privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

-

ஏழை பணக்காரன் 3.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

கடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.

சிபுலால்
சிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா?

அது என்ன குடும்ப அலுவலகம் என்று கேட்கிறீர்களா? கடன் தவணை கட்டி, வரிச் சலுகை பெற இன்சூரன்ஸ் பாலிசி போட்டு, சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து, வருடக் கடைசியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு கணக்காளரை அணுகுவதுதான்  மாதச் சம்பளம் வாங்குவோரின் நடைமுறை.

ஆனால் ஒருவருக்கே பல நூறு வீடுகள், சில நூறு கோடிகள் சொத்திருந்தால் அவற்றை நிர்வாகம் செய்வது உடமையாளரால் மட்டும் சாத்தியமில்லை. சிபுலால் போன்ற பெரும் பணக்கார குடும்பங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து, முதலீடுகளை நிர்வாகம் செய்ய இருக்கும் தனிச்சிறப்பான நிறுவனங்களைத்தான் குடும்ப அலுவலகம் என்கிறார்கள். இந்தியாவில் சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

சிபுலால் குடும்ப அலுவலக நிறுவனத்தின் நிர்வாகியாக பெங்களூரு ஐ.ஐ.எம்மிலும் பிட்ஸ் பிலானியிலும் படித்த செந்தில் குமார் பணிபுரிகிறார். குடும்ப நிர்வாகம் என்பதால் காமோ சோமோ வென்று நிர்வாகம் பார்க்கும் வேலை இல்லை இது. அதனால்தான் உயர்தர மேலாண்மை அறிவுப் புலிகள் இங்கே தேவைப்படுகின்றன.

ஏழை பணக்காரன்“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுதான் உடனடி வருமானம் தருவதோடு, எதிர்காலத்தில் முதலீட்டின் மதிப்பை பெருக்குவதற்கும் உத்தரவாதமானது” என்கிறார் செந்தில் குமார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே தலைமை வகித்து நடத்திய சிபுலால் கூட, ‘நாலு வீட்டை வாங்கிப் போட்டால் பணத்துக்கு உத்தரவாதம்’ என்ற முறையில்தான் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். என்ன, சில லட்சம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கம் உள்ளூரில் வீடு வாங்கினால் பல கோடி குவித்திருக்கும் இவர் சியாட்டில், பெர்லின் என்று சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் தனது பணத்தை இறக்கியிருக்கிறார். இன்றைய சந்தை மதிப்பில் இவருக்கு சொந்தமான வீடுகளின் மொத்த மதிப்பு $10 கோடி (ரூ 600 கோடி)-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சிபுலால் அளித்த பேட்டி ஒன்றில், அவருக்கு சொந்தமான 700 வீடுகள் பற்றி கேட்டதற்கு, “என்னுடைய பணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதியான அடித்தளத்தோடு, போதுமான லாபம் வருவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ரியல் எஸ்டேட் முதலீடு ஒரு முக்கியமான வகை என்று சொன்னார்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.

சுருதி சிபுலால்
சுருதி சிபுலால்: அப்பா ஐ.டி துறை தொழிலதிபர், மகள் சுற்றுலாத் தொழில் தொழிலதிபர்…

மற்றபடி தனது சொத்தை தொழிற்துறையிலோ, இல்லை தனது துறையிலோ முதலீடாக்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமே என்று முதலாளித்துவ கனவின் ஆரம்பத்தில் இருக்கும் கோயிந்துகள் நினைக்கலாம். முதலாளித்துவமே வேலை வாய்ப்பு கொடுப்பதில் இல்லை, வேலை செய்வோரின் உழைப்பைச் சுரண்டுவதில்தான் இருக்கிறது என்பதால் சிபுலால் ‘சாமர்த்திய’மாகத்தான் சொத்து பெருக்குகிறார்.

இந்திய அரசிடம் வரிச் சலுகை பெற்று, மாநில அரசுகளிடம் மலிவு விலையில் நிலம் பெற்று, படித்த இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு வேலை செய்ய வைத்து குவித்த பணத்தை சிபுலால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துகிறார். ஐ.டி துறை ஊழியர்களோ இந்த சூதாட்டத்தில் தம்மையும் சேர்த்து விளையாடுவது தெரியாமல் வாழ்க்கையால் விரட்டப்படுகிறார்கள். இணையத்தில் கே.ஆர்.அதியமான் முதல் பிரதமர் அலுவலகத்தில் மோடி வரை செய்யும் வளர்ச்சி குறித்த பஜனையின் ஒரு முகம் இது.

சிபுலால் 1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 7 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர். அவர், அவரது மனைவி குமாரி, மகள் சுருதி, மகன் சிரேயஸ் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2.2% பங்குகள் சொந்தமாக உள்ளன. இன்ஃபோசிஸ்சின் மொத்த சந்தை மதிப்பு $3000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம்) என்பதை வைத்துப் பார்க்கும் போது சிபுலால் குடும்பத்துக்கு சொந்தமான அதன் 2.2% பங்குகளின் மதிப்பு ரூ 3,900 கோடி.

ஏழை பணக்காரன் 2கொலம்பியா பிசினஸ் கல்லூரியில் மேலாண்மை பட்டம் படித்து மெரில் லிஞ்சில் வேலை அனுபவம் உடைய சிபுலாலின் மகள் சுருதி இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் முதலீடுகள் மூலம் பணத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவின் யூபி சிட்டியில் கேப்பர்பெரி, ஃபாவா உணவகங்கள் உள்ளிட்டு பல மேட்டுக்குடி உணவகங்களை நடத்தி வருகிறார். மாதச் கடைசியில் கையேந்தி பவன்களை நம்பி வாழும் நடுத்தர வர்க்க ஐ.டி ஊழியர்களின் கனவுகளை முதலீடாக்கி சுருதி, சுருதி சுத்தமாக ரோட்டரி கிளப் கனவான்களுக்கான உணவகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.

தமாரா கூர்க் என்ற 170 ஏக்கர் காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் விரிந்திருக்கும் ஆடம்பர தங்குமிடம் அவரது செல்ல திட்டம். தமாரா நிறுவனம் திருவனந்தபுரத்தில் தமாரா 100 அறைகளைக் கொண்ட விடுதியை கட்டி வருகிறது. கொடைக்கானலில் ஆடம்பர சுற்றுலா தங்குமிடம் உருவாக்கும் திட்டம் ஒன்று ஒப்புதல்களுக்கு காத்திருக்கிறது. இவையெல்லாம் மேட்டுக்குடி சீமான் – சீமாட்டிகளை வசதியுடன் தாலாட்டி வாழவைக்கும் புண்ணிய தலங்கள். எனவே தட்சணையும் அதிகம்.

தாமரா, கூர்க் இல்லம்
கர்நாடகா கூர்க் பகுதியில் மேட்டுக்குடி கனவான்களுக்காக சுருதி சிபுலால் கட்டியிருக்கும் கானக மாளிகை!

இத்தகைய பெரும் அளவிலான முதலீடுகளுக்கு ஒரு அடிக்குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது சிபுலால் குடும்பம். சிபுலாலின் அப்பா, அம்மா பெயரிலான சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை, 2004-ம் பதிவு செய்யப்பட்ட அத்வைத் அறக்கட்டளை மூலம் வசதி குறைந்த ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் மேல் படிப்புக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது சிபுலால் குடும்பம். இந்த பிச்சை உதவிக்கும், அந்த பெருந்தொழிலுக்கும் உள்ள முதலீடு மலைக்கும் மடுவுக்குமானது என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் மடுவின் ஒளியில் மலைகள் மறைந்து கொள்கின்றன.

தனிநபரிடம் குவியும் இத்தகைய செல்வம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகையாகவோ, சிபுலாலின் 700 அபார்ட்மென்டுகளாகவோ, ஆடம்பர சொகுசு கார்களாகவோ உருவம் எடுப்பதோடு, அவர்களது செல்வத்துக்கு அடிப்படையான உழைப்பை வழங்கும் கோடிக்கணக்கான மக்கள் மீதான சுரண்டலை அவை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்கின்றன. 21-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இத்தகைய திமிங்கலங்களை மட்டும்தான் உருவாக்குகின்றன.

ஆனால் இந்த திமங்கலைத்தான் “உழைத்து முன்னேறிய உத்தமர்கள்” என்று ஊடகங்கள் வாழ்த்து மழை பொழிகின்றன.

–    அப்துல்  

மேலும் படிக்க: