Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!

சிவகங்கை மன்னர் அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி!

-

  • சிவகங்கை மன்னர் அரசுக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாபெரும் மோசடி!
  • ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கூட்டாக நடத்தும் சட்டவிரோத மோசடி!

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் நினைவு அரசுக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையிலும் சட்ட விரோதமான மோசடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மோசடி வருகின்ற 07/07/2014, திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.

இக்கல்லூரியில் ஒன்பது (9) இளங்கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இரண்டு சுழற்சி முறை (ஷிஃப்ட் சிஸ்டம்)களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஒரு வகுப்பிற்கு நாற்பது மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த மாணவர்கள் அரசு விதிகளின்படி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுகிறார்கள். இவ்வாறான சில கலந்தாய்வுகள் வெளிப்படையாக நடைபெறுகின்றன. ஒரு வகுப்பின் சேர்க்கைக்காக சராசரியாக எண்பதிலிருந்து நூறு வரையிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதில் நாற்பது பேர் தவிர மீதமுள்ளவர்கள், வெளிப்படையாக நடைபெறுகின்ற இந்தக் கலந்தாய்வுகளில் இடமில்லையென்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

சிவகங்கை மன்னர் கல்லூரி

ஆனால், அதன்பிறகுதான் மோசடி தொடங்குகிறது. இந்த வெளிப்படையான கலந்தாய்வுகளுக்குப் பிறகு மறைமுகமாக ஒரு கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வை “வராண்டா அட்மிசன்” (VARANDA ADMISSION) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த வராண்டா அட்மிசனில் அரசுவிதிகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மதிப்பெண் அடிப்படையும் கிடையாது, இடஒதுக்கீடும் கிடையாது.

மாறாக, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள்; போலீஸ், நீதித்துறை, மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள்; ஓட்டுக்கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் அல்லக்கைகள்; நகர்மன்ற, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்; உள்ளூர் பிரபலங்கள்; கல்லூரியில் அலுவலகப்பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள்; ஆகியோரின் சிபாரிசோடு வருபவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும்; சொந்த சாதிக்காரர்களுக்கும்தான் சேர்க்கை வழங்குகிறார்கள். இது முழுக்க முழுக்க சட்டவிரோதமாக நடைபெறுகின்ற சேர்க்கையாகும்.

கல்லூரி நுழைவாயில்
கல்லூரி நுழைவாயில்

இவர்களுக்கு வழங்கப்படுகிற சேர்க்கை இடங்கள் பல்கலைக்கழகத்திடம் எழுதிக்கேட்டு அனுமதி பெற்று வழங்கப்படுகின்றன. இருப்பினும் அது வெறும் கண்துடைப்பான பேச்சுதான், ஏனெனில் சேர்க்கை நடத்தி விட்டுத்தான் பல்கலைக்கழகத்திற்கு எழுதியே அனுப்புவார்கள்.

கல்லூரி நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு சிபாரிசு செய்பவர்களின் தயவு தேவைப்படுகிறது. இப்படி சிபாரிசு செய்து வாங்கிக் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் பலசாதகங்கள் சிபாரிசு செய்பவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் மாணவர் சேர்க்கை என்பது முழுக்க முழுக்க பணப்பட்டுவாடா சம்பந்தமானதாகவே இருக்கிறது.

இந்த முறையினை பல ஆசிரியர்கள் விரும்பாவிட்டாலும் எதிர்த்துப் பேசுவதில்லை. ஆனால், சில ஆசிரியர்கள் இதை வைத்து நன்றாகச் சம்பாதிக்கிறார்கள். சென்ற ஆண்டு ஒரு துறைத்தலைவர் மட்டும் சுமார் ஒரு லட்சம் பார்த்திருக்கிறார். கல்லூரியின் பொறுப்பு முதல்வாராக இருக்கும் ஜெகன்னாதனை சென்ற ஆண்டு சிலர் கத்தியால் குத்தினார்கள். அதற்கு இந்த “வராண்டா அட்மிசன்”தான் காரணம் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. மேலும் சென்ற ஆண்டில் ஒரு துறைத்தலைவர் மீது இது குறித்து விசாரணையும் நடைபெற்றிருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டும் “வராண்டா அட்மிசனு”க்காக பல மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட மன்ற உறுப்பினர் (M.L.A) வீட்டிலும், கல்லூரி அலுவலக ஊழியர்கள் வீட்டிலும் காத்துக் கிடக்கிறார்கள்.

பொறுப்பு முதல்வர் ஜெகன்னாதன்
பொறுப்பு முதல்வர் ஜெகன்னாதன்

நடத்தைச் சான்றிதழில் மோசம் எனும் தகுதியை வாங்கியிருப்பவர்கள் கூட இந்தக் கொல்லைப்புற சேர்க்கை வழியாக கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறார்கள். இவர்கள்தான் பல சமூக விரோதச் செயல்களுக்கான காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள் என்பதே சில ஆசிரியர்களின் வேதனை.

இது காலங்காலமாக இந்தக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பதுதான் பெரிய கொடுமை. தற்போது கல்லூரியில் இயங்கிவருகின்ற போலிகளின் மாணவர் அமைப்புகள் அனைத்திற்கும் இப்படிப்பட்ட சட்டவிரோதமான சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது நன்றாகவே தெரியும். இருப்பினும், இவர்களும் இந்த “வராண்டா அட்மிசனி”ல் மாணவர்களை சிபாரிசு செய்து “வரும்படி” பார்ப்பதால், இம்மோசடியினை மூடி மறைத்து விடுகிறார்கள்.

வெளிப்படையான கலந்தாய்வுகளில் கலந்துவிட்டு இடங்கிடைக்காமல் அழுதுகொண்டு நிற்கின்ற மாணவர்களை நாம் கலந்தாய்வு நேரங்களின் போது கல்லூரிகளில் காண முடியும். அவர்களுக்கு இப்படியொரு மோசடி நடப்பதும் தெரியாது.

மதிப்பெண் இருந்தும், ஒடஒதுக்கீடு வாய்ப்பு இருந்தும் கல்லூரியில் சேர முடியாத நிலை எவ்வளவு துயரமானது. இதுநாள் வரையிலும் வெளிவராமலிருந்த இந்த மாணவர் சேர்க்கை மோசடி இதோ இப்போது வெளி வந்துவிட்டது. இது சிவகங்கை அரசுக் கல்லூரிக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதேநிலைதான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இடங்கிடைக்காத மாணவர்கள் உடனே தொடர்பு கொள்க!

  • வராண்டா அட்மிசனைத் தடைசெய்!
  • மாணவர் சேர்க்கை முழுவதையும் வெளிப்படையாக நடத்து!
  • அரசு விதிகளைமீறி மாணவர்களைச் சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை எடு!
  • சிபாரிசு செய்பவர்களை கிரிமினல் லஞ்சக்குற்றத்தின் கீழ் கைது செய்!

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர், சிவகங்கை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க