privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்

ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்

-

ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்…ஒரு உண்மையான கற்பனை!

(மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து – ரெங்கநாதன் தெருவை நோக்கி நரகாசுரனும், அவரது நண்பரும் பேசிக்கொண்டே நகர்ந்தனர்)

அசுரன்:
நண்பா, இது என்ன வழியா? இல்லை மனிதப் பலியா? இங்கிருந்து பார்க்கையில் எங்கெனும் தலைகளாகவே தெரிகின்றனவே!

நண்பர்:
அசுரா, இதுதான் தி.நகர் ரெங்கநாதன் தெரு, தீபாவளி பண்டிகைக்கு, துணி, எடுக்க இங்கே மனிதக் கூட்டம் அலைபாய்கிறது!

அசுரன்:
என்ன? இதுவரை இவர்கள் துணியே எடுக்கவில்லையா? இல்லை உடுத்தவில்லையா?

நண்பர்:
இல்லை நண்பா, பண்டிகைக்காக குடும்பத்துக்கே புதுத்துணி எடுக்கத்தான் இத்தனைக் கூட்டமும்!

அசுரன்:
ஏன், முன்னரே எடுத்து வைத்தால் ஆகாதா?

நண்பர்:
தீபாவளிக்காக புதுப்புது டிசைன்களில் வண்ணமயமான ஆடைகள் தங்களிடமிருப்பதாய் எல்லா பக்கமும் அசரிரீ ஒலிப்பதை தாங்கள் கேட்கவில்லையா? புதுப்புது ரகத்தை அனுபவிக்கத்தான் இத்தனை தள்ளுமுள்ளு!

அசுரன்:
என்ன ரகமோ? என்ன புதுசோ? ஒரு துணிக்காக தனது உடம்பையும், தோலையும் கசக்கிக்கொண்டு கந்தலாகி அலையும் இந்தக் கனவான்கள், நம் குலத்தைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்று கதை அளப்பது நல்ல வேடிக்கை!

நரகாசுரன்நண்பர்:
அசுரா, பார்த்து பக்கத்தில் நடப்பவர், நம்மை முறைத்துப் பார்க்கிறார். கோபத்தில் தாக்கிவிடப் போகிறார்.

அசுரன்:
அட! போ, நண்பா, இறங்கிப்போன பேண்ட்டை தூக்கிவிடவே அவரால் கையை அசைக்க முடியாமல், கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டு நெளிகிறார், இதில் தாக்கிவிடப் போகிறாராம்? நீ வேறு நடக்கிற கதையச் சொல்! நண்பா, என்ன நண்பா, திரும்பவும் முடியவில்லை தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமே, கூட்டம் வேறு நெருக்குகிறதே! புதுப்புது ரகத்தில் துணி எடுக்கிறார்களோ இல்லையோ, புதுப்புது ரகத்தில் அமுக்கி எடுக்கிறார்களே! நண்பா பக்கத்தில் வா! பீதியாய் இருக்கிறது.

நண்பர்:
அசுரா, இனி நாம் நினைத்தாலும் திரும்ப முடியாது, பேசமால் கால்களை மட்டும் முன்னோக்கி அசை, தானாக தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், சரவணா ஸ்டோர் வரும்போது மட்டும் சற்று எச்சரிக்கையாய் இரு, ஒரு கூட்டம் அப்படியே அப்பிக் கொண்டு போய் விடும், என்னைப்போல் நேர் திசையில் உடலைப் பொருத்திக் கொள்!

அசுரன்:
காலை மிதிக்கிறான், கழுத்தருகே சுடுமூச்சு விடுகிறான், இடுப்பில் பல்லாங்குழியே விளையாடுகிறான்! இதுதான் புத்தாடைகளின் சொர்க்கம் எனில், பேசாமல் நாம நரகத்திற்கே சென்றிருக்கலாம்! நல்ல இடத்திற்கு அழைத்து வந்தாய் போ! இருள் காடுகளைக்கூட நான், இனிமையாய் கடந்திருக்கிறேன், இந்தப் பொருள் காட்டைத்தாண்டி சேதாரமில்லாமல் போய்விட்டால் ஆச்சரியம் தான்!

நண்பர்:
நரகாசுரா நீயே நடுங்கலாமா? அங்கே பார் இந்தக் கூட்டத்திலும் பால் குடிக்கும் குழந்தையை பொட்டலம் கட்டிக்கொண்டு போகிறாளே, அந்த தாயை விடவா நீ துன்பத்தை அனுபவிக்கிறாய், அதோ பார், மேய்ச்சலின் அலைச்சலில் நாக்கு நீண்ட ஆடுகளைப்போல, பானிபூரியை இந்த களேபரத்திலும் ஓரமாய் நின்று விழுங்கும் அந்த கண்ணியமான குடும்பத்தலைவனை விடவா உனக்கு குலை நடுங்கி விட்டது! கார் ஓட்டும் போது குறுக்கே வந்து கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்து “இதுங்க இருக்கிற வரைக்கும் நாடு உருப்படாது!” என்று எரிச்சலடையும் இந்தியன், குறுக்கும், நெடுக்கும் ஓடி முதலில் பில் போட கையேந்தும் காட்சியைப்பார், அவனை விடவா நீ அசிங்கப்பட்டுவிட்டாய்… பேசாமல் வா நண்பா!

அசுரன்:
அது சரி, நண்பா, அங்கங்கே கடை வாசலில், சிலர் அசையாமல் நெடுநேரம் தவமிருக்கிறார்களே, அவர்களும் தேவர்களா?

நண்பர்:
தேவர்கள் மட்டுமல்ல, பிள்ளை, செட்டி, முதலி, பார்ப்பனன்… என்று பெருமை பேசும் எந்த சாதியாய் இருந்தாலும், உள்ளே குடும்பத்தை துணி எடுக்க அனுப்பிவிட்டு, இந்த வாசலில் போகிற வருபவர்களைப் பார்த்துக்கொண்டு நுகர்வு பலிக்காக காத்துக்கிடப்பதே கதி!

தி நகர் கூட்டம்அசுரன்:
அதோ நண்பா, அது என்ன ஒரு பாப்பா கையில் கொசு வலை போல உடுத்திச் செல்கிறாள், இன்னொன்று வேறு மாதிரி இருக்கிறது? இதுதான் புது டிசைன் என்பதா?

நண்பர்:
அசுரா, இதுதான் ரசகளி, மசகளி!

அசுரன்:
என்ன சுகருக்கு கம்மங்களி, பிகருக்கு மசகளியா?

நண்பர்:
அசுரா, ரெங்கநாதன் தெரு வழியாக உண்ண அழைத்து வந்ததே தப்பு போல? இங்கு வந்ததிலேந்து ஏதோ நீயும் எக்குத்தப்பாய் பேச ஆரம்பித்துவிட்டாய்.

அசுரன்:
பின்னே என்ன? இவ்வளவு காசு கொடுத்து ஒட்டுத்துணிப் போல இருப்பதுதான் டிசைனா? பார் அந்தப் பையனை, பிட்டத்தை காட்டும்படி பேண்ட்டும், மறைக்க உயரம் பத்தாத சட்டையும்!

நண்பர்:
அசுரா, அது துணிகளின் பற்றாக்குறை அல்ல, நாகரிகத்தின் மிகுதி! நீ என்னத்தக் கண்டாய்? அது போன வருசத்து புது மாடல்!

அசுரன்:
அய்யய்யோ, நாகரிகத்தின் வளர்ச்சியா? நினைத்தால் இந்த வருசத்து மாடல், எப்படி இருக்குமோ? உடைக்கு உடம்பு விளம்பரமாகும் நவநாகரிகம் இதுதான் போல! நல்ல வளர்ச்சி!

நண்பர்:
அதோ பார் அசுரா! ரெண்டு ஜட்டி விற்பதற்காக மனித உடலையே அரை நிர்வாணமாக விளம்பரம் செய்து வைத்திருக்கிறான்! இந்த முதலாளிகள் காசை பிடுங்க எதையும் செய்வார்கள்!

அசுரன்:
அதனால்தான் அடிக்கொருதரம் அந்த ஒலிப்பெருக்கியில் அக்கம், பக்கம் ஜாக்கிரதை! திருடர்கள் நவ நாகரிக உடை உடுத்தியிருப்பார்கள், கவனத்தை திசை திருப்பி களவாடுவார்கள்! என்று தொடர்ந்து விளம்பரங்கள் செய்கிறார்களோ?

நண்பர்:
அவர்கள் யாரைச் சொல்கிறார்களோ, சுற்றிப் பார்க்கையில் பெரிய பெரிய நகைக் கடைக்காரர்களையும், பலமாடி கட்டிட கடைகளையும் பார்க்கையில் அசல் திருடர்கள் நவநாகரிகமாக இருப்பது என்னவோ உண்மைதான்!

தி நகர் ஷாப்பிங் கூட்டம்அசுரன்:
நண்பா, நாட்டுல நல்ல காட்டையும், கால்நடைகளையும் அழிச்சு யாகம், தவம்னு தேவர்கள் செஞ்ச அட்டகாசத்தை தடுத்து ஒழிச்ச நம்பள தீவிரவாதிகள்னு சொன்னாங்க, காடு, மலைகளை முதலாளிகள் சுரண்டி அழிக்கறத எதிர்த்து போரடுற பழங்குடி மக்களை தீவிரவாதிகள்னு சொல்றாங்க, இவனுங்க என்னடான்னா ஒரு நாள் கூத்துக்கு, தீபாவளி விளம்பரத்துக்கு எத்தன மரங்கள அழிச்சு பேப்பர் விளம்பரம் பண்ணிருக்கானுங்க, விவசாயம் பண்ண கரன்ட் இல்ல, இங்க கலர் கலர் விளக்குபோட்டு எவ்வளவு கரன்ட்ட வீணாக்கி இருக்கானுங்க! இவனுங்க ராக்கெட், அணுகுண்டுன்னு காத்தக் கரியாக்கி, இயற்கையை நாசமாக்க, எத்தன பச்சபுள்ளைங்கள வெடி மருந்து கம்பெனியில கருக்கி இருக்கானுங்க! எத பத்தியும் கவலை இல்ல நான் ஒருநாள் ஜாலியா இருந்தா போதும், முதலாளிக்கு லாபமா இருந்தா போதும்னு விளம்பரப்படுத்துற இந்த தீபாவளி தீவிரவாதிகளைப் பார்த்தாலே பயமா இருக்கு நண்பா!

நண்பர்:
அசுரா! போராடி பெற்ற போனசையெல்லாம், மக்கள் தீபாவளி வழியாக முதலாளிக்கே திருப்பித் தரும் கொடுமையை என்னங்குறது! காசையும் இழந்து, சுயமரியாதையையும் இழந்து இப்படி கடைத்தெருவுல அலையறது ஜாலியாம்!

அசுரன்:
வாழ்க்கையே ஒவ்வொண்ணா காலியாவறது தெரியாமா, இதெல்லாம் ஜாலின்னு அலையுறாங்களே!

நண்பர்:
பத்துமணி நேரம் முதலாளியிடம் கசங்கி வெளியே வந்து, ஒரு அஞ்சிமணி நேரம் முதலாளிக்காக செலவு செய்ய அலையறதுதான் இங்க ஜாலி!

அசுரன்:
ஒரு வழியா நம்மை பிதுக்கி வெளியே தள்ளிட்டாங்க! அது சரி நண்பா, அது என்ன கடை? எல்லோரும் ஒரே நேரத்துல கைய நீட்டிக்கிட்டு நெருக்கியடிச்சுட்டு நிக்கிறாங்க!

நண்பர்:
ஹா… ஹா… நண்பா, அதான் டாஸ்மாக்! நம்ம தேவர்கள் குடிப்பாங்கள்ல சுராபானம், சோமபானம். அதுபோல இது பல ரக பானம்! தீபாவளி வியாபாரம் கலை கட்டுது பாருங்க! துணியும் எடுப்போம்! தண்ணியும் அடிப்போம்! தீபாவளிக்கு புதுப்புது சரக்கா டாஸ்மாக்கையே திணறடிப்போம்! என்று என்னமா கொண்டாட்டம் பாருங்க! கூட்டத்தப் பாருங்க!

அசுரன்:
தப்பு செஞ்சா சாமி கண்ணக்குத்துங்குறான். குடிக்கிறவன் டம்ளரையாவது தட்டிவிடக் கூடாதா? அது போகட்டும் எக்குத்தப்பா வெலய வச்சி மக்கள அலையவுடுற முதலாளிங்க கண்ணையாவது குத்துதா இந்த சாமி! எல்லாம் முழிச்சு முழிச்சு பாத்துகிட்டு கல்லா கட்டுறான். அநியாயத்துக்கு குடிக்கிறது, அநியாயத்துக்கு வெடிக்கிறது, அநியாயத்துக்கு திங்கிறது, அநியாயத்துக்கு மினுக்குறது அப்படி என்னதான்யா இருக்கு இந்த பண்டிகையில?

நண்பர்:
அசுரா, உனக்கு ஒன்னு தெரியுமா? இதெல்லாம் உனக்காகத்தான் செய்யுறோம்னு சொல்றாங்க! நரகாசுரன் தனக்காக இப்படியெல்லாம் கொண்டாட கேட்டுகிட்டான்னு உம்பேரச் சொல்லித்தான் இவ்வளவும் நடக்குது!

அசுரன்:
அடப் பாவிகளா! இவ்வளவு அநியாயத்தையும் என் தலையிலயா கட்டுறானுங்க!

நண்பர்:
தலைவா! எண்ணெய் தேய்ச்சி குளிக்கறதே உனக்காகத்தானாமே!

அசுரன்:
நல்ல வேளை ஒண்ணுக்குபோறதே உனக்காகத்தான்னு சொல்லாம போனாங்களே! நாட்டையே அமெரிக்காவுக்கு எண்ணெய் தேய்ச்சி முழுகிட்டு, எம்பேர ஏன்யா நாறடிக்குறாங்க? தெருதான் நெருக்கடியில இருக்குன்னு நினைச்சேன், தேசமே நெருக்கடியில இருக்குன்னு இப்பதான் புரியுது! நண்பா நடுரோட்ல நின்னு சொல்றேன் இது தீபா – வளி இல்ல, தீராத பழி!

– துரை.சண்முகம்

  1. என்ன ரகமோ? என்ன புதுசோ? ஒரு துணிக்காக தனது உடம்பையும், தோலையும் கசக்கிக்கொண்டு கந்தலாகி அலையும் இந்தக் கனவான்கள், நம் குலத்தைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்று கதை அளப்பது நல்ல வேடிக்கை!

  2. நரகாசுரா நீயே நடுங்கலாமா? அங்கே பார் இந்தக் கூட்டத்திலும் பால் குடிக்கும் குழந்தையை பொட்டலம் கட்டிக்கொண்டு போகிறாளே, அந்த தாயை விடவா நீ துன்பத்தை அனுபவிக்கிறாய், அதோ பார், மேய்ச்சலின் அலைச்சலில் நாக்கு நீண்ட ஆடுகளைப்போல, பானிபூரியை இந்த களேபரத்திலும் ஓரமாய் நின்று விழுங்கும் அந்த கண்ணியமான குடும்பத்தலைவனை விடவா உனக்கு குலை நடுங்கி விட்டது! கார் ஓட்டும் போது குறுக்கே வந்து கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்து “இதுங்க இருக்கிற வரைக்கும் நாடு உருப்படாது!” என்று எரிச்சலடையும் இந்தியன், குறுக்கும், நெடுக்கும் ஓடி முதலில் பில் போட கையேந்தும் காட்சியைப்பார், அவனை விடவா நீ அசிங்கப்பட்டுவிட்டாய்… பேசாமல் வா நண்பா!

  3. ஹி ஹி ஹி… சிரிச்சு வயிறு புண்ணா போச்சு… அல்லக்கைகள் அலப்பறை தாங்க முடியல நாராயணா..

  4. எல்லாம் நியாயம் தான். சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனா இதெல்லாம் நடக்கலைன்னா அது எத்தனை எழைக்குடும்பத்துக்கு நஷ்டம் ? எத்தனை தொழிலாலர்கள் வாழ்வு இழப்பு ! இதையும் கவனத்தில் கொள்ளுங்க. மேலும் நம்ம சிவகாசி தொழிலாளர்களை விழுங்க சீனப்பட்டாசுன்னு ஒரு அசுரன் காத்துகிடக்கிறானே அவனை பத்தியும் எழுதுங்க.

Leave a Reply to RAJ. V பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க