Friday, May 20, 2022

நலந்தானா ?

-

நலந்தானா 2வெகு நாள் கழிச்சு ஊருக்கு போயிருந்த நான், எதிர் வீட்டு அம்மாச்சிய பாத்ததும் ஆசையா நல்லாரிக்கியா அம்மாச்சின்னு கேட்டேன். கேட்டதுதான் தாமதம் ஓன்னு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிருச்சு.

“பூலோகத்தப் போல பூரிப்பா இருப்போமுன்னு
மக்களப் பெத்து மகிழ்ச்சியா இருப்போமுன்னு
மண்ணு தரிச்சு மண்டலத்துல தங்குனே……

ஏம் மக்க பண்ணுன மன முடிவால
மவுசு கொலஞ்சு மருவாதி கெட்டு
நான் அழுது மடியிறேன் ஆறா பெருகுறேன்.

வெவரம் கெட்ட பய மகன வெளிநாடு அனுப்பி வச்சா
வெவகாரம் ஆகுமுன்னு வெளங்காம போச்சுதடா
உங்கள நெனச்சு உசுரு துடிக்குதுடா, ஊன்னுயிரும் போகுதடா

நான் பெத்த மக்கா நீங்கெல்லாம் எங்கெயோ இருக்க
நான் இங்க நாதியத்து கெடக்கேனடா”

என்று நெடுங்குரல் வச்சு அழுத அம்மாச்சிய லேசுல நிறுத்த முடியல.

“போயி சேர எனக்கு காலம் வரல. ஏன்னோட ஏட்டடுத்து பாக்க எமனுக்கு நேரம் வரல. நானா போக ஒடம்புல வலுவும் இல்ல. வழியும் தெரியல. விதிய நெந்துகிட்டு நாள எண்ணிகிட்டு இருக்கேன்” என்று சலிப்பும் விரக்தியுமா, புலம்பி தவித்தாள் எம்பது வயசுக்கு மேல உள்ள அம்மாச்சி.

“மக்களுக்கு பஞ்சமில்லாம நாலு மகனுவொள பெத்தேன். நாலு பிள்ளைய பெத்தா நடுச்சந்தியிலதான் சோறுன்னு ஊருல ஜனங்க சொல்லும். அது பொய்யாகாம, எம்பிள்ளைவளும் என்ன இப்படி ஏலம் போட விட்டுபுட்டானுவ. வீடு நெறையா புள்ளக்குட்டியோட வாழ்ந்த மனுசி நானு, இன்னைக்கி பசியரிஞ்சு ஒரு வாய் சோறு போட்டு வைக்க ஆளுல்லாம நாதியத்தவளா கெடக்குறேன்.”

“ஊரோட சனமா நாமும் நல்லாருப்போன்னு நெனச்சுதான் வெளிநாடு அனுப்பி வச்சேன். கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப சம்பாரிச்சு நாலு காச பாத்ததும், “எம் பிள்ளைங்க படிக்கணும், இங்கிலீசு பள்ளிக்கூடத்துல சேத்தாத்தான் நல்லா படிக்கும், எம்பொண்டாட்டி கிராமத்துல இருந்துகிட்டு தேவையானத செஞ்சு குடுத்து சரியான நேரத்துக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்றா”ன்னு பொண்டாட்டிய காரணம் காட்டிட்டு குடும்பத்த கொண்டு போயி டவுனுல வச்சுட்டு வெளிநாடு போயித்தானுவொ. வீடு இருக்கு, வாச(ல்) இருக்கு ஆனா வீட்டுல என்ன தவிர யாரும் இல்ல. விட்டத்த வெறிச்சு பாத்துக்கிட்டு எத்தன நேரம் படுத்துக் கெடக்குறது சொல்லு.”

நலந்தானா“ஆளில்லாத வீட்டுக்குள்ள சுருட்டிக்கிட்டு படுத்து கெடந்தா உயிரு போனாக்கூட யாருக்கும் தெரியாது. அத நெனச்சுகிட்டு அக்கம் பக்கம் இருக்குற வீட்டுகள்ள போய் உக்கார்ரது, படுத்து எந்திரிக்கிறது. ஆனா முன்ன மாரி இப்ப அக்கம்பக்க சனங்களும் இல்ல, மூஞ்சி மொவரைய காட்டுதுவொ. இங்குன படுக்காதெ அங்கென படுக்காதெங்குது ஜனம். அசிங்க பட்டுக்கிட்டு இருக்கறதுக்கு சாவலாமுன்னு நெனச்சாலும் அதுக்கும் ஒடம்புல தெம்பில்ல. கை காலல்லாம் நடுங்குது. சோத்த அள்ளி வாயில வச்சா, கை கன்னத்துப் பக்கம் இழுத்துட்டு போகுது. தலமுடிய அள்ளி கட்ட முடியாமதான் மொட்ட அடிச்சுருக்கேன். இந்த லட்சணத்துல ஒரு மொழ கயித்த கூட எடுத்து விட்டத்துல கட்ட முடியல.”

“கட்டுலு மெத்தன்னு வாங்கி போட்டு, வெளி நாட்டுல இருந்து யாரு வந்தாலும் பேரிச்சம் பழம், பருப்பு கொட்டன்னு குடுத்துட்டு அவனுவொ பாசத்த காட்றானுவொளே, தவிர வயசானவளாச்சே பக்கத்துல இருந்து பாத்துக் கேட்டு செத்தா தூக்கி போடனுங்கற அக்கர எவனுக்கும் இல்ல. என்னப் போல ஊருக்குள்ள காவாசி பேருக்கு மேல இந்த நெலமையிலதான் இருக்காங்க. இங்க இருந்து வாழ வழியில்லாதவங்கதான் வெளி நாடு, வெளியூருன்னு போறாய்ங்கென்னா தேவையே இல்லாத எம்புள்ளைங்க மாறி உள்ள நெறையா பேரு படிப்பு வசதின்னு டவுனப்பக்க கெளம்பிருதுங்க”.

“ஏதோ விட்டக் கொற தொட்ட கொற ரெண்டாங்காலு மூனாங்காலு சொந்தக்காரியான வள்ளியம்மாதான் இப்ப எனக்கு ரெண்டு கஞ்சி தண்ணி ஊத்துது, நல்லது பொல்லது குடுக்குது. ஆளு வரச்சொல்லி முடி வெட்டுது. அவ புள்ளக்குட்டியோட நல்லாருக்கனும். தெருவுல தண்ணி தூக்குற புள்ளகுட்டிவொளட ஒரு கொடம் தண்ணி ஊத்துங்கயான்னு குளிச்சுக்குறேன். ஒவ்வொரு வேலைக்கும் ஒருத்தரு தயவு பாத்து எத்தன நாளைக்கி வாழ முடியும் அதான் என்ன சீக்கிரம் கொண்டுப் போடாப்பான்னு கடவுள வேண்டிட்டு கெடக்கேன்.” அம்மாச்சி புலம்பி தீர்த்தார்.

இது அம்மாச்சி வீட்டுல மட்டும் இல்ல, கிராமங்கள்ள உள்ள அனேக வீடுங்களிலயும் இதுதான் நிலைமை.

எந்த கஷ்டம் வந்தாலும் உறவுகள விட்டு கொடுக்காம வாழும் கிராமத்து குடும்ப வாழ்க்கை முறை இப்படியாக சின்னாபின்னப்பட்டு கெடக்குது. அக்கம் பக்கம் இருக்கவங்க, தாயா பிள்ளையா ஒன்னுக்குள்ள ஒன்னா பழகுனவங்க, ஒருத்தருக்கு ஒன்னுன்னா ஓடி வந்து உதவுனவங்க, இப்ப நமக்கெண்ணென்னு சுயநலமா ஒதுங்கிக்குறாங்க. வள்ளியம்மா மாதிரி எல்லார் கிட்டையும் நெறஞ்சுருந்த எதார்ந்த மனசு இப்ப மக்கள்ட்ட அங்கொன்னும் இங்கென்னுமா பரவலா கொறைய ஆரம்பிச்சுருச்சு.

அவங்க வீட்டுல பைக்கு இருக்கு, இவங்க வீட்டுல டைல்ஸ்சு போட்டு மாடி வீடு கட்றாங்க, எதுத்த வீடல செவுத்துல மாட்டுற டிவி இருக்கு, அவங்க பையன நாலு லட்சம் ரூபா கட்டி இஞ்சினியரு படிக்க வக்கிறாங்க. இவங்க பிள்ளைக்கி எல்.கே.ஜி.-க்கே அம்பதாயிரம் பணம் கட்டி சேத்துருக்காங்க என்ற எண்ணம் நகரத்தை தாண்டி கிராமங்கள்ளயும் குடி வந்தாச்சு.

ஒரு கிராமத்து விவசாயி தேவைக்கி விவசாயம் பண்ணி தன் தேவையை பூர்த்தி செஞ்சுட்டு வாழ்ந்த நிலையை மாற்றி அவசர கெதியும் ஆடம்பர வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தி வைச்சிருக்காங்க. அத்தோட அது அவசியம், அதுதான் மரியாதை என்ற நிலையை கேள்விக்கி இடம் இல்லாம உருவாக்கிட்டாங்க. உறவுகள தூக்கி எரிஞ்சுட்டு பொன்னும் பொருளும்தான் மரியாதன்னு நெனச்சு பகட்டு வாழ்க்கையை நோக்கி கிராமத்த மக்கள தள்ளுது இந்த விளம்பர உலகம். காசுக்கேத்த தோசைதான் கிடைக்குமுன்னாலும் எல்லாரும் ஏதோ ஒரு தோசைக்கு அலையறது வாடிக்கையாயிருச்சு.

தனியார் பள்ளியில ஆங்கில வழி கல்வி படிக்க வச்சாதான் புள்ளைங்க நல்லா படிக்குங்கற எண்ணத்த மக்கள் மனசுல திட்டம் போட்டு பதிய வச்சுட்டாங்க. தனியார் பள்ளியில படிக்கிறதுதான் மரியாதை, தனியாரு மருத்துவமனையில வைத்தியம் பாக்கறதுதான் பெருமைன்னு நெலம உருவாயிருச்சு.

நலந்தானா 5நகரத்துல வாழ வேண்டிய தேவை இல்லாதவங்க கூட வெளஞ்ச வெள்ளாம, செய்ற தொழில்ன்னு தனியார் பள்ளிக்கி கொட்டி கொடுத்துட்டு இப்படிப்பட்ட பெரியவங்கள அம்போன்னு விட்டுட்டு நகரத்துக்கு குடிபோறாங்க. வசதி இல்லாத உழைக்கும் மக்களக் கூட விட்டு வைக்க கூடாதுன்னு அவங்க வசதிக்கி ஏத்த மாறி நாலு ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதம் மாட்டு தொழுவம் மாதிரி தொறந்து வச்சுருக்கானுவ. மிச்சம் மீதி உள்ளவங்கள நாய் புடிக்கிற மாறி இண்டு இடுக்கு சந்து பொந்துன்னு எல்லா எடத்துக்கும் வேன கொண்டாந்து பிள்ளைங்கள அள்ளி போட்டுட்டு போறாங்க.

அதே ஊருல உள்ள ஒரு குடும்பத்த பாருங்க. கணவனுக்கு விவசாயம், மனைவிக்கி அதே ஊருல அரசு பள்ளியில ஆசிரியர் வேலை. குடும்ப வாழ்க்கையோ 20 கிலோமீட்டர் தள்ளி இருக்குற நகரத்துல. சொந்த ஊருல உள்ள வீட்ட விட்டுட்டு காலடில உள்ள வயல விட்டுட்டு பிள்ளைய டவுனுல படிக்க வச்சுக்கிட்டு நெதமும் கணவனும் மனைவியும் வேலைக்காக சொந்த ஊருக்கு வந்து போறாங்கன்னா இந்த கொடுமைய எந்த கோயில் போய் சொல்றது? அப்படி அந்த பிள்ளைங்க டவுணுல படிச்சு என்ன சாதிக்க போவுது? எம்பிஏ படிச்ச எங்கூரு பையன் ஓரு ஓட்டல்ல கேசியரா இருக்கிறதை அங்க சாப்பிட போனப்போ பாத்தேன். இந்த வேலய அரசு பள்ளியில படிச்சா பாக்க முடியாதா? இல்ல என்ஜினியரிங் படிச்சவனெல்லாத்துக்கும் எங்க வேலை கிடைக்கிது?

நமக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுகிட்டு அதுக்காக பாடுபட்டு உழைச்சு வெள்ளாம செஞ்சு, அவசியமானத வாங்கி, அடுத்தவங்க இல்லனு சொன்னா, இருக்குறத நேந்து நெரவி பகிர்ந்து குடுத்து, மத்தவங்க துன்பத்த தன் தோளுல சொமக்கும் வஞ்சகமில்லாத எதார்த்தமான கிராமத்து மக்கள் மனசுல இரக்கமற்ற எண்ணம் உருவாகும் படி இந்த உலகமயமாக்க வாழ்க்கை சூழல் மாற்றி அமைச்சிருச்சு.

கூட இருக்கிற கிராமத்து மக்களோட கஷ்டங்களுக்கு கண்ண திறக்காதவன், கண்ணோட கருவளையத்த போக்க பட்டணத்து அழகு நிலையங்களுக்கு போய் நூறு, ஆயிரம் அதுவும் கடன் வாங்கி செலவழிக்கிறது வளர்ச்சியா, வீழ்ச்சியா?

– சரசம்மா

  1. //வளர்ச்சியா, வீழ்ச்சியா?//நீங்க நல்லவரா கெட்டவரா தெரியலயேப்பா டொன்டடொய்ங் ………..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க