Saturday, May 3, 2025
முகப்புகலைகவிதைபழைய பேப்பர்

பழைய பேப்பர்

-

“பழைய பேப்பர்… இரும்பு… பால் கவர்
ஈயம்… பித்தாள… ”
அந்த மூன்று சக்கர மிதிவண்டியில்
துரு பிடிக்காத பாகம்
அவன் குரல் மட்டும்தான்!

தலையில் ஓடும் வியர்வை
மூக்கு நுனியில்
சூரிய முட்டையாய் உடையும்,
உச்சி சூரியனை
பிடிவாதக் கால்கள்
மிதித்து மேலேறும்
கொத்தாகப் பேப்பர் பார்க்கையில்
படிக்கல் சூடு
மனதில் குளிரும்.

வாங்கிக் குடிக்கும்
சொம்புத் தண்ணீரை
தொண்டைக் குழி
வாங்கும் வேகத்தில்,
ஏறி இறங்கும்
குரல்வளை மேடு
அடுத்தத் தெருவின்
நினைப்பில் கரையும்.

சத்துமாவு டப்பாவை
காலில் மிதித்து,
சிதறிய பால்கவரை
ஒரு பிடிக்குள் அமுக்கி,
சந்தேக கண்கள் சரிபார்க்க
தராசை தூக்கிப் பிடிக்கையில் பசி அடங்கும்.

வண்டியின் கைப்பிடி சூடுக்கு
வழியும் வியர்வையே ஆறுதல்,
ஓட்டுபவரின் உடம்பு சூடு
தாங்காமல்
ஒவ்வொரு பாகமும்
இரும்புக் குரலில் கத்தும்.
சக்கரமோ
இன்று மாலைக்குள்
இலக்கை எட்ட வேண்டும்
என மிதிக்கும் தொழிலாளியின்
உயிர் மூச்சில் சுற்றும்…

ஏ! பழைய பேப்பர்
என்று எங்காவது ஒரு
பதில் குரல் கேட்க எத்தனித்து
அவன் செவிமடலும்
இமை மடலும்
வெயில் தோற்க விரியும்!

– துரை.சண்முகம்.