privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !

ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !

-

தொழிலாளர்களை பண்ணையாட்களாக நடத்தி இரக்கமில்லாமல் சுரண்டும் இராஜபாளையம் ராம்கோ முதலாளியைப் பாதுகாக்க வெட்கங்கெட்ட பிரச்சாரம் செய்யும் போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம் ராம்கோ குழும பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. இங்கு தொழிற்சாலை சட்டங்களெல்லாம் செல்லுபடியாகாது. ராம்கோ சேர்மன் வைத்தது தான் சட்டம்.

பஞ்சாலைகளில் மட்டுமல்ல, இராஜபாளையம் வட்டாரம் முழுவதுமே இவர்கள் வைத்தது தான் சட்டம். இங்கு எல்லா அரசுத்துறை அதிகாரிகளும், போலீசும், கோர்ட்டும் இவர்கள் கையில். இப்படி இருக்கும் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

இங்குள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி எந்த தொழிற்சங்கமும், கட்சிகளும் பேசாத நிலையில், புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் பற்றி அவர்களிடையே விளக்கிப் பிரச்சாரம் செய்து வருகிறது. தொழிளார்களை போராட்டத்திற்கு ஒன்றுதிரட்டி வருகிறது. அடியாட்களை ஏவி விடுவது, எடுபிடிகளை வைத்து மிரட்டுவது, போலீசை ஏவி பொய் வழக்கு போடுவது போன்ற ராம்கோ முதலாளியின் எதிர் நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து முறியடித்து பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரம் முன்னேறி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் விழிப்படைந்து வருகின்றனர். பு.ஜ.தொ.மு விற்கான ஆதரவு பெருகி வருகிறது.

புஜதொமு பிரச்சாரம்
புஜதொமு பிரச்சாரம் (கோப்புப்படம்)

இதனைக்கண்டு கலக்கமடைந்த ராம்கோ முதலாளி வேறு வழியில்லாமல் பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ராம்கோ பஞ்சாலைகளின் வாயில்களில், “ராம்கோ பஞ்சாலைகளப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வரும் அநாமதேயங்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடியுங்கள்” என்ற தலைப்பிலுள்ள பிரசுரம் ஒன்று தொழிலாளர்களிடம் வினியோகிக்கப்பட்டது. பிரசுரத்தை வாங்கி தலைப்பைப் பார்த்துவிட்டு நம் முதலாளியே வெளியிட்டிருக்கிறார் என நினைத்த தொழிலாளர்கள் ஏமாந்து போனார்கள். பிரசுரத்தின் கீழ் “இவண், AITUC, HMS, INTUC” என்றிருந்தது. ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருக்கும் இந்த எடுபிடிகள் முதலாளியின் உத்திரவின் பேரில் இணைந்து நின்று முதலாளிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொண்டார்கள்.

போலி கம்யூனிஸ்டுகளின் நோட்டிஸ்

aituc-notice-1 aituc-notice-2

போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

பி.எம்.ராமசாமி
சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?

எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!

உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள்.

ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிபட்டாலோ, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டாலோ அதை விபத்தாக பதிவு செய்யக் கூடாது, அதை வெளியில் சொல்லக் கூடாது. கேசுவல் லீவு தான் தரப்படுமேயொழிய மருத்துவ விடுப்பு கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், “தொழிலாளர்களாகிய எங்கள் கவனக் குறைவினால் தான் விபத்துகள் நடக்கும், எனவே நாங்கள் கவனத்துடன் வேலை செய்வோம்” என்று மாதம் ஒரு முறை வெயிலில் நிற்க வைத்து உறுதி மொழி வாங்குகிறார்கள். இந்த சித்திரவதையை தொழிலாளிகள் அனுபவிக்க வைத்து விபத்தில்லா ஆலை என ஒவ்வொரு ஆண்டும் விருது வாங்கி வைக்கின்றனர்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களை காப்பதாக இந்த எடுபிடிகள் கூறுகிறார்களே, அதே ஆலையில் தான் 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பு அற்ப காரணத்தைக் கூறி வாய்மொழியாக வேலை நீக்கம் செய்கிறார்கள். நிரந்தரத் தொழிலாளர்களைக் கூட காரணமே இல்லாமல் பணி மாறுதல் செய்கிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆலோசனைகளைக் கூறி நிர்வாகமும் அதை செயல்படுத்துவதாக பிரசுரத்தில் கூறியிருக்கும் இந்த எடுபிடிகள் இந்த பணி நிரந்தர பிரச்சனைக்காக ஏன் எந்த ஆலோசனையும் நிர்வாகத்திடம் கூறவில்லை என்று குத்தலாக கேட்கும் தொழிலாளர்களிடம் பதில் கூற முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஆலையிலும் இல்லாத கொடுமையாக ஓவர்டைம் வேலை செய்தால் ஆலையிலிருந்து வெளியேறி விட்டதாக டைம் மிசினில் ரேகை பதிவு செய்து விட்டுத்தான் (வேலை செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல்) ஓவர்டைம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கூறியிருப்பது, சம்பளம் கொடுக்கும் போது ஓவர்டைம் சம்பளம் என்று குறிப்பிடாமல் “புரடக்‌ஷன் இண்சென்டிவ்” என்று எழுதி திருட்டுத்தனம் செய்வது இந்த எடுபிடிகளின் ஆலோசனையினால் தானா என்று தொழிலாளிகள் கேட்கிறார்கள்.

வாரவிடுப்புக்கு சம்பளம் இதுவரை ராம்கோ குழும பஞ்சாலையில் கொடுக்கப்பட்டதாக வரலாறே இல்லை. இது தான் சட்டத்திற்கு மேலும் தொழிலாளிக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான ‘குருபக்தமணி’யின் லட்சணமா? என்று தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை.

கக்கூசில் தண்ணீர் இல்லாமல் போட்டுவிட்டு புல்வெளிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்களே; சாப்பிடும் இடத்திற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டியதிருக்கும் நிலையில் 30 நிமிடம் மட்டுமே உணவு இடைவேளை கொடுக்கிறார்களே; சாப்பிட்டு விட்டு வருவதற்கு ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சம்பளத்தில் பிடித்தம் செய்கிறார்களே இதெல்லாம் இந்த எடுபிடி தொழிற்சங்கங்களின் ஆலோசனையினால் தானா? என்று தொழிலாளர்கள் குமுறுகிறார்கள்.

தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

ராம்கோ பிரசுரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டி

முதலாளி பி.ஏ.சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.

போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.

தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை.

ராம்கோ முதலாளி நிதி உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி அலுவலகம் கம் திருமண மண்டபம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படி ஒரு பிரசுரம் வெளியிட்டு எடுபிடி சங்கங்கள் தங்களைத் தாங்களே மேலும் அம்பலப்படுத்திக் கொண்டாலும், தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் எதுவும் கிடைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பணி நிரந்தரம், வாரவிடுப்பு சம்பளம், ஓவர்டைமுக்கு இரட்டிப்பு சம்பளம் போன்ற சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதையே பு.ஜ.தொ.மு பிரச்சாரத்திற்குப் பிறகு தான் தொழிலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆலையில் ஒரு இரகசிய தேர்தலை இன்று நடத்தினாலும் கூட இந்த சங்கங்கள் ஒற்றை ஒரு வாக்கைக் கூற பெற முடியாது என்பது தான் தொழிலாளர்கள் கூறும் உண்மை.

தொழிற்சங்கம் என்பது, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பிழைக்கும், முதலாளி வர்க்கத்தை முறியடித்து, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய, அதிகாரத்தை வென்றெடுக்கப் போராடும் அமைப்பாகும். இதனையே புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தங்களின் வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறார்கள். ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ தொழிலாளி வர்க்கத்தின் சுயமரியாதையை முதலாளியிடம் அடகுவைக்கும், பிழைப்புவாதிகளாகளாக சீரழிந்து விட்டார்கள் என்பதையே மீண்டும் மீண்டும் தங்கள் செயல்களின் மூலம் நிரூபிக்கிறார்கள்.

நேர்மையான, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, காவல்துறை போன்ற ஏவல்துறைகளின் கெடுபிடிகளை எதிர்கொண்டு நிற்கக் கூடிய, எதற்கும் விலை போகாத தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் செங்கொடிகளை ராம்கோ தொழிலாளர்கள் வெளிப்படையாக ஏந்தி வலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்