தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
– பாவேந்தர்
அன்பார்ந்த பெரியோர்களே!
பார்ப்பன ஆதிக்கம், சாதி தீண்டாமைக் கொடுமை, மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் போன்ற எண்ணற்ற அழுக்குகளால் முடை நாற்றம் வீசிய தமிழகத்தைத் தனது அளப்பரிய உழைப்பால், தியாகத்தால் துடைத்துத் தூய்மைப்படுத்தி தமிழனை மனிதனாய் மாற்றிய மாமனிதர் பெரியார். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மதச்சார்பின்மை, பொது உடைமைச் சிந்தனை, பெண் விடுதலை, சமூக நீதி, தன்மான உணர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி தீண்டாமை ஒழிப்பு ஆகிய உயரிய லட்சியங்களையும் பண்புகளையும் நிலை நாட்டித் தமிழனைத் தலை நிமிரச் செய்த தன்னிகரில்லாத் தலைவர். சமஸ்கிருத, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து முறியடித்ததன் மூலம் தமிழ் உயிர் பெறவும், தமிழன் உயர்வு பெறவும் காரணமானவர். தமிழகத்தின் தனிச்சிறப்பு தந்தை பெரியார்.
இன்று ஆட்சி அதிகார பலத்தைக் கொண்டு பெரியார் உருவாக்கிய அடித்தளத்தைத் தகர்த்தெறிய களமிறங்கியிருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க பார்ப்பன இந்துமத வெறிக்கும்பல். இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என மாற்றுவது, கங்கையை புனிதப்படுத்துவது, காசியை புனித நகரமாக்குவது, இந்தியா இந்துநாடு என மதவெறியைக் கக்குவது, சிறுபான்மையினரை அச்சுறுத்துவது, வரலாற்றைத் திரிப்பது, சாதி அமைப்பை சரி என்று வாதிடுவது என அடுக்கடுக்காய் ஆர்.எஸ்.எஸ் திட்டங்கள் அமலாக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் மதக்கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தின் பெயரால் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தின் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை ஆகிய சீரிய பண்புகளை அழிக்க முற்படுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு பிழைப்புவாதத்தில் மூழ்கி பா.ஜ.கவிற்கு வாலாட்டுகிறது தி.மு.க. ஜெயாவின் அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ்-ன் தமிழக கிளையாகவே செயல்படுகிறது. மற்றொருபுறம், பெரியாரையும் திராவிடக் கருத்தியலையும் அவதூறு செய்வதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-க்கு அடியாள் வேலை பார்க்கின்றனர் சீமான் போன்ற இனவாதிகளும், ராமதாஸ் போன்ற சாதி வெறியர்களும்.
எனவே, இந்தச் சூழலில் பெருகி வரும் பார்ப்பன இந்து மதவெறி அபாயத்தை முறியடிக்க நமக்குக் கிடைத்துள்ள கூர்மையான, வலிமையான ஆயுதம் தந்தை பெரியார்.
எனவே, பெரியார் பிறந்த நாளை பார்ப்பன இந்துமதவெறி எதிர்ப்பு நாளாகக் கடைபிடிப்போம். பெரியாரின் கொடையாகிய பார்ப்பன எதிர்ப்பு, இந்துமதவெறி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை மதச்சார்பின்மை, சமத்துவம், சாதி ஒழிப்பு ஆகிய உயரிய நெறிகளை, மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்.
ஆர்.எஸ்.எஸ் மதவெறிக் கும்பலுக்கு முடிவு கட்டுவோம்.
தெருமுனைக் கூட்டம் – 17.09.2014 புதன் மாலை 5.30 மணி,
சாந்தி-கமலா திரையரங்கம் எதிரில், தஞ்சை
சிறப்புரை: தோழர் காளியப்பன், மாநில இணைச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.
அனைவரும் வருக!
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285, 94431 57641