மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

34 வயதான, முதுகலை பட்டதாரியான ராஜேந்திர லோம்தே என்ற விவசாயி மார்ச் 12-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு மார்ச் 18-ம் தேதி உயிரிழந்தார். அவரது 12 ஏக்கர் நிலத்தில் இருந்த மாமரங்கள் சூறாவளியில் சேதமடைந்து ரூ 5 லட்சம் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடன் தொல்லையை எதிர் கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அலானி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான அனில் குல்கர்னி என்ற விவசாயி மார்ச் 15-ம் தேதி லேவாதேவி கடன்காரர்களின் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதே வாரத்தில் நாசிக் மாவட்டத்தின் சதானா வட்டத்தில் 62 வயதான பாபு ராமச்சந்திர பவார் அவரது மாதுளை பண்ணை சேதமடைந்ததை தொடர்ந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மார்ச் 19-ம் தேதி 49 வயதான உதவ் நானாபாவ் தாண்ட்லே என்ற விவசாயி கடன் பணத்தை திருப்பிக் கட்ட முடியாத கவலையில் அம்பில் வாத்கான் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொணாடார்.
பிப்ரவரி மாதம் மகாராஷ்டிராவின் 28 மாவட்டங்களை தாக்கிய ஆலங்கட்டி சூறாவளியில் 17 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த ரூ 42,000 கோடி மதிப்பிலான தானிய, பழப் பயிர்கள் அழிக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட பஞ்சத்தினாலும், தொழிற்சாலைகளுக்கும், மேட்டுக்குடி நீச்சல் குளங்களுக்கும் தண்ணீர் திருப்பி விடப்பட்டதாலும் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஆண்டாவது நிலைமை சீரடையும் என்று விவசாயிகள் நம்பியிருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு மழை பெய்தாலும், அடித்த ஆலங்கட்டி சூறாவளி விவசாயிகளின் கடைசி நம்பிக்கையையும் பொய்த்துப் போகச் செய்து தமது உயிரை எடுத்துக் கொள்ளும் பரிதாப முடிவுக்கு அவர்களை தள்ளியிருக்கிறது.

மேற்குப் பகுதியில் விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கும் போது கிழக்குப் பகுதியில் நடக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டிகளை நடுத்தர வர்க்கம் கண்டு களித்துக் கொண்டிருக்கிறது. ‘ஜனநாயக’ இந்தியாவை ஆளும் கார்ப்பரேட், பணமூட்டை வர்க்கங்கள் நாடாளுமன்ற தேர்தல் உபந்நியாசம் நடத்துவதில் மும்முரமாக இருக்கின்றன. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான். இந்திய ஜனநாயகம் கொடுக்கும் ஓட்டுப் போடும் ‘உரிமை’ எல்லா நம்பிக்கைகளையும் இழந்த விவசாயிகளின் உயிரை பாதுகாக்கவில்லை.
தற்கொலை பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியான பிறகு பெயரளவுக்கு நிவாரணத் தொகை அறிவித்த மகாராஷ்டிர மாநில அரசு, தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்த பிறகு அதை விவசாயிகளுக்கு வழங்கவிருப்பதாக கூறியது. விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கும் கும்பலின் பிரதிநிதியான மத்திய விவசாய அமைச்சரும், கார்ப்பரேட் தொழிலதிபரும், மகாராஷ்டிர மாநில சர்க்கரை ஆலை முதலாளியுமான சரத்பவார் “இறுதி முடிவை எடுத்து விட வேண்டாம்” என்று ஆறுதல்கூறியிருக்கிறார். இவர்தான் இந்தியாவின் கிரிக்கெட்டை மல்டி பில்லியன் டாலரில் வடிவமைத்த சிற்பியில் ஒருவர்.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை அடகு வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசோ தனது முன்னணி அடியாள்படையான விவசாய அமைச்சர் சரத் பவார், நிதி அமைச்சர் ப சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுசீல் குமார் ஷிண்டே, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இந்தக் குழுவினர் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கும், இந்திய மக்களுக்கும் இறுதிச் சடங்குகளை செய்யும் வேலைகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாடு தழுவிய, உலகம் தழுவிய தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருக்கிறார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. ஹெலிகாப்டரில் பறந்து தனி விமானங்களில் நாடு முழுவதும் இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பேசி, இன்னும் தேர்தலுக்கு முன்பு 185 கூட்டங்களில் பேச இருப்பதாக சாதனை நடத்திக் கொண்டிருக்கும் அந்த பிணந்தின்னி, விவசாயிகளின் மரணத்தையும் தனது வோட்டுப் பொறுக்கும் வாய்ப்புக்காக பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்ட விவசாயிகளுடன் “சாய் பே சர்ச்சா” என்று நாடகம் நடத்தியிருக்கிறார். விசம் குடித்து சாகும் விவசாயிகளோடு சாயா குடித்து ஆறுதல் சொல்லும் வக்கிரம் மோடிக்கு மட்டும்தான் தோன்றும்.
விவசாயிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்கு காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகள்தான் காரணம் என்று சவடால் அடித்து விட்டு இது தேசிய வலி என்று உருகிய மோடி ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில், அரசு பதிவுகளின் படியே கடந்த 5 ஆண்டுகளில் 135 விவசாயிகள் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் குஜராத்தில் விவசாயிகளின் தற்கொலைகளை பதிவு செய்யக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவையும் மீறி பதிவாகியிருக்கும் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு தற்கொலைகள் நடந்திருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு கடன் கொடுப்போம் என்ற உறுதிமொழியை இப்போது மீறுவதால்தான் விவசாயிகள் வட்டிக் கடைக்காரர்களிடம் சிக்கி துன்புறுகிறார்கள் என்று கூறும் மோடி, வங்கிகள் விவசாயக் கடன் கொடுப்பதிலும், வசூலிப்பதிலும் கந்து வட்டிக் காரனை விட கேவலமாக நடந்து கொள்வதை மறைக்கிறார். அவரது புரவலர்களான கார்ப்பரேட்டுகள், வங்கிக் கடனை கொள்ளை அடித்துப் போவதை எதிர்த்து சுண்டு விரலைக் கூட உயர்த்தாத அந்த கார்ப்பரேட் தரகர் இப்போது வெற்றுச் சவடால் அடித்திருக்கிறார்.

தான் ஆட்சிக்கு வந்தால் இந்திய விவசாயத்துக்கு புத்துயிர் அளிக்கப் போவதாக சொல்லும் மோடியின் ஆட்சியில்தான் குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை 3.5 லட்சம் குறைந்து, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
சமீபத்திய உதாரணமாக, குஜராத்தின் செழிப்பான விவசாய பகுதியான தோலராவில் 920 சதுர கிலோமீட்டர் நிலத்தை சிறப்பு முதலீட்டு மண்டலமாக மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதீத சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் இந்தத் திட்டத்துக்கான சுற்றுச் சூழல் அனுமதி வழங்கி, எல்லைகளை வரையறுத்து நிலப்பறிப்புக்கு தயார் செய்திருக்கிறார் மோடி. ஏற்கனவே பல கார்ப்பரேட்டுகள் நிலம் வாங்க ஆர்வம் காட்டியிருக்கின்றன. இந்த சிறப்பு முதலீட்டு மண்டலத்தால் நர்மதா பாசன வசதி பெறும் 22 கிராமங்கள் அழிக்கப்படும்; 9,225 ஹெக்டேர் வளமான நிலம் கையகப்படுத்தப்படும்
இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்த முயற்சிக்கும் பேரணி அல்லது ஆர்ப்பாட்டம் அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. விவசாயிகள் காந்திநகருக்குள் பேரணி நடத்த திட்டமிட்டது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
விவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.
தேசிய குற்றப் பதிவு அலுவலகத்தின் பதிவுகளின் படி 1995-க்கும் 2011-க்கும் இடையே நாடு முழுவதும் 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு உயிரை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது வரையில் விவசாயிகள் கடன் நெருக்கடியில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் அறிவித்த நிவாரணங்கள் எதுவும் அவர்களது அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவில்லை. மாறாக நிவாரணங்களும் வங்கிக் கடன்களும், பணக்கார அரசியல்வாதிகளாலும், தனியார் பண முதலைகளாலும் ஒதுக்கிக் கொள்ளப்படுவதுதான் நடந்திருக்கிறது.
இதற்கிடையில் ஊடகங்களில் விவசாயிகள் தற்கொலை செய்திகள் பரவலாக வெளியான பிறகும் எந்த நிவாரணமும் கிடைக்காத விரக்தியில் அக்புரி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ஜனார்தன் ரவுட் என்ற விவசாயி யவத்மால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். அவர் இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் பெரும்பான்மை விவசாய மக்களுக்கு எதிரான பன்னாட்டு கார்ப்பரேட் நலனுக்கான மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்தி விவசாயத்தை கொடூரமாக அழித்து வரும் காங்கிரஸ், பாஜக முதலான கட்சிகளையும், அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் பிராந்திய கட்சிகளையும், அதே கொள்கைகளை ‘முறை’யாக அமல்படுத்தப் போவதாக கூறும் ஆம் ஆத்மி கட்சியையும் நம்பி வாக்களிப்பதுதான் ஜனநாயகம் என்று இன்னமும் நம்புகிறீர்களா?
– அப்துல்.
மேலும் படிக்க
- Don’t take the extreme step of suicide: Narendra Modi to Maharashtra farmers
- In Maharashtra, Narendra Modi’s Chai pe Charcha on farmer suicides
- Sudden rise in farmer suicides due to debt, crop failure: Gujarat govt figures
- Govt will provide maximum relief to hailstorm-hit farmers: CM
- Rs. 20,000 cr package sought for victims of hailstorm in Maharashtra
- Another hailstorm-hit farmer ends life in Maharashtra
- Hailstorms, debt deal crushing blows to Maharashtra farmers
- Maharashtra farmer battles for life
- 38 Maharashtra farmer suicides in a month