privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபாலஸ்தீனம் - உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

-

பாலஸ்தீனம் – உக்ரைன்: மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாத அரசு அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்து நடந்துவரும் இப்போரில் இதுவரை ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசா பிராந்தியத்தின் தெருக்கள் எங்கும் ரத்த ஆறு ஓடுகிறது. ஆயிரத்துக்கும் மேலான தடவைகளில் டன் கணக்கில் பாஸ்பரஸ் கொத்துக் குண்டுகளைக் கொண்டு வான் தாக்குதலை நடத்தி மசூதிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் அனைத்தின் மீதும் பயங்கரவாதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. இடிபாடுகளின் நடுவே வெள்ளைக் கொடி ஏந்தி நின்ற ஒரு பாலஸ்தீன குடும்பத்தினர் மீதும், ஐ.நா. மன்றம் ஏற்படுத்தியுள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீதும், தொடக்கப்பள்ளியில் தஞ்சமடைந்த மூவாயிரத்துக்கும் அதிகமானோர் மீதும் காட்டுமிராண்டித்தனமாக வான் தாக்குதலையும் பீரங்கித் தாக்குதலையும் நடத்தி மனித உணர்வற்ற மிகக் கொடிய காட்டுமிராண்டிகள் தாங்கள்தான் என்பதை இஸ்ரேலிய இனவெறி பாசிச பயங்கரவாதிகள் உலகுக்கு அறிவித்து வருகின்றனர்.

பாலஸ்தீனக் குழந்தைகள்
இஸ்ரேலிய பயங்கரவாதம் : காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்ட பச்சசிளம் பாலஸ்தீனக் குழந்தைகள்

பாலஸ்தீனத்தின் மேலைக்கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஜூன் மாதத்தில் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்திச் சென்று கொன்றதற்குப் பதிலடிதான் இத்தாக்குதல் என்று இஸ்ரேல் நியாயவாதம் பேசுகிறது. ஆனால் ஹமாஸ் அமைப்போ இதர பாலஸ்தீன அமைப்புகளோ தாங்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடவில்லை என்றே மறுத்து வருகின்றனர். இருப்பினும், மூன்று இஸ்ரேலியர்களைக் கொன்றுவிட்டார்கள் என்ற நொண்டிச்சாக்கை வைத்து ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டும் நோக்குடன் இப்போரை நடத்தி வருகிறது, இஸ்ரேல்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினரும் மேற்குக் கரை பகுதியில் ஃபதா அமைப்பினரும் பிரிந்து பாலஸ்தீன சுயாட்சி நிர்வாகத்தை நடத்திவந்த நிலையில், ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுக்கும் ஐக்கியப்பட்ட சுயாட்சி நிர்வாகத்தை உருவாக்குவதெனத் தீர்மானித்து, கடந்த ஏழாண்டுகளாகப் பிளவுபட்டிருந்த பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரும், ஃபதா அமைப்பும் ஒன்றிணைவது என்று கடந்த 2014 ஏப்ரலில் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்னும் ஆறு மாதங்களில் பாலஸ்தீன சுயாட்சிப் பகுதிகளில் புதிய தேர்தல் நடத்தவும் இவ்விரு அமைப்புகளும் தீர்மானித்தன. ஆனால், பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியில் பாலஸ்தீன அமைப்புகளிடையே ஒற்றுமை நிலவக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமாக உள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியுடன், பெயரளவிலான இந்த சுயாட்சி உரிமையைக் கூட செயல்படுத்தவிடாமல் இதுவரை அவை தடுத்துவந்தன. இதனாலேயே தற்காலிகமாக ஒரு ஒற்றுமைக்கு வந்து ஹமாஸ் அமைப்பும் ஃபதா அமைப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாளே (ஏப்ரல் 24) காசா பிராந்தியத்தில் திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் எச்சரித்தது. அதன் தொடர்ச்சியாகவே கடந்த ஜூலை 8-ஆம் தேதியிலிருந்து மிகக் கொடியஇ னப்படுகொலைப் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இந்த போர்த்தாக்குதலுக்கு ஆதரவாகவே நிற்கின்றன.

பாலஸ்தீன கட்டிடங்கள்
இஸ்ரேலிய போர்த் தாக்குதலில் நொறுங்கிப் போனவை பாலஸ்தீனர்களின் கட்டிடங்கள் மட்டுமா?

குடிநீர், மருத்துவம், மின்சாரம், எரிவாயு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் முதலான அனைத்துக்கும் முற்றாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் காசா பிராந்தியம் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கே மத்தியதரைக்கடலும், இதர அனைத்து திசைகளிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளும், தெற்கே இஸ்ரேலுக்கு அனுசரணையாக உள்ள எகிப்து நாடும் – என எந்த வழியிலும் ஆதரவற்ற சூழலில்தான் பாலஸ்தீனர்கள் உள்ளனர். காசா பிராந்தியத்துக்குள்ளேயேதான் பாலஸ்தீனர்கள் தமது பிழைப்பையும் இதர அத்தியாவசியத் தேவைகளையும் தேடிக் கொள்ள வேண்டும் எனுமளவுக்கு, திறந்தவெளி சிறைச்சாலையாகவே இப்பகுதி உள்ளது. போதாக்குறைக்கு காசா பிராந்தியத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரையும் இஸ்ரேலிய இனவெறி அரசு அரசு எழுப்பியுள்ளதால், பாலஸ்தீனர்கள் பிழைப்புக்காகக் கூட அச்சுவரைத் தாண்டி அனுமதியின்றிச் செல்ல முடியாது. இதனால் பாலஸ்தீனர்கள் சுரங்கங்களை அமைத்து இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் சென்று பிழைப்பைத் தேடுவதும், அதேபோல எகிப்து நாட்டுக்கு சுரங்க வழியாகச் சென்று கூலிக்கு உழைத்து அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வருவதும் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதைத்தான் பாலஸ்தீனர்கள் வீடுகளுக்குள்ளேயே சுரங்கம் அமைத்து வெடிகுண்டுத் தாக்குதல் தொடுப்பதாகவும் அவற்றைத் தகர்ப்பதற்காக வீடுகள் மீது தாக்குதலை நடத்த வேண்டியிருப்பதாகவும் நியாயப்படுத்துகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஹமாஸ் இயக்கத்தினர் தற்போது நடத்திய தற்காப்புத் தாக்குதலில் இதுவரை 4 இஸ்ரேலிய சிவிலியன்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர். இதை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தும் பயங்கரவாதப் போர் என்று இஸ்ரேலும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் சித்தரிப்பதை யாராவது நம்ப முடியுமா?

இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வாய்திறக்காத அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், கடந்த ஜூலை 17-ஆம் தேதியன்று உக்ரைனில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு அதில் பயணித்த 283 பயணிகள் கொல்லப்பட்டதும் ஆவேசத்துடன் அக்கொடுஞ்செயலுக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தன. விமானம் விழுந்து நொறுங்கிய இடமான டொனெட்ஸ் பிராந்தியத்தில் ரஷ்யர்களே அதிகமாக இருப்பதாலும், இவர்கள் உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணையும் நோக்கத்துடன் போராடி வருவதாலும், இவர்களுக்கு ரஷ்ய அரசு ஆதரவளிப்பதாலும் இந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்தான் சுட்டு வீழ்த்தியுள்ளார்கள் என்று அமெரிக்கா உடனடியாகக் குற்றம் சாட்டியது.

10-gaza-cartoonஅமெரிக்கா சொன்னால் அதற்கு அப்பீல் ஏது? அதைத் தொடர்ந்து ரஷ்ய வல்லரசானது மனிதகுலத்துக்கு எதிரான கொடிய குற்றங்களில் ஈடுபடுவதாக அமெரிக்க விசுவாச மேலை ஏகாதிபத்தியங்களும் குற்றம் சாட்டின. “இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கான ஆயுதங்களை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யாதான் வழங்கியுள்ளது” என்று சாடினார், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி. “தண்டனை ஏதுமின்றி குற்றங்களில் ஈடுபடும் ரஷ்யா” என்று தலைப்பிட்டு, அமெரிக்காவின் பிரபல வார ஏடான ‘டைம்’ பரபரப்பாகக் குற்றம் சாட்டியது. ரஷ்யா இதனை மறுத்து, முழுமையான விசாரணைக்கு முன்வந்த போதிலும், ஆதாரமின்றிக் குற்றம் சாட்டுவதை சீனா கண்டித்த போதிலும் கோயபல்சு பாணியில் ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து ரஷ்யா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விமானத்தை கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டுவீழ்த்தினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. குற்றம் சாட்டப்படும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் விழுந்து நொறுங்கிக் கிடந்த விமானத்திலிருந்து கருப்புப் பெட்டியை (விமானிக்கும் கட்டுப்பாட்டு அறைக்குமிடையிலான தகவல்களைப் பதிவு செய்யும் கருவியை) மீட்டெடுத்து விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். தாங்கள் விரும்புகிற திசையில் இந்த விசாரணை அமைய வேண்டுமென்பதற்காகவே விபத்து நடந்த உக்ரைனில் அல்லாமல் பிரிட்டனுக்கு இந்தக் கருப்புப் பெட்டி அனுப்பப்பட்டது. உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஐ.நா.வில் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ராணுவக் கருவிகள் மற்றும் உயர்தொழில்நுட்பச் சாதனங்கள் ஏற்றுமதி செய்வதற்கும், ஐரோப்பிய நிதிச் சந்தைகளை ரஷ்ய வங்கிகள் தொடர்பு கொள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பு (ஜி-7) எச்சரிக்கிறது.

பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்படுவதென்பது இது முதன்முறையல்ல. ஏற்கெனவே அமெரிக்கா இத்தகைய கொடுஞ்செயலைச் செய்திருக்கிறது. இஸ்ரேலும் செய்திருக்கிறது. அப்போதெல்லாம் இப்படிக் குற்றம் சாட்டி உடனடியாக தடைகள் விதிப்பதும் அந்நாட்டைத் தனிமைப்படுத்துவதும் நடக்கவில்லையே, அது ஏன்? இப்படியொரு பொதுக்கருத்து திட்டமிட்டே உருவாக்கப்படவில்லையே அது ஏன்? எவ்வாறு பேரழிவுக்கான ஆயுதங்களை சதாம் உசைன் வைத்திருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டி ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டதோ, அதேபோல இப்போது ரஷ்யாவை உலக அரங்கில் தனிமைப்படுத்தி அதைக் காட்டுமிராண்டி அரசாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். பாலஸ்தீனப் படுகொலைகளை மறைக்க இப்படியொரு சதி அரங்கேற்றப்பட்டு ரஷ்யா நோக்கி உலகின் பார்வை திரும்புவதற்காகவே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் இப்படியொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஆதாரங்களற்ற ஊகமாகத் தோன்றினாலும், நடந்தேறும் நிகழ்வுகள் இந்தத் திசையில்தான் செல்கின்றன.

மலேசிய விமானம்
சுட்டுவீழ்த்தப்பட்டு 283 பயணிகளைப் பலிகொண்ட மலேசிய விமானம் உக்ரைனில் விழிந்து கிடக்கும் கோரம்

ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுவளத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தவும், அதன் எரிவாயு விநியோகத்தையும் அதன் வழியிலான ரஷ்யாவின் பிராந்திய செல்வாக்கையும் தடுத்து முடக்கும் நோக்கத்துடனும் கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைனில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றின. அப்பட்டமான முதலாளித்துவப் பாசிச குற்றக் கும்பலின் ஆட்சியை நிறுவி ரஷ்ய செல்வாக்கிலிருந்து உக்ரைனைப் பிரித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்தன.

“ரஷ்ய அதிபர் புடினது விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் மலேசிய விமானத்திலுள்ள மூவண்ண டிசைனும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருக்கின்றன. மலேசிய விமானம் புறப்படும் சமயத்தில்தான் புடினும் தனது விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவரது விமானத்தைத் தாக்கும் நோக்கில் உக்ரைனிலுள்ள அமெரிக்கக் கூலிப்படைகள் அதே போன்ற தோற்றத்திலுள்ள மலேசிய விமானத்தைத் தாக்கியிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. ஏனெனில், உக்ரைனில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து அப்போதிருந்தே சி.ஐ.ஏ. உளவாளிகளும் “பிளாக்வாட்டர்” எனப்படும் தனியார் நிறுவனத்தின் கூலிப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டு ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு உக்ரேனிய நகரங்களைத் தாக்கி வந்துள்ளன. இந்நிலையில், இந்த விமானத்தை இந்தக் கூலிப்படைகள் தாக்கியிருப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளன. இருப்பினும், “ஐயோ, பயங்கரவாதம்” என்று ஒப்பாரி வைத்து ரஷ்யா மீது வீண்பழி சுமத்தி, தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த இன்னுமொரு வாய்ப்பாக இவ்விமானத் தாக்குதலை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

உக்ரைனில் விமானம் விழுந்து நொறுங்கி அதில் பயணித்த அனைவரும் மாண்டுபோனதும் கண்ணீர் வடிக்கும் ஏகாதிபத்திய உலகம், காசா பிராந்தியத்தில் கொத்துக்கொத்தாக பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. உக்ரைன் விமானத்தில் பயணம் செய்தவர்களைப் பற்றிய விவரங்களையும் அவர்களது வாழ்க்கைக் கதைகளையும் படங்களுடன் வெளியிட்டு உலக மக்களின் கோபத்தை ரஷ்யாவுக்கு எதிராகத் திருப்பும் ஏகாதிபத்திய ஊடகங்கள், காசா பிராந்தியத்தில் விளையாட்டுப் பொம்மையுடன் இறந்து கிடக்கும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளைக் கூட வெளியிட முன்வரவில்லை. உக்ரைன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிய விவரமாவது இருக்கிறது. ஆனால் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை உலகுக்கு முழுமையாகத் தெரியவில்லை.

தாக்குதலை ரசிக்கும் யூதர்கள்
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் வான்வழிப் போர் தாக்குதலைக் குன்றுப் பகுதியில் சோபாக்களில் அமர்ந்து கொண்டு ரசிக்கும் யூத இனவெறியர்களின் வக்கிரம்.

உக்ரைனில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சவப்பெட்டிகளில் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் காசா பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி கூட இல்லை. “போர்த் தாக்குதலால் வெளியேவர முடியாத நிலையில், கொல்லப்பட்டோரின் பிணங்கள் அழுகத் தொடங்கின; ஒரு சிலர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்து சவ அடக்கத்தைச் செய்துவிட்டு ஓடினோம்” என்று விம்முகிறார் ஒரு பாலஸ்தீனர்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவின் காரணமாக, இதுவரை உலக அரங்கில் தனிப்பட்டிருந்த யூத இனவெறியர்கள், இப்போது பாலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொலைவெறியாட்டத்தை ஆதரித்து பாரீசு நகரில் ஆர்ப்பாட்டத்தை நடத்துமளவுக்குத் துணிந்துள்ளனர். போர்த் தாக்குதல் நடக்கும் காசா பிராந்தியத்தை ஒட்டிய குன்றுப் பகுதிகளில் சொபாக்களில் அமர்ந்து கொண்டு நொறுக்குத் தீனி தின்று கொண்டு யூத இனவெறியர்கள் இப்போர்த்தாக்குதலை வாண வேடிக்கை போல வக்கிரமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இது ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்தான் என்று குற்றம் சாட்டும் ஏகாதிபத்தியவாதிகள், அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்த் தாக்குதலை ஒரு மாத காலமாக இஸ்ரேலிய இனவெறி பயங்கரவாதிகள் நடத்திக் கொண்டிருந்த போதிலும் அந்நாட்டின் மீது கண்டனம் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. உலகெங்கும் இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் பெருகத் தொடங்கி உலகின் பொதுக் கருத்து வலுப்பெறத் தொடங்கிய பிறகே ஐ.நா. மன்றம் சடங்குத்தனமாக ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதுவும் கூட இஸ்ரேலைப் போர்க்குற்றவாளியாகச் சித்தரிக்காமல், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருதரப்பினரும் போர்த்தாக்குதலைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறுதான் கோரியது.

கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி செய்து ஆதரித்துவருவதாகக் குற்றம் சாட்டி ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இஸ்ரேல் மீது இப்படியொரு பொருளாதாரத் தடை விதிக்க முன்வரவில்லை. அரபு நாடுகள் இஸ்ரேலின் பயங்கரவாதப் போரைக் கண்டும் காணாமல் இருந்த போதிலும், எல்சால்வடார், பிரேசில் சிலி, ஈக்வடார், பெரு முதலான 5 தென்னமெரிக்க நாடுகள் இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது நாட்டின் இஸ்ரேலியத் தூதரை திரும்ப அழைத்துக் கொண்டு எதிர்ப்பைக் காட்டியுள்ளன. ஆனால், மோடி அரசு இன்னமும் இஸ்ரேலை தனது நட்பு நாடாகக் கொண்டாடுகிறது. இருதரப்பினரும் போரை நிறுத்த வேண்டுமென்று ஆக்கிரமிப்பாளனையும் ஆக்கிரமிப்பை எதிர்த்து தற்காத்துக் கொள்பவனையும் வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் இந்துத்துவ மோடி அரசு, தான் யார் பக்கம் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.

இந்நிலையில், 1967 நவம்பரில் போடப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின்படி, பாலஸ்தீன தாயகத்தின் முழுஉரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை முற்றாக வெளியேறக் கோரியும்,பாலஸ்தீன மக்கள் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திவரும் இஸ்ரேலிய இனவெறி அரசையும், அதற்குத் துணை நிற்கும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களையும் அவற்றின் கைக்கூலி மோடி அரசையும் எதிர்த்துப் போராடுவதும், குறிப்பாக, உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் கோயபல்சு பாணி பொய்களையும் சதிகளையும் கொலைகளையும் அம்பலப்படுத்தி முறியடிப்பதும்தான் இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.

– குமார்.
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

  1. இஸ்ரேல் பயங்கரவாதம் எழுதுகின்ற கைகள் ஈராக்கில் முஸ்லிம் முஸ்லிமை கொடூர கொலை செய்யும் isis தீவிரவாதிகள் பற்றி எழுதுவது கிடையாது.அங்கே கிறிஸ்தவ குழந்தைகளை தலையை மாத்திரம் வெட்டி எடுக்கும் கொடுரம் நடை பெறுகின்றது.அதை கண்மூடி கொண்டு காசா..இஸ்ரேல் என்று எழுதி பொது புத்தியை தக்க வைத்து கொள்வதில் வினவும் சேர்ந்து விட்டது.பாலஸ்தின தீவிரவாதிகள் பொது மக்களை கேடயமாக வைத்து செயல் படுவது உலகு அறிந்தது.ஆனால் இஸ்ரேல் தனது நாட்டு மக்களை கேடயமாக வைக்கவில்லை. அதனால் தான் இஸ்ரேல் தேசத்தில் உயிர் இழப்பு குறைவு….பயங்கரவாதிகள் isis மற்றும் காசா படையினருமே.சும்மா எதோ ஒரு போட்டாவை போட்டுவிட்டு..வக்கிரம் அது இது வென்று பிணத கூடாது.முதலில் நீங்கள் தமிழ் நாட்டில் உள்ள விசயங்களை எடுத்து சொல்லவும்.பிறகு வெளிநாட்டு காரியத்தை பார்க்கலாம்.உள்ளுரில் விலை போகாத வினவு இசலாமிய நண்பர்களை தக்க வைக்க இது போன்ற கட்டுரை வரைவதற்கு வினவு என்ன விகடனா இல்லை மணி,தந்தி ,மல பத்திரிகையா?

  2. you started at israel and ukraine problem and finished with modi. Man you are great.

    one more thing , you are mentioning russia as russia superpower(ரஷ்ய வல்லரசின்).
    It is not true actually. I love russia and want it be a super power and more powerful than USA like every indian. But in reality it is not a super power. It is a regional power only. Country with strong military doesn’t mean that super power.Now its military is more defensive than offensive. It cant move its military from russia to any part of the world like USA eventhough it has lot of nuclear missiles and strong navy, due to its economic constraints. In near future i think russia once again will became a super power due to its oil wealth.

  3. காசாவில் உக்ரேனில் இலங்கையில் என்று உலகம் பூரா இதுதான் நடக்கிறது. யார் கொல்கிறான் யார் கொல்லப்படுகிறான் என்பதைப் பொறுத்து ஆதரவு வேறுபடுகிறது.

    காஷ்மீரில் கொல்லப்படுபவர்களைப் பற்றி யார் உண்மையில் கவலைப் படுகிறார்கள்? குஜராத் கொலைகள் பற்றி யாருக்குக் கவலை? தலித் மக்களின் கொலைகள் பற்றி யார் குரலெழுப்பியது?
    தலித்தியம் பேசுவோர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா?

    இலங்கையில் கொத்துக் கொத்தாகத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது பாலஸ்தீன விடுதலை இயக்கம் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? புலிகளால் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு 1000 ரூபாயுடனும் இரண்டு பொலித்தீன் பைகள் அளவான உடுதுணிகளுடனும் வெளியேற்றப்பட்டபோது மௌனமாக ரசித்தவர்கள் வன்னியில் புலிகளுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது லபோ லபோ என்று ஒப்பாரி வைக்கவில்லையா? மாறாக முஸ்லீம்கள் மீதான புலிகளின் வன்முறையைக் கண்டித்தவர்கள் இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் மக்களைக் கொள்ளையடிக்கவில்லையா?

    உலகம் பிளவுண்டு கிடக்கிறது. இதுவே முதலாளித்துவம் தேடுவதும் கூட. இவ்வாறு பிளவு படுத்திவிட்டால் உழைக்கும் மக்களையும் பிளவுபடுத்திவிடலாம்.

  4. இன்னுமொரு குறிப்பு:
    பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பாலஸ்தீன மக்கள் தமது பிரதேசத்தில் கௌரவமாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும். இதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

    ஆனால் ஒரு சந்தேகம் வினவு மீது:
    வினவுவும் சிலசமயங்களில் ஒருபக்கம் சார்ந்து உழைக்கும் மக்களையும் பிளவு படுத்த முயற்சிக்கிறதா? காஷ்மீரில் இலங்கை விடயங்களில் ஒரளவு நடுநிலையுடனும் எழுதியுள்ள வினவு பாலஸ்தீனம் என்று வந்தால் ஒருபக்கம் சார்ந்து எழுதுகின்றதா?
    கட்டுரையில் இப்படி ஒரு பகுதி வருகிறது:
    “பாலஸ்தீனர்கள் சுரங்கங்களை அமைத்து இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் சென்று பிழைப்பைத் தேடுவதும், அதேபோல எகிப்து நாட்டுக்கு சுரங்க வழியாகச் சென்று கூலிக்கு உழைத்து அத்தியாவசியப் பொருட்களைச் சேகரித்து வருவதும் நீண்டகாலமாக நடந்து வருகிறது. ”

    பாலஸ்தீனத்திலிருந்து எகிப்திற்குச் சுரங்கம் அமைப்பதென்றால் no man area வைக்கடந்து சுரங்கம் அமைக்கப்படவேண்டும். கூலிக்கு உழைக்கும் ஏழை பாலஸ்தீன மக்களிற்கு இது சாத்தியமா? இது ஹமாஸ் பயன்படுத்தாத பாதையா?

  5. இன்றைய செய்தி சேனல்கள் அனைத்திலும் ஒரு பத்திரிகையாளனை கொலை செய்யும் ஈராக் isis தீவிரவாதத்தின் கோரம் காட்டப்பட்டது.எவ்வளவு பயங்கரம்…வினவு இதுவரை isis குறித்தான பதிவு எங்கே?சண்டே தந்தி பேப்பரில் வந்த செய்தி,80 பொது மக்களை கொலை செய்த isis தீவிரவாதிகள்.இதை குறித்து வினவு எழுதாதா?முனை மழுங்கி விட்டதா?நீங்களும் ஒரு கோயபல்ஸ்.கூலி வேலை செய்யும் பாலஸ்தீனியர்கள்…எகிப்திற்கு சுரங்கம் அமைத்து வேலைக்கு செல்கின்றார்களாம்.காமடியை மிஞ்சிவிட்டது வினவின் கற்பனை திறன்.பொருந்த பொய் சொல்ல கற்று கொள்ளவும்.அவாள் பத்திரிகையை சாடும் நீங்கள் அவாள் போன்று செய்திகளை திரித்தும்,மூடியும் சொல்லாமல் இருப்பது நலம்.

  6. விஜய் சார் இந்த வினவு தளம் எப்பொழுதும் இசுலாமிற்க்கு மட்டும் ஆதரவாக பேசும் இனி பாருங்க அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு ஐ எஸ் ஐ எஸ்ன் செருப்படி அமெரிக்க கொழுப்பிற்க்கு தக்க பதிலடி என்று எழுதும் அப்புறமா நம்ம வினவு தளத்த பத்தி தெளிவா தெரிஞ்சுபீங்க …..

Leave a Reply to nanban பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க