Friday, May 9, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

திருச்சியில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்

-

திருச்சி கால்டுவெல் கருத்தரங்கம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

1814-ம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் கிருஸ்தவ சமயப்பரப்பிற்காக தமிழகத்திற்கு வந்தவர். சென்னை மாநகரில் மூன்று ஆண்டுகள் தங்கிய கால்டுவெல், தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், மொழி முதலானவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நானூறு கல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார்.

அவரின் நோக்கம் சமயப்பரப்புரையாக இருந்தபோதும் தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. இவர் 18 மொழிகளைக் கற்றவர். அவர் கற்றறிந்த பிறமொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்து சேர்ந்தார். அதனை ஆய்வு நூலாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலாக 1856-ல் வெளியிட்டார்.

அதுவரை இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே இதர மொழிகளுக்கு இலக்கணங்களாக ஏற்கப்பட்டன என்றும், தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமஸ்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்றும் உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேலாண்மையை அது உடைத்து நொறுக்கியது.

பார்ப்பன பாசிசம் ஆட்சியை பிடித்திருக்கும் இந்த சூழலில் தமிழ் மொழியின் இருப்பை காலி செய்திடும் அதிகாரத்திமிர் எல்லாத்தளங்களிலும் கோலோச்சுகின்றது. மோடியின் பட்ஜெட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கைக்கேற்ற திட்டங்கள் நிறைந்து இருக்கின்றன. ஆன்மீக வளர்ச்சி, தீர்த்த யாத்திரை ஊக்குவிப்புக்கான தேசிய முயற்சி, பாரம்பரிய நகரங்கள் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டம், கங்கைக்கு நமஸ்காரம், விவேகானந்தர் பிரச்சார இரயில், காஷ்மீர் பார்ப்பனர்கள் மறுவாழ்வு திட்டம் என்று நீள்கிறது சனாதனத் திமிர். இந்திய வரலாற்றை திருத்திப் புரட்டுகிறது மோடி அரசு. சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட நிர்ப்பந்திக்கப்படுகிறது.

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது நல்லதுதானே என்று சிலமேதாவிகள் நினைக்கின்றனர். ஆனால், அரசின் அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளியில் சமஸ்கிருதம் கற்று, பூநூல் அணிந்து குடுமியை வளர்த்து அச்சு அசலாக பார்ப்பனர் போலவே மாறிய பின்னும் அம்மாணவர்களை அர்ச்சகர் வேலைக்கு கோயிலுக்குள் விடமறுக்கின்றனர். அர்ச்சகராக முடியாமல், கோயிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கெதிராக இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டம் பார்ப்பன அர்ச்சகர்கள், சு.சாமி, ஜெ மாமி, உச்சிக்குடுமி மன்ற கூட்டணியால் முடக்கப்பட்டுள்ளது.

பூணூலை மறைத்து பயந்த காலம் போய் இன்றைக்கு தைரியமாக இராக்கி கட்டுவது, சாகா பயிற்சி கொடுப்பது, பஜனை நடத்துவது, முசுலீம் கிருஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என்று பாடல்கள் மூலமாக சிறுவர்களிடம் நஞ்சை விதைப்பது என ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு வெறியுடன் களமிறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

பார்ப்பன, பார்சி, பனியா மற்றும் பன்னாட்டு முதலாளிகளை ஆண்டைகளாக ஏற்கும்படி தொழிலாளர்களும் சிறுபான்மை மக்களும் தலித்துகளும் நிர்ப்பந்திக்கப் படுகின்றனர். கங்காணி பதவிக்காக ஏ.சி.சண்முகம், கொங்கு ஈஸ்வரன், பாரிவேந்தர், விஜயகாந்த், வை.கோ, ராமதாசு போன்றோர் அலைகின்றனர். ஆர்.எஸ்.எஸ்-ன் அல்லக்கைகளாகிவிட்ட இந்த எட்டப்பர்களை இனம் காண்பதும் வளர்ச்சி, வல்லரசு என்ற வேடத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள பார்ப்பன-பாசிச கும்பலை வீழ்த்துவதும் உடனடி கடமைகளாக நம்முன் நிற்கின்றன.

மறுகாலனியாதிக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளது. மோடியின் பாசிச ஆட்சியில் செத்துப்போன சமஸ்கிருத மொழியின் மேலாதிக்கமும் சனாதனப் பண்பாடும் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி பெயர் விளங்கா பண்டிகைகளைக் கொண்டாடுவது வரை இந்துத்துவ -சனாதன மீட்சி நடந்து வருகிறது. சமணம், பவுத்தம், சித்தர்கள், வள்ளலார், பெரியார் என இருந்த நமது பார்ப்பன எதிர்ப்பு மரபு மக்களிடையே இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. இன்னொரு புறம் தமிழை ஆட்சிமொழியாக, நீதிமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாகக் கொண்டுவர அரசு மறுக்கிறது. தாய்மொழி வழிக் கல்வியைத் தரவேண்டிய அரசே அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியைக் கொண்டு வந்து தமிழின் அழிவைத் துரிதப்படுத்துகிறது.

இவற்றுக்கெதிராகப் போராட, கால்டுவெல் மீள் கண்டுபிடிப்பு செய்த “உயர்தனிச் செம்மொழியே நம் தமிழ்மொழி” என்பதும் “பார்ப்பன எதிர்ப்பு மரபே நம் தமிழ்மரபு” என்பதும் இன்னமும் துருவேறாத வாள்களாக உள்ளன. அவற்றை நம் கையில் ஏந்துவதே கால்டுவெல்லை நினைவு கூர்வதாகும்.

  • ராபர்ட் கால்டு வெல்லை நினைவு கூர்வோம்!
  • சமஸ்கிருத எதிர்ப்பு தமிழ் மரபை மீட்டெடுப்போம்!!

அனைவரும் வருக!

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
தேசிய இன அடையாளங்களை அழிக்கும்
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு!

தமிழின் தனித் தன்மையை நிலைநாட்டிய அறிஞர் கால்டுவெல் 200-வது பிறந்தநாள்

கருத்தரங்கம்

நாள் : ஆகஸ்ட் 22 வெள்ளி
நேரம் : மாலை 6 மணி
இடம் :
கைத்தறி நெசவாளர் திருமண மண்டம்,
உறையூர், திருச்சி

தலைமை :
தோழர். காளியப்பன், மாநில இணைச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை :

காலனியம் : திராவிட இனம் : கார்டுவெல்

பேராசிரியர். முனைவர். வி.அரசு,
முன்னாள் தமிழ்துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக் கழகம்.

தமிழ் மறு உயிர்ப்பில் கார்டுவெல் பங்கு

புலவர். பொ.வேலுச்சாமி

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

தோழமையுடன்
மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி. மாவட்டம்
தொடர்புக்கு :9095604008