செல்வாக்கை குறைக்கலாம். இது ‘அம்மாவுக்கு’ மகிழ்ச்சி தரும் என்பதால் அதிமுக அடிமை பத்திரிகைகள், இயல்பாகவே அழகிரிக்கு அதிக பக்கங்களை ஒதுக்கின”””””””
    ..,

    அந்த பத்திரிக்கைகள் செய்ததைத்தான், வினவும் செய்கிறது…. தேவையில்லாத இந்த குப்பையை எழுதிவதை விட காணாமல் போன மலேசிய விமானத்தை பற்றியோ, அல்லது ஈராக்கில் பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 9 ஆக சட்டமாக்கப்பட்டதையோ பற்றி எழுதலாம்… வினவைவிட தமிழ்நாட்டு நடப்பும், அரசியலும் ஊராருக்கு நன்றாக தெரியும்…..

    • Indian அவர்களே நீங்கள் வினவை குறைசொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே,நீங்கள் வேறு ஏதாவது முடிவுடன் இருந்தால்,மறுமொழியிடுவதை விட்டுவிடலாமே!!!!!!!!!!!!

  2. அழகிரிக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு ஒன்றும் தமிழகத்தில் இருக்கிறதா என்ன?

    வைகோ ஒரு மானங்கெட்ட அரசியல்வாதி, அழகிரி ஒரு கூறு கெட்ட அரசியல்வாதி .

    இவரு போய் அவருகிட்ட ஆதரவு கேட்டாராம் ! அவரு வாழ்த்தினாராம் !

  3. 1,50,000 தமிழர்கள் தலை சாய,தமிழினம் இலங்கையில் கருக
    மஞ்சல் துண்டு பிரதான காரணம்….வாழ்நாளில் மறக்கமுடியாத,
    மன்னிக்கமுடியாத துரோகம்

  4. அழகிரி ஒரு ‘டம்மி’ என்பது அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே குடும்பத்துடன் வனவாசம் சென்ற போதே தெரிந்து விட்டது .அவர் கடந்த ஜனவரி கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படும் முன்னர் வரை தன் வீட்டு சோபாவின் நுனியில் கூட உட்காரவில்லை. அப்பாவுக்கு சங்கடம் தந்தால் தன்னை கூப்பிட்டு சமாதானம் செய்து அழைத்துக் கொள்வார் என்கிற அளவில் மன்மோகன், ராஜ்நாத் சிங், ரஜினி என மனம் போன போக்கில் வகை தொகையில்லாமல் சந்திப்பதே அழகிரியின் ‘சின்னப் புள்ளத்தனமான’ அரசியல் புரிதலாக இருக்கிறது. இந்த அளவில் தான் தி மு க வில் கருணாநிதி சொல்வதை ஏற்றுக் கொள்ளுகின்ற அளவிலேயே ஜனநாயகமும் கட்சி கட்டுப்பாடும் நிலவுகின்றது .இது தான் மாறன் குடும்ப பிணக்கிலும் நடந்தது.ஆனால் மோடி அலை நாடு முழுதும் அடிப்பதாக பீற்றிக் கொள்ளும் வைகோ போன்ற அரசியல் அனாதைகள் அழகிரி ஏதோ எட்டுப்பட்டிக்கும் ராசா என்பது போலவும் அவர் ஆதரவு தந்தால் 2,3 மாவட்டங்களிலும் வெற்றி பெறலாம் என்பது போலவும் கையேந்துவது என்ன மாதிரி அரசியல் புரிதலோ? இந்த கைபுள்ளைய நம்புகிற அளவுக்கு வைகோவும் எச் ராஜாவும் ரொம்ப பரிதாப நிலையா அல்லது அப்புராணிகளா? கண்கள் பனித்தது பாணி அறிக்கை தேர்தலுக்கு முன்னரே வர வாய்ப்பில்லை எனலாமே தவிர வரவே வராது என யாரும் சொல்ல முடியாது. “விலக்கி வைக்கப் பட்டிருக்கிறார்” என்பதின் பொருள் அது தானே?

  5. குடும்ப அரசியலா? குத்து வெட்டு அரசியலா? இல்லை அம்மா அனைவருக்கும் கல்தா கொடுத்துவிட்ட கோபமா? இந்தக் கட்டுரை சொல்ல முனைவது என்ன? ஐயோ பாவம்! வினவு.

  6. தேர்தல் அரசியல் ஒரு காமெடி; அதில் தேர்தல் ஒரு மஹா காமெடி; அதில் கூட்டணிகள் சூப்பர் காமெடி;அதில் அஞ்சா குஞ்சன் அழகிரி தான் ஒரிஜினல் காமெடி;வவுத்துக்குள்ளயே சிரிச்சு சிரிச்சு அல்சரே வந்திருச்சிப்பா.இதுக்கு மருந்து இதுங்களையெல்லாம் ஒரேயடியா ஒழிக்கிறதுதான்.”செய்வீங்களா? நீங்க செய்வீங்களா?[அம்ம்மா பாணி!]ஈ..ஈ..ஹி.

  7. ஓ உங்களுக்கு பிரச்சனை, இந்தியா மாதிரி ஓட்டு போட்டு வாரிசை தேர்தெடுக்க முடியவில்லை என்பது தானா?

    அப்ப அரசியல் வாரிசு ராகுல் மற்றும் அழகிரியையும், அப்பாவி மக்களை ஈவுஇரக்க மின்றி கொண்ற மோடியையும், ஜனநாயக உரிமை படி தேர்ந்தெடுத்தால் எந்த பிரச்சனையும் இல்ல.

    இவுங்க நல்ல ஆட்சி பன்னலைனா, அது தான் அடுத்த தேர்தல் இருக்குதே அதில் வேர ஒரு பொரம்போக்கையோ, ஒரு கொலைகாரணையோ தேர்தெடுத்துட்டு போவோம்.

    பின்ன நாம உலகத்திலே பெரிய ஜனநாயக நாடு ஆச்சே இது கூட இல்லைனா எப்படி.

  8. முற்போக்கு சார்,

    தேர்தல் முறையில் வாரிசுகளும், கொலைகாரர்களும், பொறம்போக்குகளையும் தேர்ந்தெடுக்கிறோம். சரி, இந்த பிரச்சினைக்கு உங்களின் மாற்று தீர்வு தான் என்ன.
    கொஞ்சம் எங்களை போன்ற பாமரர்களுக்கும் புரியும் விதமாக கொஞ்சம் விளக்கிச்சொல்லுங்களேன்.

    • இது தான் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒரு வரியில் கூறிவிடமுடியாது. மக்கள் சிந்தனை மற்றும் செயலில் எந்த ஒரு மாற்றத்தையும் உண்டு பன்னாமல் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. வினவு அந்த வகையில் சமூக பிரச்சனைகளை தன்னுடைய அரசியல் பார்வையில் கட்டுரையாக வெளியிடுகிறது. உங்களுக்கு அரசியல் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமானால் ம.க.இ.க போன்ற மக்கள் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு பேசிப்பாருங்கள்.

      • ஒரே தீர்வு தான். நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், அதே சமயம் ஆளுமை திறன் கொண்டவர்களாகவும் உள்ளவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். கட்சி, மதம், சாதி அபிமானத்தில் ஒட்டு போட்டால் அதில் வாரிசுகளும், கொலைகாரர்களும் பொறம்போக்குகளும் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

        ம.க.இ.க மக்களிடம் ஒரு தாக்கத்தை உண்டாக்க வேண்டுமென்றால் முதலில் சிறிய அளவில், உள்ளாட்சி தேர்தல் அளவில் அவர்களது நேர்மையை திறமையை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். பின்னர் தானாக மக்களின் ஆதரவு பெருகும்.

        • //மக்கள் சிந்தனை மற்றும் செயலில் எந்த ஒரு மாற்றத்தையும் உண்டு பன்னாமல் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது//

          என்று நான் கூறியதையும்.

          //நல்லவர்களை, நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க முடியாத, ஒருவேளை அப்படியே தேர்ந்தெடுத்தாலும் அவர்களை சுதந்திரமாக பெரும்பான்மை மக்கள் நலன் சார்ந்து செயலாற்ற விடாத இந்த அமைப்புமுறை பிரச்சனையா?//

          என்று ஆணி கூறியதையும்

          நீங்கள் புரிந்துகொள்ள வில்லை.

          ஒரு எடுத்துக்காட்டுக்கு இப்போது ஜாதி வேண்டுமா, வேண்டாமா என்று இந்தியா முழுதும் வாக்கு எடுத்தீர்கள் என்றாள், அனைவரும் ஜாதி வேண்டும் என்றே வாக்களிப்பார்கள். ஆகையால் மக்கள் அனைவரும் ஆதரிக்கிறார்கள் என்பத்றகாக நாம் ஜாதியை அங்கிகரிக்க முடியாது. ஜாதி என்னும் கேவலமான அடிமைமுறயில் இருந்து மக்களை வெளிக்கொண்டுவரத்தான் போராட வேண்டும். அப்படி போரடும் போது மக்களே ஜாதியை ஒழித்து விடுவார்கள்.

          இந்த போலி ஜனநாயக அமைப்பில் யாராலும் மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. மாறாக அப்படியே செய்ய நினைத்தாலும் ஏகாதிபத்தியம் உங்களை செய்யவிடாது, அதற்கு எதிராக செயல்படுபவர்களை அழித்து விடும்(இது தான் வரலாறு). மக்கள் திரள் ஒன்று தான் இதை எதிர்த்து போராட முடியும். அந்த பாதையை நோக்கி தான் ம.க.இ.க போன்ற அமைப்புகள் செல்கின்றன.

    • கொலைகாரர்களும், பொறம்போக்குகளையும் தேர்ந்தெடுப்பது மட்டும் தான் பிரச்சனையா?
      அல்லது நல்லவர்களை, நேர்மையானவர்களை தேர்ந்தெடுக்க முடியாத, ஒருவேளை அப்படியே தேர்ந்தெடுத்தாலும் அவர்களை சுதந்திரமாக பெரும்பான்மை மக்கள் நலன் சார்ந்து செயலாற்ற விடாத இந்த அமைப்புமுறை பிரச்சனையா? எது பிரச்சனை ?

  9. // திமுகவில் ஜனநாயகமோ இல்லை கொள்கையோ, மக்கள் நலனோ இல்லை என்பது உண்மையென்றால் //

    உண்மையா, இல்லையா தெளிவா சொல்லும் ஒய்! அதிமுக கட்டுரைன்னா மட்டும் “பார்ப்பன,பாசிச” அப்படின்னு எப்படி நறுக்கு தெரிச்சாப்ல பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறீர்!

  10. அம்மாவின் 4000 கோடி ஊழல் வழக்கு பக்கத்து மானில கோர்ட்டில் சந்தி சிரிக்கிறது! “பார்ப்பன,பாசிச” ஊடகஙள் அதை கண்டு கொள்வதே இல்லை! வினவும் அதிலொன்று? எல்லோரும் செர்ந்து மக்களை முட்டாளாக்குஙகள்! தமிழ்னாடு உருப்பட்டுவிடும்?

  11. குடும்ப அரசியல் செய்ததாக மு.க வை குறை சொல்லும் கட்டுரையாளர், சடாலினுக்கு பதவி தராமல் 90 களிலே அரசமைத்ததை அடிகொடு இடவிலையே ?! மு.க குடும்ப அரசியலின் எதிரியாகத்தான் இருனதார், தி.மு.க வின் தொன்டர்கள் தஙலின் சுய லாபத்திற்க்காக சடாலினை ஏந்தி தூக்காத வரை.

  12. ச்சே…அழகிரி கிட்ட போய் அசிங்கப்பட்ட வாக்கர் வெற்றிவேல் வைகோவை பற்றி ஏதாவது எழுதி இருக்கும்ன்னு ஆசையோட தேடித் பார்த்தேன்…எங்குமே இல்லை,ஏமாற்றம் தான் மிச்சம்…

  13. வணக்கம்
    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_27.html?showComment=1398555253279#c183587270891311459

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

Leave a Reply to ramadoss kothandaraman seethapathi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க