இரண்டு நாட்களாகவே நாளிதழ்களை திறந்தால் சண்டமாருதம் வீசுகிறது. “இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை மோடியும் அவரது அமைச்சர்களும் வறுத்து எடுத்து விடுவார்கள்” என்று அனைத்து பத்திரிகைகளும் கிட்டத்தட்ட ஒரே குரலில் எழுதி வருகின்றன. காமடிக்கென்றே விதிக்கப்பட்ட கைப்புள்ளையை ஆக்சன் ஹீரோவாக காட்ட கொஞ்ச நஞ்சம் லாஜிக்காவது வேண்டுமே என்ற கவலை கூட நடுப்பக்க கருத்து கந்தசாமிகளுக்கு இல்லை. தேசபக்தியில் கூடவா லாஜிக் பார்ப்பது என்றொரு லாஜிக்கை அவர்கள் முன்வைக்கலாம்.

“அமெரிக்கா, இந்தியாவிடமிருந்து பெற விரும்பும் சலுகைகளை மோடி அரசு சும்மா கொடுத்து விடப் போவதில்லை; மோடி அரசு, மன்மோகன் சிங் அரசு போல இல்லை; மிகவும் கடுமையாக பேரம் பேசுவார்கள்”, என்பது ஊடகங்களின் ஏகோபித்த ஏகாந்த கருத்தாக இருக்கிறது.
“உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு” என்கிறது ஒரு தினமணி செய்தித் தலைப்பு, “ஜான் கெர்ரி இந்திய பயணம், இந்தியாவை சமரசப்படுத்தும் அமெரிக்க முயற்சி வெற்றி பெறுமா?” என்கிறது தினகரன். Indo-US dialogue: Sushma Swaraj talks tough with John Kerry on spying, gives some friendly advice என்றது எகனாமிக் டைம்ஸ்.
‘மோடி, பா.ஜ.க மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் மனதை நோகடித்த அமெரிக்கா சரியாக வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறது’ என்று ரூ 47-க்குள் காலம் தள்ளும் (வறுமைக் கோட்டுக்கு கீழ்) 27 கோடி இந்தியர்களின் விதியைத் தீர்மானிப்பதோடு, அந்த விதியிலிருந்து தப்பி விட்ட எஞ்சிய இந்தியர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். வீடியோ கேம் வர்க்கமென்றாலும் சண்டை சண்டை தானே?
மோடி அரசு ‘விசுவரூப’மெடுக்க காரணங்களா இல்லை?
முதலாவதாக 2005-ம் ஆண்டு மோடி அமெரிக்கா போக திட்டமிட்ட போது அவருக்கு விசா மறுக்கப்பட்டது. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தது வரை குஜராத் மாநிலத்தை அமெரிக்க தூதரகம் அரசியல் ரீதியாக புறக்கணித்து வந்திருக்கிறது. இந்த சோகத்தை பாஜக மறப்பது கடினம்.
இரண்டாவதாக, பா.ஜ.க உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து மோடி அரசு கடுப்பில் உள்ளது. இதை தடுக்க முடியாது என்றாலும் கடுப்பு கடுப்பு தானே?
மூன்றாவதாக, கடந்த டிசம்பர் மாதம் இந்திய தூதரக அலுவலர் தேவயானி கோப்ரகடேவை கைது செய்தது குறித்து இந்திய உணர்வுகள் புண்பட்டிருக்கின்றன. இந்த புண்படலில் பாஜக மட்டுமல்ல காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் என்று அநேக தேசபக்தி மனங்கள் வாடியது உண்மை.
இந்த அவமானங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு சும்மா இருந்து விடுமா இந்திய அரசு? இருதரப்பு, சர்வதேச உறவுகளில் அமெரிக்காவின் அழுத்தங்களை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டாமா இந்தியா? என்று ஊடகங்கள் கைப்புள்ளையை கம்புடன் அடிக்க அழைக்கின்றன.
வளரும் நாடுகள் உணவு மானியம் அளிப்பது பற்றிய ஒப்பந்தம் ஏற்படாமல், சுங்க நடைமுறைகளை தளர்த்துவதற்கான உலக வர்த்தகக் கழக உடன்பாட்டில் கையெழுத்திட மாட்டேன் என்று இந்தியா உறுதிபட கூறியிருப்பதோடு, இதன் மூலம் சுமார் $1 லட்சம் கோடி (ரூ 60 லட்சம் கோடி) மதிப்பிலான உலக வர்த்தகத்தையே இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கிறதாம்.
மேலும், “அணு சக்தி, மருந்துத் துறை, சில்லறை வணிகம், நிதித் துறை, ஆயுத உற்பத்தி போன்ற துறைகளில் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப இந்தியா தனது சட்டங்களையும் நடைமுறைகளையும் வளைக்க தயாராக இல்லை” என்று எழுதுகிறார் தி ஹிந்து நாளிதழிலிருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன்.

“2013-ம் ஆண்டு அமெரிக்க உளவு நடவடிக்கைகள் பற்றி எட்வர்ட் ஸ்னோடன் தகவல்களை வெளியிட்ட போது மன்மோகன் சிங் எதிர்வினை மிகவும் மென்மையாக இருந்தது, நரேந்திர மோடி அரசிடம் அத்தகைய புரிதலை அமெரிக்கா எதிர்பார்க்க முடியாது” என்கிறார் அவர்.
“இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு வாஷிங்டனில் உள்ள அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையத்தில் ஜான் கெர்ரி உரையாற்றும் போது இந்தியாவுடனான உறவை தவிர்க்க முடியாத கூட்டுறவு என்று பல முறை குறிப்பிட்டாலும், அது இந்தியாவுடனான உறவை சீர்செய்ய எப்படி உதவும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார் சித்தார்த் வரதராஜன்.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய – அமெரிக்கஇரு தரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்துக்கும், உலகின் மிக வலிமையான ஜனநாயகத்துக்கும் இடையேயான இந்த உறவை வலுப்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் தேவை என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
கெர்ரி தன் பங்குக்கு எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கருடன் இணைந்து இந்திய அமெரிக்க உறவு குறித்து ஒரு தலையங்கக் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இந்தியாவின் உள்கட்டமைப்பு, இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது, இந்தியாவில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது, எரிசக்தித் துறை போன்றவற்றில் அமெரிக்கா இந்தியாவுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று விவரித்திருக்கிறார். குச்சி ஐசுக்கு உருகாதா குழந்தையும் இல்லை. இந்திய சந்தையை விரும்பாத ஒரு மேற்குலக நாடும் இல்லை.
உறவில் இருக்கும் பிரச்சனைகளை சமாளித்து இரு தரப்புக்கும் நலன் பயக்கும் உறவை வளர்த்து செல்வதற்கு தனது தனிப்பட்ட திறமைகளையும், மோடி மற்றும் சுஷ்மா சுவராஜுடனான் தனிப்பட்ட நல்லிணக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக கெர்ரி கூறியிருக்கிறார். கட்டதுரையின் கடமை உணர்வில் உண்மை இல்லாமல் இல்லை.
ஜான் கெர்ரிக்கும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.கவுக்கும் இடையே தனிப்பட்ட நல்லிணக்கம் உருவாக்க பல பொது அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜான் கெர்ரி போஸ்டன் பிராமின்கள் என்று அழைக்கப்படும் அமெரிக்க மேட்டுக் குடி குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். அவரது அம்மா வழி தாத்தா, 19-ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் செய்து பெரும் பணம் ஈட்டியவர். அவரது கொள்ளுத் தாத்தா ஸ்காட்லாந்திலிருந்து முதன்முதலில் அமெரிக்காவில் குடியேறிய போது பாதிரியாராக (பூசாரி) வேலை செய்வதற்கு உரிமம் பெற்றவர். இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பார்ப்பன-பனியா கட்சியுடன் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வது சிரமமாகவா இருக்கப் போகிறது? ஒரு இந்திய பார்ப்பன நபரை ஒரு அமெரிக்க ராஜதந்திரி பிராமணன் விரும்பாமலா இருப்பான்?
கெர்ரிக்கு பாரம்பரிய குடும்பப் பெருமை மட்டும் இருக்கவில்லை. அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மிகப்பெரிய பணக்காரர் கெர்ரிதான். அவரது தாயின் குடும்பமான ஃபோர்ப்ஸ் குடும்ப உறுப்பினர்களின் 4 அறக்கட்டளைகள் கெர்ரியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இதுவும் போதாது என்று பா.ஜ.கவின் மனதுக்கு அணுக்கமான மத விஷயத்திலும் கெர்ரி ஒத்து போகிறார். கெர்ரி ஒரு தீவிர கத்தோலிக்கர். அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது பிரச்சாரங்களில் ஜெப மாலை, பிரார்த்தனை புத்தகம், பயணத்துக்கான பைபிள், தேவதையான செயின்ட் கிறிஸ்டபர் மெடல் ஆகியவற்றை ஏந்தியபடியே சென்றிருக்கிறார். மோடியோ வாரணாசியில் காவி எழுச்சியில்தான் எம்பியே ஆனார்.
கெர்ரிக்கும் இந்துத்துவ பரிவாரத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் இவ்வளவு இருக்க, அவருக்கும் சுஷ்மா சுவராஜூக்கும் அரசியல் ரீதியாக சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
ஜான் கெர்ரி, 2004 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அப்போதைய அதிபர் இளைய புஷ் என்ற இம்சை அரசனிடம் தோல்வியடைந்தவர். சுஷ்மா சுவராஜூம் அத்வானி-வாஜ்பாய்க்கு பிறகு தான் பிரதமர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று முட்டி மோதி இந்தியாவின் இம்சை அரசன் மோடியிடம் தோல்வியடைந்தவர். இருவருமே தமக்கு வாய்க்காத பதவியில் தமது கட்சிக்காரர் உட்கார்ந்திருக்க, அவர்களது வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்படுகின்றனர்.
இப்போது இந்தியா வந்திருக்கும் ஜான் கெர்ரி, சுஷ்மா சுவராஜுடன் இந்திய -அமெரிக்க நல்லுறவு குறித்து, ராணுவ உறவு, பாதுகாப்பு, எரிசக்தி போன்ற விவகாரங்கள் அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் முடிவில் “இந்தியர்களை அமெரிக்கா உளவு பார்த்தது குறித்து பேசினீர்களா” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, “இது தொடர்பாக இந்திய மக்கள் மிகவும் மனம் புண்பட்டு போயிருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகள் என்றால், நண்பர்களை எப்படி ஒட்டுக் கேட்கலாம்” என்று கண்டித்ததாக சுஷ்மா சுவராஜ் சொல்லியிருக்கிறார். கெர்ரியோ “எந்த உளவுத் துறையும் தமது உளவு நடவடிக்கைகளை வெளியில் பேசுவதில்லை. ஒபாமா, இது குறித்து வெளிப்படையாகவும், திறந்த மனதோடும் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளார்” என்று சொல்லி, ‘உங்களுக்கெல்லாம் இந்த பதில் போதும்’ என்று கேள்வியை தட்டிக் கழித்து விட்டார். அல்லது கெர்ரி பதிலுக்கு நிதின் கட்காரியை ஒட்டுக்கேட்டது யாரு என்று புன்சிரிப்புடன் கேட்டிருந்தால் அம்மையார் சுஷ்மாவுக்கு ரொம்பவும் தர்மசங்கடமாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்கர்களிடம் ஒரு டேபிள் மேனர்ஸ் இல்லாமல் இல்லை.
என்.டி.டி.வியில் பிரணாய் ராய்க்கு அளித்த பேட்டியில், “மோடிக்கு விசா மறுத்தது முந்தைய அரசு, இப்போது நாங்கள் வேறு அரசு” என்று முந்தைய காங்கிரசு அரசு மீது பழி போடும் பா.ஜ.க கட்சியின் உத்தியையே அவிழ்த்து விட்டார்,கெர்ரி. அப்படியானால், “முந்தைய அரசு செய்தது தவறு என்று சொல்கிறீர்களா” என்று கேட்டதும், “நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை, எதிர்கால உறவைத்தான் கட்டமைக்க விரும்புகிறேன்” என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கட்டினார். இல்லை பேசித்தான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திருந்தால் கடந்த காலத்தில் அது தேவையாக இருக்கலாம், நிகழ்காலத்தில் அது தேவையற்றதாக இருக்கலாமென தேவை-அளிப்பு குறித்த பொருளாதார விதியின் மூலம கெர்ரி பட்டையை கிளப்பலாம்.

தனக்கு அமெரிக்க அரசு விசா தராததை எல்லாம் மோடி மனதில் வைத்துக் கொள்ள மாட்டார். இல்லை மனதில் வைத்திருந்தால்தான் என்ன என்று யாரும் கேட்டால் மோடியிடம் மட்டுமல்ல யாரிடமும் பதில் இல்லை. எதிர்த்துப் பேச முடியாத ஆளிடம் கோபத்தை காட்டும் முறை வேறுதானே? பிரச்சார கூட்டங்களில் திட்டித் தீர்த்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை அதானியின் நலனுக்காக தனது பதவி ஏற்பு விழாவுக்கே அழைத்து விருந்து வைத்த, பெருந்தன்மையாளர் அவர். இப்போது ஒரு டாடா அல்லது அம்பானியின் நலனுக்காக, குஜராத் மற்றும் இந்துத்துவ சைவ உணவு பாரம்பரியத்தை கைவிட்டு அமெரிக்காவுக்கு கறி விருந்து கூட வைக்கத் தயாராகத்தான் இருப்பார். அதில் மாட்டுக்கறியும் கண்டிப்பாக உண்டு. தரகு முதலாளிகளின் கமிஷனும், கோமாதாவின் புனிதமும் வேறு வேறு அல்ல என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய சித்தாந்தம்தானே?
மோடி அடுத்த மாதம் அமெரிக்கா போய் அதிபர் ஒபாமாவை சந்திக்க உள்ளார். அதற்குள் அமெரிக்காவின் கோரிக்கைகள் அனைத்தும் மோடி அரசால் வெளிப்படையாகவும், திரைமறைவிலும் நிறைவேற்றி வைக்கப்படும் என்பதற்கான தடயங்கள் இப்போது மட்டுமல்ல பா.ஜ.கவின் மரபணுவிலேயே இருக்கின்றன.
இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உலக வர்த்தகக் கழகம் நிர்ப்பந்தித்து வந்த வர்த்தக சுதந்திரத்துக்கு முழு அங்கீகாரம் அளித்து கட்டுப்பாடற்ற இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. இறக்குமதிகள் மீதான உபரிவரி நீக்கம், இறக்குமதி வரியை 20%-க்கு மிகாமல் கட்டுப்பாடு, சுங்கத் தீர்வை குறைப்பு மூலம் அன்னிய இறக்குமதிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது.
சிறுதொழில் பட்டியலில் இருந்த காலணிகள், விளையாட்டுப் பொம்மைகள் உள்ளிட்ட 14 தொழில்களை அப்பட்டியலிலிருந்து நீக்கி பாட்டா, அடிடாஸ், ரீபோக், நிக் முதலான அந்நிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது.
பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணய முறை கலைக்கப்பட்டது. யூரியா மீதான விலைக் கட்டுப்பாடு தளர்த்தப்படுதல், சர்க்கரையில் ஊக பேரம் புகுத்தப்படுதல். 49% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் 100% வரை முதலீடு என்று அன்னிய நிறுவனங்களுக்கு இந்தியாவை திறந்து விட்டவர்கள் பா.ஜ.கவினர்.
அன்று பா.ஜ.க அரசு போட்ட அடித்தளத்தை அவர்களை விட பணிவாக முன்னெடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் ஐ.எம்.எஃப் ஊழியர் மன்மோகன் சிங்.
அமெரிக்காவுடன் இந்தியாவை மேலும் மேலும் அடிமைப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசால் தொடங்கப்பட்ட இந்திய அமெரிக்க நல்லுறவுக்கான வருடாந்திர பேச்சுவார்த்தை பரஸ்பர நலனுக்கான ராணுவ ஒத்துழைப்பு, ஆற்றல்- சுற்றுச் சூழல் மாறுபடுதல், கல்வி வளர்ச்சி, பொருளாதாரம்-வர்த்தகம், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய 5 தூண்கள் மீது கவனம் செலுத்துகிறது. அந்த வரிசையின் 5-வது சுற்றுதான் இப்போது கெர்ரி, சுஷ்மா இடையே நடந்திருக்கிறது. ஆக இந்த சந்திப்பே பழைய அஜெண்டாவின் தொடர்ச்சி என்றால் இப்போதைய மனக்குறைகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?
இவற்றின் விளைவாக 2000-த்திற்குப் பிறகு இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் 5 மடங்கு அதிகரித்து $9,600 கோடியை தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்திய முதலீடு $30 கோடியிலிருந்து $900 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க முதலீடு $240 கோடியிலிருந்து $2,800 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் செயல்படும் முதல் 15 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 அமெரிக்க நிறுவனங்கள். 6 அமெரிக்க நிறுவனங்கள் $200-$300 கோடி வருமானத்தை ஈட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து $1000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியிருக்கிறது. அமெரிக்கா ரசியாவை முந்தி இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்யும் நாடுகளில் முதல் இடம் பிடித்துள்ளது.
தனக்கு விசா தர மறுத்ததற்காக மோடியும் அமெரிக்காவை ஒதுக்கி விடவில்லை. தனது இமேஜ் சந்தைப்படுத்தலுக்கு ஆப்கோ வேர்ல்ட் வைடு என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தார். குஜராத் முழுவதும் சூரிய மின்சக்தி உற்பத்தி அமெரிக்க இறக்குமதியை நம்பியே இருக்கிறது. குறிப்பாக ஆசியாவிலேயே மிகப் பெரியதென்று கூறப்படும் 600 மெகாவாட் சூரிய ஒளிப் பூங்காவை சன் எடிசன் என்ற அமெரிக்க நிறுவனம்தான் குஜராத்தில் நிறுவி இயக்குகிறது. குஜராத்தில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்க அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு $1 பில்லியன் செலவழிக்கிறது. அதை தனது மண்டல உற்பத்தி மையமாக மாற்றவிருக்கிறது.
எனவே மோடி தனது கட்சிக்காரர்களுக்கும் இந்திய மக்களுக்கும் வேண்டுமானால் டெரரிஸ்டாக இருக்கலாம், அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு உள்ளூர் புரோக்கர்தான். என்றாலும் புரோக்கர்களுக்கு கோபம் வரும் என்பதையோ, வீரம் உண்டு என்பதையோ நாம் மறுக்க வேண்டியதில்லையே!
– செழியன்
மேலும் படிக்க
- Why John Kerry’s Great Expectations Won’t Be Met By India
- India’s economic strength and business environment are of strategic importance to the US
- Different Government Turned Down Modi’s Visa, We Will Welcome Him, John Kerry Tells NDTV: Full Transcript
- John Kerry’s passage to India. Why is he going now?
- Indo-US dialogue: Sushma Swaraj talks tough with John Kerry on spying, gives some friendly advice
- US chasing India opportunity
- உளவு பார்ப்பதை ஏற்க முடியாது: அமெரிக்காவிடம் இந்தியா கண்டிப்பு