Saturday, May 10, 2025
முகப்புசெய்திஅரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலை!

அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்களின் அவலநிலை!

-

த்திய, மாநில அரசுகள் சுத்தம், சுகாதாரம் குறித்து புதுப்புது வகையில் பல்வேறு விளம்பரங்களை செய்து வருகின்றன. ஆனால், துப்புரவுப் பணியாளர்களின் உழைப்பை இந்த அரசுகள் அங்கீகரிப்பதே இல்லை.

துப்புரவுத் தொழிலாளர்கள்
துப்புரவுத் தொழிலாளர்களை கௌரவிக்கும் சிற்பம் (சீனாவில்)

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் 26-08-2011 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசாணை நிலை எண் : 47-ன் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர், இரவுக் காவலர் என்ற 5,000 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து 26-11-2012 அன்று பணி வழங்கப்பட்டது.

இந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் பள்ளிகளில் துப்புரவுப் பணி மட்டுமல்லாமல், மாவட்ட கல்வி அலுவலக பணிகளையும், முதன்மை கல்வி அலுவலகப் பணிகளையும், அங்கிருந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் செருப்பு, துணி, பை, கணித உபகரணங்கள், நோட்டு புத்தகம், பாடநூல் போன்றவற்றை பள்ளிகளுக்குக் கொண்டு சேர்ப்பது, ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது உடன் இருந்து உதவி செய்வது, விடைத்தாள்களை முறையாகக் கட்டி எடுத்து வருவது பல அடிப்படை வேலைகளையும் செய்து வருகின்றனர்.

இவ்வளவு வேலை செய்தும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் ரூ 3,000 மட்டும்தான். சம்பளம் ஏற்றித்தர தமிழக அரசு மறுக்கிறது. அது மட்டுமல்ல, துப்புரவு பணியாளர்களுக்கான பணியில் வேலை நேரம், ஆண்டு விடுப்பு போன்ற வரன்முறை எதுவும் செய்யப்படவில்லை. பணியாளருக்கான தகுதிகாண் பருவகாலம் முடிவு செய்யப்படவில்லை. அவர்கள் அடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள்.

சில மாவட்டங்களில் துப்புரவுப் பணியாளர்கள் போராடிய பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் பணி வரன்முறை செய்யப்படாமலேயே உள்ளது.

பல்வேறு அரசுப் பணிகள் தற்போது அந்த நிலையில்தான் உள்ளன. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உட்பட பல்வேறு இடங்களில் துப்புரவுப் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்படுகிறது. இது போலவே, அரசின் பல்வேறு துறைகளில் அடிப்படை ஊதியம் தவிர்க்கப்பட்டு தொகுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இது நிரந்தரமற்ற கூலிப் பணியாளர்களாக அரசு ஊழியர்கள் மாற்றப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

அரசு எந்திரம் தனது நிர்வாகத் திறனை இழந்து பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவோ, அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுக்கவோ வழிவகை செய்வதற்காக இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

துப்புரவுப் பணியாளர்களின் வேலையை வரன்முறை செய்ய முடியாத இந்த அரசு எப்படி மக்களின் அடிப்படை தேவைகளையும், பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் பிரச்சனை குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தருமபுரி கிளையில் தெரிவித்தனர். அரசு நிர்வாகத்தைக் கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுவரொட்டி பிரச்சாரம் நடத்தப்பட்டது.

  • அரசிடம் கோரிக்கை வைப்பதில் பலன் இல்லை, போராடுவதன் மூலம்தான் தீர்வை எட்ட முடியும்.
  • ஒன்றுகூடி போராடுவோம், நமது உரிமைகளை மீட்போம்

என்ற முழக்கத்துடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் துப்புரவுத் தொழிலாளர்களை அணிதிரட்டி வருகிறது.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
தருமபுரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க