privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

-

சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு” என்ற தலைப்பில் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பாக திருச்சி ரோசன் மஹாலில் கடந்த 5.10.2014 அன்று மாநாடு நடைபெற்றது. 68 இயக்கங்கள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொள்ள கூட்டம் நடைபெற்றது.

வன்னிய சாதி வெறியை மூலதனமாக வைத்து பாமக ராமதாசு பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளுடன் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை தமிழகம் பார்த்துள்ளது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கண்ட தலைப்பில் மாநாடு நடத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கதக்கது. இந்த ஆர்வத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக சென்றோம். பெண்கள் விடுதலைக்கும், சாதி மறுப்பு விசயத்திலும் புதிய அனுபவங்கள், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்றோம். தோழர்களை வரவேற்று நமது அமைப்பு புத்தக ஸ்டால் போட அனுமதியும், இடமும் ஒதுக்கி தந்தனர்.

conference-notice

கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள், சாதிக் கொடுமை பற்றியும், அது இந்த சமூகத்தில் பரவியுள்ள நோய் எனவும் இதனை ஒழிக்க வேண்டும் என்றும் இதனைத் தாங்கி பிடிக்கும் இந்துமதம் உள்ளிட்ட பிற மதங்கள் அனைத்துமே பெண் உரிமைக்கு எதிரானது என்றும் எடுத்துரைத்தனர்.

சாதி மறுப்பு திருமணத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். பெரியார், அம்பேத்கர் உழைப்பு, தியாகம், அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் நினைவு கூர்ந்தனர். காதல் திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும், திவ்யா- இளவரசன் காதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும், பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தமது உரையில் வேண்டுகோள் விடுத்தனர்.

மாநாடு முழுக்க ஆசையும், விருப்பமும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. சாதி மறுப்பு திருமணத்தை மையமாக பேச வேண்டுமெனில் இந்த காலம் எப்படிப்பட்டது, இதற்கு தடையாக இருப்பது யார்? அதை வீழ்த்துவது எப்படி இவை பற்றி தெளிவு ஏற்படுத்தப்படவில்லை!

பாமக ராமதாசு பகிரங்கமாக ஆதிக்க சாதியினருடன் இணைந்து சாதிவெறியை மூட்டிவருகிறார். காதல் திருமணம் செய்வது தவறு என்றும், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட்போட்டுச் சென்று பெண்களை வசப்படுத்துகின்றனர் என இழிவுபடுத்தியும் பகிரங்கமாக பேசுகிறார்.. இதற்கு ஆதரவாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார்..

ஆனால் சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்த கூட்டத்தில் ராமதாசு போன்றவர்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியை கலைப்பது பற்றியோ , அவர் கேள்விக்கு பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப்படவில்லை. ஆதிக்க சாதி வெறியை தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவர்களை அம்பலப்படுத்தாமல் பொதுவில் பேசுவதால் என்ன பலன்?

திவ்யா, இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக 2 ஊர்களையே கொளுத்தும் இந்த காட்டுமிராண்டி கும்பலை எதிர்கொள்ளாமல் சாதிமறுப்பு காதல் திருமணம் சாத்தியமா? என்பதை பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாநாட்டின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு தலைவர்கள், தொண்டர்கள் செயல்பட்டதாகவும் தெரியவில்லை.

“பெண் உரிமை பற்றி பேசும் மாநாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் நாம் அனைவரும் ஏன் நமது வீட்டுப் பெண்களை அழைத்து வரவில்லை. ஏன் என்றால் ஆணாதிக்க சிந்தனையோடு தான் நாம் இருக்கிறோம்” என ஆதங்கப்பட்டார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

“மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமைப்பினரும் 10 நபர்களை அழைத்து வந்திருந்தால் இம்மாநாட்டு அரங்கம் நிறைந்திருக்கும். நாம் ஏன் இதனை செய்யவில்லை” என வினா எழுப்பினார் தமிழ் தேச நடுவம் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்.

“தோழர் என்ற சொல்லை மறந்து விடுகிறோம். தோழமை என்பதே செத்துவிட்டது” என்றார் ரத்தினம்.

பேச்சாளர்களின் இந்த குமுறலுக்கு என்ன பதில், எப்படி சரிசெய்வது என விடை இல்லை.

அவரவர் தமது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில் பார்வையாளர்கள் எதை எடுத்துக் கொள்வது, எப்படி சாதி மறுப்பு என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படி தீர்ப்பது? என்பதெற்கெல்லாம் விடை இல்லை.

ஒவ்வொரு பேச்சாளரும் தமது உரை முடிந்ததும் தமது அணிகளுடன் மாநாட்டை விட்டு வெளியேறுவது என்பது நீடித்த வண்ணமாகவே இருந்தது. தமது கருத்தை மற்ற தலைவர்கள் ஏற்கிறார்களா? மறுக்கிறார்களா? அல்லது மற்ற தலைவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிக்கக் கூட மனமில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறும் இந்த தன்மை எப்படி மாநாட்டை சிறப்பிக்க வைக்கும். இந்த அணுகுமுறை அணிகளை எப்படி வளர்க்க உதவும். ஒவ்வொருவரும் மற்றவருடன் ஒட்டுவதில்லை. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்பது இல்லை. சாதி மறுப்பு என்ற ஒற்றை மேற்கோளை ஏற்றுக் கொண்டால் போதுமா? அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமா? வழியில் உள்ள ஆயிரம் தடைக்கற்களை தகர்க்க வேண்டாமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை.

இந்த சமூக அமைப்புக்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது. சட்டம் கடுமையாக்க பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை, என்ற வகையில் தான் மாநாட்டின் பேச்சும், தீர்மானமும் அமைந்துள்ளது.

சாதிக் கட்சிகளை வளர்ப்பதும், ஊக்குவிப்பதும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்தான். இவர்கள் சாதியை எப்படி ஒழிப்பார்கள். தேர்தலின் போது சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்துவது சாதி சங்கங்களுடன் கூட்டணி சேர்வது என்பது வழக்கமானவை ஆகும். இந்த ஆளும்வர்க்க கட்சிகளை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி முறியடிக்காமல் இவர்களுடன் இணைந்தே எப்படி சாதியை ஒழிக்க முடியும்?

சாதி ஒழிப்பில் உண்மையில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நமது நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதை சரியாக மதிப்பிடுவதும் அவசியமானதாகும். நண்பர்கள் என ஏற்றுக் கொண்டோரின் கரத்தை இறுக பற்றுவதும் எதிரி என அடையாளம் கண்டு கொண்டவர்களை இறுதிவரை எதிர்த்து உறுதியாக போராடுவதும் தேவையான ஒன்றாகும்.

தோழமை அமைப்பினரின் தவறு, குறைபாடுகளை துணிந்து எடுத்துரைப்பதும், அனுபவங்கள், படிப்பினைகளை தொகுப்பதும் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படும். உண்மையான, முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும் போதுதான் சாதியை அழிக்க முடியும்.

எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகும் மக்கள் மத்தியில் சாதி மறுப்பாளர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

எங்களது பிள்ளைகளை சாதி மறுப்பாளர்கள் என்பதே பள்ளியில் பதிவு செய்து சேர்த்து வருகிறோம்.

சாதி வெறியர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

தர்மபுரியில் திவ்யா-இளவரசன் காதல் திருமணத்திற்கு எதிராக பா.ம.க ராமதாசு, காடுவெட்டி குரு உள்ளிட்ட சாதிவெறியர்களுக்கு எதிராக எங்களது தோழமை அமைப்பினரான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியோருடன் இணைந்து போராடியுள்ளோம். இந்த அனுபவத்தில் இருந்தும் எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டை பற்றிய எமது கருத்தை தெரிவித்துள்ளோம்.

மொத்தத்தில் 68 அமைப்புகள் 66 பேச்சாளர்கள் இணைந்து நடத்திய இந்த மாநாடு

கூடி பொழியும் மேகங்களின் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்த்தோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கூடிக்கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநாட்டை பார்க்க முடிந்தது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்.,
பெண்கள் விடுதலை முன்னணி.,
திருச்சி.