Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

-

மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு (People’s Art and Literary Association)
விவசாயிகள் விடுதலை முன்னணி – தமிழ்நாடு (Peasants Liberation Front)

காளியப்பன் – மாநில இணைப் பொதுச்செயலாளர், ம.க.இ.க
மாரிமுத்து – மாவட்ட அமைப்பாளர், வி.வி.மு

1, அண்ணா நகர், சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 1
செல் : 9443188285

பத்திரிகை செய்தி

மிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் இரு அணைகளைக் கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காவிட்டாலும், அணை கட்டப்படும் என கர்நாடக அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். அணை கட்ட சட்டவிரோதமாக உலகளாவிய ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாதா மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை விட மறுக்கிறது. தற்போது திட்டமிடப்படும் அணை தமிழகத்திற்கு நீர் வரும் அளவை கணக்கிடும் இடமான பிலிகுண்டுலுவிற்கு சற்று தொலைவில்தான் கட்டப்பட இருக்கிறது. இவ்வணை கட்டப்பட்டால், டெல்டா விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்படும். டெல்டா மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.

தஞ்சை ரயில் மறியல்
மேக்கே தாட்டு அணையை எதிர்த்து ம.க.இ.க, வி.வி.மு தஞ்சையில் நடத்திய ரயில் மறியல் (கோப்புப் படம்)

ஆனால், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் அணை கட்டப் போவதாக சூழ்ச்சியான முறையில் வாதிடுகிறது, கர்நாடக அரசு. மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்கவும் கூடாது. ஆனால், கர்நாடக அரசின் நோக்கம் அதுவல்ல.

அணை கட்டும் திட்ட விவரங்கள் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை என்பதையே நிரூபிக்கின்றன. இந்தியாவிலேயே குடிநீரை வீணாக்கும் இரண்டாவது நகரமான பெங்களூருவில் 52 சதவீத குடிநீர் வீணாக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த ஏரிகள் பாதியாகச் சுருங்கி உல்லாச, ஆடம்பர விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வணிகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், ஆடம்பர நீர் விளையாட்டு பூங்காக்கள் ஆகியோர் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த அணை நீர் பயன்படும். கடும் குடிநீர் வரியால் அவதிப்படும் பெங்களூரு மக்கள் மீது மேலும் சுமையேற்றப்படும். இது மட்டுமின்றி சுற்றுச்சூழல் கேடு, மனித விலங்கு மோதல், அதனால் ஏற்படும் இழப்பு இவற்றை சாதாரண மக்களே சுமக்க வேண்டி வரும். எனவே, இந்த அணைத்திட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி கர்நாடக மக்களுக்கு எதிரானது.

அரசில், அதிகாரப் போட்டியில் மோதிக் கொள்ளும் மத்திய பா.ஜ.க அரசும், மாநில காங்கிரஸ் அரசும் தமிழக நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதில் ஒரே அணியில் கைகோர்த்து நிற்கின்றனர். அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் மத்திய அரசையே சாரும். எனவே மோடி அரசு உடனே தலையிட்டு கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

மேலும்,

  • டெல்டா மாவட்டத்திற்கு அபாயமாக விளங்கும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் தாழ்த்தாமல் உடனே அமைக்க வேண்டும்.
  • மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கள சோதனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  • புதிய பயிர்க் காப்பாட்டுத் திட்டத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவதோடு, பிரிமீயத் தொகையை மத்திய மாநில அரசுகளே செலுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 20 முதல் டெல்டா கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். ஜனவரி 3-ம் தேதி தஞ்சை மத்திய உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஜனநாயகவாதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

மாரிமுத்து,
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்