privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா - பாலுறவா ? பாகம் 2

பெருமாள் முருகன் : பிரச்சினை சாதியா – பாலுறவா ? பாகம் 2

-

freedomfromsexualsinபாகம் ஒன்றைப் படிக்க இங்கே அழுத்தவும் – கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ?

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 2

சுய சாதிப் பெண்களை அடக்கி ஒடுக்குவதையே ஒழுக்கமென்று ஊளையிடும் ஆதிக்க சாதிவெறியர்களின் அயோக்கியத்தனத்தை முதல் பாகத்தில் பார்த்தோம்.

அடுத்து பிள்ளைப்பேறு வேண்டி கோவில் திருவிழாவில் உறவு கொள்ளும் சடங்கை மாபெரும் செக்ஸ் ‘மேளா’வாக கருதும் வாதங்களை பரிசீலிப்போம். ஆதிக்க சாதிகளைப் பொறுத்த வரை அந்த ‘மேளா’ தத்தமது ஆட்சிப் பிரதேசங்களுக்கே மட்டும் உரியவை. எல்லை தாண்டினால் விபச்சாரம். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தால் அபச்சாரம், தீட்டு.

பெண்களை கவர்ச்சியாக நேரிலும், கதைகளிலும், திரைப்படங்களிலும் பார்ப்பதும், கிசுகிசுக்களை ரசிப்பதும் இங்கே ஊடகங்களால் நிலை நிறுத்தப்பட்ட ஒரு ‘ரசனை’. அந்த ரசனைக்குரியவர்கள் வெளியே அப்படி இப்படி இருந்தாலும், வீட்டிற்குள்ளே அடக்கமாக இருப்பார்கள். அல்லது சாதிய சமூக விதிகளைத் தாண்டி ஜாலிக்காக மட்டும் காதலிப்பார்கள். கல்யாணத்தை மட்டும் வீட்டார் விருப்பப்படி செய்வார்கள். இந்த போலித்தனத்தின் படி கோவில் திருவிழா ஒன்று கூடலை இவர்கள் உள்ளுக்குள்ளே ரசிப்பார்கள். ஆனால் அது தங்களது ஊராக இருக்கக் கூடாது. ஆகவே இது ஒழுக்கக் கேடு.

பின்நவீனத்துவத்தின்படி இந்த ஒன்று கூடல் பல்வேறு மக்கள் குழுக்களில் இருந்த, இருக்கும் ‘கார்னிவல்’ கொண்டாட்டம். அடக்கப்பட்ட பாலியல் உறவுகளில் வெந்து நோகும் மக்கள் தணித்துக் கொள்ளும் ஒரு கலாச்சார நடவடிக்கை.

இந்த பார்வைகள் சரியா? சாதிய சமூகத்தின் கட்டுமானத்திற்கும் பாலியல் குறித்த சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கும் உள்ள உறவு என்ன? இந்த கேள்விகளை இந்த நாவலின் படி நாம் எப்படி புரிந்து கொள்வது?

“மாதொரு பாகன்” நாவலில் திருவிழா ஒன்று கூடலை படிமப்படுத்தும் நாவலாசிரியர் “ஆதி மனிதன் தன்னைக் கண்டடைகிறான்” என்று குறிப்பிடுகிறார். திருவிழாவிற்கு கூட வந்த அம்மாவை பிரிந்த பிறகு தனக்கென இணை தேடுகிறாள் நாயகி பொன்னா.

ஊர்க்காரர்கள் இருக்கிறார்களா, தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என்று தயங்கிச் செல்கிறாள். இறுதியில் முகங்களற்ற மனித சமுத்திரத்தில் ஒரு புராதானத் தாய் போல குழந்தைகளை பெறும் மாதாவிற்கு முகங்கள் எதற்கு என்பதாக பெண்ணை பிரிக்கும் குழு ரீதியான சமூக நிலை மறந்து வேறுபாடுகளற்ற மனித பொது நிலையை அடைகிறாள். அப்போது அவளது கணவன் காளியை மணமுடிக்கும் முன் வந்த முதல் காதல் இளைஞனெல்லாம் நினைவில் வந்து போகிறான்.

பெருமாள் முருகன் குறிப்பிட்டிருப்பது போல இது ஆதிகால மனிதன் தன்னை கண்டடைதல் அல்ல. இதன் பிரச்சினை வேறு. இதே நாவலில் சொத்துடமை, சுய சாதி ஏமாற்றல்கள், சொத்தைக் காக்க குழந்தைகள், வாரிசுகள் இல்லாதவர்களுக்கு சொத்து இல்லை என்று பல்வேறு கிளைகள் மூலம் ஆசிரியர் பேசியிருந்தாலும் பேசத்தவறிய, பேச வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது.

நாவலின் இறுதியில் காளி தனது மனைவி அப்படி ஒன்று கூடலுக்கு சென்றதை சீரணிக்க முடியாமல் திணறுகிறான். ஒரு வெறுப்புணர்வு வளர்கிறது. இதற்கு குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. அந்த தம்பதியினர் மனதளவில்  பிரிந்து விடுவார்கள் என்பதாக நாவலின் உள்ளோட்டம் ஒரு அறிகுறியைக் காட்டுகிறது.

சரி அப்படி பிரிந்து போனால்தான் என்ன என்று சட்டென்று கேட்க முடியாது. அதை நிறைவேற்றும் நிலை இருந்தால் இந்த நாவலுக்கோ இல்லை திருச்செங்கோடு கவுண்டர்கள் போராட்டத்திற்கோ தேவையே இருந்திருக்காது.

இந்த நாவலின் முக்கால் பாகம் வரை காளியும், பொன்னாவும் மனமொத்த காதலர்களாகவே இருக்கிறார்கள். அப்படி இருக்கவிடாத படி உடமைச் சமூகமும், அதன் சாதிய நியாயங்களும் அச்சுறுத்துகின்றன.

வேறு வகையில் சொன்னால் ஒன்று கூடலுக்கு செல்லும் பொன்னாவிற்கு அது நிச்சயம் ஒரு விடுதலை உணர்வையோ இல்லை சுதந்திர பாலுறவு திளைப்பையோ அளிக்கவே முடியாது. முன்பின் தெரியாத ஆணுடன், விருப்பம் விருப்பமின்மையைத் தாண்டி ஜடம் போல தன்னுடலை ஒப்படைக்கும் ஒரு சம்பிரதாயமான முதலிரவை விட அர்த்த நாரீஸ்வர் கோவில் திருவிழாவின் இரவு கொடூரமாகவே இருந்திருக்கும்.

இந்த கதையின் நாயகன் சொல்வது போல அந்த இரவை முடித்துக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு வாழ்ந்தாலும் இதே சமூகம் தனது கேலிப் பேச்சையும், குத்திக் காட்டலையும் விட்டு விடாது. சொல்லப்போனால் அது முன்னிலும் அதிக முள்ளாகவே குத்தும். அதற்கு ஆர்ப்பாட்டமான பேச்சு தேவையில்லை. ஒரு பார்வை போதும். இந்த எதிர்கால துன்பங்கள் தம்பதியினர் இருவருக்கும் தெரியும். ஒரு உரையாடலில் காளியும் அதை கோடிட்டுக் காட்டுகிறான்.

முதல் பாகத்தில் தரப்பட்ட கிராமத்து உண்மைச் சம்பவங்களை ஆய்ந்து பார்க்கையில் அந்தக் கதைகளில் வரும் ஆண், பெண் எவருக்கும் எந்த கள்ள உறவும் எந்த பேரானந்தத்தையும் அளித்துவிடவில்லை. மேலும் குழந்தை பேறுக்காக உறவு கொண்ட ஆண்கள் பலரும் அதை ஒரு கடமையாக அல்லது விதிவிலக்கான ஒரு தருணமாக கடந்து போனார்களே அன்றி அதன் பிறகு அதை ஒரு அந்தப்புர இலவச வாய்ப்பாக தொடரவில்லை – முடியாது.

காரணம் கிராமங்களில் அவர்களது மொத்த சாதி சமூக வாழ்க்கையில் பாலியல் தருணங்களின் முக்கியத்துவம் அந்த அளவில்தான் இருக்கிறது. சொத்துடமை, கௌரவம், சமூக அந்தஸ்தை தாண்டி ஒரு ஷகிலா படம் போலவெல்லாம் இல்லவே இல்லை. சரியாகச் சொன்னால் அங்கே பாலியலில் இருப்பது காதலல்ல, கௌரவம் எனும் போலித்தனமே.

இதை இப்படி ஒரு படிமமாக சொல்லிப் பார்க்கலாமா? காதல், பாலியல் பிரச்சினைகளுக்காக அதன் உரிமைகளுக்காக நாம் வெளிப்படையாக போடும் சண்டைதான் தேவையே அன்றி ஒளிந்து போடும் கொரில்லா தாக்குதல்கள் அல்ல. கொரில்லா தாக்குதல்களில் உடனடி தப்பித்தல் அல்லது தற்காலிக தாக்குதல்தான் இருக்கும், இறுதியான நிலையான வெற்றியல்ல.

பாலியல் உறவு கொள்ளும் போது மனிதர்கள் அந்த கணத்தில் அதற்கு மட்டும் உண்மையாக உணர்ச்சி தளத்தில் ஈடுபட்டாலும் அடுத்த கணமே அந்த உறவை கட்டுப்படுத்தும் சமூக சட்டங்கள் அச்சுறுத்தும். ஆக சட்டங்களை மாற்றாத வரை வெறுமனே பாலுணர்ச்சிக்கான தளத்தில் நின்று மட்டும் பார்ப்பது பாரிய பிழை.

வெளிப்படையான ஜனநாயக வெளிதான் இந்தப் பிரச்சனைகளுக்கான மாற்றத்தை தோற்றுவிக்கும். மாறாக அதை மறுத்து மறைத்து செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் சாதியை மீறாமலும், கௌரவத்தை குன்றாமலும் சமூகம் கண்டடைந்த குறுக்கு வழிகள். காதலும் விவாகரத்தும் வெளிப்படையாக இருக்கும் வரை திருட்டுத்தனங்களுக்கு தேவை இல்லை. ஆசிரியர் இந்தப் பார்வையில் நாவலை படைக்கவில்லை என்றாலும் அவர் படைத்த நாவலை அசைபோட்டு பார்க்கையில் அதை கண்டடைய முடியும்.

நாவலில் பழங்குடி பெண் பாவத்தம்மாவை நான்கு கவுண்டர் இளைஞர்கள் வன்புணர்வு செய்து கொல்கிறார்கள். பிறகு பயந்து ஊரை விட்டு ஓடுகிறார்கள். அந்த பெண் பாவத்தம்மாதான் சாமியாக அந்த ஊரில் நின்று பிள்ளைப்பேறு இல்லாத மக்களை பழிவாங்குகிறாள். அவளுக்கு படையலிட்டு நிவாரணம் தேடுகிறார்கள் மக்கள். அர்த்தநாரிஸ்வரையே பாவத்தம்மாவாக உருவகப்படுத்திக் கொண்டு வணங்கும் மக்களை கோவிலின் பார்ப்பன பூசாரி எதுவும் தெரியாத ஜனங்கள் என்று விளக்குகிறார். பொன்னா போன்ற பெண்களோ  பாவத்தம்மாவையே நினைத்து வேண்டுகிறார்கள்.

கோவில், ஐதீகம், தொன்மம், ஆன்மீகம், சடங்கு, வழக்கு முதலியவற்றை அடக்கப்படும் சமூக உறவுகளிலிருக்கும் மக்களின் ஏக்கப் பெருமூச்சாக உணர்வதற்கும், விடுதலைப் பரவசமாக பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. மக்களின் வாழ்க்கை போராட்டத்தை ஒரு மையமான அச்சுதான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை கம்யூனிஸ்டுகள் தவிர மற்றவர்கள் அறிந்ததுமில்லை, ஏற்பதுமில்லை. இந்த நாவலில் அது முற்றிலும் நாட்டுப்புற மக்களின் அறியாமை கலந்த அனுபவத்திலிருந்து மட்டும் பார்க்கிறது. அதுதானே யதார்த்தம் என்று கேட்கலாம்.

மாதொருபாகன் நாவல் 70 ஆண்டுகளுக்கு முந்தைய களத்தில் நடந்தாலும், நாயகன் காளியே குடுமி, கோவணம் என்ற அலங்காரங்களைக் கொண்டிருந்தாலும் பேச்சு, உடல் மொழி, மௌன மொழி அனைத்தும் இன்றைய காலகட்டத்தை நினைவுபடுத்துகிறது. கிராமங்களில் இருக்கும் நேரிடையான இயல்பான போலித்தனமற்ற இயக்கமாக இது இல்லை. எனினும் ஒரு வரலாற்று நாவலில் இன்றைய வாழ்க்கையிலிருந்து கூட பார்க்கலாம், உரையாடலை எழுதலாம். பிரச்சினை இல்லை. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தொடரும் குழந்தையின்மை எனும் புள்ளியை இணைத்து காலங்கடந்த கோலாமாக்குவதற்கு இன்னும் கூர்மையாக பயணித்திருக்க வேண்டும்.

சாமிகளை எளிமையாக தொழும் மக்களின் இயல்பை சித்தரிக்கும் போது அந்த ஏக்கப் பெருமூச்சின் பரிமாணங்களை, கேள்விகளை, ஐயங்களை விரிப்பதன் மூலம் இது வெறுமனே புராதனம், தொன்மம் மட்டுமல்ல எனும் அடையாள மயக்கத்திலிருந்து வெளியே வர முடியும். ஏனெனில் இதே தொன்மம்தான் இன்று திருச்செங்கோடு கவுண்டர்களின் எங்கள் கோவில் திருவிழா என்று பேசவும் செய்கிறது.

குழந்தைப் பேறின்மை, சாதி, சமூகப் பிரச்சினைகைள விளக்கிவிட்டு, திருவிழா ஒன்று கூடல் அந்தக்கால சமூகம் கண்டுபிடித்திருக்கும் முற்போக்கான நடவடிக்கை என்கிறார் ஒரு அறிஞர். அந்த ஒன்று கூடுதல் எப்படி கூச்சமில்லாமல் நடந்திருக்க முடியும் என்று இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்க கூடாது, அன்று மின் விளக்குகளே இல்லை, கும்மிருட்டுதான் என்றும் அவர் டெக்னிக்கலாக ஏற்க வைக்கிறார்.

விளக்கும், தொழிற்நுட்பமுமா பிரச்சினை? எம்.ஆர்.ஐ ஸ்கேன் வந்த பிறகு பெண் சிசுக் கொலை, பெண் சிசு தவிர்ப்பு – கலைப்பாக மாறிவிடவில்லையா? நல்ல நேரம் பார்த்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதில்லைய்யா? இல்லை நாளையே குழந்தைப் பேறின்மைக்கு செயற்கை கருவூட்டலுக்கான விந்து வங்கியில் சாதிக்கொரு வங்கி வராதா?

மேலே சொன்னது போல சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் பயணத்திற்கு இந்த தொன்மங்களை அளவு கடந்து பயன்படுத்துவது சரியல்ல. ஆனால் சமூக மாற்றத்தின் விதியை வர்க்கம் எனும் மையப் புள்ளியிலிருந்து விலக்கி அடையாளப் போராட்டம் எனும் சிதறுண்ட துளிகளாக மாற்றுவதை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டு செய்கின்றன.

hindu_mythologyபெருமாள் முருகனும் கூட இந்த நாவலை எழுதுவதற்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கும் ரத்தன் டாடா மற்றும் பல முதலாளிகளைப் புரவலராகக் கொண்ட கலைகளுக்கான இந்திய மையம் எனும் தொண்டு நிறுவனத்தின் உதவித் தொகையை பெற்றிருக்கிறார். முன்னுரையிலும் அதைக் குறிப்பிடுகிறார். எல்லா விதங்களிலும் இது தவறு என்பதோடு ஏகாதிபத்தியத் தொண்டு நிறுவனங்கள் உருவாக்கும் ஆய்வுக் கட்டமைப்பை சுயமாக ஏற்றுக் கொண்டு செயல்படும் சுதந்திரம் இருப்பதாக கருதுவது ஒரு ஏமாற்று.

‘இத்தகைய ஆய்வுகளுக்கான நல்கையை ஏற்றுக் கொண்டு முன்னுரையில் ஒரு நன்றி சொன்னால் போதும், அதை பயன்படுத்திக் கொண்டு நாம் வேறு ஏதாவது கூட எழுதலாம்’ என்கிறார் மற்றுமொரு அறிஞர். ‘நல்கை பணம் வாங்கிவிட்டு நாம் என்ன செய்தோம் என 2 பக்கம் எழுதிக் கொடுத்தால் போதும், அதற்கு மேல் அவர்கள் கேட்கமாட்டார்கள்’ என்கிறார். கோடிசுரவனாகவே இருந்தாலும் இப்படி “கிராண்ட்” வாங்குவது தனியுரிமையாம். அதை விசாரிப்பது தனிநபரின் வருமானத்தை எட்டிப் பார்க்கும் அநாகரிகமாம்.

இதன்படி வருமானம் பறிக்கப்பட்ட ஏழைகளுக்காக போராடுவது கூட அநாகரிகம்தான். இனவரைவியல் தொடங்கி பல்வேறு துறைகளில் உலகமெங்கும் நடந்து வரும் ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஆவணப்படுத்திக் கொள்ள இப்படி படைப்பாளிகளையும், அறிஞர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த ஆய்வுகள், ஆவணங்கள் அவர்களுக்கு எப்போது எப்படி பயன்படுகிறது என்பதை நம்மால் இப்போது கண்டு சொல்ல முடியாது. ஆனால் நம்முடைய எழுத்தாளர்கள் இதனால் பல்வேறு முறைகளில் வடிவமைக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

சொல்லவரும் கருத்து சரியாக இருந்தாலும், அதை ஃபோர்டு பவுண்டேஷன், டாடா, ஜெர்மன் நிதி உதவியோடு சொல்லும் போது கருத்தின் தார்மீக அறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியன் புகலென்ன நீதி என்று பார்ப்பனியத்தை முட்டுக் கொடுக்கும் சக்திகளுக்கு உதவியும் செய்கிறது.

சுற்று வட்டார ஊர்களில் சாமிக்கு பிறந்த பிள்ளை, சாமிக் குழந்தை என்று புழங்கும் பெயர்களை ஏதோ சாமிக்கு நேர்ந்து பெற்ற குழந்தைகள் என்று கருதியதாகவும், பின்னரே இதற்கும் கோவில் திருவிழாவிற்கும் உள்ள தொடர்பை கண்டறிந்து அதன் பின்னே இந்த நாவலை அசை போட்டு எழுதியதாகவும் பெருமாள் முருகன் கூறியிருக்கிறார்.

என்ஜிவோக்கள் மற்றும் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கில் யோசிக்கும் படைப்பாளிகள் இந்த துவக்கத்தை வெறும் அடையாளங்கள், தொன்மங்கள், புதிய கண்டுபிடிப்புகள் என்று ஒரு மையச்சரடு அல்லது ஆழமான சமூக இயக்கத்தின் ஆணி வேரை விடுத்து யோசிக்கிறார்கள்.

இந்த நாவலில் கூட பிள்ளைப் பேறின் அனைத்து பரிமாணங்களும் அலசப்பட்டிருந்தாலும், உணர்ச்சி என்ற அளவில் அவை ஒன்றையே வேறு வேறு காட்சிகளில் கூறியன கூறியலாக வந்து போகின்றன. பிள்ளைப் பேறின்மை என்பதன் சாதி, பால், சொத்துடமை, ஆன்மீகம், தொன்மம் ஆகிய அனைத்தும் என்ன விதமான சமூக கூட்டியக்கத்தின் விதிகளில் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கின்றன என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இந்த நாவல் உதவுகிறது.

அதில்தான் இந்த நாவலின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. அதை அங்கீகரிக்க “மாதொருபாகன்” மேல் ஆத்திரம் கொண்டிருக்கும் கொங்கு வேளாளர்கள் எனும் சாதியின் பலமான இருப்பை நாம் அறிய வேண்டும்.

–  தொடரும்.

கவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா ? பாகம் 1

பெருமாள் முருகனுக்கு தடை போட்ட கவுண்டர் ஆர்.எஸ்.எஸ் கூட்டணி பாகம் 3