privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்திண்ணியம் - வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்

திண்ணியம் – வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்

-

2003-ம் ஆண்டு 22,23 தேதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகமும் தோழமை புரட்சிகர இயக்கங்களும் இணைந்து தஞ்சை திருவள்ளுவர் திடலில் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா எனும் தாழ்த்தப்பட்ட மயானத் தொழிலாளி,  அவரது உறவினரான தலித் இளைஞர்களின் வாயில் கள்ளர் ஆதிக்க சாதிவெறியர்கள் மலத்தை திணித்த கொடூரத்தை விளக்குகிறார்.

திண்ணியம் மனுதர்மக் கொடுங்கோன்மையின் நீட்சி: இந்து மதமல்ல, இந்து மலம்!

ங்கள் ஊரில் கள்ளர் சாதியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவற்றில் வெட்டியான் வேலை செய்யும் நான்கு குடும்பங்களில் நானும் ஒருவன்.

திண்ணியம் கருப்பையாசென்ற கலைஞர் ஆட்சியின் பொழுது பஞ்சாயத்துத் தலைவராக இருந்த ராஜலட்சுமி சுப்பிரமணியனிடம் தொகுப்பு வீடு வேண்டுமென்று கோரி 2000 ரூபாய் பணம் கொடுத்தோம். பணம் கொடுத்து மூன்றாண்டுகளாகியும் அவர்கள் வீடும் கட்டித் தரவில்லை; கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் இல்லை. அரசிடமிருந்து வீடுகள் ஒதுக்கப்பட்டபொழுது, ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியன் ஒரு வீட்டிற்கு ரூ.8000/- எனச் சட்ட விரோதமாக விலை நிர்ணயம் செய்து வசூலித்தார். எங்களிடம் அவ்வளவு பணமில்லாததால், ஏற்கெனவே நாங்கள் கொடுத்த பணத்தையேனும் திருப்பிக் கொடுக்க வேண்டினோம். நாங்கள் எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அப்பணத்தைத் தராமல் அவர்கள் இழுத்தடித்து வந்தனர்.

அமைச்சர் நேருவிடம் மனுக்கொடுத்துப் பார்த்தோம். அதற்கும் பலனில்லை. ஒருமுறை, நான் சுப்பிரமணியனிடம் சென்று, “ஐயா, உங்கள் காலில் கும்பிட்டு வேண்டுமானால் விழுகிறேன், எங்கள் பணத்தைக் கொடுத்துவிடுங்கள்” எனக் காலில் கும்பிட்டு விழுந்தேன். பலமுறை இழுத்தடித்தபின், இறுதியாக ‘உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ’ என்றும் சொல்லி விட்டார்.

இச்சூழலில் எங்கள் ஊர்க் கோயில் திருவிழாவும் வந்தது. பறையர் இனத்தைச் சேர்ந்த ஒருவரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்த ஒருவரும் காப்புக் கட்டிக் கொள்வது வழக்கம். சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில், என் பெயர் வந்தது. நான் கள்ளர் சாதிப் பெரிய மனிதர்களிடம் சென்று, “நாங்க குடுத்த பணத்த ராஜலட்சுமி சுப்பிரமணியன் திருப்பிக் குடுக்கலன்னா காப்புக் கட்ட முடியாது. அந்த பணத்த கேட்டு வாங்கிக் குடுங்க” என்றேன். திருவிழா முடிந்த பின்னர் வரவு – செலவுக் கட்டத்தில் எங்கள் பிரச்சினையைப் பேசித் தீர்க்கலாம் எனச் சமாதானப்படுத்தினர். பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தோம். ஆனால், திருவிழா முடிந்து ஒரு வாரமாகியும் எவரும் வாய் திறக்கவில்லை.

திண்ணியம் சாதிக்கொடுமை

வேறு வழியின்றி மறுபடியும் மே 20, 2002 அன்று எங்கள் ஊரின் கள்ளர் சாதியினரிடம் சென்று முறையிட்டேன். “ஐயா, உங்களுக்கு அடிமைத் தொழில் செஞ்சு வாழற எங்ககிட்டயே பணத்த வாங்கிட்டு திருப்பித் தரமாட்டேங்கறீங்களே, அந்தப் பணத்த திருப்பித் தர்றவரைக்கும் நாங்க உங்க வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு வெட்டியான் வேல செய்ய மாட்டோமுங்க” என்று தெரிவித்தேன். தற்போதைய பஞ்சாயத்துத் தலைவரான வேதவல்லி காமராஜன் ‘அடுத்த திருவிழாவுக்குப் பெறவு பேசித் தீக்கலாம்’ என்றார். “ஐயா, ஏற்கெனவே ஒரு திருவிழா முடிஞ்சிருச்சு. இப்ப அடுத்த திருவிழாவும் முடிஞ்சிரும். எங்கப் பிரச்சினை மட்டும் தீரவே போறதில்லை. அதுனால, இனி நாங்க நாலு வெட்டியான் குடும்பமும் ஒங்களுக்கு வெட்டியான் வேல செய்ய மாட்டோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

நேரே வீட்டிற்குச் சென்று என் தப்பை (பறையை) எடுத்துக் கொண்டு, கள்ளர் தெருக்களுக்குப் போனேன். ராஜலட்சுமி சுப்பிரமணியனிடம் நாங்கள் கொடுத்த பணத்தை வாங்கித் தரக் கோரியும், அது வரை நாங்கள் அடிமைத் தொழில் செய்ய முடியாதெனவும் தப்படித்துக் கொண்டே அறிவித்தேன். என்னுடைய மைத்துனர் இராமசாமியும், பெரியம்மா பையன் முருகேசனும் உடன் வந்தார்கள். யாரும் எங்களை வழி மறித்து, ‘ஏன் தண்டோரா போடுகிறாய்’ என்றோ, ‘நாங்க கேட்டு வாங்கித் தர்றோம்’ என்றோ கூறவில்லை. காலை 11 மணியிளவில் நாங்கள் அனைத்துத் தெருவிலும் தப்படித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிச் சென்று விட்டோம்.

முன்னாள் உபதலைவர் சேட்டு என்பவரின் முன்னிலையில் தான் நாங்கள் ராஜலட்சுமியிடம் பணம் கொடுத்தோம். அன்று மாலை, சேட்டுக்கு இரண்டு பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்து, பணம் கொடுத்த போது தான் அங்கில்லையென்று சொல்லுமாறு சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். அந்த சேட்டு எங்களிடம் வந்து காலையில் தண்டோரா போட்டதற்குக் கூட்டம் கூட்டியிருப்பதாகவும், என்னை அழைத்து வரச் சொன்னதாகவும் கூறினான். நானும் அவனோடு சென்றேன்.

திண்ணியம் வன்கொடுமை

பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன்பாக நிழற்குடையில் ஆசிரியர் சுப்பிரமணியன், நாயுடு இனத்தைச் சேர்ந்த அசோக், இராசேந்திரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

சுப்ரமணியன் என்னை அருகில் வருமாறு கூப்பிட்டார். நானும் சென்றேன். “யார்ரா ஒன்னய தண்டோரா போடச் சொன்னது” எனக் கேட்டார். “யாரும் சொல்லலீங்க. எங்களுக்கு நாயம் கிடைக்கல. அதுனால நானாத்தான் தண்டோரா போட்டேன் என்றேன்.

“பறப்பயலுக்கு இம்புட்டுத் திமிரா என்னய எதுத்துக்கிட்டு நீ இந்த ஊர்ல வாழ்ந்துருவியா?” என்றபடியே, தன் கழுத்திலிருந்த துண்டை எடுத்து, என் குரல்வளையைச் சுற்றி இறுக்கத் தொடங்கினார். என்னக் கீழே தள்ளி செருப்புக் காலோடு என் குரல் வளையில் மிதிக்கத் தொடங்கினார்.

என் மனைவி கைக்குழந்தையை வைத்துக் கொண்டு என்னை அடிக்க வேண்டாமென்று என் மீது விழுந்து கெஞ்சினாள். இதனால், என் மனைவியும் குழந்தையும் கூட மிதிபட்டார்கள். இதனை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வாறு மிதிக்கப் பட்டதன் விளைவாக எனக்குச் சிறுநீரும் மலமும் வெளியேறி விட்டன.

“செருப்பால் அடிச்சசாதாண்டா பறப்பயலுக்கெல்லாம் புத்தி வரும். இனிமே எங்கள எதுத்துக்கிட்டு நீ எதுவும் செய்ய முடியாது. 25 குடும்பம் இருந்துகிட்டு நீ எங்கள எதுத்து தண்டோராவா போடுற?” என்றபடி மீண்டும் மீண்டும் அடித்தார். சுப்பிரமணியனின் சம்பந்தி தலையிட்டு, “இதற்கு மேல் அடித்தால் இவன் செத்துப் போயிருவான், பண்ண தப்புக்கு கால்ல கும்புட்டு வுழுந்து எந்திரிச்சுப் போ” என்றார். சுப்பிரமணியன் காலில் கும்பிட்டு விழுந்தேன். பிறகு நானும் என் மனைவியும் அங்கிருந்து அகன்றோம்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் மறுபடியும் இராஜலட்சுமியின் மகன் பாபுவும், முன்னாள் தலைவர் சோமசுந்தரமும் என்னை மறித்தனர். என்னோடு காலையில் வந்த இராமசாமியையும், முருகேசனையும் கூட்டிக் கொண்டு, மன்னிப்புக் கேட்டு மறுபடியும் ஊர் முழுக்கத் தண்டோரா போட வேண்டுமென்றனர்.

மறுநாள் காலை 12 மணிவரை நான் ஊரில்தான் இருந்தேன். அதன் பிறகு என் மாமனாரின் ஊர்த் திருவிழாவுக்காக நானும் என் மனைவியும கிளம்பிச் சென்றோம். உள்ளூர பயந்து போயிருந்த இராமசாமியும், முருகேசனும் ஆசிரியர் சுப்பிரமணியனிடம் மன்னிப்பு கேட்டு விடலாம், இரண்டு அடி கூட வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் அவரைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர்.

சுப்பிரமணியனுடைய பழைய வீடு மெயின்ரோட்டில் உள்ளது. சுப்பிரமணியனுடைய மனைவி ராஜலட்சுமியும், ஐந்தாறு சொந்தக்காரர்களுக்கு அங்கே இருந்திருக்கின்றனர். இவர்கள் உள்ளே சென்று மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர். தரையில் அமரச் சொல்லி என்னிடம் கேட்டதைப் போன்றே யார் தூண்டியதெனக் கேட்டிருக்கின்றனர். இவர்கள் “யார் சொல்லியும் போகலீங்க. அவன்தான் போனான். நாங்க கூடப் போனோம்” என்று உண்மையை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கின்றனர். உடனே பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு இராமசாமிக்குத் தொடையிலும், முருகேசனுக்கு கழுத்திலும் சூடு போட்டிருக்கின்றனர். சுப்பிரமணியனுடைய சித்தப்பா மகன் குடியரசு என்பவர் முருகேசனை எட்டி உதைத்துத் தரையில் மோதியதில், முருகேசன் பல் தெறித்துப் போனது. முருகேசனுக்கு உடல் முழுக்க ஐந்தாறு இடங்களில் சூடு வைத்திருக்கின்றனர். இவையனைத்தையும் வீட்டுக்கு வெளியே மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.

பிறகு, ஒரு கிழிந்த தப்பை வாங்கிக் கொடுத்து, மன்னிப்புக் கேட்டு ஊர் முழுக்க அடித்துச் செல்லச் சொல்லியிருக்கின்றார். உடனே, சுப்பிரமணியன், “நேத்திக்கு நல்லா கொட்டினீங்களாமே, இன்னிக்கு ஏண்டா சத்தமே வரல. நீங்க இப்படியெல்லாம் சொன்னா திருந்த மாட்டீங்க. எடுத்துக்கிட்டு வாங்கடா பீயை” என்று அவர் கத்த, அவருடைய சொந்தக்காரர்கள் ஒரு இரும்பு முறத்தில் மலத்தைக் கொண்டு வந்து வைத்திருக்கின்றனர். இராமசாமி வாயில் முருகேசனும், முருகேசன் வாயில் இராமசாமியும் மலத்தை ஊட்ட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றனர்.

“என்ன சார், இத்தனைப் பேர் சேர்ந்துகிட்டு அடிச்சீங்க. மிதிச்சீங்க. சூடு போட்டீங்க. இப்ப பீயத் திங்கச் சொல்றீங்களே” என்று கேட்டிருக்கின்றனர். மறுபடியும் இருவரது கைகளிலும் சூடு வைக்கவே, இதற்கு மேலும் தாமதித்தால் சூடு வைத்தே கொன்று போடுவார்கள் என்றெண்ணிய இருவரும் வேறு வழியின்றி, உலகில் அடிமைக் காலந்தொட்டு இதுவரையில் எங்கும் நடைபெறாத கொடுமையாக இராமசாமி வாயில் முருகேசனும், முருகேசன் வாயில் இராமசாமியும் மலத்தை அள்ளி வைத்திருக்கின்றனர்.

“பறப்பயலுகளுக்கு இம்புட்டுத் திமிரா. கள்ளன எதுத்துக்கிட்டு இனி நீங்க எதுவும் செய்ய முடியாது. நாளைக்கு காலையில எங்ககிட்ட வந்தாத்தான் ஒங்களுக்குச் சோறு. காலகாலத்திற்கும் பறப் பயலுக்கு இந்தப் புத்தி இருக்கணும்” என்று சொல்லியிருக்கிறார். அந்த கிழிந்த தப்பிற்கு தலைக்கு 75 ரூபாய் பணமும் கேட்டிருக்கின்றனர். இருவரும் தங்களிடம் இருந்த 100 ரூபாயைக் கொடுத்துவிட்டு, சுப்பிரமணியன் காலில் விழுந்து கும்பிட்டு வீடு திரும்பியிருக்கின்றனர். இதைக் கேள்விப்பட்ட நானும் ஊருக்குத் திரும்பினேன்.

காயங்களுக்கு நாட்டு மருந்தைப் போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு மேல் வெளியுலகுக்குத் தெரிவிக்காமலே இருந்தோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் எங்கள் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைத் துவக்கினோம். நானும் அவ்வமைப்பில் உறுப்பினராக இருக்கிறேன். எங்கள் ஊரின் மாணவர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரும், மனித உரிமை அமைப்புகளும் எங்களைத் தொடர்பு கொண்டனர். அவர்கள் அளித்த தைரியத்தின் விளைவாக சுப்பிரமணியன் மீது வழக்கு தொடர்ந்தோம்.

அவனை மாவட்டகலெக்டர் குண்டர் சட்டத்தில் போட்டார். அவன் மீது ஏற்கெனவே ஆறு வழக்குகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் அவன் மீது குண்டர் சட்டம் அமலாக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவாக அவன் வெளியில் வந்தவுடன் கள்ளர் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களுக்கு வேலையின்றி செய்து விட்டனர். நாங்கள் இன்று வாழவழியின்றி வறுமையில் வாடுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றுபட வேண்டும். நாம் சாகத்தான் போகிறோம், மீண்டும் பிறக்கப் போவதில்லை. எனவே எத்தகை வன்கொடுமை நடந்தாலும், உடனடியாக அதனை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டும்”
____________________________

புதிய கலாச்சாரம். மார்ச் 2003
____________________________