privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

-

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1

மீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு  எமது செய்தியாளர்கள் சென்ற போது நூற்றுக் கணக்கான வேடிக்கை, வினோத அனுபவங்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தப் பகுதியில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் – Vedic Science Research Centre என்ற திடுக்கிடும் பெயர் கொண்ட கோஷ்டியின் அனுபவத்தை பார்ப்போம்.

விஞ்ஞான ஆராய்ச்சி மையம் என்ற பெயருடன் வேதம் என்பதை ஒட்ட வைத்துக் கொண்டு பெயருக்கேற்றபடி “பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும்”, “பஞ்சாங்கம் ஒரு அறிவியல் பார்வை”, “பெரியபுராணச் சிந்தனை தொடர் சொற்பொழிவு” என்று ‘ஆய்வு’களை செய்து கொண்டிருக்கிறார்கள். விபூதி அணிவது முட்டாள்தனம், இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியபோது அவர் மீது வழக்கு தொடுத்த கோஷ்டி இதுதான். மற்றபடி யார் இவர்கள், பின்னணி என்ன என்று தெரியவில்லை. கடையின் பளபளப்பு, விளம்பர பிரசுரங்கள், நூல்களைப் பார்த்தால் ஏதோ இந்து என்ஜிவோ கும்பல் போலவும் இருந்தது.

கடையை நெருங்கும் போதே முஸ்லீம்கள், தீவிரவாதம், ஜிகாதி, பயங்கரவாதம், இந்துக்கள் பாவம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒருசேர ஒலித்துக்கொண்டிருந்தன. ‘வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரிலான  கடைக்கு உள்ளே நுழைந்தால் விஞ்ஞானத்திற்கும் ஸ்டாலுக்கும் சம்பந்தமே இல்லை. வீச்சரிவாள், சைக்கிள் செயின், கத்தி கபடா என்று ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டிய ஸ்டாலுக்கு விஞ்ஞானத்தை இணைத்து பெயர் வைத்திருக்கிறார்கள்.

எந்தப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவிகளோ தெரியவில்லை அனைவரையும் அந்த ஸ்டாலுக்குள் உட்காரவைத்து தொலைக்காட்சியில் எதையோ போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைத்தும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன.

அந்த ஸ்டாலை சுற்றிலும் இந்து மதவெறியை கக்கும் நச்சுப்பிரச்சார சுவரொட்டிகளை எக்கச்சக்கமாக ஒட்டி வைத்திருந்தனர், சிறுபான்மையினரை குறிப்பாக இசுலாமியர்களை இழிவுபடுத்தும் வாசகங்களையும், அவர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் செய்திகளையும், பொய் பிரச்சாரங்களையும் எழுதி வைத்திருந்தனர். உள்ளே வருபவர்களை எல்லாம் ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு சுவற்றில் எழுதிவைத்திருந்த விவரங்களை எல்லாம் வெறித்தனத்துடன் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.

“சிறுபான்மையினருக்கு தான் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் இருக்கு, இந்துக்களுக்கு என்ன இருக்கு சார்? இந்து தலைவர்களுக்கே கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, கொலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறி “பாருங்க எவ்வளவு தேச பக்கதர்கள் கொல்லப்பட்டிருக்காங்க” என்று மனைவியால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டவர்கள், கள்ளக்காதல், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்ட தேஷபக்தர்களின் நீண்டதொரு பட்டியலை காண்பித்து அனைவரையும் கண்ணீர் விடச் சொன்னார்.

“ஹிந்துக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகமே இல்லை. விஸ்வரூபம் என்கிற ஒரு படப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினை செய்தார்கள், அமெரிக்க தூதரகத்தையே முற்றுகையிட்டார்கள். இதையெல்லாம் நாம் அனுமதிக்கக்கூடாது.”

“ஆனா, இந்த அ.தி.மு.க, தி.மு.க எல்லாம் இவங்க கூட கூட்டணி வைக்க போட்டி போடுறாங்க, என்ன அநியாயம் பார்த்தீங்களா சார்.”

“அப்புறம் இதப் பாருங்க  சார், திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும் மணி மண்டபம் அமைக்கப் போறாங்களாம், அதுவும் நம்ம வரிப்பணத்தில சார். இவங்கெல்லாம் யார் சார், நம்ம இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவங்க. அவங்களுக்கு மணி மண்டபம் அமைக்க விடக்கூடாது சார்” என்றார்.

அவர் பேசி முடித்ததும் “நீங்க சொன்னதுல ரெண்டு சந்தேகம். கூட்டணி வைப்பது பத்தி சொன்னீங்க, இந்துக்களோட கட்சி பா.ஜ.க தாழ்த்தப்பட்ட மக்களோட வீடுகளை உடைச்ச பா.ம.கவோடும் இன்னும் சாதிக் கட்சிகளான கொங்கு ஈஸ்வரன் கட்சி, பச்சமுத்து கட்சி இவங்களோட எல்லாம் கூட்டணி வைக்கிறதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றும் “திப்பு சுல்தானைப் பத்தி சொன்னீங்க. அவரு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரையே கொடுத்த மன்னராச்சே, அவரப் பத்தி இப்படி பேசலாமா” என்றும் கேட்டோம்.

“திப்புசுல்தான் இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவன் சார்” என்று ஆரம்பித்தவர், “அந்த புத்தகம் எழுதினவரே இதோ வந்துட்டார் அவர்கிட்டயே கேளுங்க” என்று இன்னொருவரை கை காட்டி விட்டு எஸ்கேப் ஆனார்.

புத்தக ஆசிரியர் (பால கௌதமன் என்று பெயராம்) நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அக்மார்க் அம்பியாக காட்சியளித்தார்.

“நீங்க எழுதின இந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினேன். அதில ஒரு சந்தேகம். திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்தானே. அவரைப் பத்தி ஏன் இப்படி எழுதியிருக்கீங்க”

“என்ன சார் நீங்க! ஆங்கிலேயரை எதிர்த்து அவன் எதுக்கு போராடினான்ன்னு பாருங்க. அவனோட தன்னோட முஸ்லீம் ஆதிக்கத்தை காப்பாத்தத்தான் போராடினான்”.

“இருந்தாலும், ஆங்கிலேயரை எதிர்த்து நம்ம மண்ணை காக்க போராடியது முக்கியமில்லையா”

பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் ஏதோ கேட்க முயற்சிக்க, “நீங்க போன வருசமே வந்து என்னோட ஆர்க்யூ பண்ணிட்டு போனீங்கள்ள. உங்க கிட்ட பேச எதுவுமில்ல சார்” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

தொடர்ந்து, “திப்பு சுல்தான் ஆங்கிலேயரோடு எத்தனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் தெரியுமா” என்றார்.

“கேள்விப்பட்டிருக்கேன், ஒரு ஒப்பந்தத்தில, தன்னோட இரண்டு மகன்களையும் பணயக் கைதிகளா அனுப்பி வைச்சிருக்காரு. வேறு எந்த மன்னனாவது நாட்டுக்காக தன்னோட குழந்தைகளை பணயம் வைச்சிருக்காங்களா. அந்தக் காலத்துல திருவிதாங்கூர், கொச்சி ராஜாக்கள் எல்லாம் இந்துவா இருந்து கிட்டே ஆங்கிலேயன் கிட்ட சரணடைஞ்சு அடிமையா நடந்துகிட்டாங்களே, அதோட ஒப்பிட்டுப் பாருங்க”

“நீங்க இதையெல்லாம் இவ்வளவு எளிமையா பார்க்கக் கூடாது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா? திப்பு சுல்தான் தன்னோட ஆதிக்கத்தை தக்க வச்சுக்க ஆங்கிலேயரை எதிர்த்ததை தேசபக்தின்னு சொல்ல முடியாது சார்” என்றார்.

“இந்து ராஜான்னு சொல்லிக்கிற திருவிதாங்கூர், கொச்சி மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்து சுகமா வாழ்ந்த துரோகத்தை விட தன்னோட நாட்டை அன்னியனிடமிருந்து பாதுகாக்க போர்க்களத்துல போரிட்டு உயிர் தியாகம் செய்த திப்பு மேலானவர்தானே சார்.”

“கேரள ராஜாக்கள், எதுக்காக ஆங்கிலேயருக்கு அடிமையா இருந்தாங்கன்னு பார்க்கணும். இந்து மதத்தையும் இந்து மதத்தோட சொத்துக்களையும் பாதுகாக்கத்தான் ஆங்கிலேயரோட ஒப்பந்தம் போட்டுக் கிட்டாங்க” என்று தேசபக்திக்கு புதிய வரையறை சொன்னவர், தொடர்ந்து “திப்பு சுல்தானை பாருங்க, ஃபிரெஞ்சு காரங்கள கூடச் சேர்த்துக் கிட்டான், இந்தியா மேல படை எடுத்து வரும்படி ஃபிரெஞ்சு காரங்களுக்கு லெட்டர் போட்டிருக்கான்”

“ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதற்கு ஃபிரெஞ்சு தளபதிகளை சம்பளம் கொடுத்து தளபதிகளா வேலைக்கு வச்சுகிட்டாரு. ஆனா, இந்து ராஜாக்கள் எல்லாம் நம்மை நாட்டை அடிமைப்படுத்தின ஆங்கிலேயனுக்கு கால்ல விழுந்து கிடந்தாங்களே. அப்போ யாருக்கு மணிமண்டபம் வைக்கணும்?” என்று கேட்டோம்.

“அதெல்லாம் இருக்கட்டும். துலுக்கனுக்கு நம்ம நாட்டுல என்ன சார் வேல. ஹைதர் அலி யாரு, பஞ்சாபிலேருந்து வந்து மைசூர் மகாராஜாவை தூக்கி எறிஞ்சுகிட்டு ஆட்சியை புடிச்சவன். அவனை நாம எதுக்கு சார் மதிக்கணும்?” என்று பேச்சை மாற்றினார்.

“பஞ்சாபும் இந்தியாலதான இருக்கு, அப்போ ஹைதர் அலிக்கு சொந்த ஊரான பஞ்சாப் பாரதத்தில் இல்லையா? ”

இதில் அதிர்ச்சியானவர், “யாரு சொன்னாங்க, பஞ்சாபுக்கு அவன் எங்கேருந்து வந்தான், மத்திய ஆசியாவில இருந்து வந்தான். இவனுங்க எல்லாம் வந்துதான் நம்ம நாடு சீரழிஞ்சு போச்சு. நம்ம நாட்டோட பெருமைய மீட்டெடுக்கணும்”

“ஆனால, நம்ம அரசே அன்னிய முதலீடுதான் நம்ம நாட்டை வளர்க்க ஒரே வழின்னு சொல்லி வெளிநாட்டு கம்பெனிகள உள்ள விடுது. அது சரியா!”

“இப்போ நம்ம பலவீனமா இருக்கோம் சார். வெளிநாட்டில இருந்துதான் எல்லாம் வர வேண்டியிருக்கு. நம்ம நாடு எப்படி இருந்த நாடு தெரியுமா. இந்த நாட்டுல என்ன இல்லை சார். 1800-ம் ஆண்டுல உலக ஜி.டி.பில 40% நம்ம நாட்டுலதான் உற்பத்தி ஆகிட்டு இருந்துச்சு. அன்னியர்கள் வந்துதான் எல்லாம் சீரழிச்சிட்டாங்க”

“அப்படியா சொல்றீங்க. அப்படீன்னா முகலாயர் ஆட்சி முடியிற கால கட்டத்துல  அவ்வளவு சிறப்பா இருந்ததுன்னா அப்போது நம்ம நாட்டில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்திருக்குன்னு சொல்லுங்க”

1000 ஆண்டு அன்னியர் ஆக்கிரமிப்பு என்று புரட்டல் சொல்லும் சங்க வரலாற்றுப் பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று ஒரு கணம் திகைத்துப் போனவர், “அவன் நம்ம பொருளாதாரத்து மேல கை வைக்கல சார், அது நல்லா நடந்தாத்தான் வரி வசூலிக்க முடியும். ஆனா இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினான், அதை நெனைச்சு பாருங்க.” என்றார்.

“சரி, இன்னொரு சந்தேகம். இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி வெள்ளைக்காரன வெரட்டியடிச்சோம். ஆனால,  இன்னைக்கு ஐ.டி கம்பெனில வேலை பார்க்கிற நாங்கெல்லாம், வெள்ளைக்காரனுக்குத்தான் சலாம் போடுறோம். அவன் ஆட்டுவிக்கிற மாதிரிதான் ஆடுறோம். இந்த அடிமைத்தனத்துக்கு என்ன செய்றது?”

“அவன்தான் உங்களுக்கு காசு தாறான் சார். அப்போ அவன் சொல்றபடிதான் கேக்கணும். இன்னைக்கு எவன்னாலும் மேடையில ஏறி பொருளாதாரம், வளர்ச்சின்னு அடிச்சி விட்றான். ஜி.டி.பின்னா என்னன்னு தெரியுமா இந்த தாயளிகளுக்கு. ஜி.டி.பி எப்படி கணக்கு போடுறாங்கன்னு தெரியுமா. பேச வந்துட்டானுங்க, நம்ம நாட்டுல துலுக்கனுங்களுக்கு என்ன சார் வேலை” என்று சரமாரியாக கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.

பிறகு, “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்னு போட்டிருக்கீங்களே, அறிவியல் ஆராய்ச்சி என்னென்ன செய்றீங்கன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டோம்.

“செய்றோமே, இங்க பாருங்க இந்த வீடியோவை, பஞ்சாங்கம்கறது எவ்வளவு அறிவியல் பூர்வமானது. நம்ம பண்டிகைகள், சடங்குகள் எல்லாம் எப்படி அறிவியல் பூர்வமா  கொண்டாடுறோம், இதை எல்லாம் விளக்கி வீடியோ தயாரிச்சிருக்கோம்”

பழம் பஞ்சாங்கத்துக்கு வந்த வாழ்வை வீடியோவாக்கி போட்டுக் காட்டித்தான் அந்த பள்ளிக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்களா, என்று நினைத்துக் கொண்டே, “இதனால் என்ன பலன், இந்தியா சந்திராயன் ராக்கெட் விடுவதற்கு இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து கணக்கு போட முடியுமா” என்று விளக்கம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே வேறு யாரோ அவரை கூப்பிட, விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]

–    வினவு செய்தியாளர்கள்.