privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு - HRPC ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு – HRPC ஆர்ப்பாட்டம்

-

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு !

ராஜபக்சே, மோடி, சு.சாமியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

HRPC- thamilaka-meenavarkal

மிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்ததைக் கண்டித்து 3.11.2014 மாலை 4.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு HRPC-யின் துணைத் தலைவர் வழக்குரைஞர் தோழர் நடராஜன் தலைமை தாங்க, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய சமநீதி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் ராஜேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம்.

தமிழர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இதில் இலங்கை நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றமும் அரசும் கூட்டு சேர்ந்து சதி செய்துள்ளதாக சந்தேகிக்கிறேன். இதே தூக்குத் தண்டனையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. 600 மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அந்த அநியாயத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது வழக்கு. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு உள்ளது. அனைவரும் சேர்ந்து போராடா விட்டால் தீர்வு கிடைக்காது.

தோழர் குருசாமி, வி.வி.மு. உசிலை

5 மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கிறது. போதை மருந்து கடத்தியதாகக் கூறுவது பொய். மீனவர்களை கடலுக்குள் நுழைய விடாமல் தடுக்க இப்படிப்பட்ட பொய்வழக்குகளை கையில் எடுத்துள்ளது, அரசு. மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்துவதில் இரண்டு அரசுகளும் குறியாகவே இருக்கின்றன. மீன் பிடிப்பதை தடுப்பது, ஆயுதம் கொண்டு தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, படுகொலை செய்வது, பொய்வழக்கு போடுவது என்று இலங்கை அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசு உறுதுணையாகவே இருக்கிறது. சு.சாமியின் செயல்பாடுகள் அதைத் தான் சொல்கிறது. இதில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியாவின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்ட தமிழக மீனவர்களைப் பலியிடுகிறது இந்திய அரசு.

வழக்குரைஞர் வாஞ்சிநாதன், உதவிச் செயலர், HRPC

மீனவர்கள் பிரச்சனை என்பது கடந்த 35 ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. இதனுடைய உண்மைத் தன்மை பற்றி பேச எந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லை. வாக்கு வாங்கி அரசியல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு என்பதே ஒரு பொய் வழக்கு. அதை மறைத்து விட்டு, இதற்கு எதிராகப் போராடினால் தவறு என்று சு.சாமி சொல்கிறார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், மீனவர்களை அச்சுறுத்தப் பார்க்கின்றனர். கடலிலிருந்து அப்புறப்படுத்தப் பார்க்கின்றனர். முன்பு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித் தாக்கினர். இன்று மீனவர்களது நிலையைக் காட்டித் தாக்குகின்றனர். ஆனால் இந்தியாவின் நிலையோ வேறாக இருக்கிறது. செங்கல்பட்டிலுள்ள அகதிகளில் ஒரு சிலரைப் பிடித்து, புலிகள் எனக் கூறி பொய் வழக்குப் போட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டிக்கின்றனர்.

தமிழக மீனவர்களை எல்லை தாண்டிய குற்றவாளிகள் போல் சித்தரித்து துன்புறுத்துகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்க தேச மீனவர்கள் எல்லையைத் தாண்டினாலும் நாமும் விடுதலை செய்கிறோம். அவர்களும் இந்திய மீனவர்களை விடுதலை செய்கின்றனர். இலங்கை மட்டும் பொய் வழக்குப் போட்டு தூக்குத் தண்டனை கொடுக்கிறது. இதை ஏன் இந்திய அரசு கேள்வி கேட்பதில்லை.

அதே நேரத்தில் டக்ளஸ் தேவானந்தா, நீதிமன்றத்தில் ஆராகத் தேவையில்லை என்று இந்திய நீதிமன்றம் கூறுகிறது. போபால் விஷவாயுப்படு கொலையின் நாயகன் ஆன்டர்சன்னுக்கும் இப்படியே கூறியது. இங்கே மீனவர்களுக்குப் பதிலாக பார்ப்பனர்கள் கொல்லப்பட்டிருந்தால் இந்த அரசு சும்மா இருந்திருக்குமா? மீனவர்கள் ஏழைகள். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், எனவேதான் அரசு வேடிக்கை பார்க்கிறது. மீனவர்களின் உரிமைகளைக் காக்க நாமே ஒரு போராட்டக் குழு அமைத்துப் போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கதிரவன், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மீனவர்கள் போர்க்குணமிக்கப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். போராட்டத்தின் ஊடே அவர்கள் தமிழக முதல்வர் ஓ.பன்னீரைப் பார்க்கின்றனர். தங்களது கோரிக்கைகளைச் சொல்கின்றனர். ஓ.பி.எஸ் ஒரு சிறைக்கைதி. இவர் எப்படி இவர்களது பிரச்சனையைத் தீர்ப்பார். வேண்டுமானால் கருணாநிதி, ஜெயலலிதா போல கடிதம் எழுதுவார். எல்லாக் கடிதங்களும் குப்பைக் கூடைக்குள் போனது போல இதுவும் போகும். அவ்வளவு தான். வைகோ முழங்குகிறார் “மோடி அரசே, நீங்கள் மீனவர் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் நீங்கள் அதன் எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்”. என்ன எதிர் விளைவு. கூட்டணியில் சேரமாட்டேன். அவ்வளவு தானே?

கனவுகளில் சஞ்சரிக்கும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஓட்டுப் பொறுக்குவதில் தான் குறியாக இருக்கிறது. அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை. பா.ஜ.க வின் கொள்கையே அகண்ட பாரதம் தான். அந்த அகண்ட பாரதத்திற்குள் இலங்கையும் வருகிறது. எனவே தான் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கச் சொல்கிறார் சு.சாமி. மோடியும் ராஜபக்சேயும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இருவருமே பாசிஸ்ட்கள். மீனவர்களின் படகுகளை விடாதே என்று சொல்லும் சு.சாமியைக் கண்டிக்காத தமிழிசை தூக்குத் தண்டனைக்கு எதிராக இலங்கையில் சிறந்த வக்கீலை நியமிக்கப் போவதாகச் சொல்கிறார். மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை என்பது தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட மறைமுக யுத்தம் என்பது அவருக்குப் புரியவில்லையா? ஓட்டுப் பொறுக்கிகள் பேசுவார்கள், ஆனால் எதுவும் நடக்காது, நாம் தான் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

லயனல், மாவட்ட செயலர் HRPC

இலங்கையின் சட்டப்படி போதை மருந்து கடத்தலுக்குத் தூக்கு கிடையாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொய் வழக்குப் போட்டதோடு, சட்டத்தை மீறி தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மௌனத்திற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவின் மூலதன விரிவாக்கத்திற்கு இலங்கையைப் பயன்படுத்த இந்தியா நினைக்கிறது. சீனாவுக்கு எதிராகத் தெற்கு ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்காவின் அடியாளாக மோடி அரசு செயல்படுகிறது. இலங்கையில் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைப் பாதுகாப்பதே மோடி அரசின் முதற் பணி ! எனவே இலங்கை என்ன செய்தாலும் இந்தியா கண்டு கொள்ளாமல் தனது மூலதனத்தை விரிவாக்கம் செய்வதிலேயே கவனமாக இருக்கிறது.

இந்த வழித் தடத்திலிருந்து பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் விலகிச் சொல்லாது. தூக்குத் தண்டனையைப் பொறுத்த அளவில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று ராஜபக்சே கூறுகிறார். மோடியும் அதைத்தான் சொல்கிறார். நாளை இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தண்டனை உறுதிச் செய்யப்பட்டால் அப்பொழுது சட்டம் தன் கடமையைச் செய்தது என்று தான் சொல்வார்கள். இந்தக் கூட்டுச் சதியில் சட்டம் என்ன செய்யும். தமிழிசையையும், பொன்னாரையும், எச்சி ராஜாவையும் பார்த்துப் பசுவதால் என்னபயன் விளையப்போகிறது? எல்லாத் துயரங்களுக்கும், பா.ஜ.கவும் காங்கிரசும் தான் காரணம் என்று இவர்களுக்குத் தெரியாதா?

சு.சாமி என்கிற ஒரு சர்வதேச அரசியல் தரகனை அருகில் வைத்துக் கொண்டு, மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுவேன் என்று தமிழிசை பேசுவது நகைப்புக்குரியது. இது ஒரு அப்பட்டமான ஓட்டுப் பொறுக்கி அரசியல். சு.சாமியும், ராஜபக்சேயும் கை கோர்த்துக் கொண்டு தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்கிற பா.ஜ.க. மீனவர்கள் பிரச்சனையைத் தீர்த்து விடுமா?

இலங்கையின் தர்மபாலாவின் 150வது பிறந்த தினத்தன்று, இந்தியா தபால் தலை வெளியிடுகிறது. தர்மபாலா யார்? தமிழர்களை ஒழித்துக்கட்டு என்று போதித்தவர். புத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. சிங்கள இனத்தைத் தவிர வேறு இனம் இலங்கையில் இருக்கக்கூடாது என்று கூறிய மதவெறி பிடித்தவர். அந்த மத வெறியருக்குத் தபால்தலை.

தர்மபாலாவை போற்றுகிற இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கசக்கிறது. ஏன் ஏனென்றால் தமிழ் மரபு என்பது பார்ப்பனிய எதிர்ப்பு மரபு. ஜெயலலிதா ஊழல் குற்றச் சாட்டில் ஜெயிலுக்குப் போனவுடன், ஆயிரக் கணக்கான அடிமைகள் மொட்டை போட்டனர், மண்சோறு சாப்பிட்டனர், உருண்டனர், புரண்டனர், கோயில்களில் எல்லாம் யாகங்கள் நடத்தினர். தமிழ்நாட்டையே சட்டவிரோதப் போராட்டங்களால் காவல்துறை உதவியுடன் ஸ்தம்பிக்கச் செய்தனர், இந்த அரசியல் பொறுக்கிகள். இப்போது அந்தத் தமிழர்கள் எங்கே போனார்கள். தூக்குத் தண்டனைக்கு எதிராக ஏன் போராட வரவில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல் எந்தத் தீர்வையும் கொண்டுவராது. தமிழர்களாகிய நாம் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வீதியில் இறங்கிப் போராடுவதின் மூலம் மட்டுமே விடியலைக் கொண்டு வர முடியும்.

நடராஜன் து.தலைவர் HRPC

சர்வதேச அரங்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்த பல நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால் ராஜபக்சே என்ற இந்த ரத்தக்காட்டேரி தமிழர்களின் ரத்தம் குடிக்கத் துடிக்கிறது. வீரவசனம் பேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் இன்று அடக்கி வாசிக்கின்றனர். தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை அரசு சுட்டுக் கொன்ற பின்பும் ஏன் இந்த மௌனம். பாட்டாளி வர்க்கச் சிந்தனையை உயர்த்திப் பிடித்துப் போராடுவதின் மூலமே மோடிக்கும் சு.சாமிக்கும் பாடம் கற்றுத் தர முடியும்.

தினகரன் செய்தி
தினகரன் செய்தி

ஆர்ப்பாட்டம் ! ஆர்ப்பாட்டம் !
அப்பாவி மீனவர்களுக்கு
அநீதியாக விதிக்கப்பட்ட
தூக்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
HRPC ஆர்ப்பாட்டம் !

பொய் வழக்கு ! பொய் வழக்கு !
அப்பாவி மீனவர்கள் மீது
போதைப் பொருள் கடத்தியதாக
பொய் வழக்கு ! பொய் வழக்கு !

பதில் சொல்! பதில் சொல்!
மீனவர் பிரச்சனையை
உடனே தீர்ப்பேன்னென்ற
மோடி அரசே பதில் சொல்!
மக்களுக்கு பதில் சொல் !

தி இந்து செய்திசுட்டுக் கொலை ! சுட்டுக் கொலை !
அறுநூறு மீனவர்கள்
இதுவரை சுட்டுக் கொலை !
சின்ன நாடு இலங்கைக்கு
‘வல்லரசாகும்’ பெரிய நாடு
இந்திய மீனவர்களை
சுட்டுக் கொல்லும் தைரியம்
வந்ததெப்படி? வந்ததெப்படி?

தைரியம் எப்படியென்றால்
ராஜபட்சே அரசுக்கு
இந்திய அரசே துணை நிற்குது!

காங்கிரஸ் அரசோ ! பிஜேபி அரசோ
எல்லாமே ஒன்றுதான் !
தமிழ் மக்கள் விரோதிதான் !

ராஜபட்சேவுக்கு பாரத ரத்னா
கேட்குறார் சு.சாமி
பிஜேபியின் மூத்த தலைவர்
நடிக்குது ! நடிக்குது !
தமிழ் நாடு பிஜேபி
நடிக்குது ! நடிக்குது !

தேர்தலுக்கு முன்னால்
வாய் பிளக்கப் பேசுனாரு
பிரதமர் நரேந்திர மோடி !
ஆனா இப்பப் பேசல !
5 பேர் தூக்கிற்கு வாயே தெறக்கல !
வாயில் என்ன புற்று நோயா !
ஆரிய சிங்கள இனப்பற்றா !

பதில் சொல் ! பதில் சொல் !
மோடியே பதில் சொல் !
பிஜேபியே பதில் சொல் !

குஜராத் முதலாளிக்கு
சோமாலியா கடலிலே
பிரச்சனை வந்தபோது
கடற்படையை அனுப்பின !

ஆஸ்திரேலியா நாட்டிலே
பணக்கார மாணவர்களுக்கு
பிரச்சனை வந்தபோதுமத்திய அரசே துடித்தது !
சுப்ரீம் கோர்ட்டு பதறியது !

ஆனா இப்பப் பேசல !
மத்திய அரசு பேசல !
சுப்ரீம் கோர்ட்டும் பேசல !
மீனவர்கள் ஏழை என்பதால்
எவனுமே பேசல !

தைரியம் இருக்கா?
மோடிக்கு தைரியம் இருக்கா?
இலங்கை உடனான
தூதரக உறவுகளை
துண்டிக்கத் தைரியம் இருக்கா?

பொருளாதாரத் தடை விதிக்க
பிஜேபிக்குத் தைரியம் இருக்கா?
பிஜேபிக்கு ஆதரவாக
பிரச்சாரம் செய்த
வைகோவே – ராமதாசே
விஜயகாந்தே பதில் சொல் !

துணை நிற்போம்! துணை நிற்போம் !
ஏழை மீனவர்களுக்கு
தமிழக மக்கள் துணை நிற்போம் !
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை
நம்ப மாட்டோம் ! நம்ப மாட்டோம் !
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !
மீனவர்களுக்கு ஆதரவாக
மக்களே போராட்டத்தை
கட்டியமைப்போம் !

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை