privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்கோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் !

கோழிக் கழிவும் கட்டுப்படியாகாத சாம்பாரும் !

-

ட்டிறைச்சி தொழிலை உதாரணமாகக் கொண்டு அரசமைப்பும் பார்ப்பனியமும் எப்படி மக்களை அலைக்கழிக்கின்றன என்பது வினவின் பதிவொன்றில் விளக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற சூழலில் ஏழைகள் அசைவத்தையும் சைவத்தையும் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதற்கு மேலும் சில அனுபவங்களை பரிசீலிப்பது, உணவு பழக்கத்தையும் தீர்மானிக்கின்ற வர்க்கப் பிரச்சனையை நாம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கோழிக் கழிவு
கோழி இரைப்பை, இருதயம், ஈரல்

ஆடு, கோழி என்று வரும் பொழுதே அதை வாங்கி உண்ண வசதி வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்பாக இருப்பது சில்லறை என்று மேல்தட்டு வர்க்கத்தால் ஒதுக்கித் தள்ளப்படுகிற கழிவுகளே.

பொதுவாக மதுரை போன்ற நகரங்களில் கோழிக் கடையில் இரண்டு வரிசைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கும். ஒன்று கிலோ கணக்கில் கறிவாங்குபவர்கள். மற்றொரு தரப்பு சில்லறை வாங்க வருபவர்கள். இந்த சில்லறை என்ற வகையில் கோழியின் தோல் (கொழுப்பு என்று பலரும் வாங்குவதில்லை), கழுத்து (இதை உண்பது கவுரவ குறைச்சல் என்று சில சாதிகள் கருதுவதும் வழக்கம்), மண்ணீரல் வரும். மேற்கொண்டு, கோழித்தலை மற்றும் கால்கள் ஓசியாகவோ அல்லது பத்து இருபது ரூபாய்க்கோ வாங்குவார்கள். இதிலேயும் பணக்காரர்கள் இடைஞ்சலாக வருவார்கள். தங்களது நாய்க்குப் போட வேண்டுமென்று சிலபேர் முன்கூட்டியே சொல்லிவைப்பதும் உண்டு.

ஓட்டாண்டியாக இருக்கிற சில நடுத்தர வர்க்கமும் இதை நாய்க்கு வாங்குகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களுக்கு வாங்கிச் செல்வார்கள். கறி என்று இல்லாமல் ரேசன் அரிசிக்கும் இதே கூத்துதான். இரையாக கோழிக்கு போடுகிறேன் என்று கூறிவிட்டு இட்லி, தோசைக்குப் போட்டு தமது கவுரவத்தை காப்பாற்ற முயல்வார்கள். தாம் சுரண்டப்படுகிறோம் என்பதை வெளிக்காட்டாது போராட்டத்திலும் கலந்து கொள்ளாது ஏழைகளை ஏளனமாக பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவத்திற்கு இது ஒரு சான்று. இன்னும் சிலர் வெறும் கோழிச் சில்லறை வாங்கினால் தம்மை குறைவாக மதிப்பிடுவர் என்று ஒப்புக்கு 200 கிராம் அல்லது கால்கிலோ என்று வாங்குவார்கள்.

கோழி பாதங்கள், தலை
சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும்.

தமிழகம் முழுவதிலுமுள்ள சாதாரண முனியாண்டி விலாஸ் வகைகளிலான அசைவ ஓட்டல்களில் கூட சிக்கன் குழம்பில் கோழியின் கால்கள், தோல்கள் இடம்பெற்றிருக்கும். வேலைக்கு போகும் தொழிலாளிகள் இதையே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள். இதற்கென்று தனி விலை கிடையாது. இன்னும் கோழி, ஆடுகளின் எலும்புகளை மட்டும் கடித்து சுவைக்கும் பழக்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கின்றது. வெளிநாடுகளிலோ எலும்புக்கு அருகில் உள்ள சதைப்பகுதிவரை தின்று விட்டு தூக்கி எறிவார்கள். அவர்களுக்கு கழிவான எலும்பு இங்கே உழைக்கும் மக்களின் சுவையான பதார்த்தமாக கருதப்படுகிறது.

கைநிறைய சம்பாத்தியம் என்று சொல்கிற பொழுது கைநிறைய என்கிற வார்த்தை இன்னும் ஒரு ஆண்டையினிடத்திலே கையேந்தி நிற்கிற ஒரு உழைப்பாளியின் அவலத்தையே நினைவுறுத்துகிற பொழுது கால்கிலோ கறியும் ஒரு கிலோ சில்லறையும் வாங்குகிற ஓட்டாண்டியாக்கப்பட்ட நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்திற்கும் வாழ்நிலைக்கும் எது காரணம்?

இதில் பார்ப்பனியம் மற்றொரு வகையில் புகுந்து விளையாடும். எப்படி என்றால் ‘தகப்பன் இருப்பவன் கோழித் தலையை திங்கக் கூடாது!’ என்று ஒரு வழக்கம். ஆனால் வயிறு என்று வருகிறபொழுது பெயருக்கு ஆதிக்கசாதி என்று வெளியில் காட்டிக்கொண்டு மறுபுறம் கதவைச் சாத்திக்கொண்டு தின்பது நடுத்தெருவிற்கு வந்த ஆதிக்கசாதிகளிடையே காணப்படுகிற வழமையான வழக்கம்.

பார்ப்பனியத்தின் மற்றொரு பரிமாணத்தையும் கவனிப்போம். பொதுவாக இந்துக்கள் வெள்ளி, செவ்வாய்களில் அசைவம் உண்ணமாட்டார்கள். ஒரு நடுத்தர வர்க்கத்திற்கு இது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு சாம்பார் வைப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு மளிகைகடைகளுக்கு போகும் அவசியமில்லாத பலபேருக்கு துவரம்பருப்பின் விலை பாசிப்பருப்பின் விலையைக் காட்டிலும் மிக அதிகம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆக சாம்பார் என்று வந்தால் ஏழைகளுக்கு பாசிப்பருப்புதான் கதி. இதுவும் ரேசன் அரிசியின் ஊறல் வீச்சத்திற்கு துப்புரவாக ஒத்து வராது. ரசம், புளிமண்டி என்று போக வேண்டும்.

கோழிக் கழிவு
பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள்

அது தவிர, பீன்ஸ், காலிபிளவர், கேரட், நூக்கல் போன்றவை இங்கிலிபீசு காய்களின் விலை எப்பொழுதும் அதிகம். அவற்றை வாங்கி குழம்பு வைப்பது கட்டுப்படியாகாது. மிஞ்சிப்போனால் கத்தரிக்காய் அல்லது கொத்தவரங்காய் அல்லது உருளைக்கிழங்கு மட்டுமே கையைக் கடிக்காமல் இருக்கிற காய்கள். ஆக வெள்ளி, செவ்வாய்களில் மட்டுமல்ல குழம்பு என்று வருகிற பொழுது உழைப்பாளிகளின் சாய்சில் சாம்பார் இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால் அதே சமயம், கதம்பம், கம்ப்யூட்டர் சாம்பிராணி வாங்குகிற காசுக்கு உடைந்த முட்டை நான்கு வாங்க முடியும். வாழ வேண்டும் என்கிற பொழுது நகர்ப்புற ஏழைவர்க்கம் வெள்ளி செவ்வாய்களில் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் மத நம்பிக்கைகளை கழற்றி வைத்தால்தான் ஓரளவு குடும்பத்தை ஓட்ட முடிகிறது.

இன்னும் பல மக்கள் வெள்ளி மற்றும் விரதநாட்கள், சபரி சீசன் நாட்களில் அசைவ விலை குறைவாக இருக்கும் என்று காத்திருந்து வாங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை மதநம்பிக்கைதான் விலை குறைப்பிற்கு உத்திரவாதம் தரும் ஒன்று.

ரமண மகரிசி சுட்ட அப்பளம் தின்று தியானத்தில் முக்தி அடைந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் ஐம்பது கிலோ சிமெண்டு மூட்டை தூக்குகிற சித்தாளுக்கு சுட்ட அப்பளத்தால் என்ன பலன் உண்டு? ஒருவருக்கு கலாச்சாரமாக கடப்பாடாக இருக்கிற உணவு, உழைக்கும் மக்களின் பலபிரிவினரை பிரதிபலிப்பதேயில்லை என்கிற பொழுது மதங்கள் யாருக்காக இருக்கின்றன? இதில் பல நேரங்களில் நடுத்தரவர்க்கம் தன்னை பக்தனாக காட்டிக்கொள்ள முடியாமல் பகல்வேசம் போடுகிறது என்பதுதான் நிதர்சனம்!

ஆட்டு நாக்கு
வறுத்த ஆட்டு நாக்கு

சரவணபவனில் ஐம்பது ரூபாய் கொடுத்து தோசை தின்னும் வர்க்கங்கள் நெல்பேட்டையில் சூத்தை கத்தரிக்காய்களை பொறுக்குகிற, உடைந்த தக்காளியை சல்லிசாக வாங்குகிற, முற்றிய வெண்டைக்காயில் வற்றல் போடுகிற ஓட்டாண்டி வர்க்கங்கள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் மக்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறிவது பார்ப்பனியத்தின் சடங்கு சம்பிரதாய எல்லைகளைத்தான். அதனால் தான் கோழித்தலையை தகப்பன் இருந்தும் உண்கிறார்கள். உடைந்த முட்டையின் கருகிய மணம் சாம்பிராணியின் புகையையும் தாண்டி வெள்ளி, செவ்வாய்களில் மணக்கிறது.

ஆடு என்ற வருகிறபொழுது ஒரு கிலோ கறிக்கு கணிசமான ரூபாயை சம்பளத்தில் இருந்து எடுக்க வேண்டும். அது சாத்தியமல்ல என்பதால் இங்கும் ஆட்டின் பல உறுப்புகள் தான் ஏழைகளுக்கு அசைவம். ஆட்டுத்தொட்டியில் ஆட்டின் பல உறுப்புகள் விலைக்கு வைக்கப்பட்டிருக்கும். சான்றாக ஆட்டின் நாக்கு ஒன்று மட்டுமே இருநூறு கிராம் கறியை ஈடு செய்ய போதுமானது. பல நேரங்களில் நுரையீரலை மட்டும் வாங்கிச் செல்கிற குடும்பங்களும் உண்டு. இதைப் படிக்கிறவர் அசூசையாகவோ அல்லது முதன்முதலில் கேள்விப்படுபவராகவோ கூட இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தான் இந்துமதம், கலாச்சாரம், புனிதம் என்று கதைக்கின்றனர் என்பதை நினைவில் கொள்க.

இது ஒருபுறமிருக்க, பல ஆதிக்க சாதிகள் மூலநோய் குணமாகும் என்று கருணைக்கிழங்கு தின்பது ஒருபக்கம் இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் (மதுரை கீழ்பாலத்தில் காணலாம்) பன்றிக்கறியும் வாங்கிப் போவர். ஆனால் பார்ப்பனியத்தை ஆழமாக கடைபிடிப்பவர்களும் இவர்களே. பார்ப்பனர்களை விட வைகுண்ட ஏகாதேசி விரதம், பிரதோசம் என்று பீக்கு முந்திய குசுவாக இருப்பார்கள்.

மேற்கண்ட உதாரணங்களில் நாம் பார்ப்பது வாழ்க்கை என்று வருகிற பொழுது இந்துக்களே பார்ப்பனியத்திற்கு எதிராகவும் அரசமைப்பிற்கு எதிராகவும் பல சமயங்களில் நிற்க வேண்டியிருக்கிறது என்பது தான்.

இறைச்சி உணவு
சுரண்டப்பபட்ட மக்கள் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகின்றனர்.

இசுலாமியரையும் சேர்த்துக் கொள்வோம். பன்றிக்கறி அடிப்படைவாதத்தில் வருகிற பொழுது அதையும் தாண்டிய ஒன்று ஹலால் சம்பந்தப்பட்டது. ஓதி அறுக்கப்படாத கறி ஹராம் என்ற நிலையிலும் பிற கறிகள் மலிவாக கிடைக்கிற இடங்களில் இசுலாமியர்களும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். பல இசுலாமியர்கள் பிற வீட்டின் விசேசங்களில் கிடாவெட்டு விருந்துகளிலும் கலந்து கொள்கிறார்கள். ஓட்டல்களிலும் உணவருந்துகிறார்கள். இன்றைக்கு இந்நிலைமை வெகுவாக மாறி வந்திருக்கிறது. மக்களைப் பிரித்தாள்வதில் பிஜேக்களும் ஆர் எஸ் எஸ்களும் பங்குபங்காளியாக உள்ளே புகுந்து வேலை செய்கிறார்கள். பள்ளிவாசல்களே இன்றைக்கு இருதரப்பாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கிறோம். இதில் ஹலால் மூலமாக இசுலாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மதஅடிப்படைவாதிகள் வெறியுடன் இருக்கிறார்கள். மத அடிப்படைவாதம் இவர்களிடத்தில்தான் இருக்கிறதே தவிர மக்களிடையே கிடையாது. பசுவை புனிதம் என்கிற அரசியலுக்குள் ஆர் எஸ் எஸ் இழுத்தும் தவ்ஹீத் போன்ற சக்திகள் இசுலாமியரை பிரித்தாள்வதையும் பெரு முயற்சியுடன் செய்கிறார்கள்.

தொகுப்பாக சைவம் அசைவ அரசியலில் அரங்கேற்றம் செய்யப்படுவது என்ன?

  1. உணவை வைத்து எங்கெல்லாம் இந்துத்துவத்தின் குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் சாதி மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. மேல்தட்டு வர்க்க ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி தின்பதில்லை என்று காட்டிக்கொள்கிற பொழுது மாட்டுக்கறி ஆதிக்கசாதி உட்பட ஏழை வர்க்கங்களுக்கு விலை மலிவான மாற்றாக இருக்கின்றது. இதில் தடை ஏற்படுத்தும் பொருட்டு பார்ப்பனியமே இன்றுவரை கோலோச்சுகிறது.
  2. ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.

    சைவம் - அசைவம்
    ஓட்டாண்டிகளாக மாற்றப்பட்ட நடுத்தரவர்க்கம் மதத்தையும் கைவிடமுடியாமல் சைவமும் உண்ணமுடியாமல் அசைவமும் உண்ண முடியாமால் இரட்டை வாழ்க்கை வாழ்கிறது.
  3. சுரண்டப்பபட்ட மக்கள் அசைவத்திற்கு ஆட்டுத்தொடையோ சைவத்திற்கு கோபி மஞ்சூரியனோ அல்லாமல் சூத்தைக் கத்தரிக்காய், உடைந்த தக்காளி, கோழிச் சில்லறை, ஆட்டு நாக்கு, சில்லி பீப் என்று பொழுதை ஓட்டுகிற பொழுது வர்க்க பிரச்சனையே மேலோங்கி நிற்கிறது.  இங்கு மதமோ அரசோ மயிரளவு மதிப்பு கூட மக்களுக்குத் தருவதில்லை என்பதுதான் உண்மை.
  4. இந்தியாவில் இந்து மதத்தின் பிற சாதிகள் இந்து எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டியிருக்கிற பொழுது இசுலாமியர்கள் இந்து எதேச்சதிகாரத்திற்கு மட்டுமல்ல இசுலாமிய அடிப்படைவாதத்திற்கும் எதிராக போராட வேண்டும் என்பதே பல்வேறு தருணங்கள் நிரூபிக்கின்றன.

தான் சார்ந்திருக்கிற மதம் தன் வாழ்நிலைக்கு தீர்வல்ல என்று ஒரு இந்துவோ இசுலாமியரோ பரிசீலிப்பாரேயானால் அவர்கள் புரட்சிகர இயக்கங்களோடு கைகைகோர்க்க வேண்டும். அதற்கு இந்து என்றோ இசுலாமியன் என்றோ சடங்கு சம்பிரதாயத்தின் பால் போற்றப்படும் அடையாளங்களுக்கு வேலையில்லை. ஏனெனில் இங்கு காசு இருப்பவனுக்குத்தான் மதமும் கலாச்சாரமும் இன்ன பிற கருமாந்திரங்களும். ஒன்றுமில்லாத நாம் நம்மை ஒரு பக்தனாக காட்டிக்கொள்வதும் மதத்தின் கீழ் இருத்திக் கொள்வதும் முழுக்க முழுக்க கையாலாகாத தனமாகும். பார்ப்பனியயமும் வஹாபிசமும் அடிப்படையில் வேறுவேறல்ல. முதலாளித்துவம் வளர்த்தெடுத்த களவாணிகள் இவர்கள். இதிலிருந்து நம்மை மீட்டெடுக்க, புடம் போட்டுக் கொள்ள வர்க்கப் போராட்டத்தில் இணைவதைத் தவிர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?

– ஆய்வகன்