Friday, May 9, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..

மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..

-

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 16-7-2014 அன்று முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். “மாணவ காற்றே உன்னை வரவேற்கிறோம்…..” என்று கல்லூரி நுழைவாயிலில் பேனர் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரி முன்வாயில் முகப்பில், “முதலாம் ஆண்டு மாணவர்களே வருக வருக!!” என்ற  பேனர் கட்டப்பட்டது. வாழ்த்து அட்டையில் சாக்லேட் இணைக்கப்பட்டு மாணவர்களிடம் கொடுப்பதற்கு  தோழர்கள் தயாராக இருந்தார்கள். 7.30 மணிக்கு முதலாம் ஆண்டு மாணவர் – மாணவிகளும் பெற்றோர்களோடு வந்தார்கள்.

தோழர்கள் மாணவர்களை வரவேற்று வாழ்த்து அட்டை கொடுத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்கள். மாணவர்கள் முதலில் தயக்கத்துடன் வந்தவர்கள் அட்டையை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக சென்றார்கள். அவர்களுடன் வந்த பெற்றோர்களும் மகிழ்ச்சியாக தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். பேராசிரியர்களும் நின்று அட்டையை வாங்கிக் கொண்டு,”சிறப்பாக செய்யுங்கள்” என்றார்கள். ஒரு சில பேராசிரியர்கள்,  “மாணவர்களுக்கு கொடுங்கள்” என்றார்கள். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் வந்து வாங்கி சென்றார்கள்.

மேட்டுக்குடி கல்லூரிகளில் மட்டுமல்ல, அரசு கல்லூரிகள் ஒரு சிலவற்றிலும் கூட ராகிங் என்ற பெயரில் புதிய மாணவர்களை அடிமைத்தனத்துடன் நடத்தும் சீரழிவு கலாச்சாரத்தினை முறியடிக்கும் முகமாக புமாஇமு இதை பல கல்லூரிகளில் நடத்தி வருகிறது. மேல்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு முடித்து விட்டு, விடலைப் பருவத்தின் குழப்பத்தோடும், வீரியத்தோடும் கல்லூரி வரும் மாணவர்களை இப்படி தோழமையுடன் வரவேற்று நடத்துவது அவர்களிடையே நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது. என்ன படித்தாலும் வேலையில்லை எனும் நிலைமையில் மாணவர்கள் தமது அரசியல் விழிப்புணர்வினூடாகத்தான் தமது எதிர்காலத்தை மட்டுமல்ல நாட்டின் எதிர்காலத்தையும் மாற்றுவதற்கு போராடமுடியும்.

தொடர்ந்து கல்லூரி பிரச்சனைகளுக்கு மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்திவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி முதலாம் ஆண்டு மாணவர்- மாணவிகளை வரவேற்று நடத்திய நிகழ்ச்சி மாணவர்களிடத்திலும், பேராசிரியர்களிடத்திலும், மற்றும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]