privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !

சலவை வேட்டி கட்டினால் வீரத்தமிழனா !

-

ராமதாசு
ராமதாசு தமிழர் கலாச்சாரத்திற்காக கூவுவதைப் பார்க்கையில், குப்பையைக் கிளரும் கோழிக்கே குமட்டி வருது வாந்தி!

வேட்டித்தொகை!

டுத்துவதற்கு கொள்கை இல்லாதவர்களுக்கு
ஓசியில் கிடைத்தது ஒரு வேட்டி,
தன்னையும் தமிழனென்று காட்டிக் கொள்ள
ஆளாளுக்கு போட்டி!

அரி பரந்தாமனின்… வேட்டியல்லவா!
அதனால், தேசத்தையே வலம் வருகிறது,
அறுக்கப்பட்ட தலித் வினிதாவின் உடலோ
குளித்தலைக்குள்ளேயே அடங்கிப்போனது!
வேட்டிக்குள்ள மதிப்புகூட
தாழ்த்தப்பட்டவர்களின்
தோலுக்கில்லாத தேசத்தில்
தமிழர் கலாச்சாரத்தை தாங்கிப்பிடிக்க
எத்தனை குரல்கள்! எத்தனை கட்சிகள்…!

தலித் இளைஞர்கள்
ஜீன்ஸ்பேன்ட்டும், கூலிங்கிளாசும் அணிவதையே
தாங்கிக் கொள்ள முடியாத ராமதாசு
தமிழர் கலாச்சாரத்திற்காக
கூவுவதைப் பார்க்கையில்,
குப்பையைக் கிளரும் கோழிக்கே
குமட்டி வருது வாந்தி!

சாதிவெறியர்
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீச்சரிவாளைத் தூக்கும் சாதிவெறியர்களும் தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்ற
களத்தில்…

தமிழர் பண்பாட்டில்
காதலும் ஒன்று – அதை
தாழ்த்தப்பட்டவர்கள் செய்தால்
தகாது என்று

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு
வீச்சரிவாளைத் தூக்கும் சாதிவெறியர்களும்
தமிழர் கலாச்சாரத்தைக் காப்பாற்ற
களத்தில் நிற்பதைக் கண்டு,
காரித்துப்பி அம்மணமாய்
வயலுக்குள் ஓடுது நண்டு!

கிடைத்த வேட்டியை
தன் சாதி அளவுக்கு
கிழிக்கிறார்
தினமணி வைத்தி,
“கோவிலுக்குள் சட்டையைக் கழட்டச் சொல்வது
ஆதிக்கமல்ல, கோயில் ஒழுங்கு ” என்று
அடுத்த ஆப்பு தனக்கு வருவதற்குள்
எடுத்து விடுகிறார் எட்டு முழத்தை…
” கோயில் கொடியவர்களின் கூடாரமென்றால்
அதை புறக்கணிப்பதுதான் சுயமரியாதை…
நடைமுறையை எதிர்த்து போராடுவது
அநாவசியம்… ” என்று

கோயிலில் சட்டை
“கோவிலுக்குள் சட்டையைக் கழட்டச் சொல்வது
ஆதிக்கமல்ல, கோயில் ஒழுங்கு ” – தினமணி வைத்தி

கிடைத்த வேட்டியில்
வாரப் பார்க்கிறார்,
வீட்டுக்குள் திருடன் வந்தால்
வீட்டையே விட்டு விடுவாரோ வைத்தி!
கோயில் எங்களது
கூடாரம்தான் உன்னது
கொடியவனை ஓட்டிவிடுவதுதான் நீதி!
தேர்தலையும், முதலாளித்துவக் கட்டமைப்பையும்
புறக்கணிப்பவர்களைப் பார்க்கையில் மட்டும்
பின் ஏன்? – உன் அடிவயிற்றில் கொடுந் தீ!

சேலைகட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு? என
சினிமா கவலையில் ஜில்லிட்டுப் போன
வைரமுத்துவும்,
வேட்டி நீளத்துக்கு
இலக்கியக் கவலையில் விறைத்துப்போய்
அறிக்கைத் தமிழனாய்
தன்னை அடையாளப்படுத்துகிறார்,
வேட்டி காத்த மாரியம்மனுக்கு
ஒரு பாராட்டு,
கூடவே ” தமிழகப் பள்ளிகளில்
தமிழ் நுழைய முடியவில்லையே”
என ஒரு வேண்டுதல்!

கருணாநிதி, வைரமுத்து
“அதிகாரமிக்கவர்கள் ஆவன செய்ய வேண்டும்” என இரைஞ்சும் வைரமுத்துவுக்கு முத்தமிழ் கலைஞர் மு.க.வும் நெருக்கம்.

“அதிகாரமிக்கவர்கள்
ஆவன செய்ய வேண்டும் ”
என இறைஞ்சும் வைரமுத்துவுக்கு
அப்துல்கலாமும் நெருக்கம்
முத்தமிழ் கலைஞர் மு.க.வும் நெருக்கம்.
இவர்கள் அதிகாரத்திலிருக்கும் போது
கவிப்பேரரசின் படையெடுப்பு எதற்கோ?

“வெட்டி எடுத்தால் வேட்டி!
துண்டாடினால் துண்டு!”
இலக்கணமெல்லாம் சரிதான் கவிஞரே!
போராட்டத்தின் பக்கமே தலைவைத்துபடுக்காமல்
இப்படி கொட்டி தீர்த்தால் வைரமுத்துவா?
வடுகப்பட்டியிலிருந்து வர்க்கப்பட்டியில் அடைந்த
பத்மஸ்ரீயின் விடுதலை உணர்வுக்கு
வேட்டி மட்டும் போதுமா?

ப.சிதம்பரத்தின் வேட்டி
உலக வங்கிக்கு உள்ளாடை,
காங்கிரஸ் கரை வேட்டி
ஈழத்தமிழர்களுக்கு கோடித்துணி,
பா.ஜ.க. காவிக் கறை வேட்டி
தலித், சிறுபான்மையினருக்கு தூக்குக் கயிறு
ஓட்டுக் கட்சிகளின் வேட்டி
நாட்டைச் சுருட்டும் மூட்டைத் துணி,
‘ மினிஸ்டர் ‘ காட்டன் என்று
நெசவின் வசவுகள் நிறையவே உண்டு!
வர்க்க, சாதி, மதத்திற்கேற்ப
வகை வகையான வேட்டிகள் உண்டு!

110 விதி
மத்த பிரச்சனையெல்லாம் மண்ணைக்கவ்வ நூத்தி பத்து விதியின் கீழ் முக்கியப் பிரச்சனையாய் வேட்டிக்கு முழங்கினார் வீராங்கனை!

இத்தனை விறுவிறுப்பான காட்சிகளோடு
வேட்டி கட்டியவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க
கடைசியில் தமிழ் கலாச்சாரத்தை
காக்கும் கிளைமாக்ஸ்
சேலை கட்டிய ஜெயாவுக்கு கிடைத்தது!

மத்த பிரச்சனையெல்லாம் மண்ணைக்கவ்வ
நூத்தி பத்து விதியின் கீழ்
முக்கியப் பிரச்சனையாய்
வேட்டிக்கு முழங்கினார் வீராங்கனை!
ஒருவாரம் சட்ட சபையையும்,
தமிழ்நாட்டையும் ஓட்ட
வேட்டி படம் வசூலில் சாதனை!

வை.கோ. முதல் வைரமுத்துவரை
வாயில் வேட்டியை திணித்தது அம்மா!
“அறம் காத்த அம்மா
தமிழர் நலம் காத்த அம்மா” என
கலைப்புலி தாணு முதல்
விலைப்புலி நெடுமாறன் வரை
ஒரே வேட்டியில் பல மாங்காய்!

குடி, கூத்து
இந்த ஆபாசக் கும்பலையே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்
என்பதுதான் தமிழகத்துக்கே பெருமை!

“ஆடை அணிவது அவரவர் உரிமை
வேட்டி அணிவது தமிழரின் பெருமை”
என மேட்டுக்குடி கிளப்புகளின்
வர்க்கக் கொழுப்பை கண்டிப்பது சரிதான்!
எனினும், வேட்டியைத் தாண்டி
கொஞ்சம் வெளியே வந்து சிந்திப்பதே அறிவுடைமை!
வேட்டியோடு சூதாட அனுமதித்தால்
வேட்டியோடு குத்தாட்டம் பார்க்கவிட்டால்
வீரத்தமிழனுக்கு பிரச்சனை முடிந்ததா?

பிரச்சனையே,
கிழக்கு கடற்கரை ரிசார்ட்டுகள் முதல்
கிழக்கிந்திய கம்பெனி கால கிளப்புகள் வரை
வர்க்கக் கொழுப்பில் கொட்டமடிக்கும்
குடி, கூத்து, கும்மாள மடிக்கும்
அனைத்து ‘கிளப்பையும்’ கிளப்பு என்பதுதான்!
குடல் திமிரும், உடல் திமிரும் கொண்ட
இந்த ஆபாசக் கும்பலையே
தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்
என்பதுதான் தமிழகத்துக்கே பெருமை!

டாஸ்மாக்
வேட்டி கட்டுவதும் தமிழன் பண்பாடு டாஸ்மாக் ஓரம் வேட்டி அவிழ்ந்து கிடப்பதும் தமிழன் பண்பாடு

வேட்டி கட்டுவோம்
அதை சாதி, மத, வர்க்கக் கறைகளை
உதறிக் கட்டுவோம் என்பதே சரி!
சீன்கள் எதுவாயிருந்தால் என்ன
சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால் போதும்
என்பதும்,
விவகாரம் எதுவாயிருந்தால் என்ன
வேட்டி கட்டினால் போதும் என்பதும்
தமிழன் கலாச்சாரம் அல்ல
தரகன் கலாச்சாரம்!

விமர்சனமற்றுப் பார்த்தால்
வேட்டி மட்டுமா தமிழன் பண்பாடு
வட்டி கூடத்தான் தமிழன் பண்பாடு!
பத்து வட்டிக்கு பர்மா, மலேயா,
என பாராண்ட தமிழன் என பாராட்ட முடியுமா?
வேட்டி கட்டுவதும் தமிழன் பண்பாடு
டாஸ்மாக் ஓரம் வேட்டி அவிழ்ந்து கிடப்பதும்
தமிழன் பண்பாடு
எனில் விளங்குமா தமிழ்நாடு?

வேட்டியில் யார் கையை வைத்தாலும்
விடமாட்டேன் என்று
தமிழர் கலாச்சாரம் பேசும் ஜெ. தான்
ஆரம்பக் கல்வியிலேயே ஆங்கிலத்தை திணித்து
தமிழைத் தரிசாக்குவது,
வேட்டிக்கு வந்தவர்கள்
இதற்கு ரோட்டுக்கு வந்து போராடினால்
அதுதான் பண்பாடு!

பார்ட்டி
வீக் என்ட் பார்ட்டி! டிஸ்கொதே, வீதிக்கு வீதி சாராயக்கடை, விபச்சாரம்…

வீக் என்ட் பார்ட்டி! டிஸ்கொதே
வீதிக்கு வீதி சாராயக்கடை, விபச்சாரம்
இணையதள ஆபாச மெமரிகார்டு,
பெண்களை கடத்தி பாலியல் வன்முறை
இத்தனை ஏகாதிபத்திய அழுக்கையும்
அடித்து வெளுக்காமல்
வேட்டியை மட்டும் சலவைக்குப் போட்டால்
வீரத் தமிழனா?

புரிந்துகொள்!
ஆடையில்லாத மனிதன்
அரை மனிதன்
போராடாத மனிதனோ
முழு அம்மணம்!
இயற்கையை எதிர்த்த
போராட்டத்தின் ஊடே
தரித்துக் கொண்டதுதான்
ஆரம்ப ஆடை.

ப சிதம்பரம்
ப.சிதம்பரத்தின் வேட்டி உலக வங்கிக்கு உள்ளாடை

தாத்தா காலத்திலிருந்து
எலி அம்மணமாகத்தான்
ஓடிக் கொண்டிருக்கிறது,
அந்த காலத்திலிருந்து
அண்டி வாழும் நாய்க்கு
குண்டித் துணியில்லை…
சூழலுக்கெதிராய்
போராடிய மனிதன் தான்
தேவைகளுக்கேற்ப
ஆடை அணிந்தான்

சுரண்டலின் தீவிரத்தில்
உழைக்கும் மக்களிடமிருந்து
உடைமைகளை மட்டுமல்ல
உடைகளையும் பறித்தது ஆளும் வர்க்கம்.

உடுக்கை, உடுப்பு, துணி, ஆடை
குப்பாயம், மெய்ப்பை, பட்டுடை,
கலிங்கம், புடவை, கச்சு, தானை, படாம்…
என ஆடையைக் குறிக்கும்
ஆயிரம் சொல் புழங்கிய
தமிழ்ப் பெருமையில்
தாழ்த்தப்பட்டவர்களை
ஆடை மறுக்கப்பட்ட அரை மனிதனாக
அலையவிட்ட சிறுமையும் அடங்கும்!

பொங்கொளி… பூம்பட்டுடை அரசனுக்கு
உரைசால் பொன்னிறம் வணிகனுக்கு
தாழகம் செறிந்த உடை வேளாளனுக்கு…
என வர்ணத்திற்கேற்ற வகைப்பாடுடையை
வர்ணிக்கிறது சிலப்பதிகாரம்!
அது மட்டுமா?
கணவனை இழந்த கைம்பெண்கள்
பஞ்செடுத்து, நூல் நூற்ற பணிப் பெண்களாய்
‘பருத்திப் பெண்டிர்’ என அழைக்கப்பட்டதும் வரலாறு,
அடக்கம் என்பது உயர்ந்தோர் முன்
வாய் மூடலும், ஆடை ஒடுக்கலும்
என்பது தொல்காப்பிய வழக்காறு.

பாடுபடும் பாட்டாளி
படைசூழ் மன்னனுக்கும் மனுநீதி பார்ப்பனனுக்கும் ஆணவப் பட்டு, பாடுபடும் பாட்டாளிகளுக்கோ கோமணக் கட்டு!

படைசூழ் மன்னனுக்கும்
மனுநீதி பார்ப்பனனுக்கும்
ஆணவப் பட்டு,
பாடுபடும் பாட்டாளிகளுக்கோ
கோமணக் கட்டு!
இதுதான் மன்னராட்சி வழங்கிய
தமிழ் கலாச்சாரத்தின் குறுக்குவெட்டு.

தாழ்த்தப்பட்ட சவரர், புளிஞர்
வேட்டுவப் பெண்களுக்கு தழையே ஆடை,
துகில் பட்டும், வட்டுடையும்
புதுநூல் பூந்துகிலும்
உயர்ந்தோர் ஆடையென
கண்ணை உருத்தும் காட்சிகளுடன்
பெருங்கதையும், சிந்தாமணியும் காட்டும்
ஆண்டபரம்பரை தமிழ் கலாச்சாரம்!

தழைய தழைய வேட்டி
பண்ணையாரின் உடை
தமிழச்சி மார்பை மறைக்கவும்
சேலை அணியத் தடை,
இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை,
“முழங்காலுக்கு கீழே
சேலையை இழுத்துவிட்டது யாரு?
மணலி கந்தசாமி பாரு” என
தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின்
நடவுப் பாடல்
கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!

சாதிவெறி
செருப்பு போடக் கூடாது அக்கிரகாரத்தில், ஆதிக்கசாதி தெருவில்
நடக்கக் கூடாது…

மேலாடை அணியக் கூடாது,
துண்டை தோளில் போடக் கூடாது
செருப்பு போடக் கூடாது
அக்கிரகாரத்தில், ஆதிக்கசாதி தெருவில்
நடக்கக் கூடாது… என அடுக்கடுக்காக
உழைக்கும் ஒரு பகுதி
தாழ்த்தப்பட்ட தமிழர்களை
அடக்கி ஒடுக்கியதுதான்
ஆளும் வர்க்க தமிழன் பண்பாடு!

செருப்பும் அணிவோம்
ஆதிக்கசாதித்திமிரை எத்தியும் நடப்போம்,
என போராட்ட கலாச்சாரத்தால்
தமிழர் பண்பாட்டை தகுதிபடுத்தியவர்கள்
கம்யூனிஸ்டுகள்!

சும்மா வரவில்லை
அனைவருக்கும் வேட்டியும், சேலையும்
அம்மாம் பெரிய
போராட்ட வரலாறுண்டு தமிழகத்தில்
அந்த பெருமைக்கு காரணம் கம்யூனிசம்!

வேட்டியும், சட்டையும்
அனைவரும் அணிந்தது
பன்னெடுங்காலப் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்தில்
அந்த சுயமரியாதையை நெய்தது
கம்யூனிஸ்டுகளின் நீரோட்டம்!

பெரியார்
நூலை நூற்கக் கற்ற தமிழனுக்கு மக்களை இனம் பிரிக்கும் ‘நூலை’ அறுக்கவும் கற்றுக்கொடுத்தார் பெரியார்!

நூலை நூற்கக் கற்ற தமிழனுக்கு
மக்களை இனம் பிரிக்கும்
‘நூலை’ அறுக்கவும்
கற்றுக்கொடுத்தார் பெரியார்!
தமிழன் வேட்டியின் பார்ப்பனக் கறையை
பெரியார் வெளுத்த வெளுப்பில்
எல்லா தோலுக்கும் சுரணை வந்தது!

வேட்டியை ‘இந்து வின்’ அடையாளமாக்கி
கோயில் பாம்புகள் படமெடுத்தபோது
கைலிகட்டி பெரியார் காலால் மிதித்தார்.

போராட்ட மரபில்
விளைந்த வேட்டியை
இறுக்கிக் கட்டு!
ஆனால்,
கட்டிய வேட்டியோடு
நீ எங்கே போகிறாய் என்பது தான்
காலம் எழுப்பும் கேள்வி!
திரும்பவும்
வாய் வீச்சுக்காரர்களின் வக்கனைக்கா?
இல்லை
வர்க்கப்போராட்டத்தின் போர் முனைக்கா!

தமிழ்நாட்டில் சாதியம்
பண்ணைகளைச் ‘சாமி’ என்றதை பழங்கதையாக்கிய நாட்டில்
மீண்டும், பன்னாட்டுக் கம்பெனி சாமி பெயரில் அர்ச்சனை நடக்கிறது!

தமிழ்மொழி உடுக்கை
இழந்தவன் கையில்
மீண்டும்
இந்திச் சருகு திணிக்கப்படுகிறது!
பகுத்தறிவு தறிகள்
ஓடிய வீட்டில்
மீண்டும்,
பார்ப்பன சமஸ்கிருத பாடை நுழைகிறது!

பண்ணைகளைச் ‘சாமி’ என்றதை
பழங்கதையாக்கிய நாட்டில்
மீண்டும்,
பன்னாட்டுக் கம்பெனி சாமி பெயரில்
அர்ச்சனை நடக்கிறது!
அம்மணமாய் சாதிவெறி
நாகரிகத் தொட்டிலை கிழிக்கிறது!
இந்தப் பாசிச இருட்டை உதறிக்கட்டும்
வேட்டியோடு வெளியே வா தமிழா!

– துரை.சண்முகம்