Saturday, May 10, 2025
முகப்புசெய்திதேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 31/03/2014

தேர்தல் ஒரு வரிச் செய்திகள் – 31/03/2014

-

செய்தி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் – பா.ஜ கூட்டணி பேச்சு இன்னும் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் “தெலுங்கு தேசம், 24 மணி நேரத்திற்குள் முடிவை அறிவிக்கவில்லையெனில் தனியாக போட்டியிட தயார்’ என பா.ஜ அறிவித்து உள்ளது.

நீதி: சந்திரபாபு நாயுடு கைப்புள்ளையாக இருந்தால் வெங்கய்யா நாயுடு கட்ட துரையாக இருக்கலாம். ஆனால் கேப்டனோடு யுகம் கடந்த பேச்சு வார்த்தையில், பொன்னார் கைப்புள்ளையாக கதறியது இன்னும் மேற்கு தொடர்ச்சி மலையில் எதிரொலிக்கிறது!

________

செய்தி: தேர்தல் நடந்த பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நிரூபிக்க, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமைக்க இடதுசாரிகள் முன்வந்தால், இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருப்பதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான அந்தோணி நேற்று  கேரளாவில் கூறினார்.

நீதி: போலி கம்யூனிஸ்டுகளின் மசச்சார்பற்ற அரசுக்கு, கண்டவர்களெல்லாம் விடாமல் அல்வா கொடுப்பதால்தான், அம்மா துரத்திய பின் அந்தோணி அழைக்கிறார்!

_________

செய்தி: சமீப நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்திற்கு காரணம் என பா.ஜ மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், “அடுத்த ஆட்சி, மோடி தலைமையில் தான் என்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி ஓடிவருகின்றன” என குறிப்பிட்டிருந்தார்.

நீதி: மோடியின் ஆட்சியில் பாரத மாதாவை பிளாக் மெயில் செய்யாமலேயே, பங்கு போட்டு விற்று விடலாமென பன்னாட்டு நிறுவனங்கள் துடிப்பதுதான், இந்த ஜெட் வேக ஏற்றத்திற்கு காரணமென ஜெட்லி கூறுகிறார்.

_________

செய்தி: “தேர்தல் நேரத்தில் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்த கருத்து கணிப்புகளை தடை செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு தான் இதற்கான சட்டம் இயற்றி கருத்து கணிப்புகளை தடை செய்ய வேண்டும்” என தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது.

நீதி: அதுவரை கார்ப்பரேட் மீடியாக்கள், மோடியோ இல்லை கேடியோ, காசு தரும் கட்சியின் வெற்றியை கருத்தெனவும் கணிப்பெனவும் வெளியிட எந்தத் தடையுமில்லை.

__________

செய்தி: “எந்த ஒரு கட்சியிலும் தனிப்பட்ட ஒருவருக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியான நடைமுறை அல்ல. அதுவும் பா.ஜ போன்ற கட்சிக்கு இது அழகல்ல. பா.ஜ தலைவர் ராஜ்நாத் சிங் எடுக்கும் தவறான முடிவுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும். பல நாடுகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரால், “மிகச் சிறந்தவர்கள்’ என யாரையாவது ஒருவரை தூக்கி பிடித்து துதி பாடுவர். அப்படிப்பட்டவர்கள் காணாமல் போய் விட்டனர்.” – பா.ஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங்.

நீதி: போட்டியிடுவதற்கு ஒரு தொகுதி கிடைக்கவில்லை என்றதும் நேர்மையும், கொள்கையும், தத்துவமும் கோடை வெயிலில் உருகும் ஐஸ் போல சிங்கிடம் ஓடுகிறது. கரையும் ஐஸ்கட்டிகளுக்கும் கூட வரலாற்றில் இடமில்லையே மிஸ்டர் சிங்!

__________

செய்தி:  “ஆம் ஆத்மி கட்சியுடன் தேர்தலுக்கு பின் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. ‘ஊழலை ஒழிப்போம்’ என்ற ஒற்றை கோஷத்தை தவிர அவர்களிடம் வேறு எந்த கொள்கையும் இல்லை. அந்த கட்சி தலைவர்கள் அரசியல் ரீதியாக இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டியுள்ளது”, என்று மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நீதி: வாழ்ந்து கெட்ட பண்ணையார் மட்டுமல்ல, பிச்சைக்காரர்களும் கூட “ அழுகிய பழம் கிடைத்தால் கூட சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று கூறிவிட்டு மறைவில் சாப்பிடத்தான் செய்வார்கள்.

_________

செய்தி: “ஆட்சி நடத்துவது ஒன்றும் சிறுபிள்ளைகள் விளையாடும் விளையாட்டு கிடையாது” என டில்லியில் உள் கரோல் பாக்கில் நடந்த காங்கிரஸ் பிரச்சார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.

நீதி: கொலம்பியா மைனர் ராகுல் காந்தி, செட்டி நாட்டு கார்ப்பரேட் மைனர் கார்த்தி சிதம்பரம் போன்ற பால்கனி பாப்பாக்கள் மட்டும் அரசியலிலும், ஆட்சியிலும் பங்கேற்கலாமா?

___________

செய்தி: “இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது,” என மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.

நீதி: இப்படி முதலைக் கண்ணீர் வடிப்பதன் மூலம் காலரைக்கால் வாக்கையாவது கூட்டி விடலாமென்று, காங்கிரசின் தேர்தல் வறட்சியை போக்க நினைக்கிறார் வாசன்.

___________

செய்தி: “தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என அழைக்கப்படுபவர் தந்தை பெரியார். அவரைப் போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதால் இந்தியாவின் வெண்தாடி வேந்தர் என நரேந்திரமோடியை அழைக்கலாம்”,சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பேசியது.

நீதி: போதையோ நிதானமோ இரண்டிலும் உளறும் கேப்டனின் மப்பை செருப்பாலடித்தாலும் மாற்ற முடியுமா?

_________

செய்தி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

நீதி: போயஸ் தோட்டத்து ஆஸ்தான ஜோசியன் தீர்மானித்திருந்தாலும் முட்டாள்கள் தினத்தில் அடிமைகள் மனு தாக்கல் செய்கிறார்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்.

__________

செய்தி:  ”மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாருக்கு கிரிக்கெட்டை பற்றி மட்டும் பேசுவதற்கு நேரம் இருக்கிறது. ஆனால் அவரின் சொந்த மாநிலத்தில் கடன் தொல்லையால் விவசாயிகள் செத்து மடிவதை பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை,” என பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மராட்டிய மாநில தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

நீதி: மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால், துக்க வீட்டில் ஆறுதல் சொல்ல கவர்ச்சி நடிகை மேக்னா பட்டேல் வருவார்.

__________

செய்தி: ”கடந்த லோக்சபா தேர்தலில் என்ன வாக்குறுதி அளித்தோமோ அதை நிறைவேற்றி காட்டியுள்ளோம். இம்முறை நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் ஆதரவு தேவை,” என காங்கிரஸ் தலைவர் சோனியா, அசாம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.

நீதி: கடந்த தேர்தலில் தாலியறுத்தீர்கள், இந்த தேர்தலில் சங்கை அறுப்பீர்களோ?

___________

செய்தி: “தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க் கட்சியைத் தாக்கும் ஜெயலலிதா இதுவரை பா.ஜ.கவை எங்கும் தாக்கிப் பேசவில்லை. அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க உடன் தொடர்பு உள்ளது. இதை பல இடங்களில் நான் பேசியும் அவர் இதற்கு பதிலளிக்கவில்லை. இதுவே அதற்கு சான்று,” திருப்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவின் மு.க.ஸ்டாலின்.

நீதி: சரி, திமுகவினர் எங்கே மோடியையும், பாஜகவையும் தாக்கி பேசியிருக்கிறார்கள் என்று ஜெயா கேட்டால் இளைய தளபதி வெட்கத்துடன் அசடு வழிவாரா?

_________

செய்தி: ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சார கூட்ட பேச்சின் போது 18 முறை, “செய்வீர்களா” என, கூட்டத்தினரைப் பார்த்து ஜெயா கேட்டார். வேட்பாளர் அன்வர் ராஜாவை, ஜெயா அறிமுகப்படுத்தியபோது நான்கு முறை குனிந்து கும்பிடு போட்டார். அ.தி.மு.க- வில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு முதல்வரிடம் உறுப்பினர் அடையாள அட்டை பெறுவது குறித்து, தனிப்பிரிவு போலீசாரால் ஒத்திகை செய்து காட்டப்பட்டது.

நீதி: மீசை வைத்த புலிகளையும், சிங்கங்களையும், பெண் ரிங் மாஸ்டர் முட்டி போட வைக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளை தேர்தல் பிரச்சாரமென்று அழைப்பது ஏனோ?

__________

செய்தி: ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் தி.மு.க  பொருளாளர் ஸ்டாலின் பேசிய போது,” ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை பார்த்து, அ.தி.மு.க அமைச்சர்கள், வேட்பாளர்கள் தரையில் படுத்து வணக்கம் சொல்லும் அநாகரிக ஆட்சி இங்கு நடக்கிறது” என்று கூறினார்.

நீதி: உதயநிதி, தயாநிதி, அவர்களது மனைவிமார்கள், கனிமொழியின் மகன் ஆதித்யா போன்ற மேதைகளின் பிறந்த நாட்களுக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை-பாரளுமன்ற உறுப்பினர்களெல்லாம் கியூவில் நின்று வாழ்த்துரைப்பதெல்லாம் நாகரீகமா, அநாகரீகமா?

__________