Friday, May 9, 2025
முகப்புசெய்திமாறும் ஆட்சி மாறாத அவலம் !

மாறும் ஆட்சி மாறாத அவலம் !

-

ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

போஸ்டர்

“நல்ல காலம் வரப்போகுது, நாட்டு மக்களுக்கு நல்ல காலம் வரப்போகுது” என்று குறி சொன்னார்கள் பா.ஜ.க-வும் ஊடகங்களும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே எமது ம.க.இ.க கலைக்குழு தோழர்கள் “நாமக்கட்டி ஆளப்போகுது உசாரு! நாட்டப்புடுச்சு ஆட்டப்போகுது” என்று பாட்டுப்பாடி சென்னார்கள் அதுதான் இன்று நடக்கிறது.

  • பதவியேற்று 35 நாட்களுக்குள் டீசல் விலையேற்றினார்கள், அடுத்தடுத்து பெட்ரோல் விலை, ரயில் கட்டணம் உயர்வு, வெங்காயம் உருளைக்கிழங்கு, சக்கரை விலை என விலைவாசியை உயர்த்தினார்கள். இவர்கள் வளர்ச்சி வளர்ச்சி என்று கூறியது விலைவாசி வளச்சியைத்தானா? என்று பலரும் பேசுமபடி நடந்து வருகிறார்கள்.
  • இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாகவும், அரசு அலுவலக மொழியாக ஆக்கவும் உத்தரவிட்டார்கள்.
  • ‘மோடி பிரதமரானால் ராஜபக்சே வாலை சுருட்டிக்கொள்வார், ஈழத்தமிழருக்கும், இந்திய தமிழருக்கும் விமோசனம் பிறக்கும்’ என்றார்கள். ஆனால் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த கொடூரன் ராஜபட்சேவை பிரதமர் பதவி ஏற்பிற்கு அழைத்து வந்து ஈழத்தமிழருக்கும், இந்திய தமிழருக்கும் பச்சை துரோகமிழைத்தார் மோடி.
  • பா.ஜ.க கும்பல் பதவியேற்று 1-1/2 மாதத்திற்குள் இருநூறு தமிழக மீனவர்களை கைது செய்து 38 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் மோடி.
  • முல்லைப்பெரியாறு, காவிரி விசயத்தில் காங்கிரசைப் போலவே கபட நாடகம் ஆடியவர்கள் தான் பா.ஜ.க கும்பல். இப்போதும் அதே தான் செய்கிறார் மோடி.

மோடி அரசானாலும் சரி காங்கிரஸ் அரசானாலும் சரி அல்லது மாநிலத்தில் கருணாநிதி, ஜெயா என்று எந்த கட்சி ஆண்டாலும் சரி படித்த அனைவருக்கும் வேலை கொடுக்கப்போவது கிடையாது.

விவசாயம் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. அதைப் பாதுகாக்க எந்த கட்சியும் கிடையாது.

பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னை மரம் செத்து மொட்டை மரமாக நிற்கிறது.

நிலத்தடி நீர் 400 அடியில் இருந்து 800 அடிக்கு சென்று விட்டது. பல கிராமங்களில் குடி தண்ணீர் இல்லாமல் காசு கொடுத்து தான் தண்ணீர் குடிக்க வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.

விவசாயத்தை நம்பி வாழமுடியாமல் விவசாயிகளின் பிள்ளைகள் நகரத்திற்கு ஓடி பிழைக்கிறார்கள். அங்கும் எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை.

கட்டுமான வேலையில் கூட பல நாள் வேலையில்லாமல் வீட்டிலிருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆட்டோ ஓட்டி பிழைக்கலாம் என்றால் ஆட்டோ ஓட்டுநரை திருடனை விட கேவலமாக விரட்டுகிறது, அடிக்கிறது, திட்டுகிறது, பொய் கேஸ் போடுகிறது காவல்துறை.

சிலர் டாஸ்மாக சாராயக்கடையில் சப்ளையராக சேர்ந்து குடிகாரனுக்கு ஊத்திக் கொடுத்து, ஊத்திக் கொடுத்து பின் தானும் குடிகாரனாக கெட்டு சீரழிகிறார்கள்.

கொஞ்சம் நமது சிந்தனையை பயன்படுத்தினாலே இந்த நாடு மானமுள்ளவனும், உழைப்பாளியும் வாழத்தகுதியற்றதாக மாறிவிட்டதை உணரமுடியும்.

நாட்டை வல்லரசாக்குவதாக கூறிய நமது ஆட்சியாளர்கள் பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டை கொடுத்துவிட்டு வெறும் புரோக்கர்களாக இருந்து வருகிறார்கள். “வெறும் புரோக்கர்” வேலைக்கு தான் உங்களிடம் வோட்டு கேட்டு வருகிறார்கள். நமது அவலத்தை போக்கும் வல்லமை எந்த ஓட்டு கட்சிக்கும் கிடையாது.

“போலீசும் கோர்ட்டும் பணக்காரர்களுக்கும் பதவியில் உள்ளவர்களுக்கும் தான்! மக்களுக்கு இல்லை” என்பதை அப்பட்டமாக தமிழக முதல்வர் ஜெயா தனது நடவடிக்கைகளின் மூலம் உணர்த்தி வருகிறார். ஊழல் வழக்கை விசாரிக்க விடாமல் முடக்குவதில் இந்தியாவின் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக உள்ளார்.

“மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தகுதியற்றவர்” என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பின்பும் பதவியில் நீடிக்க ஜெயாவின் ஆதரவோடு நீதிமன்ற இடைக்கால தடை பெற்று பதவியில் நீடிக்கிறார். கல்யாணியின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்தி போஸ்டர் ஒட்டினால் போலீசே திருட்டுத்தனமாக இரவில் போஸ்டரை கிழிக்கிறது என்றால் போலீசும் நீதிபதியும் ஜெயாவின் முந்தானை முடிச்சில் உள்ளதை உணர முடியும்.

நாட்டையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் உள்ளங்களுக்கு எமது அன்பான வேண்டுகோள்!

குட்ட குட்ட குனிந்து வாழும் வாழ்க்கை வாழ்கையில்லை. மானமுள்ளவராக விவசாயம் செய்து தலை நிமிர்ந்து வாழ்ந்தோம். மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் நம் விவசாயத்தை அழித்து உள்நாட்டிலேயே நம்மை அகதிகளாக நடுரோட்டுக்கு விரட்டி விட்டார்கள்.

‘நம் வீட்டில் சாப்பிட்ட தட்டை கழுவினாலும் அவமானம், நான் ஆம்பிளை சிங்கம்’ என்று மீசையை முறுக்கியவர்களெல்லாம் நடு ரோட்டில் இட்லி சுட்டு விற்றும், கூழ் விற்றும் எச்சில் தட்டு கழுவியும் வாழ வேண்டிய அவலத்திற்கு இந்த அரசு தள்ளிவிட்டு விட்டதே என உணராமல் இதெல்லாம் சகஜமப்பா என வாழ்வது வாழ்க்கையல்ல. அதிகாரியும், போலீசும், முதலாளியும் நம்மை மானமரியாதை இல்லாமல் பேசினாலும் ‘எப்படியாவது வாழ்வோம்’ என மவுனமாக இருப்பதும் வாழ்க்கையல்ல. “சீ.. நாயும் பொழைக்கும் இந்தப்பொழப்பு” என்றார் பாரதிதாசன்.

இது நமது நாடு நாம் நிமிர்ந்து நின்றால் நாடு நம் வசப்படுவது உறுதி. புதிய ஜனநாயகத்தை படைத்து நாம் சுதந்திரமாக ஜனநாயகமாக தலை நிமிர்ந்து வாழ்வோம், அது தான் வாழ்க்கை! மேலும் விபரம் அறிய வாருங்கள் பொதுக் கூட்டத்திற்கு.

விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்: 26.07.2014 சனிக்கிழமை
நேரம் : மாலை: 6.30 மணி

இடம் : பஸ் நிலையம் செக்கானூரணி

தலைமை :
தோழர் க.ஆசை, வி.வி.மு செக்கானூரணி

முன்னிலை :
தோழர் மோகன்
, வி.வி.மு, கம்பம் வட்டார செயலாளர்.
தோழர் சந்திரபோஸ், வி.வி.மு, உசிலம்பட்டி

சிறப்புரை:
தோழர் துரை சண்முகம், ம.க.இ.க, சென்னை

ம.க.இ.க மைய கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்

இவண்,

விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை-திருமங்கலம் வட்டம்.

தொடர்புக்கு:
தோழர் ஆசை – 9655080392.
தோழர் குருசாமி – 9894312290