காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து…. கிருஷ்ணகிரியில்
விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து 03.12.2014 அன்று கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகே விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

‘காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக’ என்று கர்நாடக அரசு சொல்கிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணைகள் கட்டவிருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக கர்நாடக அரசு தற்போது 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துவருகிறது. இதில் 52 சதவீதம் நீர் வீணாக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறியிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்தினாலே பெங்களூருக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்துவிடலாம். மேலும், பெங்களூரில் மால்கள், செயற்கைக் கடல், தீம்பார்க்குகள், எம். என். சி -கம்பெனிகள், நட்சத்திர விடுதிகள் போன்றவை பெருமளவு தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. இதனால்தான் காவிரியிலிருந்து வரும் நீர் பெங்களூர் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.

மேலும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டங்களை பாலைவனமாக்க கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி மீத்தேன் எடுக்கும் பணிகளை செய்துவருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதன்மூலம் தற்போது காவிரியில் வருகிற நீர் தடுக்கப்படுமானால் அது மீத்தேன் எடுப்பதற்கு உதவியாகவும் அங்கிருந்து ஒரு கோடி மக்களை வெளியேற்றுவதையும் எளிதாக்கும் என்பதால் அணை கட்டும் திட்டம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சதித்திட்டம். இதனை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். நீதிமன்றங்களையும், மோடி அரசையும் நம்பி ஏமாறக்கூடாது என கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சந்தோஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி பொறுப்பாளர் தோழர் முருகேசன் மற்றும் இச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றியத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்
புஜ செய்தியாளர்,
03.12.2014, கிருஷ்ணகிரி.