privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காநூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி

-

“அமெரிக்கா: ஜனநாயகக் கட்டுக்கதையும் கொள்ளையடிக்கும் வங்கிகளின் ஆட்சியும்” – ரிச்சர்ட் பேக்கர் என்பவர் எழுதிய நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழாக்கம் நிழல்வண்ணன்.

நூலின் சில கருத்துக்களை பார்ப்போம்.

ரிச்சர்ட் பேக்கர்
ரிச்சர்ட் பேக்கர்

வங்கி என்றால் என்ன? “ஒரு வங்கியை தோற்றுவிப்பதை விட ஒரு வங்கியில் கொள்ளையடிப்பது ஒன்றும் பெரிய குற்றமல்ல” எனும் பெட்ரோல்ட் பிரெக்ட்டின் மேற்கோளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர்.

2008 பொருளாதார நெருக்கடியின் போது அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 42 இலட்சம்  கோடி ரூபாயை வங்கிகளை மீட்பதற்கு செலவிட்டது. இந்த பணத்தை அந்த வங்கிகள் என்ன செய்தார்கள் என்று கேட்ட போதெல்லாம் அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று வங்கி முதலாளிகள் மறுத்திருக்கிறார்கள். ஆனால் வாங்கிய பணத்தை இந்த வங்கிகள் தமது அதிகார வர்க்கத்திற்கு அள்ளிக் கொடுத்திருக்கின்றன. 5000 பேருக்கு தலா பத்து இலட்சம் டாலர் ஊக்க ஊதியம் என்ற பெயரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இது ஏதோ முதலாளிகளின் செருக்கா என்றால் இல்லை. அவர்கள்தான் அமெரிக்க அரசை கட்டுப்படுத்துகிறார்கள். அமெரிக்க வங்கிகளின் மொத்த சொத்துக்களில் 60 சதவீதம் பத்து பெரிய வங்கிகளிடம் இருக்கிறது. நிதிச்சாதனங்களின் (derivatives) வர்த்தக மதிப்புகளில் 95% ஐந்து வங்கிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. 5 பெரிய வங்கிகள் தலா 1000 கோடி டாலர்களுக்கும் மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்கின்றன.

“அந்தக் காலகட்டத்தின் போது பெரும் தொழில் நிறுவனங்களுக்கும், வால் ஸ்ட்ரீட்டுக்கும், வங்கியாளர்களுக்கும் ஒரு உயர்ந்த வகை அடியாளாகத் தான் எனது பெரும்பாலான நேரங்களைக் கழித்தேன். சுருக்கமாகச் சொன்னால், நான் முதலாளித்துவத்திற்கு ஒரு எடுபிடியாகவும் அடியாளாகவும் இருந்தேன்” என்கிறார் 1935-ல் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ஸ்மெட்லி பட்லர். எனில் இன்றைக்கு அதன் பரிமாணத்தை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்? இதன் பொருட்டே 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 900-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்கள் இன்று இருக்கின்றன.

ஆங்கில நூல்
ஆங்கில நூலின் அட்டை

இப்படி நிதியாதிக்க கும்பல்களின் பிடியில் சிக்கியிருக்கும் அமெரிக்க மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? 2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 187 லட்சம் காலி குடியிருப்புகள் இருந்தன. அந்த ஆண்டில் மட்டும் 38 லட்சம் வீடுகள் கடனுக்காக கைப்பற்றப்பட்டன. இவை மீண்டும் சந்தைக்கு வருகின்றன. காலி குடியிருப்புகளின் எண்ணிக்கையோ மீண்டும் அதிகரிக்கின்றன. எனில் காலி செய்த மக்கள் எங்கே எப்படி வாழ்வார்கள்? இதுதான் அமெரிக்கா. இதுதான முதலாளித்துவம்.

“அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை என்பது பொது மக்களையும், வால்ட் ஸ்ட்ரீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது” என சி பி எஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. ஆனால் இது குற்றமாக ஊடகங்களுக்கோ, கட்சிகளுக்கோ தோன்றவில்லை. இதுவும்தான் அமெரிக்கா. அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முதலாளித்துவத்தின் சேவைக்காகவே அல்லும் பகலும் செயல்படுகின்றன.

2008 வீட்டுக்கடன் குமிழ் நெருக்கடியை முன்வைத்து அமெரிக்க சமூகம், பொருளாதாரத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தினை அளிக்கிறது இச்சிறு நூல். சோசலிசமே மாற்று என்பது ஏதோ ஒரு கொள்கை மட்டுமல்ல முதலாளித்துவத்தின் அழிவிலிருந்து பிறந்தே ஆக வேண்டிய மாமருந்து என்பதையும் நிறுவுகிறது. அவசியம் வாங்கிப் படியுங்கள்.

நூல்: அமெரிக்கா – ஜனநாயக மோசடியும் வங்கிகளின் கொள்ளை ஆட்சியும்.
ஆசிரியர்: ரிச்சர்ட் பேக்கர்
தமிழாக்கம்: நிழல்வண்ணன்.
பக்கம்: 48, விலை: ரூ.25
முதல்பதிப்பு – டிசம்பர், 2013

வெளியீடு:
விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,

தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை, சென்னை – 2
044 – 28412367