Wednesday, May 14, 2025
முகப்புசெய்திகோவை ஸ்ரீரங்கநாதரின் கொழுப்பு - தொழிலாளிகள் சிகிச்சை

கோவை ஸ்ரீரங்கநாதரின் கொழுப்பு – தொழிலாளிகள் சிகிச்சை

-

கோவை தடாகம் சாலையில்  கே.என்.ஜி  புதூர்  பிரிவில்  அமைந்துள்ள  ஸ்ரீ ரங்கநாதர் இண்ட ஸ்ட்ரிஸ் கம்பெனியில்  உள்ள அனைத்து   தொழிலாளர்களும்  கடந்த இரண்டு நாட்களாக  தங்களது சம்பள கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள் . புதியஜனநாயக தொழிலாளர்முன்னணி, சி.ஐ.டி.யு  சங்கங்கள்  இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.

கோவை ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் வேலைநிறுத்தம்
சம்பள கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு வேலைநிறுத்தம்

கம்பெனி பணி தேவை (ஜாப் ஆர்டர்)  அடிப்படையில் உருக்கு (ஸ்டீல்)  வால்வுகள் தயாரித்து அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி, ஜப்பான், மலேசியா, கனடா  போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களோடு 1987-ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் இன்று 850 தொழிலாளர்கள் எனும் அளவுக்கு வளர்ந்து பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கு அடிப்படைக்காரணம் தொழிலாளர்களின் கடும் உழைப்பாகும்.

இந்த தொழிற்சாலைக்கு கோவை அரசூர் மற்றும் கரியம்பாளையத்தில் இரண்டு கிளைகளும், அத்திப்பாளையத்தில் கல்லூரியும், காளப்பநாயக்கன்பாளையத்தில் பள்ளியும் உள்ளது . 2014-ம்  ஆண்டில் இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ 130 கோடியைத் தாண்டிவிட்டது . நிறுவனம் வளர்ந்த அளவிற்கு தொழிலாளர்கள் சம்பளம் உயரவில்லை .

2009-ம் ஆண்டில் தொழிலாளர்கள் புதியஜனநாயக தொழிலாளர்முன்னணி சங்கத்தின் தலைமையில் 45 நாட்கள் போராட்டம் நடத்தி  மூன்றாண்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதன் விளைவாக தொழிலாளர்கள் சுமார் ரூ 4.500 சம்பள உயர்வு பெற்றனர். தொழிலாளர்களும் நிர்வாகத்துடன் இணைந்து எந்தவித தொழிற்தகராறுகளும் எழுப்பாமல் கடுமையாக  உழைத்தனர். இதன் காரணமாக நிர்வாகத்தின் ஆண்டு வருமானம் பன்மடங்கு உயர்ந்தது .

தொழிலாளர் உழைப்பால் உயர்ந்த ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்
தொழிலாளர் உழைப்பால் உயர்ந்த ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்

ஆனால் நிர்வாகம் தனது லாபம் எனும் நோக்கத்தில் தொழிலாளர்கள் சம்பளத்தில் ஆர்.டி.டபிள்யூ (RTW) , என்.சி.ஆர் (NCR), குறை உற்பத்தி (LOW PRODUCTION)  எனும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வழங்கப்பட்ட  ஊதியஉயர்வுகள் அனைத்தையும் பிடித்தம் செய்தது . இதனால் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி தோன்றியது . மூன்றாண்டு ஒப்பந்தம்  முடிந்த பின்னர் அடுத்த ஊதியஉயர்வு ஒப்பந்தம் 10-09-2013 அன்று பேசி முடிக்க வேண்டும் . ஆனால் நிர்வாகம் கடந்த 18 மாத காலமாக ஊதியஉயர்வு தராமல் பேச்சுவார்த்தை நாடகமாடி இழுத்தடித்தது .

கோவையில் செயல்படும் இதர பொறியியல் நிறுவனங்களில் (இஞ்சினியரிங் கம்பெனி) குறைந்தபட்ச சம்பளம் ரூ 10,000 முதல் அதிகபட்சம் ரூ 25,000 வரை உள்ளது . ஆனால், ஸ்ரீ ரங்கநாதர் இண்ட ஸ்ட்ரிஸ் கம்பெனியில் தொழிலாளர்கள் சம்பளம்  குறைந்தபட்சம்  ரூ 5,000 முதல் அதிகபட்சம் ரூ 15,000 வரை தான்  உள்ளது. ஆனால் அதிகாரிகள்,  அலுவலக ஊழியர்கள்  மாதச் சம்பளமாக ரூ 1 லட்சமும் அதற்கு மேலும் பெறுகின்றனர்.

தொழிலாளர்கள் கடந்த 03-02-2015 அன்று

  • பிடித்த சம்பளத்தை திருப்பி தரக்கோரியும்
  • புதிய சம்பளம் பேச வேண்டும் எனும் கோரிக்கையுடனும்

வேலை நிறுத்த அறிவிப்பை  ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரிஸ் நிர்வாகத்திற்கு கொடுத்தனர்.

ஸ்ரீரங்கநாதர் இண்ட்ஸ்ட்ரீஸ்
தங்களது ஒற்றுமை மூலம் நிர்வாகத்தின் கீழ்த்தரமான செயல்பாடுகள் தகர்த்து வரும் தொழிலாளர்கள்

இதனை ஒட்டி தொழிலாளர் துறை அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறது. நடைபெற்ற  ஐந்து  பேச்சு வார்த்தைகளில்  நிர்வாகம்  மூன்று பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கவில்லை. இரண்டில் பங்கெடுத்து  எந்த பதிலும்  சொல்லவில்லை. பேச்சு வார்த்தை போலியாக நடை பெறுவதால் தொழிலாளர்கள் கோபமடைந்து 02-03-2015 அன்று காலை 6.30 மணி  முதல்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். மொத்தம் 800-க்கும்  மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். நிர்வாகம் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முயற்சி செய்யாமல், காவல் துறையை  அணுகி அமைதியான முறையில் போராடும் தொழிலாளர்களை  அப்புறப்படுத்த , கைது செய்ய சூழ்ச்சிகள் செய்து வருகிறது.

ஆனால் பு.ஜ.தொ.மு, சி.ஐ.டி.யு தொழிலாளர்கள் தங்கள் ஒற்றுமை மூலம் அதனைத் தகர்த்தெறிந்து  வருகிறார்கள் . இதனால் எரிச்சலடைந்த நிர்வாகம் கம்பெனிக்குள் செயல்படும்  உணவகத்தை (கேண்டினை) இழுத்து மூடிவிட்டது . இதனால் தொழிலாளர்கள்  தேநீர், சாப்பாடு இல்லாமல்  சிரமப்பட்டனர். வெளியிலிருந்து அவை  ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டம் தொடர்கிறது.

உரிமைகளுக்காக ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம்
உரிமைகளுக்காக ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம்

அமைதியான போராட்டத்திற்கே, அதிலும் இரண்டு நாள் போராட்டத்திற்கே  உணவகத்தை  மூடிவிட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் எவ்வளவு கொடூரமானது என்பதை அறிந்து தொழிலாளர்கள் தங்கள் போராட்ட உணர்வை மேலும் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.

உணவகத்தை மூட உத்தரவிட்ட மனிதவளத்துறை அதிகாரி (HR)  திரு.குணசேகரனின் செயலை தொழிலாளர்கள் சார்பில் வன்மையாக கண்டனம் செய்கிறோம். தினசரி நிறுவனத்தின் வாயில் முன் தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பி கூட்டங்கள் நடத்தி,   நிர்வாகத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து நாள் தோறும்  தங்களை புதுப்பித்துக்கொண்டு உற்சாகமாக  போராட்டக்களத்தில் உள்ளார்கள் .

ஸ்ரீரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ்தகவல்
P.ராஜன்,  செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க