ஆவடி டி.பி.ஐ தொழிற்சங்கத் தேர்தலில் பு.ஜ.தொ.மு அணி மகத்தான வெற்றி!
சென்னை ஆவடியில் உள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் புராடக்ட்ஸ் தொழிலாளர் சங்கத்துக்கான தேர்தல் 24.5.2014 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அணி சார்பாக மொத்தம் உள்ள 7 பதவிகளுக்கும் போட்டியிட்டோம். இந்த 7 பதவிகளுக்கும் பு.ஜ.தொ.மு அணித் தோழர்கள் தேர்வு செய்யப்பட்டு மகத்தான வெற்றியை நிலைநாட்டியுள்ளனர். பல்வேறு அவதூறுகள், அச்சுறுத்தல்களை தொழிலாளர்கள் புறக்கணித்து தொழிலாளர்கள் இந்த வெற்றியை சாதித்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு பு.ஜதொமு-வின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் போட்டியிட்டார். இந்த நிறுவனத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் நல அமைப்பு சார்பாக சி.ஐ.டி.யு-வின் அம்பத்தூர் நகர செயலாளரும், இதே சங்கத்தில் பல ஆண்டுகள் தலைவராக இருந்தவருமான ஏ.ஜி.காசிநாதன் போட்டியிட்டார். நமது தோழரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மற்றொரு அணியான பாரதி அணியினர் திரு.காசிநாதனை பொது வேட்பாளராக அறிவித்து வேலை செய்தனர். இந்த பொது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் நிர்வாகமும் களம் இறங்கி வேலை செய்தது.
செயலாளர் பதவிக்கு பு.ஜ.தொ.மு-வின் ஆவடி-அம்பத்தூர் பகுதிக்குழுவின் தலைவரான தோழர்.ம.சரவணன் போட்டியிட்டார். இதில் மும்முனைப் போட்டியை எதிர்கொண்டோம். இதே போல ஏனைய பதவிகளுக்கும் மும்முனைப் போட்டியினை எதிர்கொண்டோம்.
எதிரணியினர் ‘பு.ஜ.தொ.மு அணி வெற்றி பெற்றால் ஆலைமூடல் நடக்கும்’ என்கிற எச்சரிக்கை பிரசுரத்தை தேர்தலுக்கு முந்திய தினத்தில் இரவு 8 மணிக்கு மேல் விநியோகித்து பீதியூட்டினர். அதே இரவில் 11 மணிக்கு இதற்கு பதிலடி கொடுத்து பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. “எந்த ஆலை மூடலுக்கும் தொழிற்சங்கம் காரணமாக இருப்பதில்லை” எனவும், “முதலாளிகளது லாபவெறியே ஆலைமூடலுக்கு காரணமாக இருப்பது” எனவும் அம்பலப்படுத்தப்பட்டது.
இரண்டு தொழிலாளர் அணிகள் மற்றும் நிர்வாகம் ஆகிய 3 அணிகளையும் எதிர்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. “தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிட பு.ஜ.தொ.மு அணிக்கு வாக்களியுங்கள்” என்பதே நமது முழக்கமாக இருந்தது. நமது முழக்கம் தொழிலாளர்களிடம் உருவாக்கிய நம்பிக்கையே மகத்தான வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. இரண்டு அணிகள் நிறுத்திய பொதுவேட்பாளர் மண்ணைக் கவ்வியதற்கும் அதுவே அடித்தளமாக இருந்தது.
இந்த வெற்றியில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இந்த தொழிற்சங்கம் சுமார் 52 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதன் நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றிருப்பது இது தான் முதல்முறை. முருகப்பா குழுமத்தின் பல்வேறு ஆலைகளில் பு.ஜ.தொ.மு-வின் செங்கொடி உயர்வதற்கு இந்த வெற்றி கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்