privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நாடாளுமன்றம்நாவம்மாத்தா யாருக்கு ஓட்டுப் போடுவார்?

நாவம்மாத்தா யாருக்கு ஓட்டுப் போடுவார்?

-

“ஒரு துளி மை… உரிமை, கடமை, பெருமை” என்பது போன்ற தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் எந்தத் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளும், கிராமப்புற மக்கள் மனதில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடத்தை பிடித்துள்ளது என்று ஊகங்களுமாக அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என்று தேர்தல் குறித்த செய்திகள் அனல் பறக்கும் இந்த நேரத்தில் கிராம வாசியான நான் கிராமத்து மக்களுடன் பேசி அவர்களது மனநிலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கிராமத்துப் பெண்
படம் : நன்றி ஜெகதீஸ்வரன் http://sagotharan.wordpress.com

தேர்தல் குறித்து பேசணும்னு நெனச்சதும் முதலில் ஞாபகத்துக்கு வந்தது நாவம்மா ஆத்தா.

1996 சட்டமன்ற தேர்தல் நடந்தப்ப எனக்கு ஓட்டு போடும் வயசு, ஆனா வாக்காளர் பட்டியல்ல என் பேரு இல்ல. கல்யாணம் முடிஞ்சு வெளியூருக்கு போய்ட்ட பக்கத்து தெரு பொண்ணோட ஓட்டு வீணா போகுதுன்னு ஆயாசப்பட்ட உள்ளூர்ல உள்ள கட்சிக்காரங்க, கட்டாயப் படுத்தி கள்ளவோட்டு போட கூப்பிட்டாங்க.

“எலக்சன்னு ஊரே திருவிழா கூட்டமா இருக்கு, கட்சிக்காரங்க வாங்கி குடுத்த தண்ணிய ஊத்திட்டு ஒவ்வொருத்தனும் தலமாண்டு நிக்கிறானுங்கெ. ஓட்டு போட்ற எடத்துல நாலு தெரு ஆம்பளைங்களும் இருப்பாங்க. வயசுப் பொண்ண ரோடு சுத்தி அனுப்ப சொல்றீய கெழவி. ஒனக்கு கூறு இருக்கா” என்று என் அம்மா பொலம்பியத அலச்சியப் படுத்தி என்னை போக சொன்னா நாவம்மாத்தா.

“ஆமா ஒம்மக அப்புடியே கிளி மாரி இருக்கா, கொத்திட்டு போப்போறாங்கெ. போடி இவளெ! ‘மரியாத இல்லாம ரப்பு ரப்புன்னு போறா பாரு’ன்னு சொல்றவனுவ ஆம்பளைவ்வொ, அவனுவொளெ வந்து மதிச்சு கூப்புட்றானுவொ. இவவேற வூட்டுக்குள்ளேயே அடஞ்சு கெடக்கணுங்கறா. நீ போடி, ஒங்க அம்மா கெடக்கா. நீ போயி மாடி வீட்டுக்காரெ சொல்ற கச்சிக்கு ஓட்ட போட்டுட்டு வாடி. எப்புடியாவது இந்த தடவ செயிச்சுப்புட்டா எம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு சொல்லிருக்கான்”. 18 வருசத்துக்கு முன்னால நான் ஓட்டு போடுறதுக்கு சப்போட்டா இருந்தது நாவம்மாத்தா. இப்படி பேசிய நாவம்மாத்தா இன்னைக்கி என்ன சொல்றான்னு பாப்போம்.

“என்னாத்தா இந்த தடவ யாருக்கு ஓட்டு போடப் போற?”

“மயிருக்கு போட்றென் ஓட்டு. போரியல்ல (போர்வல்) போயி தண்ணி எடுக்குறேன்னு விழுந்து வாரி கால கீழ ஊண முடியாம கெடக்குறேன். இவய்ங்கெளுக்கு ஓட்டு போடலன்னா மோசமாம்! நெனவு தெரிஞ்ச நாளுமொதலா, எவம் போரியலு தொறந்துடுவா, ஒரு கொடம் தண்ணி தூக்கிட்டு வரலான்னு தொன்னாந்துட்டு இருக்கறதே பொழப்பா போச்சு. தண்ணிக்கி ஒரு வழி செய்ய மாட்டேங்கறாய்ங்கெ ஓட்டு ஒன்னுதான் கொறச்ச” என்று வெறுப்போட சொன்னா.

“ஓட்டு போட்றது நம்ம கடமன்னெல்லாம் சொல்றாங்க, நீ அவமதிச்சு பேசுறீயேத்தா?”

“மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான். அம்பலக்காரவூட்டு காசிக்கி ஓட்டுப் போட்டோம், ஊருல பாவப்பட்ட சனம் நடவு நட்டுட்டு இருந்த கோயில் நெலத்த புடிங்கி அண்ணாங்காறன்ட குடுத்துட்டான். ஏவ்வீட்டுக்காரு சாவறதுக்கு முன்னாடிலேர்ந்து ஓட்டு போட்றேன், நமக்கு ஒன்னும் நடக்கல. ஒழுவுற வீட்டுக்கு ஓல போடாய்க்கல, இந்த மண்ண பேத்துட்டு ஒரு சிமெண்டு போடாய்க்கெல. நம்ம பொழப்பு நாறுது கடமெ உரிமென்னுட்டு வந்துட்டா”.

“ஆத்தா நீ ஓட்டு போட்டதா சொல்றது எல்லாம் பஞ்சாயத்து தலைவர தேர்ந்தெடுக்குற தேர்தல். இப்ப பிரதமர தேர்ந்து எடுக்குறதுக்கான தேர்தல். இதுல யாருக்கு ஓட்டு போடுவே?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நம்மூருகாரய்ங்கெதான வந்து ரெட்டலைக்கி போடு, கை சின்னத்துக்கு போடு சூரியனுக்கு போடுன்னு கேக்குறாய்ங்கெ. நீ சொல்றதெல்லாம் எனக்கு தெரியாது. “

“நம்மூர் காரவங்கள விடுத்தா. பெரிய தலைவர்கள் இருக்காங்கள்ள அவங்களுக்கு யாருக்கு ஓட்டு போட்டே?”

“ஏன்டி ஒம்மா வீட்ல இல்லையா, வேல பாக்காம இங்க வந்து வம்பு வளத்துகிட்டு இருக்க” என்று அலுத்துகிட்டு, “முன்னாடி இந்துராகாந்தி மொதலமச்சரா இருந்தப்ப அந்தம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். செயலலிதா மொதலமச்சரா இருந்தப்ப இந்த அம்மாவுக்கு ஓட்டுப் போட்டேன். நம்மளாட்டம் அவங்களும் ஒரு பொம்பளையாச்சே பாவன்னு ஓட்டு போட்டேன்”.

“செத்துபோன இந்திரா காந்தி பிரதமர், செயலலிதா முதலமைச்சர்?, ரெண்டையும் கொழப்பறையே”

“யாரா இருந்தாலும் நம்மள ஆள்றவங்கதானேடி அவங்க.

“அதுவும் சரிதான். ஆனாலும் இத்தன வருசம் ஓட்டு போட்றே ஒருத்தரும் ஒரு நல்லதும் செய்யல. யாரும் சரி இல்லேங்றீயாத்தா?”

“இந்தரா காந்தி அம்மா நல்லவங்க. முன்னெல்லாம் மழ(ழை) பேஞ்சா நம்ம ஓட வாக்யால்ல நெரம்பி தண்ணி போவும். நம்ம ஊருக்கு மேற்க இருக்குற எந்த ஊருக்கும் போக முடியாது. ஆத்துல நடுப்பறி கயித்த கட்டிதான் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகணும். அந்தம்மா மொதலமச்சரா இருந்தப்பதான் பாலம் கட்டுனுச்சு. எம்மகனுக்கு பாசுபோட்டு குடுத்துச்சு. இன்னொங் கொஞ்ச காலம் இருந்துருந்தா எம்புள்ளைக்கி வேல கெடச்சுருக்கும். எம்புள்ள துபாய் போனப்ப மறக்காம இந்தரா காந்தி சமாதிக்கி போயி பூவெல்லாம் போட்டு கும்புட்டுட்டு போனான். அந்தம்மாவெதான் பாவி பயலுவொ அனியாயமா கொன்னுபுட்டாய்ங்கெ” என்று தன் பரிதாப நிலையை மறந்து இந்திரா காந்திக்கு இரக்கப் பட்டாள் நாவம்மாத்தா.

“என்னாத்தா, அன்னைக்கி என்னைய கள்ள ஓட்டுப் போட, உற்சாகமா போக சொன்ன இப்ப ஓட்டு போடமாட்டேன்னு ஏத்தா தலகீழா பேசுறே?

“எங்க வீட்டுக்காரு செத்தப் பிறகு படாத கஷ்டமுல்ல, இருந்தாலும் கடன ஒடன வாங்கி பட்டப்படிப்பு படிக்க வச்சேன். பஸ்சுக்கு போக கூட காசுருக்காது, போட்டுட்டு போக ஒரு நல்ல சட்ட இருக்காது எப்புடியாவது படிக்க வச்சுட்டா ஒரு வேல கெடச்சுரும் நம்ம பாரம் கொஞ்சம் கொறையுன்னு ஆசபட்டேன். நான் சொல்ற கச்சுக்கு ஓட்டுப் போடு, ஒம்மகனுக்கு வேல வாங்கி தர்ரேன்னு எல்லாப் பயலும் சொன்னாங்கெ. அவைங்கெ சொன்னதெல்லாம் தண்ணிலெ எழுதுன எழுத்தாப் போச்சு. நம்மூர்ல ஒரு வேல கெடச்சுருந்தா ஏம்புள்ள வெளிநாடு வரைக்கும் சம்பாதிக்க போயி செத்து கண்ணாடி பொட்டில பொணமா வந்துருக்க மாட்டானே”ன்னு மகன் ஞாபகம் வந்தவளாய் தலையிலேயே அடிச்சுகிட்டு அழ ஆரம்பித்தாள்.

“அழாதாத்தா நான் ஏதோ கேக்கப் போயி ஒம்மகனெ ஞாபகப் படுத்திட்டேனோ?”

“ஏதோ கேக்கப் போயின்னு யாஞ்சொல்ற உண்மெ அதானே! வேல கெடைக்குன்னுதான் படிக்க வச்சேன், கெடைக்கெல. இருந்த ஒரு ஏக்கர் நெலத்தையும் வித்துட்டு சம்பாரிக்க வெளிநாடு போனான். எங்க கால சூழ்நெல, பின்னாடியே எமன் போயி உயிர பறிச்சுப்புட்டான். அங்க உள்ளவெ யாரோ கொன்னுட்டானுவொன்னு சொல்றாங்கெ, வேல தாங்காம நெஞ்சடச்சு செத்துட்டான்னு சொல்லாங்கெ. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். நெலத்துக்கு நெலமும் போயி பிள்ளைக்கி பிள்ளையும் போயி இன்னைக்கி எங்குடும்பம் அனாதையா நிக்கறதுக்கு காரணம் இவனுங்கதானே.

ஏம்புள்ள செத்ததுல இருந்து நானு ஓட்டு போடல. என்னா பண்ண. முடிஞ்சுச்சு அவைங்கெளால. எம்புள்ள செத்த பணத்த வச்சு லச்சலச்சமா கொட்டிக் கொடுத்து எம்பேரப்புள்ள படிக்கிறான். அவனுக்காவது ஒரு கெவுரு மெண்டு வேல கெடைக்கிதான்னு பாப்போம்”ன்னு மகன் இறந்த துக்கம் தொண்டைய அடைக்க தள்ளாத வயதுலயும் தன் நம்பிக்கைய பேரன் மீது மாத்தி பேசினாள்.

சாதி, அடிமைத்தனம், பிற்போக்கு சடங்கு இதெல்லாம் கடைபிடிச்சு நம் வாழ்க்கையில் மாறியது என்ன என்பதை தன் வாழ்க்கை சூழலிலிருந்து புரிந்து கொள்ளும் பாமர மக்கள் அதை தூக்கி எறிந்து விட்டு அதிலிருந்து வெளிவருகிறார்கள். அதுபோல ஓட்டு போடுறது சடங்குதான்னு கிராம மக்களால் அறிவு பூர்வமாக உணர முடியலைனாலும், இந்த தேர்தலும் நமக்கான உரிமையை வழங்கி நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது என்பதை நடைமுறையில் இருந்தே புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு நாவம்மாத்தா ஒரு உதாரணம்.

– சரசம்மா