கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு! ஆசைக்கும் அச்சுறுத்தலுக்கும் பணியாத மக்கள்திரள் போராட்டம்!
வெள்ளாற்றில் விருத்தாசலம் அருகில் உள்ள கார்மாங்குடி மணல் குவாரி, மக்கள் போராட்டத்தின் வலிமை கொண்டு மூடப்பட்டிருக்கிறது. மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் முன்முயற்சியில் நடத்தப்பட்ட இப்போராட்டம், மணற்கொள்ளை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்.

மணற்கொள்ளைக்கு எதிராகப் பலர் போராடியிருக்கின்றனர். பலரும் மணற்கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். பணத்தால் வாயை மூடு அல்லது பிணமாக்கி வாயை மூடு என்பதே மணற்கொள்ளையர்கள் அமல்படுத்தி வரும் விதி.
கார்மாங்குடி குவாரிக்கு எதிராகப் பல வடிவங்களில் போராடி மக்கள் நம்பிக்கை இழந்திருந்த சூழலில்தான் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இப்பிரச்சினையில் தலையிட்டது. கரையோர கிராமங்களில் ம.உ.பா.மையத்துடன் இணைந்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களும் பிரச்சாரம் செய்தனர். மணல் கொள்ளையர்களின் இலஞ்சப்பணம் ஒவ்வொரு ஊரிலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பை விட மிகவும் கொடியதாக இருந்தது. குவாரியை எதிர்த்து யார் பேசினாலும், பணத்துக்காகத்தான் பேசுகிறான் என்று சந்தேகிக்கும் அளவுக்கு மக்களிடையே அவநம்பிக்கை பரவியிருந்தது. இந்த சூழலைக்கணக்கில் கொண்டு, “மணல் கொள்ளையர்களிடம் காசு வாங்குபவர்களை எதிர்த்து” தனது முதல் பிரச்சார சுவரொட்டியை வெளியிட்டது ம.உ.பா.மையம்.
“யாரும் சரியில்லை என்ற விரக்தியாகப் பேசிப் பயனில்லை. வாங்கின காசுக்காக குவாரிக்கு ஆதரவாக அயோக்கியன் வேலை செகிறான். யோக்கியன் ஏன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கிறான்?” என்று கிராமப் பிரச்சாரங்களின்போது ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு எழுப்பிய கேள்வி விவசாயிகள் பலரைச் சிந்திக்கத் தூண்டியது.
ஆர்ப்பாட்டம், வட்டாட்சியர் அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்கள் பரவலாக மக்கள் ஆதரவைப் பெருக்கின. ஆனால், அதிகார வர்க்கம் அசைந்து கொடுக்கவில்லை.

“வீட்டுக்கு ஒருவர் ஆற்றில் இறங்குவோம்! மணல் குவாரியை இழுத்து மூடுவோம்!!” என்ற முழக்கத்துடன் டிசம்பர் 2-ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஆற்றில் இறங்குவார்கள் என்பதை அதிகார வர்க்கமோ போலீசோ எதிர்பார்க்கவில்லை. நிலைமை புரிந்தவுடன் அவசரம் அவசரமாக ஆற்றில் நின்றிருந்த மணல் லாரிகளை அப்புறப்படுத்தினர். அங்கிருந்து சில கி.மீ. தூரத்தில் இருந்த மணல் யார்டுக்கு பலத்த போலீசு பாதுகாப்பு போட்டனர். ஆற்றில் இறங்கிய மக்களோ நேராகச் சென்று பொக்லைன் எந்திரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த எந்திரத்தையே மேடையாக்கிக் கொண்டு மக்களிடம் உரையாற்றினார் தோழர் ராஜு.
“மணல் கொள்ளையன் என்று தனியாக யாரும் இல்லை. அரசுதான் இந்த கொள்ளையை நடத்துகின்றது. இந்த ஆற்றின் உரிமையாளர்கள் மக்கள். அதிகார வர்க்கத்துக்கு இதன் மீது எந்த உரிமையும் இல்லை. குவாரியை நிரந்தரமாக மூடவேண்டும் என்பது நமது கோரிக்கை. அதே நேரத்தில், 3 அடி அளவுக்குத்தான் மணல் அள்ள வேண்டும் என்று அனுமதி வாங்கிக் கொண்டு 30 அடி ஆழம் அள்ளியிருக்கிறார்களே, அந்த குற்றவாளிகளைக் கைது செய்யவேண்டும். சட்ட விரோத குவாரியை உடனே மூடவேண்டும்” என்று பேசினார்.

மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், களைத்துப்போய் தாமே கலைந்து விடுவார்கள் என்று கணக்குப்போட்டது போலீசு. “குவாரியை மூடாமல் இந்த இடத்தை விட்டு நாம் போகப்போவதில்லை” என்ற ராஜுவின் அறிவிப்பை மக்கள் அப்படியே எதிரொலித்தனர். பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆர்.டி.ஓ. அழைத்தார். “தனியாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை, மக்கள் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை” என்று ராஜு கூறியதைப் பலத்த கையொலி எழுப்பி வரவேற்றார்கள் மக்கள்.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை அடங்கிய ஒரு குழு அமைப்பதாகவும் முறைகேடு நடந்திருக்கிறதா என்று ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அவர்கள் அறிக்கை தருவார்கள் என்றும் கூறினார் ஆர்.டி.ஓ. “எந்தக் குழுவின் ஆவறிக்கையைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. குவாரி வேண்டாம் என்பது மக்கள் கருத்து. எனவே, குவாரியை இந்தக் கணமே மூடவேண்டும். பொக்லைனை வெளியேற்ற வேண்டும்” தனது கருத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்க, நூற்றுக்கணக்கான மக்களும் அதனை ஆமோதித்துக் குரல் எழுப்பினர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஆர்.டி.ஓ. உடனே மேலிடத்துடன் பேசி, குவாரியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தார். “ஹிட்டாச்சியைக் கிளப்பு, கூடாரத்தைக் கலை” என்று முழக்கமிட்டனர் மக்கள்.

மணற்கொள்ளையர்களின் கொட்டகைக்குத் தீ வைத்தனர் சிறுவர்கள். “இது இறுதி வெற்றி என்று எண்ணாதீர்கள். நீங்கள் பல கோடி ரூபாய் பணத்தின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். உங்களை அப்புறப்படுத்தி விட்டு இதனை அள்ளுவதுதான் அந்த கொள்ளையர்களின் நோக்கம். அவர்கள் அவ்வளவு எளிதில் போய்விட மாட்டார்கள்” என்று எச்சரித்து, டிசம்பர் 15-ம் தேதி பொதுக்கூட்டம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் ராஜு.
போராட்டத்தில் முன்னணியில் இருந்த இளைஞர் அறிவரசன் மீது கரும்பு சக்கையைக் கொளுத்தியதாக வழக்கு, கீற்றுக் கொட்டகையைக் கொளுத்தியதாக பள்ளிச் சிறுவர்கள் மீது வழக்கு – என அச்சுறுத்தலைத் தொடங்கியதுடன், சாதிப்பூசலையும் உருவாக்க முனைந்தது போலீசு. “நாங்கள்தான் கொளுத்தினோம் என்று கிராமத்து மக்கள் அனைவரும் கைதாவோம்” என்று பதிலடி கொடுத்தவுடன் போலீசு பின்வாங்கியது. பயமுறுத்தல் பலிக்காதென்று தெரிந்தவுடன் பணத்தால் அடித்துவிடலாம் என்ற துணிச்சலில், பொதுக்கூட்டத்துக்கு சில தினங்களுக்கு முன் மீண்டும் குவாரியை இயக்கத் தொடங்கினர்.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து, கரையோரக் கிராமங்களில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் ஒருங்கிணைப்பாளராக மருங்கூர் திரு.பஞ்சமூர்த்தி மக்களால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து பொதுக்கூட்டத்துக்குப் பதிலாக, 15-ம் தேதி குவாரியை மூடுவதற்கான போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முந்தின நாட்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும் ம.க.இ.க. வின் மையக் கலைக்குழுவும் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செதனர். குவாரியை மூட முடியும் என்பதில் முன்னர் இருந்திராத நம்பிக்கை இப்போது மக்களிடம் தோன்றியிருந்தது.
ஒரு பெருந்திரள் மக்கள் போராட்டத்தின் அழகை, அதன் வீரியத்தை, வேகத்தை, மக்களின் முன்முயற்சியை டிசம்பர் 15-ம் தேதி காலையில் வெள்ளாற்றில் காண முடிந்தது.
இந்த முறை எந்திரங்கள் ஆற்றில் இருந்தால் அவை மக்களால் உருட்டித்தள்ளப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் அனைத்தையும் முன்கூட்டிய அகற்றியிருந்தனர். சென்ற முறை ஆர்.டி.ஓ. வும் போலீசும் கொதிக்கும் வெயிலில் 3 கி.மீ. தூரம் ஆற்றுக்குள் நடந்து வரவேண்டியிருந்தது. இந்தமுறை ஆற்றுக்குள் சாலை அமைத்து போலீசு வாகனங்களைக் குவித்திருந்தனர்.

கொதிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் குவிந்த வண்ணமிருந்தது. தாகத்தால் தவித்தால் கூட்டம் கலைந்து விடும் என்று கணக்கு போட்டு, தண்ணீர் லாரியை தடுத்து நிறுத்தியிருந்தது. அருகாமை கரும்பு வயல்களிலிருந்து கரும்பை ஒடித்து மக்களுக்கு விநியோகித்தனர் இளைஞர்கள். தாகத்தில் தவித்த பெண் போலீசாரும் கூச்சத்துடன் கரும்புத் துண்டுகளை வாங்கி கடித்துக் கொண்டனர்.
இடைப்பட்ட நாட்களில் ஆற்றினை அளந்து ஆய்வு செய்து முறைகேடு குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டியிருந்த ராஜு, அவற்றை மக்களுக்கு விளக்கி, இந்தக் கொள்ளையை நடத்துவதே அரசுதான் என்பதால், மக்கள் தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டுதான் ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று விளக்கினார். மணல் கொள்ளை காரணமாக கரையோர கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கியதுடன், ம.உ.பா. மையத்துடன் இணைந்து குவாரியை நாம் நிரந்தரமாக மூட முடியும் என்று நம்பிக்கையூட்டினார் மருங்கூர் பஞ்சமூர்த்தி.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் போராட்ட அனுபவங்களை விரித்துக் கூறிய வழக்குரைஞர் வாஞ்சிநாதன், நீதிமன்றத்தால் ஒருக்காலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பதையும் விளக்கினார். ம.க.இ.க. கலைக்குழுவினர் சளைக்காமல் நாள் முழுவதும் பாடிய வண்ணமிருந்தனர். “வெள்ளாற்று மணலைக் காக்க வெள்ளமாக ஆற்றிலிறங்கு” என்ற பாடல் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து இசைக்கும் அவர்களது சோந்தப் பாடலாகவே மாறியது. ஆற்றிலேயே சோறு பொங்கி சாதி பேதமின்றி அனைவரும் அமர்ந்து உண்டனர். தேநீர், வேர்க்கடலை வியாபாரிகளும் வந்து சேர போராட்டம் ஒரு திருவிழாவின் தோற்றத்தைப் பெற்றுக் கொண்டது.

போராட்ட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான காரணத்தினால் பீதியுற்ற மாவட்ட நிர்வாகம், கரையோர கிராமங்கள் அனைத்திலும் கேபிள் டிவியை துண்டித்து, மக்கள் திரள்வதைத் தடுக்க முனைந்தது. போலீசு படையை இறக்கி மிரட்டியது. அரசு தரப்பில் யாரும் பேச வரமாட்டார்கள் என்று அச்சுறுத்தியது. “குவாரியை மூடாமல் நாம் போவதில்லை. இரவு ஆற்றிலேயே தங்குபவர்கள் எல்லாம் கை உயர்த்துங்கள்” என்று ராஜு கூறியவுடன் எல்லோர் கைகளும் உயர்ந்தன.
இரவு ஜெனரேட்டர் மின்சாரத்தில் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தமது போராட்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர் மக்கள். அதிகாலையில் காலைக்கடன் முடிப்பதற்காக மக்கள் கலைந்திருந்த தருணத்தில், ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கிராமங்களில் போலீசைக் குவித்து ஆற்றுக்குள் செல்லவிடாமல் மக்களைத் தடுத்தது போலீசு. யாரும் அஞ்சிப் பின்வாங்குவதாக இல்லை.
வேறு வழியில்லாமல் ஆர்.டி.ஓ.வும் டி.எஸ்.பி.க்களும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். “இது பற்றி நான் பேச முடியாது. டெக்னிகல் மேட்டர்” என்ற ஆர்.டி.ஓ.விடம், “இந்தப் பள்ளம் 3 அடியா, 30 அடியா என்று கண்டுபிடிப்பது டெக்னிகல் மேட்டரா?” என்று பதில் கேள்வி எழுப்பினார், வழக்குரைஞர் ராஜு. அன்றைய நாள் முழுவதும் அதிகாரிகளுடன் மக்களின் முன்னிலையில் நடைபெற்ற வாதப்பிரதிவாதங்கள், அதிகாரத் வர்க்க மழுப்பல்களையும், அதிகார தோரணையையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்தன.
பிற்பகலில் வானம் இருண்டு மழை கொட்டத் தொடங்கியது. எனினும் கூட்டம் கலையவில்லை. மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோரியிருக்கும் ஆவணங்களையும், எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கான பதிலையும் பொதுப்பணித்துறையிடமிருந்து பெற்றுத் தருவதாகவும், அதன் அடிப்படையில் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை முடிவு செய்யலாம் என்றும், அதுவரை குவாரியை மூடுவதாகவும் ஆர்.டி.ஓ. அறிவித்தார்.
“இந்த முடிவை ஏற்கலாமா, போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாமா” என்ற கேள்வியை ஒலிபெருக்கியில் எழுப்பி மக்களின் கருத்தைக் கூறுமாறு ராஜு கேட்டுக் கொண்டார். ஒத்தி வைக்கலாம் – கூடாது என்ற இருவிதமான கருத்துகளும் வெளிப்படையான விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டன.
“அதிகாரிகளை நம்பி நாம் போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை. அவர்களது நோக்கம், மணல் கொள்ளையை நடத்துவதுதான்; அதைத் தடுப்பதே நமது பணி. இந்த இடைக்காலத் தடையைப் பயன்படுத்திக் கொண்டு வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தை மேலும் பலப்படுத்துவோம். பொக்லைன்கள் ஆற்றில் இறங்கினால் அடுத்த கணமே நாமும் இறங்குவோம். இது ஒருநாள் இரண்டு நாளில் முடியப்போகிற போராட்டம் அல்ல. நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக அரசு தொடுத்திருக்கின்ற போர் என்பதை புரிந்து கொண்டு நாம் செயல்பட வேண்டும்” என்று ராஜு தனது இறுதி உரையை நிகழ்த்தினார். ஒரு மனதாக முடிவெடுத்த மக்கள் திரள் வெள்ளாற்றின் குறுக்கே கார்மாங்குடியை நோக்கி பேரணியாக நடக்கத்தொடங்கியது.
வெள்ளாற்றின் கரையோர கிராமத்து மக்களுக்கு அவர்களது ஆற்றல் என்ன என்பதை இப்போராட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது. ஜனநாயக பூர்வமான வழிமுறைகளுக்கு மக்களைப் பயிற்றுவித்திருக்கிறது. தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டியிருக்கிறது. மணல் குவாரியையும் தடுத்து நிறுத்தியிருக்கிறது.
– அஜித்
__________________________________
புதிய ஜனநாயகம், ஜனவரி 2015
__________________________________