Saturday, May 10, 2025
முகப்புசெய்திTCS கொச்சி அராஜகம் - 500 ஊழியர்கள் வேலை நீக்கம்

TCS கொச்சி அராஜகம் – 500 ஊழியர்கள் வேலை நீக்கம்

-

டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டு அமல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அந்நிறுவனமோ இது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்று வேலை நீக்கத்தை நியாயப்படுத்துகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் இன்ஃபோ பார்க்கில் அமைந்துள்ள டி.சி.எஸ் கிளையிலிருந்து 500 நபர்கள் நீக்கப்படவிருக்கும் செய்தியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 3,000 ஊழியர்களில் இணை ஆலோசகர்கள், ஆலோசகர்கள் மட்டத்திலிருந்து இந்த 500 நபர்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேரள பத்திரிகையாளர் நண்பரிடம் பேசிய போது அங்கேயே அது பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது தெரிந்தது.

what-do-say“நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையை நாங்கள் எதிர்பாக்கவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார் பெயர் குறிப்பிடவிரும்பாத டி.சி.எஸ் ஊழியர் ஒருவர். வேலை நீக்கப்படவிருக்கும் ஊழியர்களை அழைக்கும் எச்.ஆர் (மனிதவளத்துறை) அதிகாரி, நிறுவனத்தின் தேவைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இல்லை என்று கூறி அவர்களிடம் வேலைநீக்கத்துக்கான கடிதத்தை கொடுக்கிறார்.

கொச்சி டி.சி.எஸ் நிர்வாகமும் பொதுவான பதிலாக, ‘இது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்’ என்று தெரிவித்துள்ளது. இவையெல்லாம் நமது கேரள ஊடக நண்பர் தெரிவித்த விசயங்கள். மேலும் அங்கிருக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இதைப் பற்றி இதுவரை பேசவில்லை. இனி ஆளுக்கொரு சடங்கு அறிக்கை அளிப்பார்கள். அனைத்து கட்சிகளுக்கும் டாடாவின் நன்கொடை வெயிட்டாக தரப்படும் போது டி.சி.எஸ் ஊழியருக்காக அங்கே உண்மையாக குரல் கொடுப்பவர் அரிது.

நீக்கப்படவிருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை பற்றியும் தகவல் தெரிவிக்க மறுத்துள்ளது டி.எசி.எஸ் கேரள பிரிவு. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வை பறிக்கும் செயலை கருத்துக்கூறக்கூட மதிப்பில்லாத வழக்கமான ஒன்றாக கடந்து செல்கிறது டி.சி.எஸ். கலிங்கநகர், சல்வாஜூடுமுக்கு உதவி போன்ற டாடாவின் பாரம்பரியத்துடன் ஒப்பிடும்போது டி.சி.எஸ்சிற்கு இது மதிப்பில்லாத விசயமாக இருக்கலாம். ஆனால் ஊழியர்களுக்கு?

வேலைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.சி.எஸ் ஊழியர் ஒருவர் “தொழிற்தகராறு சட்டம் 1947-ன் படி வேலைநீக்கம் செய்வதற்கு முன்பு தொழிலாளர் நலத்துறையிடம் தகவல் தெரிவிக்கவேண்டும். ஆனால் தங்களிடமோ இல்லை அரசிடமோ டி.சி.எஸ் நிர்வாகம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்று எர்ணாகுளம் தொழிலாளர் அலுவலம் தெரிவித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தொழிற்சங்கம் உள்ளிட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகம். ஆனால், ஐ.டி ஊழியர்கள் அமைப்பாக இல்லாததால் எதிர்த்து பேச முடியாத நிலையில் உள்ளனர். பத்திரிகைகளிடம் தங்கள் பெயரை சொல்லக்கூடத் தயங்குகின்றனர். ஐ.டி முதலாளிகள் பராமரிக்கும் கருப்புப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைப்பது பாதிக்கும் என்று பயப்படுகின்றனர். இந்த பூச்சாண்டிகளெல்லாம் தனி நபர்களாக சிந்தி சிதறிக் கிடக்கும் போது மட்டும்தான் எடுபடும். அமைப்பாக, தொழிற்சங்கமாக திரண்டால் எந்த முதலாளியும், நிறுவனமும் நாங்கள் கருப்புப் பட்டியலை பின்பற்றவில்லை என்று வெள்ளைக் கொடியுடன் சமாதானமாக இறங்கி வரவேண்டும்.

அமைதியாக அடங்கிப் போவதே புத்திசாலித்தனம் என்றும் ஐ.டி ஊழியர்கள் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடைமுறை இதற்கு எதிரானதாக இருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடுத்தர வயதுள்ள ஊழியர்களை நீக்கத் தயாராகி வரும் வேளையில் இத்தனை பேருக்கும் வேறு வேலை சாத்தியமில்லை. வேலையற்றோர் சந்தையை மலிவாக வைத்திருக்க இத்தகைய ஆட்குறைப்பு வழிவகுக்கும். இதன் போக்கில் எதிர்காலத்தில் இப்போது வாங்கும் ஊதியம் பெரிதும் குறைக்கப்படும்.

இந்நிலையில் நம் உரிமைக்காக போராடுவது தான் சாத்தியமான அறிவுபூர்வமான ஒரே வழி.

இப்போதைக்கு வேலையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் இளநிலை ஊழியர்களோ தற்போதைக்கு தங்களுக்கு பிரச்சனை இல்லை என்பதால் அமைதியாக கடந்துசெல்ல விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் சூப்பர்வைசரின் பணிநீக்கத்துக்காக மகிழ்கிறார்கள். தாங்களும் நாளை இப்படித்தான் பாதிக்கப்படப் போகிறோம் என்பது குறித்து பரிசீலித்தாலும் தங்களுக்கு ரேட்டிங் சரியாக போடவில்லை என்று அவர்கள் மீது வெறுப்பின் உச்சத்தில் இவ்வாறு பேசுகிறார்கள்.

நாளை இவர்கள் நீக்கப்படும் போது வெளியில் வேலைக்காக காத்திருக்கும் மாணவர்கள் இப்படித்தான் மகிழ்வார்கள். புதியவர்களுக்கு சம்பளம் குறைவென்றாலும் அவர்களது பழைய வாழ்க்கை சூழலோடு ஒப்பிடும் போது அது அதிகம். இப்படி நிறுவனங்கள் நம்மிடம் உருவாக்கும் ஏற்றத்தாழ்வை வைத்து பிரித்து வைத்து குளிர்காய்கின்றனர். நம்மை இப்படி பிரித்தாள்வதே அவர்கள்தான் என்பதை உணராமல் அதை ஒரு மேனேஜரின் வேலை, சூபர்வைசரின் வேலை, டீம் லீடரின் முடிவு என்று சுருக்கிப் பார்ப்பது மடமை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படி உணர்ந்தவர்களும் கூட சங்கமாக அணிதிரள அஞ்சுகின்றனர். தங்கள் சொந்த பலத்தை உணராமல் இருப்பதால் வரும் அச்சம் தான் இதற்கு காரணம். நாம் நம் திறமையின்மையின் காரணமாக வேலைநீக்கம் செய்யப்படவில்லை. கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்காக வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறோம்.

இதை முறியடிக்க நம்மிடம் உள்ள ஒரே மருந்து தொழிற்சங்கம்தான். ஆம். சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

தொடர்பு  கொள்ளுங்கள்:

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

மேலும் படிக்க