privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்பாத்ரூமில் கேமரா - சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்

பாத்ரூமில் கேமரா – சங்கரா பல்கலை மாணவர் போராட்டம்

-

’இந்துக்களின் ஜகத்குரு’ என்று பீற்றப்படும் சங்கர்சாரிகளின் காஞ்சி சங்கர மட யோக்கியதைகள் ஊருக்கே தெரியும். கொலையிலும் கூத்தடிப்பதிலும் கொடிகட்டி பறக்கும் மடம் அது. இப்பேற்ப்பட மடம் நடத்தும் கல்லூரிகள் மட்டும் எப்படி இருக்கும்?

ஆம். காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் உள்ளது காஞ்சி சங்கரமடத்துக்கு சொந்தமான சங்கரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு மாணவனிடமும் லட்சக்கணக்கில் பணத்தைக் கறக்கும் கல்விக் கொள்ளையில் தவறாமல் ஈடுபடும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் இதுவும் ஒன்று. மாணவர்கள் மாணவிகளுடன் பேசிக்கொள்ளக்கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, பேராசிரியர்கள் { கடந்தாண்டு படிப்பை முடித்த மாணவர்கள்தான் இந்தாண்டு பேராசிரியர்கள்} குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துவது என பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு அதன் பெயரில் மாணவர்களை ஒடுக்கி வருகிறார்கள். ஷூவில் லேஸ் கட்டவில்லை, தினம்தோறும் ஷேவ் செய்யவில்லை என்றாலும் கல்லூரியில் அலுவலக உதவியாளர்கள்தான் மாணவர்களை தண்டிப்பார்கள். அங்கு அலுவலக உதவியாளர் வேலை செய்பவர்கள் எல்லாம் கல்லூரி நிர்வாகத்திற்கு அடியாள் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

மேலோட்டமாக பார்த்தால் இப்படி கட்டுப்பாடுகள் இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வளருவார்கள் என்று சிலருக்கு கருதத் தோன்றும். மாணவர்களைக் கேட்டால் இது கல்லூரி இல்லை, சிறைச் சாலையைவிட கொடுமையானது என்று கதறுகிறார்கள். இந்த பல்கலைக்கு அரசு கொடுத்துள்ள சர்டிபிகேட் யூ .  ஆனால் உள்ளே நடப்பதெல்லாம் ஏ பட ரேஞ்சுக்கான வேலைகள்.

இப்பல்கலைகழக விடுதியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக மாணவிகளின் பாத்ரூமில் கேமரா பொருத்தப்பட்டு வருவதும், அது பற்றி புகார் கொடுத்தால் நிர்வாகம் அமைதியாக இருப்பதுமே இருந்திருக்கிறது. மாணவிகளும் வெளியே சொன்னால் அவமானம் என்று வாய்மூடி அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 10 நாட்களாக பாத்ரூமில் கேமரா வைக்கப்பட்டிருப்பது குறித்து மாணவிகள் விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளனர். அந்த வார்டனோ இதைக் கேட்டு பதறாமல் நிதானமாகபார்க்கலாம், பார்க்கலாம் என இழுத்தடித்துக் கொண்டு வந்துள்ளார்.

இந்த அநியாயத்தை கண்டு பொறுக்க முடியாத மாணவிகள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களிடம் கூறியுள்ளனர். மாணவர்கள் இதை விசாரித்து அப்படி படம் எடுத்த எலக்ட்ரீசியன் ராஜாவை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்துள்ளனர். தலைமை வார்டனான வாசுதேவன் என்பவர் சொல்லி பெண்கள் பாத்ரூமில் கேமரா வைத்ததாகவும் அந்த மெமரி கார்டை பெண்கள் விடுதி வார்டனிடம் கொடுப்பதாகவும் ராஜா மாணவர்களிடம் கூறியுள்ளான். அவனை பிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்து வாசுதேவனை கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சங்கர ராமன் கொலை வழக்கையே ஊற்றி மூடிய போலீசு இதில் மட்டும் நடவடிக்கை எடுக்குமா என்ன? ராஜாவையும் வாசுதேவனையும் அரைமணி நேரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு பத்திரமாக விடுவித்து விட்டது. சரி லோக்கல் போலீசுதான் இப்படி, மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்தால் அவர் நீதியைத் தருவார் என்றெண்ணி மாவட்ட ஆட்சியரகத்துக்கு சுமார் 400 மாணவர்கள் ஊர்வலமாக வந்து மனு அளிக்க வந்தார்கள். 23ம் தேதி பதவியேற்ற புது கலக்டரோ அவரது நிர்வாகமோ சங்கர ராஜ்ஜியத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகளை கண்டு கொள்ளவே இல்லை. கலெக்டர் மீட்டிங்கில் இருக்ககிறார் என்ற பதிலே 2 மணி நேரமாக வந்தது.

அந்தக் காத்திருப்பில்தான் மொத்த அரசுமே இந்த கல்விக்கொள்ளையர்களுக்கும், சங்கர மட மைனர்களுக்கும் சேவை செய்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டனர். இதற்கிடையில் காவல் நிலையத்தில் வார்டன் வாசுதேவன் “பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில் இருப்பதை எல்லாம் இண்டர் நெட்டில் அப்லோடு செஞ்சுடுவேன்” என்று மிரட்டிய விசயம் மாணவர்களிடம் பரவ ஆரம்பித்தது. இதன் பிறகே ஆத்திரமடைந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்தார்கள்.

கல்லூரி டீனிடம் முறையிட்டார்கள்.அவரோ நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள் என்றார். அதாவது மாணவிகளை மறைவாக படம் பிடித்த அயோக்கியர்களை கைது செய், நடவடிக்கை எடு என்று சொன்னால் அது அநாகரிகமாம். துணை டீன் ரமணனோ தவறுதான் மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டு பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்று சொன்னார். ” மன்னிப்பு எங்களுக்குத்தேவை இல்லை, வாசுதேவன் இங்கே வந்து எங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அந்த மெமரி கார்டை ஒப்படைக்க வேண்டும்” என்றார்கள் மாணவிகள். வாசுதேவனை இங்கே கொண்டு வந்தால் அடித்தே கொன்று விடுவீர்கள் என்றது போலீசு.

இதற்கிடையில் கல்லூரி நிர்வாகத்தினை சேர்ந்த ஒரு பொறுக்கி “வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க” என்று கேட்டவுடன் இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று 3 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள்.

இத்தனை ஆண்டுகளாக காமவெறிப்பிடித்த இந்த பார்ப்பன அக்ரஹார கோட்டையை யாரும் கேள்வி கேட்காமல் பேசாமல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டது போதும், இனி தன்மானத்தை இழப்பதற்கு உயிரை இழப்பதே மேல் என்று துணிந்தார்கள். அவர்கள் கண் முன்னே பிராக்டிக்கல் மார்க் வரவில்லை, எந்த HODயும் வரவில்லை. பேருந்துகள் வேன்கள், ஆய்வகம் என கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினார்கள். இது அநாகரீகம் என்றால் இருக்கலாம் , சூடு சொரணை உள்ளவர்களுக்கு தெரிந்த மொழி இதுதானே!

மீண்டும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் பேசித்தீர்க்கலாம் என்று அமைதிப்படுத்தியது. காலை முதலே தண்ணீர்கூட குடிக்காமல் இருந்த மாணவர்கள் சோர்வடைந்தார்கள். இதற்கிடையில் விடுதிகளில் படிப்படியாக தண்ணீர், மின்வசதிகள் துண்டிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புப் போரில் தாக்குதலை தொடங்குவதற்கு முன்னர் ஏகாதிபத்திய படைகள் என்ன செய்யுமோ அதை பார்ப்பன பயங்கரவாதகம்பெனிகள் செய்தன. சரியாக இரவு 7.30 மணி. கல்லூரியின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.

கல்லூரிக்குள் புகுந்தது போலீசு, வெறிகொண்ட மிருகங்களாக மாணவர்களைக் கடித்துக் குதறியது. மாணவர்களை வீதிகளில் தள்ளி பூட்டுப்போட்டது. வெற்றிக்களிப்பில் புன்னகைத்தது பார்ப்பன பயங்கரவாத காஞ்சி பல்கலைக்கழகம்.

இப்பிரச்சினையை எவ்வளவோ மூடி மறைக்க முயன்ற போதும் மாணவர்களின் போராட்டத்தால் காஞ்சிப் பல்கலை கழகத்தின் பெயர் வராமல் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஒவ்வொரு முறையும் மாணவிகள் இப்படி பாத்ரூமில் கேமரா உள்ளதென்று புகார் கொடுத்தால் ஒரு நாள் விடுமுறை விட்டுவிடுமாம் கல்லூரி நிர்வார்கம்.

இம்முறை 10 நாட்கள் விடுமுறை விட்டுள்ளது நிர்வாகம். போலீசு அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் காய்ந்து போகலாம், தழும்புகள் மறையுமா என்ன? இந்த நிர்வாகத்தின் அயோக்கியத்தனத்துக்கு முடிவே இல்லையா என்று கதறுகிறார்கள் மாணவர்கள். கல்லூரி நிர்வாகமும் அரசும் கூட்டணிக்கொண்டு செயல்படும் போது மாணவர்கள்  ஒரு அமைப்பாக ஒன்றுபடாமல் வெற்றிபெறமுடியாது.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களை கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்தப் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டையில் தன்மான உணர்வுடன் சுயமரியாதை உணர்வுடன் முதல் கீறலைப் போட்டிருக்கிறார்கள் மாணவர்கள். சாதி வித்தியாசங்களைக் கடந்து இந்த போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டிருக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்கை ஊற்றி மூடப்பட்டது போல இந்த விவகாரத்தை மாணவர்கள் விடக்கூடாது. போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம். சங்கர மட பயங்கரவாதிகளை முறியடிப்போம்.

படங்களை பெரிதாக பார்க்க சொடுக்கவும்.

__________________________________________________________

தகவல் – புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம், தமிழ்நாடு. தொடர்புக்கு: 9445112675

___________________________________________________________