Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்வி"வாத்தியாரை போடு" - கல்வித் துறையை பணிய வைத்த போராட்டம்

“வாத்தியாரை போடு” – கல்வித் துறையை பணிய வைத்த போராட்டம்

-

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1981-82ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட போது, நியமிக்கப்பட்ட அதே அளவு ஆசிரியர்கள்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதும் உள்ளனர்.

+1,+2 வகுப்புகளில்

  • 853 மாணவிகளுக்கு ஒரு தமிழ் ஆசிரியர்
  • 622 மாணவிகளுக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர்
  • 622 மாணவிகளுக்கு ஒரு வேதியல் ஆசிரியர்
  • 415 மாணவிகளுக்கு ஒரு கணித ஆசிரியர்

தான் உள்ளனர். பாடம் நடத்துகின்றனர்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும், கால தாமதமாகுமெனில் இதர அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணியிலாவது உடன் நியமிக்குமாறு மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு 10.07.2014ல் மனு அனுப்பப்பட்டது. மேலும் பெற்றோர் கையொப்பமிட்ட 300 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 07.08.2014 அன்று அனுப்பப்பட்டது.

ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
போராட்டமே அதிகார வர்க்கத்தை பணிய வைக்கும் – ராஜஸ்தான் பீம் நகரில் தமது பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பேரணியாகச் சென்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள். (படம் : நன்றி thehindu.com)

அப்பள்ளியின் பெற்றோர்களுடன் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாற்றுப் பணியில் ஒரு வாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்டக் கல்வி அலுவலர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் பொதுத் தேர்வில் +2 மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்ததில் 80 சதவீத மாணவிகள் 50 சதவீத மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றுதான் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் சேர முடியாமல் உள்ளனர். பள்ளிவாரியாக +2 மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் பற்றி கல்வித்துறை பெருமையாக பேசினாலும் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவிகள் தரமான தேர்ச்சியின்றி உயர்கல்விக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக தனியார் கல்லூரிகளுக்கு அதிகக் கட்டணம் செலுத்தி சேர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் கல்வி தனியார்மயக் கொள்கைதான் காரணம்,  காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பது காட்டுமிராண்டித்தனமானது. அனைவருக்கும் சமமான, தரமான, இலவசக் கல்வியை தாய்மொழியில் பெறுவதற்கு பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராட வேண்டும்.

பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்பது எமது விருப்பமோ, வேண்டுதலோ அல்ல. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கபடாததால் வேறு வழியில்லாமல்தான் பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையின் தடித்த தோலுக்கு அப்போதாவது உறைக்கிறதா என்று பார்ப்போம்.

govt-girls-school-posterகல்வித்துறையின் தடித்த தோலுக்கு உணர்ச்சியீட்ட வருகை தாரீர்” என்ற முழக்கத்தோடு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் 09.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம்.

பாஸ் ஆனால் மட்டும் போதுமா? நல்ல மார்க் எடுக்க வேண்டாமா?

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1, +2 வகுப்பில் 800 மாணவிகளுக்கு ஒரே ஆசிரியர்
போதுமான ஆசிரியரை நியமிக்க எத்தனை ஆண்டுகள் முறையிடுவது?

மறியல் போராட்டம்

9-12-2014 செவ்வாய், காலை 9 மணி,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு, விருத்தாசலம்

தற்போது எங்களது போராட்ட நிர்ப்பந்தத்தினால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து கடலூர் முதன்மைக் கல்லூரி அலுவலர் அவர்கள் கீழ்க்கண்ட ஆசிரியர்களை தற்காலிக மாறுதலில் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு +1, +2 வகுப்பிற்கு பணியமர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.

1. திரு. M. கிருஷ்ணமூர்த்தி (கணித ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
2. திரு. D. அன்பழகன் (தமிழ் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
3. திருமதி J. சசிகலா (இயற்பியல் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
4. திரு. S. மரியக் குழந்தை (வேதியல் ஆசிரியர்) அரசு மேல்நிலைப் பள்ளி, இருப்பு

மேற்கண்ட ஆசிரியர்கள் தற்போது விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்காலிகமாக ஆசிரியர்களை பணியமர்த்தியதைத் தொடர்ந்து 09.12.2014 அன்று நாங்கள் நடத்த இருந்த மறியல் போராட்டத்தினை தற்காலிகமான ஒத்தி வைத்துள்ளோம். நிரந்தரமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். தவறினால் போராட்டம் தொடரும்.

ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
தெருவில் இறங்கி போராடும் ராஜஸ்தான் பள்ளி மாணவிகள் (படம் : thehindu.com)

மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட போராட பெற்றோர்கள் சங்கத்தில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம். தொடர்பு : 9345067646, 9443264315