Saturday, May 10, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !

வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !

-

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம், முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று  ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம்  நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

மணல் குவாரி முற்றுகை
காவாலக்குடி, சாந்தி நகர் மற்றும் பல கிராம மக்கள் 22-01-2015 அன்று ஜேசிபி எந்திரத்தை மறித்து வெள்ளாற்றில் முற்றுகை போராட்டம் நடத்தினர். குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

போராடிய மக்கள் மீது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் சோழதரம் போலீசில் பொய்புகார் மனு கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் செங்குட்டுவன், இளங்கோவன், ரவீந்திரன், சிவக்குமார், கவியரசன் என 30 பெயரை குறிப்பிட்டு, வழக்கறிஞர் ராஜு ஆகியோருடன் பெயர் விலாசம் தெரிந்த 100 ஆண்கள், 70 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் குவாரி முற்றுகை போராட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற குவாரியில் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்துறை இவர்களை வேலை செய்யாமல் தடுத்தும், அனுமதி பெற்ற பொக்கலைன் மீது ஏறிக் கொண்டும்,வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் எங்களை மிரட்டியும் உள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. (குற்ற எண்  :13/2015), (இ.த.ச.பிரிவு 188,147,341,353,506(1).)

women-at-quarry-siege“மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ராஜு, புஷ்பதேவன் ஆகியோர் வாழ்வாதாரத்திற்க்காக போராடுகின்ற மக்களுக்கு உதவி செய்ய சென்றனர். அவர்கள் மீதும் பொய்வழக்கு போடப்பட்டது கண்டிக்கதக்கது” என சோழதரம் போலீசு ஆய்வாளர் முரளி மற்றும் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன் ஆகியோரை கண்டித்து விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்
விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து 27/01/2015 அன்று சிதம்பரம் நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள், “வெள்ளாற்றை பாதுகாக்க போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெற வேண்டும்” என நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நட்த்தினர்.

மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை
மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை

27/01/2015 அன்று சிதம்பரம் சார் ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி சுரேஷ்பாபு , ஆய்வாளர் முரளி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெற்றிச்செல்வன், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மணல் குவாரி மூடுவது குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

மணல் அள்ள வேண்டும் என முடிகண்ட நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகஜீவன்ராம் மற்றும் சிலருடன் பேச்சுவார்த்தை நடந்தது.  மணல்குவாரியை மூடக்கோரி பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக வந்திருந்தனர்.

மக்கள் திரள்
பல்வேறு கிராமங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் டிராக்டர், வேன், இருசக்கரவாகனம் என பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர்.

நமது மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் மற்றும் சேத்தியாதோப்பு பாலுமகேந்திரன் ஆகியோர் இறுதிவரை நின்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினர்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க காவாலக்குடி ஒருங்கிணைப்பாளர்  செங்குட்டுவன் மற்றும் 8 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

“மணலை கொள்ளையடிக்க பாசனத்திற்க்கு வெள்ளாறு வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர்   செல்லவிடாமல் பாழ் வாய்க்கால் வழியாக கடலுக்கு திருப்படுகிறது. அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார்கள் .

முடிகண்டநல்லூர் மணல் குவாரி 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. 3 அடி மணல் எடுக்கலாம் என சட்டம் சொல்கிறது. 25 அடி 30 அடி என ஆற்றை சின்னா பின்னமாக்கி உள்ளார்கள். நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு போர்செட்டு தண்ணீர் இறைக்கவில்லை. சேட்டிலைட்டு கருவி ஒரே இடத்தையா 15 வருடமாக காட்டுகிறது” என இடித்துரைத்து  பேசினர்.

மணல் கொள்ளை பேச்சுவார்த்தை
மணல் கொள்ளை குறித்து இடித்துரைத்து பேசிய பிரதிநிதிகள்.

“முப்போகம் செய்யும் சாகுபடி இன்று இரண்டு போகமாக மாறியுள்ளது. குடி நீருக்கே தட்டுப்பாடு வரும்போல் உள்ளது. 37,500 யூனிட் மணல்தான் எடுக்கவேண்டும். கடந்த பத்து மாதமாக நாள் ஒன்றுக்கு 500 யூனிட் என வைத்தால் 125,000 லோடு மணல் எடுத்துள்ளார்கள். அரசு கஜானாவிற்கு 10-ல் ஒரு பங்குகூட  செல்லவில்லை. அனைத்து பணமும் மணல்கொள்ளையர்களிடம்தான் சென்றுள்ளது.

பொதுப்பணித்துறை ஏ.இ புரோக்கர்கள் போல் செயல்பட்டு வருகின்றார்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரியாக செயல்படவில்லை . எங்களை எதிரிபோல் பார்க்கின்றனர். நாங்கள் பஞ்சம் பிழைக்க ஊரை காலிசெய்யும் நிலை  வந்துவிடும்.

உயிரே போனாலும் ஒரு பிடி மணலை கூட அள்ள விடமாட்டோம். எத்தனை பொய்வழக்கு போட்டாலும், கைது செய்து சிறையில் அடைத்தாலும் மணல் கொள்ளைக்கு எதிராக போராடுவோம்” என உறுதியாக தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சார் ஆட்சியரை மக்களை சந்திக்க அழைத்தனர். 300-க்கும் மேற்பட்ட மக்கள் வளாகத்தில் உணர்ச்சிப் பிழம்பாக காட்சியளித்தனர்.

உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்
உணர்ச்சிப் பிழம்பாக மக்கள்

“ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்” என உரத்த குரலில் பேசினர்.

செய்வதறியாது திகைத்த இளம் வயது சார் ஆட்சியர், “எங்களுக்கு மக்கள்தான் முக்கியம் கண்டிப்பாக என்னால் ஆனதை செய்வேன்” என உறுதி சொல்லி அனுப்பினார்.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் கருவேப்பிலங்குறிச்சி தொடங்கி 20-க்கும் மேற்ப்பட்ட வெள்ளாற்று கரையோர கிராம மக்களிடையே  தொடர்ந்து  நம்பிக்கையுடன் பயணித்து வருகிறது.

இன்று சேத்தியாதோப்பு டி.எஸ்.பி போராடும் முன்னணியாளர்களை அழைத்து “மணல்குவாரி விதிமுறைகளுடன் சரியாக செயல்பட்டு வருகிறது, பாதுகாப்பு கொடுக்கசொல்லி எங்களுக்கு மேலிடத்து உத்தரவு. நாளை நீங்கள் மறித்தால் கைது செய்வோம். போலீசு மீது வருத்தபடாதீர்கள்” என சொல்லியுள்ளார். இப்படி அதிகார வர்க்கம், போலீசு அனைத்தும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருக்கின்றது. எனினும் மக்கள் இந்த தடைகளை முறியடித்து தமது வாழ்வாதாரப் போராட்டத்தில் வெல்வார்கள்.

விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மணல் குவாரி மூடுவது குறித்த பேச்சுவார்த்தை – பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்த கட்ட போராட்டம் பற்றி மனித உரிமை பாதுகாப்பு மையமும், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கமும் கலந்து பேசி முடிவு செய்ய உள்ளனர்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க