Sunday, January 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்காவிரி குறுக்கே அணை கட்டாதே - கிருஷ்ணகிரி ஆர்ப்பாட்டம்

காவிரி குறுக்கே அணை கட்டாதே – கிருஷ்ணகிரி ஆர்ப்பாட்டம்

-

காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து…. கிருஷ்ணகிரியில்
விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து 03.12.2014 அன்று கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகே விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தோழர் முருகேசன்
ஆர்ப்பாட்டத் தலைமை தோழர் முருகேசன்

‘காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக’ என்று கர்நாடக அரசு சொல்கிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணைகள் கட்டவிருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக கர்நாடக அரசு தற்போது 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துவருகிறது. இதில் 52 சதவீதம் நீர் வீணாக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறியிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்தினாலே பெங்களூருக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்துவிடலாம். மேலும், பெங்களூரில் மால்கள், செயற்கைக் கடல், தீம்பார்க்குகள், எம். என். சி -கம்பெனிகள், நட்சத்திர விடுதிகள் போன்றவை பெருமளவு தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. இதனால்தான் காவிரியிலிருந்து வரும் நீர் பெங்களூர் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.

தோழர் சந்தோஷ்
கண்டன உரையாற்றும் தோழர் சந்தோஷ்

மேலும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டங்களை பாலைவனமாக்க கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி மீத்தேன் எடுக்கும் பணிகளை செய்துவருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதன்மூலம் தற்போது காவிரியில் வருகிற நீர் தடுக்கப்படுமானால் அது மீத்தேன் எடுப்பதற்கு உதவியாகவும் அங்கிருந்து ஒரு கோடி மக்களை வெளியேற்றுவதையும் எளிதாக்கும் என்பதால் அணை கட்டும் திட்டம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சதித்திட்டம். இதனை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். நீதிமன்றங்களையும், மோடி அரசையும் நம்பி ஏமாறக்கூடாது என  கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சந்தோஷ் பேசினார்.

கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி பொறுப்பாளர் தோழர் முருகேசன் மற்றும் இச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தோழர் முனியப்பன்
நன்றியுரையாற்றும் தோழர் முனியப்பன்

இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றியத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புஜ செய்தியாளர்,
03.12.2014, கிருஷ்ணகிரி.

  1. //மேலும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டங்களை பாலைவனமாக்க கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி மீத்தேன் எடுக்கும் பணிகளை செய்துவருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதன்மூலம் தற்போது காவிரியில் வருகிற நீர் தடுக்கப்படுமானால் அது மீத்தேன் எடுப்பதற்கு உதவியாகவும் அங்கிருந்து ஒரு கோடி மக்களை வெளியேற்றுவதையும் எளிதாக்கும் என்பதால் அணை கட்டும் திட்டம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சதித்திட்டம்//காவிரியில் இன்னுமோர் அணை கட்டக்கூடாது தான். அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் சரியே. அதே போல மீதேன் எடுக்க திட்டம் போடுவதைத் தாங்கள் எதிர்கிறீர்கள்; உங்கள் பதிவுகளில் காரணங்களை சொல்வீர்கள்; சரி. ஆனால் இதை இரண்டையும் கோர்ப்பது தான் சரி அல்ல. என்னமோ உலகத்தில் உலகத்தில் உள்ள அனைத்து கார்பொரேட் முதலாளிகளும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் தஞ்சை விவசாயி நிலங்களை பயனில்லாமல் செய்து ஆட்டையைப் போட சதி செய்வது போல எழுதுகிறீர்.. எல்லோரும் தற்குறிகள்; தம் வழியில் அடுத்தவனை அடித்துப்போட்டு பிடுங்கிக்கொண்டு லாபம் பார்ப்பவர்கள். அவனவன் தன் பங்குக்குக் கொள்ளை அடிப்பர். சதி சொல்வதெல்லாம் டூ மச்.

    • விக்னானி அவர்கள், காவிரியின் குறுக்கே அணை கடுவது தொடர்பான இதற்கு முன்பு வெளிவந்த பதிவுகளையும் மீத்தேன் எடுப்புத் திட்டம் குறித்த கட்டுரைகளையும் படிக்காமல் சொல்கிறார் என்றே தோன்றுகிறது. மேலும், கார்ப்பரே முதலாளிகள் சமூக வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு மேற்கொள்ளும் நீண்ட நெடிய திட்டங்கள், நிலக்கரி இரும்புத் தாது கொள்ளையடிப்பட்தில் நடந்துள்ள பல்வேறு ஊழல்கள் சதித் திட்டங்கள் ஆகியவற்றையும் அறியாதவறாக இருப்பார் போலும்.

  2. அய்யா கருநாடகதையும் கேரளத்தையும் அணை கட்ட கூடாது என் எதிர்க்கிறோம்.ஆனால் அதற்கு பதிலாக கல்லணை தாண்டி வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுக்க ஒரு தடுப்பனையாவது கட்ட சொல்லி போராடலாம்.இந்த ஆண்டு மழை அதிக அளவு பெய்தும் நீராதாரங்களை செப்பனிடததால் எல்லா தண்ணீரும் கடலுக்கு செல்கிறது.தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு.எட்டு அடி ஆழமுள்ள இதில் எழு அடி மணல உள்ளது.நான் 1990 ல் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்து இதை தூர் வார கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற வில்லை.இந்த ஆண்டும் ஏராளமான தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றுகொண்டு இருக்கிறது.எனவே நாம் மற்றவர்கள் அணை கட்டுவதை தடுப்பதோடு நில்லாமல் நாமும் அணை கட்ட அல்லது இருக்கும் அணைகளை தூர்வார போராட வேண்டும். -சங்கர் திருநெல்வேலி

  3. திருநெல்வேலி சங்கர் அவர்களுக்கு,
    உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுப்பது என்பது குறித்தே அறிவியல் பூர்வமான பார்வையும் தேவையும் உள்ளது. இதனை அரசு ஏற்றுக்கொண்ட அளவில் இன்றுவரை ஏன் நிறைவேற்றவில்லை? இதற்கு முக்கியக் காரணம் தற்போதை அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் விவசாயத்தை அழித்துவரும் கிரானைட் கொள்ளை, மணற்கொள்ளை, ரியல் எஸ்டேட் போன்ற வேலைகளைத் தான் செய்துவருகின்றனர். அல்லது அந்த கொள்ளையர்களுக்கு பக்கபலமாக உள்ளனர். அதனால், இது போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை அவர்களால் மேற்கொள்ள இயலாது. மேலும், உபரிநீர் பயன்படுத்தும் திட்டங்களை அமுல்படுத்தாமல் இருந்தால்தான் அவர்களது தொழில்கள் நடக்கும். இதுதான் அவர்களது அரசியல் அது சார்ந்த உளவியலும் கூட! இதே விசயத்தை காவிரி நீர் சார்ந்த பிரச்சனையில் தஞ்சை டெல்டா மாவட்டங்களைத் தவிர இவர்கள் வேறு எங்கேயும் அடையாளப் போராட்டங்கள் கூட நடத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏறக்குறைய வட மாவட்டங்கள் அனைத்திலும் டெல்டா மாவட்டங்களைத் தாண்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எமது தோழர்கள் தான் போராடி வருகின்றனர். இன அரசியல் பேசுபவர்களும் வாய்மூடி மௌணிகளாக இருப்பதற்கு காரணம் ரியல் எஸ்டேட் தொழிலையும் மணற்கொள்ளையையும் அவர்களது அணிகள், தலைவர்கள் செய்வதை தடுப்பதில்லை. இந்த சமரசம் நடைமுறையில் இதுபோன்ற கோரிக்கையை சோறுதிங்கும் அனைவரது பிரச்சனையாக பார்க்க வைக்காமல், சுருக்குகின்றனர். ஒரு வகையில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எதிராக கை கோர்க்கின்றனர்.

  4. ஆண்டுக்காண்டு விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதுதான் பொருளாதாரத்தின் அவசியமுமாகும். அவர்கள் திறன்களைப் பெற்று உற்பத்தி அல்லது சேவைத் துறையில் வேலை பெறவேண்டும். நாட்டின் 20% அல்லது அதற்குக்கீழ்தான் விவசாயத்தில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், பிறருக்கும் நல்ல வேலை இருக்கும். விவசாயத்திலிருந்து வெளியேறிய மக்கள் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு ஒரே வருத்தமாக செண்டிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன? அவர்கள் அனைவரும் சரியான செயலைச் செய்திருக்கிறார்கள் என்று பாராட்டவேண்டும்.

    விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் சரியான திறன் இல்லாவிட்டால் நிச்சயம் கஷ்டப்படுவார்கள். எனவேதான் விவசாயக் கூலிகளாக இருப்போர் தம் பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து வேறு வேலைகளை நோக்கி அனுப்பவேண்டும்.

    http://www.badriseshadri.in/2014/10/blog-post_23.html

    • சுரேஷ் ராம், முதலில் இவர் கொடுத்திருக்கும் லிங்கில் இவர் கூறியிருக்கும் கருத்துகளுக்கு வந்துள்ள எதிர் கருத்துக்களுக்கு பதிலளிக்கட்டும். பிறகு இங்கு வந்து பேசட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க