privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் - நூல் அறிமுகம்

சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்

-

‘கம்யூனிஸ்ட்கள் நாத்திகர்கள்; ஆகவே மதநம்பிக்கையாளர்களான பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு எதிரானவர்கள்’ என்ற கருத்தை மதவாதிகள் தொடர்ந்து மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இந்த பிரச்சாரம் மதவாதிகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனை அளிக்கவில்லை என்றாலும் மதத்தின் பெயரால் நடத்தும் மாபாதக செயல்களை நியாயப்படுத்த இதனை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் உண்மையோடும், உறுதியோடும் போராடும் கம்யூனிஸ்ட்கள் மீதான நம்பிக்கையையும், மதிப்பையும் மக்கள் எக்காலத்திலும் இழக்கவில்லை. எனினும் மதம் தொடர்பாக கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன ? புரட்சி நடைபெற்ற சோவியத் ரஷ்யாவில் மத விவகாரங்கள் எப்படி கையாளப்பட்டன? மத உணர்வாளர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் ? என்பதை மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

muslims-in-soviet-russiaஇந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக ‘சோவியத் ரஷ்யாவில் முஸ்லிம்கள்’ என்ற பெயரில் ஒரு சிறுநூலை ‘நீந்தும் மீன்கள்’ வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது. சோவியத் ரஷ்யாவுடன் இணைந்திருந்த மத்திய ஆசிய நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெற்றிருந்த மத உரிமைகளை விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த கட்டுரைகளை எழுதியவர்கள் கம்யூனிஸ்ட்களோ, மதச்சார்பற்ற கருத்தியலாளர்களோ அல்லர்; இஸ்லாமிய மதத்தலைவர்கள் என்பது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. கசகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ஆகிய மத்திய ஆசியா நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மதத்தலைவர்களும், அறிஞர்களும் இந்த கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இஸ்லாம் 8-ம் நூற்றாண்டின் போது மத்திய ஆசியாவில் அறிமுகமானது. கடுமையான இன்னல்களை அப்போது சந்தித்தது. பிற்பாடு மத்திய ஆசியாவில் இஸ்லாம் முழுமையாக பரவிய போதும் மக்கள் நிம்மதியை பெற்று விடவில்லை.  கான்கள் மற்றும் நிலப்பிரபுக்களால் முஸ்லிம்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். பிறகு 19-ம் நூற்றாண்டில் மத்திய ஆசியப் பகுதிகள் ஜார் மன்னனால் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டன. அப்போது முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் மத உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்பட்டிருந்தன. ரஷ்யப் புரட்சி நடந்த 1917-க்கு பிறகு தான் மக்கள் சமூக விடுதலையையும், மத உரிமையையும் முழுக்கப் பெற்றார்கள்.

இந்த நூலின் கட்டுரைகள் சோவியத் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு மக்களுக்கு கிடைத்த சமூக உரிமையையும், மத உரிமையையும் அறிவிக்க எழுதப்பட்டவை அல்ல. பொதுவான வாழ்க்கைப் பதிவு மற்றும் புனித பயணங்கள் பற்றிய நினைவுகள் வழியாக சோவியத் ரஷ்யா பற்றிய தமது எண்ண ஓட்டங்களை பகிர்ந்துள்ளார்கள், கட்டுரையாளர்கள்.  உதாரணமாக, ‘புனித பயணங்களின் நீங்கா நினைவுகள்’ முழுக்க ஒரு பயணக்கட்டுரை. தகெஸ்தானில் வாழ்ந்த அசில்தார் ஹாஜியின் பயண அனுபவங்களின் பதிவு. சிறு வயதில் புனிதப் பயணத்தை மேற்கொள்ள விழைந்த ஆசையை குறிப்பிடுகிறார் அசில்தார். தனது தந்தை மெக்கா, மதினா சென்று திரும்பிய போது ஒரு மாவீரனை போல கிராம மக்களால் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறார். பிறகு தனது காத்திருப்பையும், இறுதியில் தனது பயண அனுபவத்தையும் அறியத் தருகிறார்.

தனது பயணத்தின் போது மதினாவில் புலம் பெயர்ந்த தகெஸ்தானியர் ஒருவருடனான சந்திப்பை விளக்குகிறார். சவூதி அரேபியாவில் வாழும் அவர் கண்களில் நீர் ததும்ப அசில்தாரை கட்டி அணைக்கிறார். புரட்சி மக்களின் தேவைகளை நிறைவு செய்திருப்பதை அறிந்து உவகை கொள்கிறார். புரட்சியின் பலன்களை அனுபவிக்க அவர் அங்கு இல்லை என்பதை நினைத்து கண்ணீர் உகுக்கிறார். புதிய வாழ்க்கைக்கான காலம் புலரும் என்பதை முன்னரே அறிந்திருந்தால் தான் நாட்டை விட்டு வெளியேறி இருக்க மாட்டேன் என்று நொந்து கொள்கிறார்.

தாஜிகிஸ்தானை சேர்ந்த அப்துல்லாஜன் இபுனு அல்பேனியா நாட்டுக்கு சென்று வந்ததை ‘நண்பர்களுடன் சந்திப்பு’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அல்பேனியாவின் வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் அவர் பின்பு சிரியா செல்கிறார். சிரியாவின் தலைமை முப்தி யாசெர் அபெத்துடனான தனது சந்திப்பை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறார். சோவியத் நாட்டில் இஸ்லாமிய மக்கள் சிறப்பாக பேணப்படுவதை தான் முன்பு மேற்கொண்ட பயணத்தில் கண்டுணர்ந்ததை அப்துல்லாஜனுடன் பகிர்கிறார் யாசர் அபெத்.

மதரசாக்களில் முஸ்லிம்கள் பெருமளவுக்கு சென்று பயின்று வந்ததையும், விண்ணப்பிப்போரை சேர்த்துக் கொள்வதற்கு அங்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டதையும் மதரஸா ஆசிரியர் ஒருவரின் பதிவில் அறிய முடிகிறது. இஸ்லாமிய வாரியம் முதன்முறையாக அமைக்கப்பட்டு மக்களின் குறைகள் களையப்பட்டன. இஸ்லாமிய மதச்சங்கங்கள் அமைத்துக் கொள்ளப்பட்டன. அங்கு இஸ்லாம் பற்றிய அறிவு மிகுந்தவர்கள் குறுக்கீடின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முஸ்லிம் மக்கள் கொண்டாடும் ரம்ஸான், மொகரம் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. ஹஜ் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. திருக்குரான் பதிப்பித்தல், சமயக் குருமார் பேராயம் என்று அனைத்து மத நடவடிக்கைளுக்கும் அனுமதி இருந்தது.

‘மதம் தனிநபர் உரிமை’ என்ற ஜனநாயக கருத்தாக்கத்தில் ஊன்றி நின்று இந்த மத உரிமைகள் சோவியத் ரஷ்யாவில் அனுமதிக்கப்பட்டன. மக்களிடையே அமைதிக்கும், நட்புணர்வுக்கும் முதலிடம் தரப்பட்டன. அதனால் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். மோடியின் ஆட்சியில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஏற்படுத்தப்பட்ட சிக்கல்களை கண்ணுற்றோம். மொகரம் ஊர்வலத்துக்கு எதிராக டில்லியின் பாவனா பகுதியில் போலீசும், இந்து மதவெறியர்களும் ஏற்படுத்திய தடைகளை கண்டோம். விநாயகர் ஊர்வலத்தின் போது மசூதிகள் தாக்கப்படுவதையும் காண்கிறோம். மதவாதிகளால் சமூக நல்லிணக்கத்தை ஒருபோதும் பேண முடியாது என்பதற்கு இவை உதாரணங்கள்.

சோசலிச ஆட்சியில் மதங்கள் அரசிலிருந்தும், ஆட்சி முறையிலிருந்தும் விடுவிக்கப்பட்டு தனிநபர் உரிமையாக பற்றிக் கொள்ள அனுமதிக்கப்படும். அது ஒன்றே இந்துத்துவம், தலிபானியம் போன்ற ஆபத்துகளிலிருந்து மக்களை பாதுகாக்கும். இந்த நூல் முஸ்லிம்கள் மட்டுமல்ல மதங்களை பின்பற்றுபவர்கள் அனைவரும் படித்து தெளிவுபெற வேண்டிய ஒரு கையேடு என்பதை மறுக்கலாகாது.

– சம்புகன்

சோவியத் ரசியாவில் முஸ்லீம்கள்

மொழிபெயர்த்தவர் : சின்னத்தம்பி முருகேசன்
வெளியீடு : நீந்தும் மீன்கள் வெளியீட்டகம்
விலை : ரூ 90
பக்கங்கள் : 116

புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367