privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஈழமா , பதவியா - பாமகவின் பாசப் போராட்டம் !

ஈழமா , பதவியா – பாமகவின் பாசப் போராட்டம் !

-

டந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், நரவேட்டை மோடிக்கு கொடி பிடிக்க தமிழகத்தின் தலைமை புரோகிதர் மற்றும் புரோக்கர் தமிழருவி மணியனால் கோர்த்து விடப்பட்ட தமிழினக் காவலர்கள் வைகோவும் ராமதாசும் இந்துமதவெறியர்களுக்கு ஜால்ரா அடிப்பதில் போட்டி போட்டு வருகின்றனர். மன்னர்களை அண்டிப்பிழைத்து கவி பாடுவதில் போட்டி போடும் தமிழ் புலவர் மரபை பல இடங்களில் பெரியார் கேலி செய்திருக்கிறார். புலவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக மானே, தேனேவென வெண்பா பாடினார்கள் என்றால் வைகோவும், ராமதாசும் மோடியை பல்லக்கிலேயே தூக்கி சுமக்கிறார்கள். என்ன இருந்தாலும் ‘தமிழன்டா’!

தி.நகர் பாஜக-விற்கு நேர்ந்து விடப்பட்ட வைகோ, வடபழனியில் விலைக்கு வாங்கிய கிளிசரின் உதவியோடு கண்ணீரும் கம்பலையுமாக டெல்லிக்கு டிக்கெட் போட்டு ஜந்தர் மந்தரில் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறார். ஒரு வேளை விருதுநகர் தொகுதியில் அதிர்ச்சியூட்டும் விதமாக வைகோ வென்றிருந்தால் இந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சென்டிமெண்ட் ஆட்டங்களின்றி வேறு மாதிரி பா வரிசைப் படங்கள் போல காமெடியாக இருந்திருக்கும்.

‘வன்னியசாதி வெறியை தூண்டி விட்டு, தரும்புரியில் ‘கொடி’ நாட்டிய தன் குலக்கொழுந்து வன்னிய குல சிங்கம் அன்புமணியின் மீது மோடி பகவானின் கருணைப் பார்வை விழுந்து விடாதா, ஏதேனும் தூசு தட்டும் அமைச்சர் பதவி பிச்சை கிடைக்காதா’ என்று ராஜபக்சே விவகாரத்தை கடப்பாரை முழுங்கிய கடோத்கஜன் போல கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாமக ராமதாஸ். முனகாமல் இறுக்கமாக, கமுக்கமாக உட்கார்ந்திருக்கும் ராமதாசின் சந்தர்ப்பவாதத்தின் முன்னாள் மலை முழுங்கி மகாதேவனெல்லாம் பிச்சை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டு ராஜபக்சே - ராமதாசு

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி இலங்கை இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை மோடி அரசு அழைத்திருப்பது குறித்து அவர் விடுத்த அறிக்கையில்,

“இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. (அதில் இளவல் அன்புமணியும் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்).
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். (எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்புமணியையும் அமைச்சராக சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்)

வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ( இலங்கை சார்க் அமைப்பில் இருப்பதே இப்போதுதான் எனக்குத் தெரியும். முன்னரே தெரிந்திருந்தால் இலங்கைக்கு எதிராக வாயை திறந்திருக்கமாட்டேன்.)

ஐ.நா. மனித உரிமை ஆணையரின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ராஜபக்சேவை பெருமைமிக்க இந்த விழாவுக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். (தருமபுரியில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீட்டை கொளுத்திய என்னை யாரும் தவிர்க்கவில்லை என்பது வேறு விசயம்.)

இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். (இவ்வளவு அடக்கமாக காலில் விழுந்திருக்கிறோம், பார்த்து போட்டுக் கொடுங்கள்)”

என்று கூறியிருக்கிறார்.

2009 தேர்தலின் போது கடைசி வரை காங்கிரசு காலில் நக்கிவிட்டு பின்னர் ஈழம், வேழம் என்று சீன் போட்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் டிவியில் ஈழம் குறித்த வீடியோக்கள் வெள்ளமாய் வெளியிடப்பட்டன. வன்னிய சாதி வெறியைக் கூட தற்காலிகமாக பரணில் கட்டி வைத்து விட்டு ஈழத்தமிழருக்காக பாமக அழுது அரற்றியது அத்தனையும் நாடகம் என்பது இப்போது மட்டுமல்ல அப்போதும் எங்களுக்கு தெரியும் என்று தமிழக மக்கள் தெளிந்திருந்தால் இந்த அட்சரசுத்தமான பிழைப்புவாதிகள் தமிழகத்தில் பிழைக்க வழியிருந்திருக்காது.

வடமாவட்ட வன்னிய சாதி மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கி வெற்றி பெற்ற அன்புமணி ஒரு துணை அமைச்சர் பதவியாவது கிடைத்து விடாதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு டெல்லிக்கு ஃபிளைட் பிடித்து போயும் எதுவும் விழாமல் வெறுங்கையோடு மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே, “மத்தியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தேவை. எங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக எந்த உறுதியும் தரப்படவில்லை. பதவி தர முன்வந்தால், எங்கள் கட்சி அதுபற்றி முடிவெடுக்கும்.” என்று சோகத்தை அடக்கிக் கொண்டு கூறி விட்டு  ‘அதிமுகவோடு இணைந்து தமிழர்களின் நலன்களுக்காக போராட தயார்’ என்று அம்மாவின் காலடியிலும் ஒரு துண்டை போட்டு வைத்திருந்தார்.

வன்னிய சாதி பெயரைச் சொல்லி இந்த காளான்கள் செய்யும் சந்தர்ப்பவாதத்தை வன்னிய சாதி உழைக்கும் மக்களை உள்ளிட்டு தமிழக உழைக்கும் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய வெத்து வேட்டு வீரர்களையும், துரோகிகளையும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு உதவக்கூடிய நட்பு சக்திகளாக ஆராதிக்கும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இவர்களது யோக்கியதையை உணர வேண்டும்.

மேலும் படிக்க