Thursday, July 18, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

-

சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு” என்ற தலைப்பில் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பாக திருச்சி ரோசன் மஹாலில் கடந்த 5.10.2014 அன்று மாநாடு நடைபெற்றது. 68 இயக்கங்கள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொள்ள கூட்டம் நடைபெற்றது.

வன்னிய சாதி வெறியை மூலதனமாக வைத்து பாமக ராமதாசு பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளுடன் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை தமிழகம் பார்த்துள்ளது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கண்ட தலைப்பில் மாநாடு நடத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கதக்கது. இந்த ஆர்வத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக சென்றோம். பெண்கள் விடுதலைக்கும், சாதி மறுப்பு விசயத்திலும் புதிய அனுபவங்கள், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்றோம். தோழர்களை வரவேற்று நமது அமைப்பு புத்தக ஸ்டால் போட அனுமதியும், இடமும் ஒதுக்கி தந்தனர்.

conference-notice

கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள், சாதிக் கொடுமை பற்றியும், அது இந்த சமூகத்தில் பரவியுள்ள நோய் எனவும் இதனை ஒழிக்க வேண்டும் என்றும் இதனைத் தாங்கி பிடிக்கும் இந்துமதம் உள்ளிட்ட பிற மதங்கள் அனைத்துமே பெண் உரிமைக்கு எதிரானது என்றும் எடுத்துரைத்தனர்.

சாதி மறுப்பு திருமணத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். பெரியார், அம்பேத்கர் உழைப்பு, தியாகம், அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் நினைவு கூர்ந்தனர். காதல் திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும், திவ்யா- இளவரசன் காதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும், பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தமது உரையில் வேண்டுகோள் விடுத்தனர்.

மாநாடு முழுக்க ஆசையும், விருப்பமும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. சாதி மறுப்பு திருமணத்தை மையமாக பேச வேண்டுமெனில் இந்த காலம் எப்படிப்பட்டது, இதற்கு தடையாக இருப்பது யார்? அதை வீழ்த்துவது எப்படி இவை பற்றி தெளிவு ஏற்படுத்தப்படவில்லை!

பாமக ராமதாசு பகிரங்கமாக ஆதிக்க சாதியினருடன் இணைந்து சாதிவெறியை மூட்டிவருகிறார். காதல் திருமணம் செய்வது தவறு என்றும், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட்போட்டுச் சென்று பெண்களை வசப்படுத்துகின்றனர் என இழிவுபடுத்தியும் பகிரங்கமாக பேசுகிறார்.. இதற்கு ஆதரவாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார்..

ஆனால் சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்த கூட்டத்தில் ராமதாசு போன்றவர்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியை கலைப்பது பற்றியோ , அவர் கேள்விக்கு பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப்படவில்லை. ஆதிக்க சாதி வெறியை தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவர்களை அம்பலப்படுத்தாமல் பொதுவில் பேசுவதால் என்ன பலன்?

திவ்யா, இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக 2 ஊர்களையே கொளுத்தும் இந்த காட்டுமிராண்டி கும்பலை எதிர்கொள்ளாமல் சாதிமறுப்பு காதல் திருமணம் சாத்தியமா? என்பதை பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாநாட்டின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு தலைவர்கள், தொண்டர்கள் செயல்பட்டதாகவும் தெரியவில்லை.

“பெண் உரிமை பற்றி பேசும் மாநாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் நாம் அனைவரும் ஏன் நமது வீட்டுப் பெண்களை அழைத்து வரவில்லை. ஏன் என்றால் ஆணாதிக்க சிந்தனையோடு தான் நாம் இருக்கிறோம்” என ஆதங்கப்பட்டார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

“மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமைப்பினரும் 10 நபர்களை அழைத்து வந்திருந்தால் இம்மாநாட்டு அரங்கம் நிறைந்திருக்கும். நாம் ஏன் இதனை செய்யவில்லை” என வினா எழுப்பினார் தமிழ் தேச நடுவம் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்.

“தோழர் என்ற சொல்லை மறந்து விடுகிறோம். தோழமை என்பதே செத்துவிட்டது” என்றார் ரத்தினம்.

பேச்சாளர்களின் இந்த குமுறலுக்கு என்ன பதில், எப்படி சரிசெய்வது என விடை இல்லை.

அவரவர் தமது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில் பார்வையாளர்கள் எதை எடுத்துக் கொள்வது, எப்படி சாதி மறுப்பு என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படி தீர்ப்பது? என்பதெற்கெல்லாம் விடை இல்லை.

ஒவ்வொரு பேச்சாளரும் தமது உரை முடிந்ததும் தமது அணிகளுடன் மாநாட்டை விட்டு வெளியேறுவது என்பது நீடித்த வண்ணமாகவே இருந்தது. தமது கருத்தை மற்ற தலைவர்கள் ஏற்கிறார்களா? மறுக்கிறார்களா? அல்லது மற்ற தலைவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிக்கக் கூட மனமில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறும் இந்த தன்மை எப்படி மாநாட்டை சிறப்பிக்க வைக்கும். இந்த அணுகுமுறை அணிகளை எப்படி வளர்க்க உதவும். ஒவ்வொருவரும் மற்றவருடன் ஒட்டுவதில்லை. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்பது இல்லை. சாதி மறுப்பு என்ற ஒற்றை மேற்கோளை ஏற்றுக் கொண்டால் போதுமா? அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமா? வழியில் உள்ள ஆயிரம் தடைக்கற்களை தகர்க்க வேண்டாமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை.

இந்த சமூக அமைப்புக்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது. சட்டம் கடுமையாக்க பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை, என்ற வகையில் தான் மாநாட்டின் பேச்சும், தீர்மானமும் அமைந்துள்ளது.

சாதிக் கட்சிகளை வளர்ப்பதும், ஊக்குவிப்பதும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்தான். இவர்கள் சாதியை எப்படி ஒழிப்பார்கள். தேர்தலின் போது சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்துவது சாதி சங்கங்களுடன் கூட்டணி சேர்வது என்பது வழக்கமானவை ஆகும். இந்த ஆளும்வர்க்க கட்சிகளை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி முறியடிக்காமல் இவர்களுடன் இணைந்தே எப்படி சாதியை ஒழிக்க முடியும்?

சாதி ஒழிப்பில் உண்மையில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நமது நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதை சரியாக மதிப்பிடுவதும் அவசியமானதாகும். நண்பர்கள் என ஏற்றுக் கொண்டோரின் கரத்தை இறுக பற்றுவதும் எதிரி என அடையாளம் கண்டு கொண்டவர்களை இறுதிவரை எதிர்த்து உறுதியாக போராடுவதும் தேவையான ஒன்றாகும்.

தோழமை அமைப்பினரின் தவறு, குறைபாடுகளை துணிந்து எடுத்துரைப்பதும், அனுபவங்கள், படிப்பினைகளை தொகுப்பதும் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படும். உண்மையான, முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும் போதுதான் சாதியை அழிக்க முடியும்.

எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகும் மக்கள் மத்தியில் சாதி மறுப்பாளர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

எங்களது பிள்ளைகளை சாதி மறுப்பாளர்கள் என்பதே பள்ளியில் பதிவு செய்து சேர்த்து வருகிறோம்.

சாதி வெறியர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

தர்மபுரியில் திவ்யா-இளவரசன் காதல் திருமணத்திற்கு எதிராக பா.ம.க ராமதாசு, காடுவெட்டி குரு உள்ளிட்ட சாதிவெறியர்களுக்கு எதிராக எங்களது தோழமை அமைப்பினரான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியோருடன் இணைந்து போராடியுள்ளோம். இந்த அனுபவத்தில் இருந்தும் எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டை பற்றிய எமது கருத்தை தெரிவித்துள்ளோம்.

மொத்தத்தில் 68 அமைப்புகள் 66 பேச்சாளர்கள் இணைந்து நடத்திய இந்த மாநாடு

கூடி பொழியும் மேகங்களின் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்த்தோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கூடிக்கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநாட்டை பார்க்க முடிந்தது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்.,
பெண்கள் விடுதலை முன்னணி.,
திருச்சி.

 1. Very good post. In a post, which deals with overcoming divisions in the society based on caste, the favourite word of Periyarists, viz., Paarppaneeyam/Paarppanar is absent. Perhaps, it would only show that in the present milieu, paarppans do not play any role in stoking the divisions further, notwithstanding our pet accusation on them their great grandfathers only started the ghost. The current damage comes from the other castes, especially the forward among the so-called Other Backward Castes!

  • அய்யா விஞ்ஞானி, நீங்கள் மகிழ்ச்சியடைவதற்கு என்ன இருக்கிறது? சாதி ஒழிப்பு மாநாடு பற்றியும் எதிரியை குறி வைத்து தாக்காத அதன் தன்மை பற்றியும்தான் இங்கு பேசப்படுகிறதே தவிர சாதியத்தின் தோற்றம் மற்றும் இருப்பில் பார்ப்பனியத்தின் முதன்மைப் பங்கு குறி்த்ததல்ல இந்த கட்டுரையின் மையப் பொருள். உழைப்பாளி மக்களையும் சமூகத்தையும் காட்டுமிராண்டி காலத்தில் இருத்திய மூதாதைகளின் செயலை எளிமையாக ஒதுக்கிவிட்டு இன்று நாங்கள் அப்படியா? என்று நீங்களும் ஒதுங்கிக்கொள்ள முடியாது. மூதாதைகளின் செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானவரால் இப்படி எளிமையாக கடந்து செல்ல முடியாது. இன்று வரை சமூகத்தை சீரழிக்கும் இந்த அநீதிக்கெதிராக உறுதியாகப் போராட வேண்டும். நீங்கள் எந்த ரகம்?

 2. 68 அமைப்புகள் சேர்ந்து மாநாடு நடத்தினால் மட்டும் சாதியையும்,சாதி வெறியர்களையும் ஒழித்துவிட முடியாது சரியான அரசியல் பார்வையும், குர்மையான திட்டமும் தேவை அப்படி இல்லத பட்ச்சத்தில் இதுவே பா.ம.க போன்ற சாதி வெறியர்களுக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.

  எந்த ஒரு திட்டமும் இல்லமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 84 அமைப்புகள் நடத்திய மாநாடு நிலைதான் இந்த 68 அமைப்புகள் நடத்திய மாநாட்டிற்க்கும்

  • இந்த கட்டுரை குழுவாததை தான் காட்டுகிரது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக & தோழர் கசெறேல் விடுதலைஇல் உங்கள் அமைப்புகள் நடத்திய போராடம் பற்றி தெரியும். சமூக மாற்றத்தை விரும்பக்கூடியவர்களோடு முதலில் நட்புக்கொள்ளும் பண்பாட்டை வளர்த்துக்கொள்ங்கள்.

 3. பல்வேறு வகைப்பட்ட சமூக செயல்பாட்டுக் குழுவினர் (68 அமைப்பினர்) மாநாட்டில் கலந்துகொண்டதைப் பாராட்டுவோம். இன்னும் 100 அமைப்பினர் எண்ணிக்கை இருந்தாலும் வரவேற்போம். உங்களைப்போல புரட்சிகரப் பண்பாடு மிக்கவர்களாக அவர்கள் மாறவேண்டும் என்று நானும் விரும்புகிறேன். இப்படி காக்கை குருவி என்று விமர்சிப்பதால் அவர்கள் புரட்சிகரமான கொள்கையாளர்களாக மாறிவிடுவார்களா? சமூக மாற்றத்தை விரும்பக்கூடியவர்களோடு முதலில் நட்புக்கொள்ளும் பண்பாட்டை வளர்த்துக்கொள்வோம். மாநாட்டில் 150 பேர்தான் இருந்தார்கள் என்பதற்காகவும் பல அமைப்பினர் பேசி முடித்தவுடன் ஓடிவிட்டனர் என்பதாலும் இந்த மாநாட்டைப் பற்றி கட்டுரை எழுதி விமர்சிக்கவேண்டியதில்லை. இந்த முறையில் நீங்கள் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கப்போகிறீர்கள். சமூக நல செயல்பாட்டுக் குழுக்களிடம் வெறுபுணர்வைத்தான் இந்த அணுகுமுறை வளர்க்கும். இப்படிபட்டவர்களைத்தான் நாம் வளர்த்து புரட்சிகரத் தன்மையுள்ளவர்களாக மாற்றவேண்டும். பெரும்பாலான மக்கள் எந்தவிதமான சமூக அக்கறையும் ஈடுபாடும் இல்லாமல் சமூகத்தலையீடுகள் ஏதுமற்று வாழும் சூழலில் இப்படி ஊருக்கு ஒன்றிரண்டு காக்கைகளாவது கூடிக் கரையட்டும்.

 4. சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு சார்பாக 2014 அக்டோபா் ஐந்தாம் நாள் திருச்சியில் நடைபெற்ற ” சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு” குறித்து 2014 அக்டோபா் 16-ஆம் நாள் வினவு இணையதளத்தில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக வெளிவந்த விமா்சனத்திற்கு, சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் விளக்கத்தை முன்வைக்கிறோம் ……………………………………………………………………………………………………………………………
  திருச்சி மாநாட்டில் பெண்கள் விடுதலை முன்னணி சார்பாகத் தோழா்கள் கலந்து கொண்டதற்கு முதலில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  (1) வினவு விமா்சனம் —–

  ”சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்தக்கூட்டத்தில் இராமதாசு போன்றவா்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியைக் கலைப்பது பற்றியோ, அவா் கேள்விக்குப் பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப் படவில்லை. ஆதிக்க சாதிவெறியைத் தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவா்களை அம்பலப்படுத்தாமல்,பொதுவில் பேசுவதால் என்ன பயன்? திவ்யா-இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக இரண்டு ஊா்களையே கொழுத்தும் இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை எதிர்கொள்ளாமல், சாதி மறுப்புக் காதல் திருமணம் சாத்தியமா என்பதைப்பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை”.
  கூட்டியக்கத்தின் விளக்கம்
  திவ்யா-இளவரசன் காதல் திருமணத்தையொட்டி நடந்த சாதிவெறிக் கலவரத்திற்கு எதிராகத்தான் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு எனும் அமைப்பே உருவாகியது. தா்மபுரி வன்முறைக்கு எதிராக, சாதி மறுப்பு சனநாயக சக்திகளின் வலிமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று ஈரோட்டில் இக்கூட்டியக்கம் சார்பாக ” சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு” ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், காவல்துறை அம்மாநாட்டிற்குத் தடை விதித்தது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அத்தடையைத் தகா்த்தெறிந்து, அம்மாநாடு ஒருநாள் முழுவதும் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாடு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வழக்குமன்ற ஆணை கிடைத்தும் கூட, ஏறத்தாழ 3000-க்கும் மேற்பட்டோர் அம்மாநாட்டில் பங்கேற்றுச்சிறப்பித்தனா். இாமதாசு போன்ற சாதிவெறிச் சக்திகளை அம்பலப்படுத்துவதற்காகவே அம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தவிரவும், ” குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும், சாதிச்சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது” எனத் தீா்மானமும் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. பா.ம.க. போன்ற சாதி அரசியல் கட்சிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என்பதில் கூட்டியக்கம் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளது. அதனால்தான், ”ஈரோடு மாநாட்டின் மொத்தக்குரலும் ராமதாசுக்கு எதிராக இருந்தது. அதுவே இப்போது சாதியம் பேசும் ஆதிக்கவாதிகளுக்கு எதிராகத் திரும்பியிருப்பது என்னவோ உண்மை” எனக் குமுதம் ரிப்போா்ட்டா் 16.10.2014 இதழ் சரியாகக் குறிப்பிட்டிருந்தது.
  திருச்சி மாநாட்டில் பேசிய சில தோழா்கள் இராமதாசின் பெயரைக் குறிப்பிட்டே கடுமையாக விமா்சித்தனா். ஆனால், பேசிய தோழா்கள் ஒவ்வொருவரும் அதேபோல் இராமதாசின் பெயரைக் குறிப்பிடாவிட்டடாலும், சாதி ஆதிக்கவாதிகளை எதிர்த்துப் போராட வேண்டியதன் தேவை குறித்து வலியுறுத்திப் பேசினா். அனைத்துத் தோழா்களின் பேச்சையும் முழுமையாகக் கவனித்துக் கேட்டிருந்தால், இதைப் புரிந்து கொண்டிருக்க முடியும். சாதி ஆதிக்கவாதிகளை எதிர் கொள்ளாமல், காதல் மறுப்புத் திருமணம் சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவா். அந்தப் புரிதல், கூட்டியக்கத்திற்கும் உண்டு.

  ( 2 ) வினவு விமா்சனம் —-
  ”பெண் உரிமை பற்றிப் பேசும் மாநாட்டில், விரல் விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம்?”எனும் வழக்குரைஞா் அங்கயற்கண்ணியின் குமுறலுக்கு என்ன பதில்? எப்படிச் சரி செய்வது என்பதற்கு விடை இல்லை.
  கூட்டமைப்பின் விளக்கம்
  வினவு சுட்டிக்காட்டும் குறைபாட்டினைச் சுயவிமா்சனத்துடன் ஏற்றுக் கொள்கிறோம். எதிர்வரும் நாள்களில் இதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப் படும் என்பதையும் தெளிவு படுத்துகிறோம்.
  ( 3 ) வினவு விமா்சனம் ——

  ”அவரவா் தமது ஆதங்கத்தைக் கொட்டிச் செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது.இதில் பார்வையாளா்கள் அதை எடுத்துக் கொள்வது, எப்படிச் சாதி மறுப்பு என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம் விடை இல்லை.”
  கூட்டமைப்பின் விளக்கம்
  ஒரு கூட்டியக்கத்தின் மாநாட்டில் கருத்துரையாற்றும் தோழா்கள், குறிப்பிட்ட சிக்கல் குறித்து ஓரே மாதிரியாகத்தான் பேசுவார்கள் என எதிர்பார்க்கக்க முடியாது. அவரவா் தத்தம் நோக்கில் சிக்கலை அணுகுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால், சாராம்சத்தில், அடிப்படை நிலைப்பாட்டில் ஒன்றுபட்டு நிற்கிறார்களா என்பதுதான் முக்கியம். பங்கேற்ற அமைப்புக்கள் ஒரே மேடையில் கூடிச் சாதி மறுப்பிற்கும், சாதி ஆதிக்க எதிர்ப்புக்கும் தங்களது ஒன்றுபட்ட ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.சாதி வெறியா்கள் ஒன்றுபட்டு நிற்கும் இன்றைய சூழலில், சாதி எதிர்ப்புச் சனநாயக சக்திகளின் ஐக்கியமும், அதன் வெளிப்பாடும் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் பல்வேறு சாதி எதிர்ப்ப்பு அமைப்புக்களின் இத்தகைய ஒற்றுமை, சாதி வெறியா்களுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
  மேலும் சாதி மறுப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைவழிகள் குறித்துத் தீா்மானங்கள் குறிப்பிடுகின்றன.எனவே, ” சாதி மறுப்பு என்ற உயா்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள், சிக்கல்களை எப்படித் தீா்ப்பது என்பதற்கெல்லாம் விடை இல்லை” எனும் விமா்சனம் ஏற்புடையது அல்ல!
  ( 4 ) வினவு விமா்சனம் ——–
  ”இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்தக் கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது.சட்டம், கடுமையாக்கப்பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை என்ற வகையில்தான் மாநாட்டின் பேச்சும், தீா்மானமும் அமைந்துள்ளது.”
  கூட்டமைப்பின் விளக்கம்
  இந்தச் சமூக அமைப்பிற்குள்ளேயே முழுமையான மாற்றம் ஏற்பட்டு விடும் எனும் பாமரத்தனமான நம்பிக்கை கூட்டமைப்பிற்கு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவி நிற்கும் நிலவுடைமைச் சிந்தனை பற்றியும், ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யத் துடிதுடிக்கும் தரகா்கள் குறித்தும் எமக்குத் தகுந்த புரிதல் உண்டு. இந்தப் பிற்போக்கு அரசியலமைப்பில் சட்டத்தின் ஆட்சி குறிப்பிட்ட எல்லலைக்குள் மட்டுமே செலாவணியாகும். எனவே, சட்டத்தீா்வே ஒற்றை வழி எனும் மாயையும் இவ்வமைப்பிற்கு இல்லை.
  அதே சமயத்தில், சட்ட வழியில் சில உடனடித்தற்காலிகத் தீா்வுகளைப் பெற முடியும். கடந்த காலத்தில் மக்களுக்கு ஆதரவான சில சட்டங்களையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், அத்தகைய சட்டங்கள் ஏதோ ஆளும்வா்க்கத்தின தயவினால் கிடைத்தவை அல்ல. தொய்வுறா மக்கள்போராட்டத்தால் பறித்தெடுக்கப்பட்ட வெற்றிகள் அவை.
  சட்டவழியே ஒற்றைத் தீாவு என்பதும் தவறு. சட்டவழிப் போராட்டங்களே தேவையில்லை என்பதும் தவறு. சட்ட வழிப் போராட்டங்களும் மக்கள்திரள் போராட்டங்களும் இணைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
  எமது முயற்சிகளை ”சட்டவாதம்” என நக்கலடித்து இணையதளத்தில் தொடா்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சிலரை நாங்கள் நன்கறிவோம். சிறு துரும்பைக்கூடத் துாக்கியெறியாமல், வீட்டிற்குள் சுகமாக உட்கார்ந்து கொண்டு, செயல்படுபவா்களைக் கண்டு பொறாமையால் ”இணையப்புரட்சி” செய்யும் உதிரிகள் என அவா்களை நாங்கள் அமைதியாகக் கடந்து செல்கிறோம். ஆனால், பெண்கள் விடுதலை முன்னணி அத்தகைய அலைவரிசையில் சிந்திக்கவில்லை எனவும் நாங்கள் அறிவோம்.அதனால்தான் எங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக்கத் தோழமையுடன் விளக்கங்களைத் தருகிறோம்.அதே தோழமையைத் தோழா்களிடமும் எதிர்பார்க்கிறோம்.

  ”எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவா்கள்.சாதி மறுப்புத் திருமணத்திற்குப் பிறகும், மக்கள் மத்தியில் சாதிமறுப்பாளா்களாகவே வாழ்ந்து வருகிறோம். எங்களது பிள்ளைகளைச் சாதி மறுப்பாளா்கள் என்றே பள்ளியில் பதிவு செய்து வருகிறோம். சாதி வெறியா்களின் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறோம்” என நீங்கள் குறிப்பிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. உங்களைப் போலவேதான் இக்கூட்டமைப்பிலுள்ள பல தோழா்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறாா்கள் என்பதோடு, பல்வேறு கடுமையான எதிர்பார்ப்புகளுக்கிடையில சாதிமறுப்புத் திருமணங்களைத் தொடா்ந்து நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகத் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
  ”எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டைப் பற்றிய எமது கருத்தைத் தெரிவித்துள்ளோம்” என நீங்கள் குறிப்பிட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி.ஆனால், அடுத்த வரியிலேயே”கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநா்டடைப் பார்க்க முடிந்தது” என ஏகடியம் பேசுவது எத்தகைய தோழமை எனப் புரியாது திகைக்கிறோம். இருப்பினும், ”ஒருவா் பொறை (பொறுமை) இருவா் நட்பு” எனும் அனுபவமொழியைக் கருத்தில் கொண்டு எமது விளக்கத்தை அளித்துள்ளோம்.

  ”கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
  எள்ளற்க யார்வாயினும் நல்லுரையை ”
  எனும் பழமொழி நானுாற்றுப்பாடலை இறுதியாக உங்களின் மேலான பார்வைக்குச் சமா்ப்பிக்கிறோம்.
  ( காகம் கரைவதை விருந்தினா்கள் வருகையின் அறிகுறி என்று கருதி, அதனை அனைவரும் வரவேற்பா்.ஆகவே யாராக இருந்தாலும், அவா்கள் செயலில் நல்லனவற்றை இகழாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

  தோழமை மிக்க,
  சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு.
  அக்டோபா் 17, 2014.

 5. உங்கள் சென்னை வக்கீல்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கூட பத்து பேர் மட்டுமே நிற்பதாக தெரிவது காட்சிபிழையோ?. மாற்று அமைப்பினரை எண்ணிக்கை கொண்டு மதிப்பிடாமல் கருத்தில் நின்று பேசவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க