privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !

முண்டாசுப்பட்டி : சிரிப்பது குற்றமா வினவு !

-

பார்ப்பவர் எவரையும் சிரிக்க வைக்காமல் விடாது இந்த திரைப்படம். அதுவும் எஸ்.வி.சேகர், சந்தானம் வகையிலான சவுண்டு காமடிக்கு வாக்கப்பட்ட வயிற்று போக்கு சிரிப்பாளர்கள் இடைவிடாமல் சிரிக்கிறார்கள்.

நாங்கள் மூன்று தோழர்கள் சேர்ந்து படம் பார்த்தோம். ஒரு தோழர் படத்தின் மையச்சரடை புரிந்து கொண்ட பிறகு சிரிக்க ஆரம்பித்தார் (இவர் சிரித்தது லேசுப்பட்ட விசயமில்லையாம், என்னா ஒரு பில்டப்பு!). ஒரு தோழர் நாம் சிரிக்கலாமா, கூடாதா என்ற குழப்பத்தில் இருந்தார். இடைவெளிக்கு பிறகு சிரிக்கலாமென கொள்கை முடிவெடுத்து கொஞ்சம் பிகு பண்ணி சிரிக்க ஆரம்பித்தார் (பாவம் புதுத் தோழராக இருப்பாரோ?). இடையில் இருந்த மூன்றாவது தோழர் சீரியசாக இருக்கும் அந்த தோழர் இப்படிச் சிரிக்கிறாரே, யதார்த்தமாக இருக்கும் இந்தத் தோழர் சிரிக்காமல் இருக்கிறாரே என்ற குழப்பத்தில் சிரித்தும் சிரிக்காமலும் ஒரு விதமான அத்வைத அவஸ்தையில் இருந்தார். கேட்டால் சிரித்தேன் என்றார். இத்தனைக்கும் இவர் எளிமையாக சிரிக்கக் கூடியவர்தான் (யாரு பெத்த புள்ளையோ!).

பேஸ்புக் பார்வை
முகநூலின் சிறைப்பார்வை

என்ன செய்வது, ‘சிரிப்ப’தற்கு கூட தோழர்கள் மாபெரும் கொள்கை முடிவெடுக்க வேண்டியதிருக்கிறது!

ஆனால் தோழர்களுக்கு அருகாமையில் இருந்த தம்பதியினர் படம் ஆரம்பித்த உடனேயே சிரிப்பானை எட்டுக் கட்டையில் ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அது கொள்கை கோட்பாடு குழப்பமற்ற ‘யதார்த்த’மான சிரிப்பு. அதிலும் ஆணாக இருந்த அன்பர் அவருக்கு என்ன சோகமோ தெரியவில்லை, அப்படி ஒரு சிரிப்பு! இருக்கட்டுமே, ஏதோ ஒரு படத்தை பார்த்து மக்கள் மனதார சிரிப்பது வினவு-க்கு பொறுக்கவில்லையா, இதற்குமா விமரிசனம்? நீங்கள் அந்த ‘நிரந்தர’ அம்புகளை தொடுக்க நினைப்பது புரிகிறது!

“ஒரு சினிமா எடுப்பது எவ்வளவு கடினம், முடிந்தால் நீங்கள் எடுத்துப் பாருங்களேன், சலித்துப் போன வாழ்க்கையில் சிக்கியிருக்கும் மக்கள் ஒரு இடை ஓய்வாக சிரிப்பதை நேர்மறையில் பார்க்காமல் இப்படி வலிந்து விமரிசனம் என்ற பெயரில் கொத்து பரோட்டா தட்ட வேண்டுமா, உங்கள் அரசியல் வாழ்க்கையில் இப்படி எத்தனை பேரை சிரிக்க வைத்திருக்கிறீர்கள்,” என்றெல்லாம் அறம் பாடத் தோன்றுமே?

அப்படியான பாடல்களை கொஞ்சம் ஒத்திப் போட்டுவிட்டு வாருங்கள், இந்த திரைப்படம் குறித்து சிரிப்பதற்கும் மேலாக சிந்திப்பதற்கு விசயம் உண்டு. தொலைக்காட்சி தொடர்களை பார்த்து அழும் மக்கள்தான் இங்கே வாய்விட்டு சிரிக்கிறார்கள். அந்த அழுகை தவறென ஏற்கும் நீங்கள் இந்த சிரிப்பு எத்தகையது என்று யோசிக்க வேண்டாமா? இரண்டின் எதிரெதிர் உணர்ச்சிகளில் ஒரே மனிதன் ஒரே காரணத்தால் ஒன்றியிருப்பது சாத்தியமா, சரியா என்றெல்லாம் பார்க்க கூடாதா?

முண்டாசுப்பட்டி திரைப்படம் பார்த்த அனைவரும் ஒரே மாதிரியாக ரசித்து சிரித்த மாதிரியே விமரிசனங்களும் ஒன்றின் நகல்களாகவே இருக்கின்றன. படைப்பெனும் பிரதி பல நூறு, ஆயிரம் வகைப்பட்ட வாசிப்புகளை சாத்தியப்படுத்தும் பின் நவீனத்துவ பாக்கியம் இந்த திரைப்படத்திற்கு ஏன் இல்லை?

“பிரச்சார நெடி இல்லாத மூடநம்பிக்கை எதிர்ப்பு படம், காளி, ராம்தாஸ் இரண்டு புதிய நகைச்சுவை நட்சத்திரங்களின் உதயம், கூர்மையான வசனம், இடைவிடாத சிரிப்பு, 80-களின் காட்சியமைப்பை கொண்டு வந்த கலை இயக்குநர் – ஒளிப்பதிவாளர், பொருத்தமான பின்னணியிசை, குறும்பட இயக்குநராக அறிமுகமாகி முதல் சினிமாவிலேயே சாதனை படைத்த இயக்குநர், படத்தின் முதல் அரை மணி நேரம் மட்டும் சற்று இழுவை…..” இவைதான் நகல்களின் சாரம்!

முதல் பத்து நிமிடத்தை தவற விடாதீர்கள் என்று சில படங்களுக்கு விளம்பரம் செய்வது போல, முதல் அரை மணி நேரத்தை தவறவிடுங்கள் என்று இந்த படத்திற்கு பிரச்சாரம் செய்யலாமென ஒரு பதிவர் எழுதியிருந்தார். பலருக்கும் முதல் முப்பது நிமிட காட்சிகளில் ஒன்ற முடியவில்லை. ஒரு படைப்பாளி ஒரு படைப்பின் துவக்கத்தில் சுமாராகவும், பின்பு சூப்பராகவும் படைத்திருக்க வாய்ப்பிருக்கிறதா? அப்படி இருந்தால் ஒரு படைப்பிற்குள்ளேயே நல்ல, கெட்ட, சுவாரசியமான, இழுவை என்று பல பிரிவுகள் இருக்கும் சாத்தியம் உண்டா? உண்டெனில் பல்சுவை வார இதழுக்கும் ஒரு கலைப்படைப்புக்கும் வேறுபாடில்லையா?

எழுத்திலக்கியம் போல காட்சிக் கலை இல்லைதான். அதே போன்று இரண்டையும் வாசிப்பவர், பார்ப்பவருக்கு வேறுபாடு உண்டல்லவா? எழுத்தை கூர்ந்தோ அசை போட்டோ கொஞ்சம் உழைப்பு செலுத்தியோதான் படிக்க வேண்டும். ஐம்புலன்களையும் எளிதான முறையில் கவர்ந்திழுக்கும் காட்சிக் கலை பெரும் உழைப்பு எதையும் கோருவதில்லை. நேரெதிராக உடனடி பரவசமும், கட்டுண்டு போவதும் இதில் அதிகம். இதனால் திரைப்படத்தை ஒரு நாவல் அனுபவம் போல உணர முடியாது என்பதல்ல. பொதுவில் உள்ள நிலையையும் அந்த நிலைக்குரிய கலை விதிகளின் கூறுகளையுமே இங்கே நினைவுபடுத்துகிறோம்.

இணையம்
சுட்டியின் சுதந்திரம் அமெரிக்க கத்திரியின் தந்திரம்

மாறிவரும் வாழ்க்கைக்கு தோதாக, மாறியோ மாற்றப்பட்டோ வரும் சினிமா ரசனை, திரைக்கதையின் வேகம், காட்சிகளின் திருப்பம், வசனத்தில் பஞ்ச், மொத்தத்தில் பரபரவென்று ஓடுகிறது. வணிக சினிமா படைப்பாளிகள் இந்த ஓட்டத்தை மனதிற் கொண்டே காட்சிகளை அடுக்குகிறார்கள், செதுக்குகிறார்கள். அதனாலும் கூட படைப்புக்குள்ளே தொய்வு, சீர்மை என்று பிளவு வரலாம். எனினும் ஒரு படைப்பு தன்னளவிலே முழுமையான ஒருங்கிணைவையே கொண்டிருக்கும். வாசிப்பிலோ நுகர்விலோ அப்படி வேறுபடும் பட்சத்தில் வாசகராகிய நமது ஒருங்கிணைவில்தான் ஏதோ பிரச்சினை இருக்க வேண்டும். அல்லது ஒரு படைப்பை ஏற்பதிலும், நிராகரிப்பதிலும் ஒரு முழுமை இருந்தாக வேண்டும். 50 – 50யெல்லாம் இங்கே இருக்க முடியாது.

கிராமத்து மக்களின் எளிய மூடநம்பிக்கைகளை கேலி செய்யும் பின்னணியில் ‘கேலிக்கோ – கேள்விக்கோ’ இடமற்ற காதல் கதையை சொல்லும் களம்தான் முண்டாசுப்பட்டியின் கதை. உண்மையில் கேலிக்கு அனைத்து தகுதிகளும் கொண்ட நகரத்து வாழ்வின் ஃபாஸ்ட் புட் காதலை விடவா கிராமத்து மூடநம்பிக்கை சுண்டக்கறி ஒரு பிரச்சனை? பழக்க வழக்கங்களில் இருக்கும் மூட நம்பிக்கைளைவிட பண்பாட்டு அழுத்தமாக இருக்கும் நுகர்வு கலாச்சாரக் காதலின் மூடநம்பிக்கைகள் பிரச்சினை இல்லையா?

ஒரு வேளை தற்கொலைத் தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும இளவரசனது உண்மையான  கதையை காமடியாக சொல்ல முடியாதோ? இல்லை தமிழகத்து காபி ஷாப் காதல் நம்பிக்கைகளை பார்த்து சிரிக்க முடியாதா? தமிழக காதலின் தலையான பிரச்சினையாக ஆதிக்க சாதி வெறி அரிவாளோடு மறிக்கும் நிலையில் முண்டாசுப்பட்டியின் காதலர்கள் பதில் சொல்லாமல் நழுவுவது ஏன்?

எது எப்படியோ ரசிகர்கள் யாரும் இயக்குநரின் காதல் அத்தியாயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கதையின் நாயகன் விஷ்ணு, நாயகி நந்திதாவை காதலிப்பதற்கு பீடிகை போடும் முதல் காட்சிகளைத்தான் நமது நண்பர்கள் போர் என்கிறார்கள். ஆனாலும் இந்தக் கதைக்கு இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை.

முண்டாசுப்பட்டி கிராமத்தில் கொள்ளையடிக்க வந்த கள்வர்களை கொன்றோ பயமுறுத்தியோ விழுந்த விண் கல், ஊர்க்கோவிலின் பழைய தெய்வத்தை மாற்றி விட்டு, இல்லை புது வேடம் போட்டு வான முனியாக அவதரிக்கிறது. இந்தக் காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த போது படத்தை வெளியிட்டிருக்கும் ஹாலிவுட் ஸ்டூடியோவான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நினைவுக்கு வந்தது.

பினாக்கியோ
பொய்களுக்கேற்ப துருத்தி வளரும் வாஷிங்டன் நினைவக தூண் (பினாக்கியோ)

விண்ணிலிருந்து ஆப்பிரிக்க பழங்குடிகளின் மண்ணில் விழும் விமானமோ, கோக் பாட்டிலோ இறை தூதராகவோ, தேவதையாகவோ, இயற்கை சக்தியாகவோ நம்பப்பட்டு கருப்பின மக்கள் மண்டியிட்டு தொழும் காட்சிகளை பல ஹாலிவுட் படங்களில் பார்த்திருக்கிறோம். வெள்ளையர்களின் தங்க வேட்டைக்காக உயிரை மலிவாக கொடுக்கும் கருப்பின பழங்குடிகளின் இந்த நடவடிக்கையை பார்த்து சிரிப்பவர் எவருக்கும் மம்மி பிரமீடுகளில் தங்கம் தேடும் ராயல் கனவான்களின் கொள்ளை வெறி நெருடலாக தோன்றுவதில்லை. செவ்விந்தியர்களை பூண்டோடு கொன்று ஒழித்து வெள்ளை மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டதை கௌபாய் படமாக சிலாகித்தவர்கள் அதே செவ்விந்திய மக்களின் மூடநம்பிக்கைகளை திரையில் பார்த்து சிரிக்கிறார்கள்.

கிண்டல் என்பதே ஆண்டைகளின் அதிகாரத்தை எதிர்த்து அடிமைகள் கட்டிய நாட்டுப்புறப் பாட்டில் இருந்து பிறந்தது என்றால் இங்கே அது நவீன ஆண்டைகளின் பார்வைக்கு கடத்தி செல்லப்படுகிறது. இந்தக் கடத்தலில் சமூக நேயத்தை இழக்கிறோம் என்பது சிரிப்போர் அறிவதில்லை. அந்த வகையில் இது வெற்றுச் சிரிப்பல்ல – விசமச் சிரிப்பு.

வான முனியின் இடம் ஓரிரு நிமிடம்தான் என்றாலும் அதன் பின்னே இருக்கும் மேற்கு உலகம் நாகரீகமானது, கிழக்குலகம் காட்டுமிராண்டித்தனமானது என்ற கருத்துதான் இன்றைக்கும் உலக ரவுடியாக மேலாதிக்கம் செய்யும் அமெரிக்காவை ஜனநாயக சொர்க்கம் என்று நம்ப வைப்பதோடு அந்த நம்பிக்கையில் சேருமாறு பலரையும் மதமாற்றமும் செய்கிறது. சாரத்தில் இது ‘மூட’ நம்பிக்கை குறித்த பிரச்சினை அல்ல, அதிகாரத்தின் ‘முரட்டு’ நம்பிக்கை குறித்த சமரசம்.

இதனால் ஒரு நாட்டின், ஒரு இனத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை மற்றவர் விமரிசிக்க கூடாது என்பதல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பார்ப்பனிய சாதி அமைப்பு விதித்திருக்கும் தண்டனைகளை டர்பன் மாநாட்டில் கூடியிருக்கும் சர்வதேச சமூகத்தின் முன் யாரும் பேசலாம். அமெரிக்க கருப்பின மக்களுக்கு இழைக்கப்படும் நிறவெறிக் கொடுமைகளை நாம் பேசுவது சரியெனும் போது அதே உரிமை மற்றவருக்கும் உண்டு. ஆனால் சக மனிதனை தாழ்வாக நடத்தும் அந்த ஆதிக்கத்தினை எதிர்ப்பதும் அந்த ஆதிக்கத்தை தவிர்த்து விட்டு எளிய மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்வதும் ஒன்றல்ல.

முண்டாசுப்பட்டி மக்கள் புகைப்படம் எடுத்தால் சாவு வரும் என்று நம்புகிறவர்கள். இது ஒரு மூடநம்பிக்கைதான் என்றாலும் ஆபத்தான நம்பிக்கை அல்ல. ஆனால் கிராமத்து பள்ளிக்கூடத்தை பாழடைய வைத்தது அதை விட ஆழமான மூடநம்பிக்கைதான். இது போக குற்றவாளி ஒருவர் குறி சொல்லும் சாமியாராக மாறி, கள்ள உறவுக்காக ஊரை விட்டு போவது, வான முனி கடவுள் கல்லை கடத்தி விற்கும் பண்ணையார் என்று சில நம்பிக்கைகள் கேலி செய்யப்பட்டிருந்தாலும் பொதுவில் இவற்றை பெரும் பிரச்சினைகளாக கருத முடியவில்லை.

புகைப்படத்திற்கு பயப்படும் மக்கள் நகரத்திலிருந்து வரும் புகைப்படக்காரன் விஷ்ணுவை ஊர் மாப்பிள்ளையாக கடைசியில் ஏற்கிறார்கள். காரணம் அவன் ஊர் கோவிலில் இருந்து காணாமல் – காதலுக்காக அவன் செய்யும் கடத்தல் நாடகம் – போகும் வான முனியை காப்பாற்றி மீட்டு வருகிறான்.

வர்க்கம்
சிலருக்கு விளையாட்டு, சிலருக்கு வாழ்க்கை

சத்தியமங்கலம் அருகில் இருக்கும் முண்டாசுப்பட்டியை ஒரு புவியியல் வாதத்திற்காக கவுண்டர்கள் இருக்கும் ஊர் என்றே வைப்போம். எனில் விஷ்ணு என்ன சாதி என்று தெரியாமல், தமக்கு கீழே இருக்கும் சாதியா என்று சந்தேகப்படாமல் இந்த ஏற்பு எப்படி சாத்தியம்? ஊரில் பிடிபட்ட திருடனை பஞ்சாயத்து கூட்டி கையை உடைக்கும் முண்டாசுப்பட்டி மக்கள் ஆதிக்க சாதி கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் எதை உடைப்பார்கள் என்பதல்லவா முக்கியமானது?

கொங்கு தமிழில் பணிவுடன் பேசியும், நிலபுலம் அதிகமிருந்தாலும் எளிய விவசாயிகளின் வாழ்க்கையை வாழும் கவுண்டர்கள், சாதி என்று வரும் போது மட்டும் விசுவரூபமெடுப்பார்கள். அருந்ததி மக்களை அவர்கள் நடத்துவதும், பேசுவதும் நாரசரமாக இருக்கும். இதை கிண்டல் செய்திருந்தால், அல்லது கதையின் திருப்பமாக கொண்டிருந்தால் பாமகவும், கொங்கு வேளாள முன்னேற்றக் கழகத்தின் ஈசுவரனும், அவரை கூட்டணியில் வைத்திருக்கும் பாஜக பொன்னாரும் பொங்கியிருப்பார்கள். குறைந்த பட்சம் கண்டன அறிக்கையாவது விட்டிருப்பார்கள்.

மல்டிபிளக்சில் நடனக் கலைஞர்களை ப்ளாஷ் நடனம் ஆட வைத்து விளம்பரம் செய்யும் முண்டாசுப்பட்டி தயாரிப்பாளருக்கு மேற்கண்ட பிரச்சினை பெரும் விளம்பரத்தை தந்திருக்கும். எனினும் ஆதிக்க சாதிகளில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களை இவ்வளவு சுலபமாக சிரிக்க வைத்திருக்க முடியுமா? முடியும் என்பது நமது கருத்து. இதை விட காட்டமாக கருத்துக்களை முன் வைத்த பெரியார் என்ன யாருமில்லாத டீக்கடையிலா பிரச்சாரம் செய்தார்? அவரது பேச்சை ஆதிக்க சாதிகளில் பிறந்த தமிழனும், ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்த தமிழனும் அருகருகே இருந்து கேட்கவில்லையா?

இதனால் முண்டாசுப்பட்டியின் அறிமுக இயக்குநர் ராம் குமார் சமூகப் பார்வை கொண்டவர் அல்ல என்று சொல்லவில்லை. படத்தில் வரும் மயான வேலை செய்யும் தொழிலாளியே விஷ்ணுவுக்கும் அவர் நண்பர் காளிக்கும் நட்பாக இருக்கிறார். பள்ளிக்கூடத்தை பாழடைய விட்ட ஊர் மக்களின் முட்டாள்தனத்தை கேலி செய்கிறார். இப்படி ஒரு காட்சியை வெள்ளுடை வேந்தர்களாக முண்டாசு கட்டிய கவுண்டர்களின் ஊரில் வைப்பது மகிழ்ச்சிக்குரியதே. எனினும் அது ஒரு தோற்றப் பார்வையில் மட்டும் வந்து போகிறது. அல்லது இது ஒட்டாத ஒரு ‘பிரச்சாரம்’ என்றும் வகைப்படுத்தலாம்.

வான முனிக் கல்லை தான் தொட்டால் தீட்டு, ஊரார் ஏற்கமாட்டார்கள் என்று அந்த மயான தொழிலாளி வாதிடும் போது, “கோவிலுக்குள்ளே இருக்கும் வரைதான் இது சாமி, இப்போ வெறும் கல்லு” என்று விஷ்ணு தொட்டு தூக்க உற்சாகப்படுத்துகிறார். இந்த உற்சாகத்தில் சமத்துவமோ, சுயமரியாதையோ எங்கே இருக்கிறது? கல்லாக இருந்தால் தொடலாம், சாமியாக இருந்தால் தொடக்கூடாது என்பதல்லவா இதன் பொருள்!

காரட்டும் கழுதையும்
அமெரிக்க காரட் வழிநடத்த ஐ.எஸ்.எஸ் காலிஃபா முன்னேறுகிறார்.

எங்கே எப்படி பிரச்சினையின்றி தொடுவதுதான் பிரச்சினையா? இல்லை ஏன் தொடக்கூடாது என்பது விசயமா? இதனால் நாயகன் விஷ்ணு புரட்சி வசனம் பேச வேண்டுமென கோரவில்லை. ஆனால் காதலுக்காக உயிரை பணையம் வைத்து ஊரின் தண்டனைக் கைதியாக வாழும் நாயகன் இங்கே மட்டும் ஊர் வழக்கப்படி பேசுவது சரியா? காதலுக்கு புரட்சி, கல்லுடன் சமரசமா?

படத்தில் சிரிப்பு வெடிகளை அள்ளக் அள்ளக் குறையாமல் கொண்டிருக்கும் மூன்று அட்சய பாத்திரங்கள் கள்ள உறவு, ஆண்மைக் குறைவு, சினிமா ஆசை. முறையே சாமியார், பண்ணையார் ஆனந்த ராஜ், முனிஸ்காந்தாக வரும் ராம்தாஸும் இயக்குநரின் ‘சாமர்த்தியமான’ கதையோட்டக் காட்சிகளால் திரையரங்கை வெடிச் சிரிப்பால் நிரப்புகிறார்கள்.

பிளாஷ்பேக்கில் சிறைக்கைதியாக அலைந்து இந்த கிராமத்தில் ஒதுங்கி விபத்து போல ஊர்க்கோவில் பூசாரியாக மாறுகிறார் அந்த நபர். இவரது காட்சிகளில் கிராமத்து மக்களின் மதம், நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், சாமியாடுதல், குறி சொல்லுதல், சகுனங்கள் அனைத்தும் கேலி செய்யப்படுவது யதார்த்தமாகவும், மக்கள் ஏற்கும்படியாகவும்தான் இருக்கிறது.

இதற்காக இயக்குநரை பாராட்டும் அதே வேளையில் நாட்டுப்புற தெய்வங்களை விட பெரும் தெய்வங்களும், நாடு முழுவதும் இருக்கும் மாற்ற அனுமதியில்லாத பெருவழிச் சம்பிரதாயங்களும், சாதி அமைப்பில் தலைமை பூசாரியாக இருக்கின்ற பார்ப்பனர்களும் கொண்ட பார்ப்பனிய மதம்தான் இந்தியாவின் அனைத்து பிற்போக்குத்தனங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அதன் நீர்த்துப் போன வடிவங்களே கிராமங்களில்  நிலவுகின்றது. ஜயேந்திரன், தேவநாதன், நித்தி போன்றோரை கேலி செய்யாமல் கிராமத்து அப்பாவி பூசாரியை கிண்டல் செய்து என்ன பயன்?

இவர்கள் பூசாரி போல விபத்தாக அதிகாரம் கொண்ட ஆதீனப் பதவிகளை அடையவில்லை. பார்ப்பனிய சமூகத்தால் திட்டமிட்டு தயாரிக்கப்படுகிறார்கள். மாட்டிக் கொண்டாலும் திட்டமிட்டு காப்பாற்றப்படுகிறார்கள். படத்து பூசாரி மாட்டிக் கொண்ட பிறகு தொழிலை தலை முழுகி ஓடிப் போகலாம். இவர்கள் ஓட மாட்டார்கள். அப்படி விரட்டுவதற்கும் ஆளும் வர்க்க சமூக அமைப்புகள் தயாராக இல்லை. இவையெல்லாம் இந்த புதிய இயக்குநரின் பார்வையில் இல்லை.

அதே வேளை கிராமங்களில் நிலவும் அனைத்து மூடநம்பிக்கைகளும் ஆபத்தற்றவை என்று வாதிடுவதும் தவறு. நரபலி, கொடூரமான ஆணாதிக்க நடைமுறைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான எண்ணிறந்த அடக்குமுறைகள் எல்லாம் கிராமத்து நம்பிக்கையின் பெயரில்தான் நீடிக்கின்றன. ஆனால் இவற்றின் வேரான பார்ப்பனியத்தை விடுத்து ஒரு சில ஆபத்தற்ற விளைவுகளை மட்டும் கேலி செய்யும் போது இது ஆப்பிரிக்க பழங்குடிகளை கேலி செய்யும் மேட்டிமைத்தனத்தை அடைந்து விடுகிறது.

தேர்தல்
தேர்தல் தெரிவு முதலாளிகளின் முடிவு.

வான முனிக் கல்லின் கனிமவளம் காரணமாக அதை கடத்தி வெள்ளைக்காரனுக்கு விற்க முயலும் பண்ணையார் ஆனந்தராஜ் ஆண்மைக்குறைவு காரணமாக பூனைகளை வளர்த்து சூப் போட்டு குடிக்கிறார். இவரும், அடியாட்களும் காமடியாக வந்து போகிறார்கள். நிஜத்தில் கீழத்தஞ்சை கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற கொடூரமான வில்லன்களான பண்ணையார்கள் இப்படி சிரிப்பு மூட்டுவது இருக்கட்டும்.

இவர் பூனை சூப் குடிப்பது எதற்கு என்று முனிஸ்காந்த் பேசும் போது விஷ்ணு காரணத்தை விளக்குகிறார். அதை “துருப்பிடித்த துப்பாக்கிக்கு தோட்டா எதற்கு?” என்று முனிஸ்காந்த் கேலி செய்யும் போது திரையரங்கம் அதிர்கிறது. ஆண்மைக் குறைவு என்பது இங்கே இன்னமும் மர்மமான பூடகமான விசயமாக கருதப்படுவதற்கும் இந்த வெடிச்சிரிப்பிற்கும் தொடர்பேதுமில்லையா? இவ்வளவு மருத்துவ முன்னேற்றம் வந்தாலும் சிட்டுக்குருவி லேகிய புகழ் சேலம் சிவராஜோ இல்லை மூத்திரச் சந்துகளில் ஒட்டப்படும் பரம்பரை வம்ச விருத்தி வைத்திய சுவரொட்டிகளோ குறையவில்லை.

இதே வசனம், காட்சி ஒரு ஹாலிவுட் படத்தில் வருவதோ இல்லை வந்தால் சிரிப்போ சாத்தியமில்லை. ஏனென்றால் அங்கே ஆண்மைக் குறைவு என்பது ஒருவரின் மருத்துவப் பிரச்சினை மட்டுமே. இங்கோ அது சமூகத்தில் கவுரவமான இடத்தை தீர்மானிக்கும் சமூகப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவில் இந்து மேட்டுக்குடியினருக்கு காமசூத்ரா இருந்தாலும் இங்கே பெரும்பான்மை மக்களுக்கு காமம் என்பது பேசவோ, ஐயங்கள் தீர்க்கவோ முடியாத ஒன்று. அதிலும் இந்தப் பிரச்சினையில் பெண்கள் பாடு அதிகம். ஆண்மைக் குறைவோ இல்லை குழந்தைப் பேறின்மையோ எதுவாக இருந்தாலும் ஆணை விட பெண்களே அதன் சுமையை பாவமாக, இரண்டாம் தாரமாக, மலடி எனும் பழிச்சொல்லாக சுமக்கிறார்கள். அந்த பழியும் இந்தப்படம் உருவாக்கும் சிரிப்பும் நெருடலாக இல்லையா?

முண்டாசுப்பட்டியில் மன்னிக்கவே முடியாத கண்டிக்கப்படவேண்டிய ஒரு நகைச்சுவை, கள்ள உறவு அத்தியாயம். ஊர் தலைவரின் அடுத்த தகுதியில் இருக்கும் ஒருவர் தனது மனைவியை புகைப்படம் எடுக்குமாறும், மனைவியோ கணவனை எடுக்குமாறும் விஷ்ணுவிடம் தனியாக கூறுகின்றனர். புகைப்படம் எடுத்தால் சாவு வரும் என்ற இந்த விருப்பத்தின் பின்னே கற்பு, குடும்ப உறவுகளின் போலித்தனத்தையும், ஜனநாயகமற்ற வழிமுறைகளையும் காட்டும் அளவில் இதை இத்தோடு நிறுத்தியிருக்கலாம். பிறகு அந்த மனைவியோடு பூசாரி தொடர்பு எனக் காட்டி அத்தோடும் விடாமல், பூசாரியை கையும் களவுமாக விஷ்ணுவும், காளியும் பிடிக்கும் போது நள்ளிரவில் அந்த பெண் வீட்டில் இருந்து பல பத்து முண்டாசுக்காரர்கள் வெளியேறுகிறார்கள்.

தற்போது அந்த பெண் உடம்பு சுகத்திற்காக ஊர் ஆண்கள் பலரோடும் உறவு வைத்திருக்கிறாள், கிட்டத்தட்ட காசு வாங்காத விலைமாதாக காட்டப்படுகிறாள். இதற்கும் திரையரங்கம் சிரித்து மாளவில்லை. மக்களை விடுங்கள், பெண்ணுரிமை போராளியான கவின்மலருக்கு கூட இது உறுத்தவில்லை. இந்தியா டுடே இதழுக்காக அவர் எழுதியிருக்கும் விமரிசனத்தில் வரிக்கு வரி படத்தை கொண்டாடியிருக்கிறார். போகட்டும், ஆனால் இந்த கள்ள உறவில் ஒரு பெண் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பது கூட ஏன் தோன்றவில்லை?

மனிதாபிமானம்
கொலைகார சி.ஐ.ஏ தலைவன் கொஞ்சவும் செய்வான்

ஆண்மைக் குறைவு, கள்ள உறவு இரண்டும் தமிழ்ப்படங்களில் பல முறை நகைச்சுவையாக கவுண்டமணி காலத்தில் இருந்தே இடம் பெறுகிறது. மலையாள பிட்டு படங்களில் அது மையக்கருவாகவும் இருக்கிறது. முன்னதில் சிரிப்பு பின்னதில் காமக் கவர்ச்சி. ஆனால் சமூக யதார்த்தத்தில் கள்ள உறவு என்பது பெரும் சமூக வன்முறையாக மாறி வரவில்லையா? தமிழக சிறைகளில் இருக்கும் பாதிப்பேர் கள்ள உறவு வன்முறை சம்பந்தமுடையவர்கள் என்றால் அது மிகையான எண்ணிக்கை அல்ல. கூடவே பெருமைப்பட முடியாத அவலமும் கூட.

ஆணோ, பெண்ணோ விருப்பமின்றி வாழவேண்டிய குடும்ப நிர்ப்பந்தம், விவாகரத்து, மறுமணம் எதுவும் ஏழு கடல் மலை தாண்டி பெற வேண்டிய விடுதலை என்ற சமூக நிலைமை இங்கே கொலையாகவே முடிகின்றன. கள்ள உறவுச் சண்டைகள் பல பெண்களை கொலை செய்தே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றன. ஆண்களுக்கு இது கவுரப் பிரச்சினையாகவும், பெண்களுக்கு இருட்டு சுதந்திரமாகவும் இருக்கின்றது. ஜனநாயக வெளிச்சமின்மையின் விளைவுகள் இப்படித்தானே இருக்கின்றன?

பரஸ்பரக் காதல், சமத்துவம், பொருளாதாரச் சுதந்திரம் எதுவும் இல்லாமல் ஒரு குடும்பமோ, பெண்ணோ அமைதியாக வாழ முடியுமா? காதலுக்கு சுதந்திரம் இல்லாத போது கள்ளக் காதல் பெருக்கெடுத்து ஓடத்தானே செய்யும்? இத்தகைய பரிமாணங்களை விடுத்து அதை சிரிப்பாக்குவது எதைக் காட்டுகிறது?

தமிழ்ப் படங்களில் தனியான காமடி டிராக்காகவும், மலையாள பிட்டு படங்களில் அது மையமான கதையாகவும் வருவதே இதை புரிந்து கொள்ள போதுமானது. பிட்டு பட கள்ள உறவு ஆண்களின் ஏக்கத்தையும், தமிழ்ப்பட காமடி தானெல்லாம் யோக்கியன் என்று மற்றவர்களை பார்த்து சிரிக்கும் போலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறது. கள்ள உறவுக்காக கொலை செய்த தைரியமான ஆண்கள் சிறையிலும், கள்ள உறவையோ, கொலையையோ செய்ய முடியாத தைரியமற்றவர்கள் சிரிப்பதற்கு சாத்தியம் உண்டா இல்லையா?  இல்லையென்றால் சிரித்தவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

சினிமா ஆசை முனிஸ்காந்த்தின் பாத்திரம் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஊர்த்தலைவர் இறந்த பிறகு எடுத்த புகைப்படம் சரியாக பதிவாகததால் இவரது சினிமா கனவை பயன்படுத்தி செத்துப் போன ஊர்த் தலைவர் போல சிங்காரித்து படமெடுக்கிறார்கள் விஷ்ணுவும் காளியும். படத்தின் கதையோட்டத்தை தீர்மானிக்கும் முனிஸ்காந்த் மட்டுமல்ல அநேக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்கள்தான் நாயகன் நாயகியை விட மனதில் பதிகிறார்கள். இதையெல்லாம் சாதித்த இயக்குநர் சமூகபாத்திரத்தின் வீச்சை தவற விட்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் காமடி, சடையர் எனும் இருவார்த்தைகளும் நகைச்சுவையை குறிக்க்கின்றன என்றாலும் பொருள் வேறு. முன்னது வெறும் சிரிப்பு, பின்னது சமூக நோக்கிலான நகைச்சுவை. தோற்றம், நடத்தை, சூழல், உரையாடல் போன்றவற்றில் ஒரு மெலிதான சீர்குலைவு விபத்து போன்று நடைபெற்றால் தோன்றுவது சிரிப்பு. சமூகவியல் நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூக அமைப்பின் முரண்பாடுகளை, போலித்தனத்தை, அவை வெளிப்படும் நிகழ்வுகள் – ஆளுமைகள் – பிரச்சினைகளிலிருந்து உணர்த்த வைப்பது.

வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்தால் வருவது வெறும் சிரிப்பு. சங்கரன் கோவில் இந்து முன்னணி ஜீவராஜின் கொலையை ஒட்டி, மனைவியை ஜிகாதியாக்கி, மகாபாரதத்தை ரியல் எஸ்டேட் போராக்கி எழுதுவது சமூகவியல் நகைச்சுவை. தமிழ் சினிமா அநேக தருணங்களில் வெறும் சிரிப்பாகவே – அதுவும் சப்தங்களின் – விரயமாகி போகிறது. அதனால்தான் இங்கே காமடி டிராக் எனும் தனி சிருஷ்டியை மையக் கதையோடு ஒட்ட வைக்கிறார்கள்.

ஒருக்கால் முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் போன்ற முழுநீள நகைச்சுவை படங்களும் கூட தனித்தனிக் காட்சிகளின் நகைச்சுவை அவியலாகவே ஒட்டப் படுகிறது. முண்டாசுப்பட்டியின் முதல் காட்சிகளில் அத்தகைய தனித்தனி நகைச்சுவைதான் போரடிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் பின்னர் அதே தனித்தனி நகைச்சுவைக் காட்சிகளால்தான் சிரிக்கிறோம் என்பதும் புரியும். ஆண்மைக் குறைவு, கள்ள உறவு அனைத்தும் இந்தக் கதையென்று இல்லை, எந்தக்கதையில் சொருகியிருந்தாலும் வரவேற்பு பெற்றிருக்கும். எனில் ஒரு மையக் கதை அதன் சொந்த பலத்தில் நகைச்சுவையை தோற்றுவிக்க முடியாதா என்று ‘நாளைய இயக்குநர்கள்’ யோசிக்க வேண்டும்.

நாளைக்கு சமூகம் எப்படி மாறும், மாறவேண்டும் என்ற பொறுப்பு இருக்கும் போது மட்டுமே இன்றைய சமூகத்தின் இயக்கத்தை பார்த்து கதை எழுத முடியும். சமூக முரணை புரிந்து கொண்டவர்கள் புரட்சிக்காக பாடுபடுகிறார்கள் என்றால், அதே முரணை கலையில் உணர்ந்தவர்கள் சமூகவியல் நோக்கிலான நகைச்சுவை படைப்புகள் – சார்லி சாப்ளின் போல – தர முடியும்.

ஆகவே முண்டாசுப்பட்டியை பாருங்கள், சிரியுங்கள், இந்த விமரிசனத்தையும் பரிசீலியுங்கள்!