privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

-

ன் செய்தி தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியரான ராஜாவுக்கு, பிணையில் வர முடியாத பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்துள்ளது சென்னை, சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றம். சன் செய்தியில், செய்தி வாசிப்பாளராக இருந்த அகிலா தொடுத்த பாலியல் குற்ற வழக்கில் ராஜாவுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. அதில் முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க… கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சன் செய்தியில் மறுபடியும் ராஜா சேர்ந்துவிட்டார் என்பது ஊடக உலகிலேயே இன்னும் பலருக்குத் தெரியாத செய்தி.

சன் டி.வி ராஜா
சன் டி.வி ராஜா

ராஜாவால் அகிலாவுக்கு நேர்ந்த பாலியல் பிரச்சினை குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ராஜா, அகிலா இருவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது சன் டி.வி. நிர்வாகம். குற்றம் இழைத்தவரை காப்பாற்றும் விதமாக புகார் கொடுத்தவரை நீக்கி தனது ஆண்டைத்தனத்தை காட்டியது சன் நிறுவனம். இருப்பினும் பொதுவெளியில் பெயர் அம்பலப்பட்டதால், பணியிடத்தில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந்தரவு தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணையை சன் நிறுவனம் ஒரு பக்கம் நடத்தியது. மறுபுறம் நீதிமன்றத்தில் அகிலா கொடுத்த குற்ற வழக்கு நடந்து வந்தது. விசாகா கமிட்டி எல்லாவற்றையும் ஆற அமர விசாரித்துவிட்டு சன் நிர்வாகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துவிட்டு சென்றது. ராஜா, பதவியில் இருந்து விலகினார்.

இது குறித்து வினவில் தொடர்ந்து எழுதியிருக்கிறோம். அறியாதவர்கள் அந்த பழைய கட்டுரைகளை படித்தறியலாம்.

ஆனால் குற்ற வழக்கு முடிவடையாமல் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது இந்த வழக்கின் சுருக்கமான பின்னணி.

ராஜா சன் செய்தியில் இருந்து வெளியேறிய பிறகு ‘அந்த டி.வி.யில் சேரப்போகிறார். இந்த டி.வி.யில் சேரப்போகிறார்’ என்று அவ்வப்போது பரபரப்பான பேச்சுக்கள் அடிபடுவது உண்டு. அவர் எதிலும் சேரவில்லை. கடைசியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்பாக ‘செய்தி ஆலோசகர்’ என்ற பதவி கொடுக்கப்பட்டு ராஜா மீண்டும் சன் செய்தியில் சேர்க்கப்பட்டார். பதவியின் பெயர் மாறியிருந்தாலும், அவர் முன்பு பார்த்த அதே வேலையைத்தான் பார்த்து வருகிறார். பழைய உருட்டலும், மிரட்டலும் மட்டும் குறைந்திருப்பதாக சொல்கின்றனர்.

ஆனால் இங்கு விவகாரம் ராஜாவின் ‘சாமர்த்தி’யம் பற்றியது அல்ல. பணியிடத்தில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தம் கீழ்த்தரமான நபர் என்பது ஆதாரபூர்வமாக அம்பலப்பட்டப் பின்னரும், ராஜா போன்ற பொறுக்கியை எந்த கூச்சமும் இல்லாமல் மறுபடியும் வேலையில் சேர்த்திருக்கும் சன் நிர்வாகத்தைப் பற்றியது. ஒருக்கால் ராஜா குற்றம் செய்யவில்லை என்று சன் நிர்வாகம் தனது பொய்மையை நிலைநிறுத்த வேண்டுமென்றாலும் அகிலா தொடுத்த வழக்கு முடிந்த பிறகே, அதுவும் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளித்த பிறகே, அதைச் செய்ய வேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் ராஜாவை கூட்டி வந்து அழகு பார்த்தால் அதற்கு என்ன பொருள்?

இதுபற்றி யாரும் எதுவும் பேசவில்லை. எனில், சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா? இல்லை அவர் யோக்கியர் என்றால் அதை நீங்களா தீர்மானிப்பது? பாதிக்கப்பட்ட பெண் தொடுத்த வழக்கை கூட இவர்கள் குப்பையாக மதிக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இதுவே அகிலாவின் குற்றச்சாட்டு உண்மை என்பதை ஐயமற நிரூபிக்கிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் பெண்களை பாலியல் ரீதியில் இழிவுபடுத்தும் ஒழுக்கமற்ற நபர்களை தலைமைப் பொறுப்பில் வைத்திருந்தால் அதன் நன்மதிப்பு சரியும். அது வியாபாரத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும். இது தெரிந்தும் சன் நிர்வாகம் ராஜாவை மறுபடியும் பணியில் அமர்த்தியிருக்கிறது. எந்த விளக்கமும் கூறவில்லை. ஒருவேளை ‘விசாகா கமிட்டி ராஜா மீது குற்றம் இல்லை என்று சொல்லிவிட்டது’ எனலாம்.

சன் நியூஸ்
சன் நிர்வாகம் ராஜாவின் அரிப்புக்கு சொரிந்துவிடும் வேலை பார்க்கிறதா? அல்லது அந்த பொறுக்கியின் பாலியல் இச்சையை தீர்த்து வைக்கும் மாமா வேலைப் பார்க்கிறதா?

ஆனால் விசாகா கமிட்டி என்பது கண் துடைப்பு. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சன் தொலைக்காட்சி நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டவர்கள்தான் என்பதிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம். அதையும் தாண்டி குற்ற வழக்கு, நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது இன்னும் விசாரணை மட்டத்தில்தான் இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க எந்த அடிப்படையில் இத்தகைய ‘குற்றவாளியை’ வேலைக்கு சேர்த்தது சன் நிர்வாகம்?

சன் நிர்வாகம் மட்டுமல்ல, பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட இத்தகைய பேர்வழிகளை காப்பாற்றவே செய்கின்றன. நிறுவனத்தின் நன்மதிப்பை காப்பாற்ற வேண்டி நீதிமன்றத்திற்கு வெளியே இவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களை ‘மிரட்டி’ ஒப்பந்தம் போட்டு வழக்கை திரும்பப் பெறுமாறு செய்கிறார்கள். எந்த நிறுவனமும் தனது மேலதிகாரி குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வாங்கித் தருவதில்லை. இந்த இலட்சணத்தில்தான் இவர்கள் பெண்கள் தினம் அது இது என்று உபதேசங்களை அள்ளிவிடுகிறார்கள்.

’ராஜா போன்ற திறமையாளர்கள் ஊர் உலகத்தில் இல்லை. அதனால்தான் தேர்தலுக்கு முன்பு சேர்த்துள்ளனர்’ என்றும் சன் நிர்வாகத்தை சொல்ல முடியாது. அப்படி ஒன்றும் அவர் மலையைப் புரட்டியவர் இல்லை. ராஜாவின் வீழ்ச்சி, இன்னொரு பொருளில் சன் நிறுவனத்தின் வீழ்ச்சி. அகிலா என்ற ஒற்றைப் பெண், சன் டி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்திற்கு சவால் விட்டதை அவர்களால் நிச்சயம் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியாது. ஆகவே ராஜாவை மீண்டும் தலை நிமிர வைத்தாக வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே அகிலா தரப்பை நீர்த்துப் போக செய்வதில் அதிக கவனம் செலுத்திய சன் டி.வி. நிர்வாகம், ராஜாவின் கிரிமினல்தனத்துக்கு துணை போன பலரையும் தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தது. எனினும் ராஜாவின் தற்போதைய இணைவில், இந்த தர்க்கங்களை மீறிய வர்த்தகக் கூட்டுகளும், யூகிக்க முடியாத ரகசிய பேரங்களும் இருக்கக் கூடும். இல்லையேல் சேர்த்தது ஏன் என்று சன் நிர்வாகம் தனது விளக்கத்தை கூறட்டும்.

மொத்தத்தில் வாய்கிழிய ஊர் நியாயம் பேசி, தீர்ப்பு வழங்கும் இந்த ஊடகங்களின் யோக்கியதையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தில் நடக்கும் குற்றத்தை வேறு நிறுவன செய்தியில் காட்டக் கூடாது என்று இவர்கள் தங்களுக்குள் உடன்படிக்கை போட்டு செயல்படுகின்றனர். இந்த கூட்டுக்களவாணித்த்தனத்திற்கு ஊடக “எத்திக்ஸ்” என்று வேறு தத்துவ விளக்கம் அளிக்கின்றனர். எத்துவாளித்தனங்களெல்லாம் எத்திக்ஸ் என்றால் அந்த எத்திக்ஸ் நாசமாக போகட்டும்.

இத்துடன் டி.வி.யில் மூஞ்சி தெரிகிறது என்பதற்காக பல்லை இளித்துக்கொண்டு கருத்து சொல்வதற்காகப் போகும் காரியவாத அறிவாளிகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் ஊர், உலக பிரச்சினை எல்லாவற்றுக்கும் கருத்து சொல்வார்கள். ஆனால் ஒரு பயலும் சன் டிவியின் அயோக்கியத்தனம் குறித்து வாய் திறக்கவில்லை. இது கருத்து கந்தசாமிகளுக்கு மட்டுமல்ல, கருத்து காயத்ரிக்களுக்கும் பொருந்தும்.

பச்சமுத்து
புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து

இதைவிட முக்கியமாக தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களின் சுயமரியாதையற்ற தன்மையை பரிசீலிக்க வேண்டும். சம்பளம், கவர், பரிசுப் பொருட்கள், ஓசி குடி, பஸ் பாஸ், வீட்டு மனை, குடித்துவிட்டு வண்டி ஓட்ட பர்மிட் என பல சௌகர்யங்களை அனுபவிக்கும் பத்திரிகையாளர்கள் உண்மையில் மழுங்கினிகளாக இருக்கின்றனர். எதையும் எதிர்த்துப் பேச அவர்களுக்கு நா எழுவதே இல்லை. ஜெயலலிதா நடத்தும் பிரஸ் மீட் காட்சிகளை ஜெயா டி.வி.யில் பார்த்தால் உங்களுக்கு அதிமுக தொண்டர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது.

தன்னிடம் வரும் அனைவரையும் ஓபிஎஸ்ஸாக மாற்றிவிடும் அற்புத சக்தி படைத்தவர் அம்மா என்பது ஒரு உண்மைதான் என்றாலும், இதில் பத்திரிகையாளர்களின் பணிவும் குறிப்பிடத்தகுந்தது. விஜயகாந்தை சீண்டிவிட்டு வாயைப் பிடுங்கும் இவர்கள், ஜெயலலிதாவிடம் சொன்னதை குறித்துக் கொண்டு போட்டதை தின்றுவிட்டு கிளம்பி விடுகின்றனர்.

ராஜா மீண்டும் வேலையில் சேர்ந்துள்ள இந்த நிலை குறித்து சிலரிடம் பேசியபோது, தமிழ் ஊடக உலகில் நடைபெற்று வரும் மற்றொரு அவலம் கவனத்துக்கு வந்தது. பல தொலைக்காட்சிகளில் கொத்து, கொத்தாக ஆட்களை வேலையை விட்டுத் தூக்கி வருகின்றனர். குறிப்பாக புதிய தலைமுறை குழுமத்தில் இருந்து 20 பேர், 30 பேர் என்று அனுப்பப்படுகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியை ஆரம்பித்து ஓரளவுக்கு பெயர் வாங்கியதும் இரண்டாவது அலைவரிசையாக புதுயுகம் ஆரம்பித்தார் பச்சமுத்து. அதற்காக ஏராளமானோரை வேலைக்கு எடுத்தார்கள். கிட்டத்தட்ட சென்னையின் அனைத்து முக்கியமான பத்திரிகையாளர்களும் அங்குதான் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் நம்ப முடியாத அளவுக்கு சம்பளம். 50 ஆயிரம், 60 ஆயிரம் என்று பயமுறுத்தும் விதமாக இருந்தது. அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்ததைக் காட்டிலும் இரு மடங்கு ஊதியம். அங்கு வேலை கிடைக்காதோர் அங்கு பணிபுரிகிறவர்களை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.

இந்த நிலையில்தான் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ஆட்குறைப்பு இப்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ’வேலையில் திறன் அற்றவர்களை அனுப்புகிறோம். காஸ்ட் கட்டிங்’என்று சொல்லப்பட்ட போதிலும் திறமையானவர்களும் வெளியில் அனுப்பப்பட்டு வருகின்றனர். 25 ஆயிரம், 30 ஆயிரம் சம்பளம் பெற்று ஓரளவு வேலையும் தெரிந்தவர்கள் தப்பித்தனர். அதைவிட அதிக சம்பளம் வாங்கியவர்களுத்தான் சிக்கல். அவர்களின் வேலைத்திறன் நன்றாகவே இருந்தாலும் வெளியேற்றப்படுகின்றனர். குறிப்பான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. முறையான விளக்கமோ இல்லை நிவாரணமோ எதுவும் இல்லை. தனிப்பட்ட நபர்களின் பேரம் பேசும் திறமையை பொறுத்து செட்டில்மெண்ட் தொகையாக 3 மாத சம்பளமோ, 4 மாத சம்பளமோ கிடைக்கிறது, அவ்வளவுதான்.

இதிலே இவர்களது திறன் என்று நாங்கள் குறிப்பிடுவது வணிக ஊடக உலகில் அவர்களே சொல்லிக் கொள்ளும் ‘எழுத்து மற்றும் பேசும்’ திறன்தான். ஊடகங்களில் மக்கள் நலனின் பாற்பட்டு காத்திரமான செய்திகளை வழங்குவது என்பது ஒரு பத்திரிகையாளனின் திறமை குறித்த பிரச்சினை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் விருப்பு வெறுப்பிற்கும் உட்பட்டதுதான். இருப்பினும் குறைந்த பட்சமாக மக்களை கவருவதற்கு இவர்களுக்கு கொஞ்சமாவது திறமை கொண்ட ஊடகவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் தேவையில்லை என்று தொலைக்காட்சிகள் நினைக்கின்றன என்றால் சானல்களை பார்க்கும் மக்களை இவர்கள் எவ்வளவு மட்டமாக பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது.

”நான் அப்ளை பண்ணலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. ஆனா இப்போ வெளியில் போகச் சொல்றாங்க. நான் இனிமே எங்கே போய் வேலை தேடுறது?” என்று கேட்கிறார் வெளியேற்றப்பட்ட ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர். இப்படி பலர் ஏற்கெனவே பார்த்துக் கொண்டிருந்த பாதுகாப்பான வேலையையும் கூட, அதிக சம்பள ஆசையால் விட்டுவிட்டு வந்துள்ளனர். இப்போது வேலை பறிபோன நிலையில் பரிதவித்து நிற்கின்றனர். சென்னையின் முக்கியமான, திறன் உள்ள பத்திரிகையாளர்களை அதிக சம்பளம் கொடுத்து இழுத்து, அவர்களின் திறமையைப் பயன்படுத்தி தனது நிறுவன பிரபலத்தை நிலைநிறுத்திவிட்டு இப்போது துரத்தி அடிக்கின்றனர். இனிமேல் அதிக சம்பளம் பெறுபவர்கள் அவர்களுக்குத் தேவை இல்லை. 8 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு ஆட்களை அமுக்கிப் போட்டு இரவும், பகலும் கொல்லலாம்.

வைகுண்டராஜன்
’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’

இந்த பச்சையான சுரண்டல் போக்கை எதிர்த்துக் கேட்க ஒரு நாதி இல்லை. புதிய தலைமுறையில் மட்டும் இல்லை. கேப்டன் நியூஸ் சேனலில் கூட கடும் ஆட்குறைப்பு. மொத்தமாக 25 பேரை நிறுத்திவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஜிடிவி.எஸ்.பி.வி. என்ற டி.வி.யில் கடும் பிரச்னை எழுந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் யாருக்கும் சம்பளம் தரவில்லை. தமிழ் ஊடக வரலாற்றில் முதன் முறையாக அதன் செய்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். எனினும் எதுவும் நடக்கவில்லை. அங்கிருந்தும் பலர் வெளியேறினார்கள்.

சமீபத்தில் ஜெயா டி.வி.யில் இருந்து சுமார் 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படி அண்மை சில மாதங்களில் மட்டும் வேலை இழந்த நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள், வேறு எந்த ஊடகத்திலும் வேலை கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். ஒருவேளை அவர்கள் தாதுமணல் திருடன் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் துவங்கப்போகும் புதிய டி.வி.யில் வேலைக்கு சேரக்கூடும். ஆமாம், அந்த கொடுமையும் நடக்கப்போகிறது. வைகுண்டம் இப்போது டி.வி.யிலும் இறங்கிவிட்டார்.

’கலாநிதிமாறன், பச்சமுத்து, எஸ்.பி.வேலாயுதம் போன்ற ஜென்டில்மென்கள் எல்லாம் டி.வி. வைத்திருக்கும்போது ஜென்டில்மெனான நான் மட்டும் இழிச்சவாயனா?’ என்று அவர் கருதியிருக்கக்கூடும். அனேகமாக இன்னும் சில ஆண்டுகளில் வைகுண்ட ராஜன் கட்சி கூட துவங்கலாம்.

இதுபோன்ற இழிவான நிலைதான் நமது சமகால தமிழ் ஊடகங்களின் உண்மை நிலையாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பல் பிடுங்கப்பட்டவர்களாக, எதிர்த்துப் பேசும் திறன் அற்றவர்களாக, ஒரு பிரச்னையை சொந்த அரசியல் கண்ணோட்டத்துடனோ மக்கள் நலனிலிருந்தோ அணுகும் ஆற்றல் அற்றவர்களாக, விழுமியங்கள் வீழ்ந்து போனவர்களாக இருக்கின்றனர். தன் சொந்த துறையில் தன் சக ஊடக பணியாளர்கள் கொத்து, கொத்தாக வேலையை விட்டுத் தூக்கப்படுவது குறித்த தகவல் கூட முழுமையாக தெரிந்திராத இவர்கள்தான் நமக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

இவர்களே இப்படி என்றால், பத்திரிகையாளர்களுக்கு என்று இருக்கும் சங்கங்கள் எதைக் கிழிக்கும் என்பது அதிசயமில்லை. தமிழ்நாட்டிலேயே மிகவும் சொகுசான டாஸ்மாக் பார் எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டுமானால், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்குப் பின்பக்கம் உள்ள பிரஸ் கிளப்புக்கு வாருங்கள். தினசரி மாலையில் அங்கு உட்கார்ந்து ஒரு கும்பல் குடித்துக் கொண்டே இருக்கிறது. அது ஒன்றும் அந்த இடத்திற்கு சம்மந்தப்படாத கும்பல் அல்ல. அவர்கள் அனைவரும் பத்திரிகையாளர்கள்தான். எழுதிவிட்டு குடிக்கிறார்களா, குடித்துவிட்டு எழுதுகிறார்களா தெரியவில்லை. ஆனால் எந்நேரமும் குடி. இதுதான் அவர்களின் வேலை. இதற்கு ஒரு பிரஸ் கிளப். அதற்கு அரசாங்க இடம். கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய ஊடகத் தூண் இப்படித்தான் சரிந்து வருகிறது.

இதனால் நாங்களெல்லாம் நேர்மையாக இல்லையா என்று சில பத்திரிகையாளர்கள் சீறலாம். அப்படி யாரும் சீறினால் அது குறித்து உண்மையில் மகிழப்போவது நாங்கள்தான். ஆனால் அந்த சீற்றம் உண்மை எனும் பட்சத்தில் சன் டிவி ராஜா குறித்தோ, இல்லை வேலை நீக்கம் செய்யும் தொலைக்காட்சிகளைப் பற்றியோ பேசவோ, எழுதவோ, போராடவோ நீங்கள் செய்யவில்லை என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

அது வேறு இது வேறு என்று நீங்கள் சமாளிக்கலாம். ஆனால் நாளையே கூட நீங்களும் காரணமற்று வேலை நீக்கம் செய்யப்படும் பட்டியலில் இருக்கலாம். அப்போது உங்களுக்காக போராட யாரும் இருக்கமாட்டார்கள்.

இது வெறுமனே வேலை பாதுகாப்பு குறித்த சுயநலம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. பொதுநலனில் பத்திரிகையாளர்கள் எப்படி நேர்மையாக செயல்படுகிறார்களோ அதுதான் அவர்களது பணிபாதுகாப்பிலும் பிரதிபலிக்கும். இதை எப்படி செய்வது என்ற தயக்கம் இருந்தால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!  இதன்றி நேர்மைக்கு வழியேதும் இல்லை நண்பர்களே!