“பொருளிலார்க்கு பிணையில்லை” – நீதிமன்ற நாட்டாமைகளின் தீர்ப்பு!
அழுகி நாறும் நீதிமன்றத்தைப் பற்றி பு.மா.இ.மு தோழர்களின் அனுபவம் – போராட்டத் தொகுப்பு வீடியோ மற்றும் புகைப்படங்களுடன்
பிப்ரவரி 15-ம் தேதி அழிவிடைதாங்கியில் டாஸ்மாக் கடை நொறுங்கியது. அப்போராட்டத்தில் முன் நின்று வழி காட்டிய 4 பெண் தோழர்களையும் 5 ஆண் தோழர்களையும் மற்றும் குத்தனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி அம்மாவையும் போலீசு கைது செய்து அன்று இரவே வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தது. அன்று சிறைக்குச் சென்ற தோழர்களில் சாந்தி அம்மா மார்ச் 2-ம் தேதியும் பெண் தோழர்கள் மார்ச் 3-ம் தேதியும் ஆண் தோழர்கள் மார்ச் 6-ம் தேதியும் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
அழிவிடைதாங்கி டாஸ்மாக் உடைப்பு போராட்டம் காட்சித் தொகுப்பு வீடியோ
சிறையில் இருந்து வெளியே வந்தனர் என்றால் ஏதோ நீதிமன்றத்தின் கருணைப் பார்வையினால் இல்லை.
கைது செய்யப்பட்ட தோழர்கள் தங்களை காவல் நிலையத்தில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று போராட வேண்டியிருந்தது. “கைது செய்யப்பட்டவர்கள் ரவுடிகளா, பொறுக்கிகளா? எங்களை ஏன் தனித்தனியாக படம் எடுக்க வேண்டும்? சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவை இப்படியா நடத்தினீர்கள்?” என்று கேள்விகளை அடுக்கி போராடிய போதுதான் போலீசு அடங்கியது.
“கைது செய்யப்பட்டவர்கள் ரவுடிகளா, பொறுக்கிகளா? எங்களை ஏன் தனித்தனியாக படம் எடுக்க வேண்டும்? சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவை இப்படியா நடத்தினீர்கள்?”
தோழர்களின் செல்போன்களை பிடுங்கி அதில் உள்ள அனைத்து எண்களையும் பதிவு செய்து அத்துமீறியது போலீசு. பொதுவாக கைது செய்தால் கைது செய்யப்பட்டவர்களின் உடைமைகளை கொடுத்துவிட வேண்டும். போலீசு இந்த விதியை கடைபிடிக்குமா என்ன? குற்றத்துடன் தொடர்புடைய சாதனங்களாக செல்போன்களையும் சேர்த்து விட்டோம் என்றார் தூசி இன்ஸ்பெக்டர் நடராஜ். “இது மனித உரிமை மீறல் என்றதற்கு” “இப்படித்தான் செய்வோம். நாங்க வைப்பதுதான் சட்டம்” என்றார் ஏடிஎஸ்பி.
காட்சி- 1 திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்
11 பிரிவுகளின் கீழ் தோழர்களின் மீது வழக்கு போடப்பட்டு இருந்தது. அதில் பிணையில் வர முடியாத பிரிவுகள் இரண்டு. 506/2 – கொடுங்காயம் விளைவித்தல், 3 of ppd act – அரசு சொத்துக்கு சேதம் விளைவித்தல் ஆகியவையே. பிரிவுகளின் தன்மையைப் பொறுத்து ஒரு வழக்கின் பிணையினை மாவட்ட நீதிமன்றம் தான் வழங்கும். கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து அம்மாவட்ட நீதிமன்றம் எத்தனை கிலோமீட்டர் இருந்தாலும் சரி, போய்த்தான் ஆக வேண்டும்; அல்லல்பட்டுத்தான் தீர வேண்டும். செய்யாறு வட்டம் , அழிவிடைதாங்கி கிராமத்தில் நடந்த ஒரு வழக்கு என்றால் 4.30 மணி நேரம் பயணம் செய்யக்கூடிய திருவண்ணாமலைக்குத்தான் போக வேண்டும். திருவண்ணாமலையில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களின் உதவியோடு 16-ம் தேதி பிணைக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

17-ம் தேதி பிணைக்கான மனு விசாரணைக்கு வர, வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு வழக்கறிஞரிடம் கொடுக்க வேண்டிய தூசி காவல் நிலையத்தின் ஆய்வாளர் நடராஜ் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்தார்.
நீதிபதி வழக்கு எண்ணை அறிவித்த உடனே, “அரசு வழக்கறிஞர் தனக்கு இந்த வழக்கு பற்றி எதுவும் தெரியாது” என்றும் “ஆவணங்கள் தனக்கு அளிக்கப்படவில்லை” என்றும் கூறினார். இதைக்கேட்டதும் கொதித்துப்போன ம.உ.பா.மைய வழக்கறிஞர் கண்ணன், ஆவணங்களை அளிக்க வேண்டிய ஆய்வாளர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இருப்பதை சுட்டிக்காட்டிக் கொண்டு இருக்கும் போதே போலீசு ஆய்வாளர் நடராஜ் வெளியில் எழுந்து ஓட, அதை 10 காவலர்கள் மறைக்க என ஒரு நாடகமே நடந்தது.
“ஆய்வாளரை நீதிமன்றத்திற்குள் வரவழைத்து ஆவணங்களை கொடுக்க வைக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் கண்ணன் கூறிய போதும், நீதிபதி சாந்த சொருபமாக அமைதியாக இருந்தார். பிணை மனுவை தள்ளிவைத்தார்.
18-ம்தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை போலீசு காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய நாள். இதுவரை அதற்கு நீதி கிடைக்காததால் தமிழகம் முழுவதும் அனைத்து நீதி மன்றங்களிலும் 18,19 ஆகிய நாட்களில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
எனினும், திருவண்ணாமலை மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்திடம் அனுமதி பெற்று தோழர்கள் மீதான பிணைக்கான மனுவின் மீது வாதம் நடந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர், “சென்னையில் இருந்து வந்தவர்கள் திட்டமிட்டு கடையை உடைத்து உள்ளனர். பெண் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் படுகாயம் அடைந்து உள்ளனர், அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர்” என்றெல்லாம் கூறி, “பிணை கொடுக்கக்கூடாது” என்று முடித்தார்.

மக்கள் பலமுறை அந்த டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியதையும், குறிப்பிட்ட நாள் அன்று 3 மணி நேரம் வெயிலில் அமர்ந்து போராடிய போதும் அதை துளியும் மதிக்காமல் கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்ததும் டாஸ்மாக்குக்கு காவல் காத்துக் கொண்டு இருந்த போலீசின் திமிரான நடவடிக்கைகளையும் விவரித்தார் ம.உ.பா. மைய வழக்கறிஞர் கண்ணன்.
அனைத்தையும் கேட்ட மாவட்ட நீதிபதி, “போலீசு இருக்கும்போது நீங்கள் எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்” என்று அரசின் பிரதிநிதியாக வாதாடினார். இதன் பிறகும் இந்த அநீதிபதியிடம் பிணை பெற முடியாது என்பதால் பிணை மனுவை டிஸ்மிஸ் செய்யக் கோரினார் எமது வழக்கறிஞர் கண்ணன். அமைதியாக இருந்தார் அரசு வழக்கறிஞர்.
ஆனால், போராட்டத்தின் போது அங்கு இல்லாமலேயே தன்னை அடித்துவிட்டார்கள் என்று நடித்த ஆய்வாளர் சும்மா இருக்க முடியுமா என்ன?
நாம் ஒட்டிய சுவரொட்டியையும், கொடுத்த பிரசுரத்தையும் கையோடு கொண்டு வந்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கொடுத்து அதை நீதிபதியிடம் சொல்லுங்க, சொல்லுங்க என்றார். பிணை மனுவை டிஸ்மிஸ் செய்ய கோரிய பின்னர் விவாதத்திற்கு இடமில்லை.
ஆனால், போலீசுடன் கூட்டு சேர்ந்த அரசு வழக்கறிஞரோ “ யுவர் ஹார்னர், செய்யாறு, அழிவிடை தாங்கி உழைக்கும் மக்களின் பு.மா.இ.மு தோழர்களின் சீற்றத்தால் நொறுங்கியது டாஸ்மாக் சாராயக்கடை யுவர் ஹானர்” என்று சுவரொட்டியை முழுவதுமாக அவர் படித்து முடிக்க, அடுத்து ஆய்வாளர் பிரசுரத்தை அவரிடம் கொடுத்து கடைசி பத்தியை படிக்க சொன்னார்.
மீண்டும் ஆரம்பித்தார் அரசு வழக்கறிஞர் “யுவர் ஹானர்…..டாஸ்மாக் கடைகளை உருவாக்கிய இந்த கேடு கெட்ட அரசோ சீரழிந்து தள்ளாடுகிறது யுவர் ஹானர். ஒருபக்கம் ஓட்டு, இன்னொரு பக்கம் துட்டு என முதலாளிகளுக்கு வேலை செய்கிறார்கள் அரசியல் வாதிகள் யுவர் ஹானர். சாராயக் கம்பெனி முதலாளிகளுக்கு மாமா வேலை பார்க்கும்…………..” என்று உணர்ச்சிப் பெருக்கில் கொந்தளித்த அவரால் அதற்கு மேல் படிக்க முடியவில்லை. மாமா வேலை பார்க்கும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் என்று பிரசுரத்தில் உள்ளதை அவரால் உச்சரிக்க முடியவில்லை, நா குழறியது.
வழக்கறிஞர்கள் நியாயமாக வாதாடும் போது அதைக் கேட்காமல் வழக்கமாக எழுந்து ஓடும் நீதிபதி, அரசு வழக்கறிஞர் மூச்சு விடாமல் வாசிப்பதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தார். நாம் எப்படியும் உயர் நீதி மன்றம் சென்று பிணை வாங்கி விடுவோம் என்பதால், அப்படி செல்லாமல் இங்கேயே பல நாட்கள் இழுக்க வேண்டும் என்பதே இவர்கள் திட்டம். கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்ச்சி போன்ற வழக்குகளில் வெளிப்படையாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு சில நாட்களிலேயே பிணை கொடுக்கும் இந்த லஞ்சப்பேய்கள் நியாயமான வழக்கில் இவ்வளவு அயோக்கியத்தனங்களை அரங்கேற்றுகிறார்கள்.
பொதுவாக நீதி மன்றத்திற்கு சென்று பழக்கப்பட்டவர்களுக்கு தெரியும், வழக்கறிஞர்கள் பிணைக்கு என்று பெரிய அளவில் வாதாடுவதில்லை. “யுவரானர் 15 நாள்கள் ஆகிவிட்டது. பிணை கொடுங்கள்” என்பதுதான் பெரிய வார்த்தையாக இருக்கும்.
இதைக் கண்ட அந்த நீதிமன்றத்தின் மூத்த கிளார்க் சொன்னார் “இதே தூசி காவல் நிலையத்தில் கள்ளச் சாரயத்தை ஒழித்ததற்காகவே சாரய ரவுடிகளால் தாக்கப்பட்டும் இந்த போலீசுகாரனுங்களாளேயே மெண்டலாக முத்திரை குத்தப்பட்ட ஹரிதாஸ்தான் உண்மையான மனுசன். அவன் முன்னாடி இவனுங்கள்ளாம்…” என்று போலீசின் யோக்கியதையை காறித் துப்பினார்.
காட்சி – 2 சென்னை உயர்நீதிமன்றம்
உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் புறக்கணிப்புப் போராட்டம், சனி, ஞாயிறு ஆகிய காரணங்களால் பிப் 24-ம் தேதி அன்று பிணை மனு விசாரணைக்கு வந்தது. அன்று எதிர் வழக்காட அரசு வழக்கறிஞர் வேறொரு நாள் கேட்டார். என்ன வழக்கு என்று நீதிபதி கேட்டார்.
நமது தரப்பு வழக்கறிஞர் பொற்கொடி விவரித்துக் கொண்டு இருக்கும் போதே ”அந்த காலத்துல கள்ளுக்கடை எதிர்ப்புப் போராட்டம் செய்தாங்களே அது போலவா?” என்று நீதிபதி கூறி அடுத்த நாள் பிணை மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.
25-ம் தேதி பிணை மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார்.
தான் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்குழி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற பஞ்சாயத்து தீர்மானம் போட்டபோதும் அதை ஏற்காமல் அரசு செயல்பட்டதற்கு எதிரான மனு மீது அளித்த தீர்ப்பினை சுட்டிக்காட்டிப் பேசினார்.
“இது பேருக்குத்தான் காந்தி பிறந்த நாடு, சாரயம் எங்களுக்கு வேண்டாமுன்னு சொன்னால் கூட எல்லா ஊரிலும் டாஸ்மாக் வைக்கிறோம். இங்கேயும் வைக்குறோம் என்கிறார்கள். கருங்குழியில் ஊரே தீர்மானம் போட்ட போதும் டாஸ்மாக் கடையை வைத்தே தீருவோம் என்று மாவட்ட கலெக்டர் சார்பில் வாதாடுகிறார்கள். 2 குடிகாரர்களை அழைத்து வந்து அவர்களின் குடிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாகவும் கூறினார் மாவட்ட கலெக்டர். நோய்க்கான மருந்தினை அரசு கட்டாயமாகக் கொடுக்கலாம்; ஆனால் சாராயத்தைக் கொடுக்கக்கூடாது என்று கூறி அந்த இடத்தில் டாஸ்மாக்கை எடுக்க உத்தரவிட்டதை”யும் கூறினார் நீதிபதி.
மேலும் ஒரு நாள் அவகாசம் கேட்டார் அரசு வழக்குரைஞர். பிணையை தள்ளிப்போடுவதிலேயே குறியாக இருந்தனர் போலீசுக்காரர்களும், அரசு வழக்கறிஞர்களும்.
அடுத்த நாள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான சண்முக வேலாயுதத்தை களம் இறக்கியது அரசுத்தரப்பு.
சண்முக வேலாயுதம் வந்த உடனே “இவரே வந்திருக்காருன்னா, டாஸ்மாக் உடைச்ச கேசுக்கு இவர் வருகிறாரா? அவ்வளவு முக்கியமான வழக்கா இது”என்று மற்ற வழக்கறிஞர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
பிரச்சினை டாஸ்மாக் கடை நொறுங்கியதல்ல; தனக்கு என்று அரசு தானே விதித்துக் கொண்ட விதிமுறைகளை தகர்த்துக்கொண்டு மக்களுக்கு எதிரியாக மாறிப்போன இந்த அரசை அரசமைப்பு முறைக்குள் நின்று போராடி வீழ்த்த முடியாது என்று மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்ததுதான்.
சண்முகவேலாயுதம் வந்த உடனே பிணைக்கான நீதிமன்றம் 35 வழக்கறிஞர்களின் கூட்டத்தில் சிக்கியது.
‘சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள், இவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், காவல் அதிகாரிகள் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள், மக்கள் போராடவில்லை, இவர்கள்( பு.மா.இ.மு )தான் போராடினார்கள்’ என்று ஜோடித்து வைத்திருந்த திரைக்கதையை வைத்து படம் ஓட்டினார்.
சினிமாபட வில்லனின் அநியாயமான செயல்களை அடித்து நொறுக்கும் ஒரு ஹீரோவைப்போல அரசு தரப்பு வழக்குரைஞரின் அபத்த வாதங்களை அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்தே எடுத்து வைத்து நொறுக்கிக்கொண்டு இருந்தார் நமது மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு.
அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த இறுதியாக நீதிபதி தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தார். உடனே எப்படியாவது பிணையை தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று ஆய்வாளர் நடராஜ் “சார், 10 வயசுக் குழந்தைகள் 50 பேரை கூட்டிட்டு வந்தாங்க”என்ற பாயிண்டை எடுத்துக் கொடுக்க, அரசு தலைமை வழக்கறிஞரும் இப்போதுதான் இந்த அமைப்பினர் தவிர வேறு யாரும் போராடவில்லை என்று சொன்னோமே என்று கூட யோசிக்காமல் “50 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போனார்கள் யுவரானர்” என்று புகார் சொன்னார்.
அவ்வளவு நேரம் பொறுமைகாத்த நீதிபதி “சரி, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குழந்தைகளோடு குடும்பமாக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். போதுமா சார்” என்று சண்முக வேலாயுதத்திடம் நீதிபதி கேட்க, சேம்சைடு கோல் ஆகிவிட்டதே , இனி நாம் எது சொன்னாலும் நமக்கு பிரச்சினை ஆகுமென்று ஆய்வாளர் அமைதியானார்.
சிறைபட்ட அனைத்து தோழர்களுக்கும் பிணை வழங்கியும், ஒவ்வொருவருக்கும் இருவர் தலா 5,000 ரூ மதிப்பு கொண்ட ஜாமீன் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பிணை கிடைத்துவிட்டது என்று யாரும் மகிழ்ச்சியடைய முடியாது. வெள்ளியன்று பிணை பெறப்பட்ட போதும் அனைத்துத் தோழர்களையும் சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர கூடுதலாக ஒருவாரம் ஆனது.
சென்னைப்பகுதி என்றால் 10,000 ரூ ஜாமீன் என்றால் அதற்கு ரேசன் அட்டை போதுமானது. ஆனால் சென்னைக்கு வெளியில் என்றால் வீடு அல்லது மனை பத்திரம்,ரேசன் அட்டை, வி.ஏ.ஓவிடம் சொத்து மதிப்புச் சான்றிதழ் ஆகியவை தேவை. இவர்களுடைய நீதிமன்ற விதிப்படியே கண்டிப்பாக இவையெல்லாம் காட்ட வேண்டும் என்றில்லை. ஆனால் இவையெல்லாம் காட்ட வேண்டும் என்பதி நீதிபதிகளின் எதேச்சதிகாரம். இதன் மூலம் பொருளில்லார்க்கு ஜாமீன் கொடுக்க வழியில்லை என்று அறிவிக்கிறது அரசு. இப்படி பலர் ஜாமீன் கொடுக்க வழி இல்லாததால் பிணை கிடைத்தும் சிறையில் ஆண்டுக்கணக்கில் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த நீதிமன்ற முறையில் ஒரு ஏழைக்கு விடுதலை என்பதெல்லாம் இருக்கட்டும், பிணை கிடைக்குமா? என்றால் அதுவும் இல்லை. ஜெயா என்ற கொள்ளைக்காரிக்காக தானாக முன்வந்து வக்காலத்து வாங்கும் நீதிமன்றம், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் முதலாளிகள், ஓட்டுப்பொறுக்கிகளின் கிரிமினல் வழக்குகளில் பலமுறை பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஆஜராகாமல் சொகுசாக வாழ்ந்து வருபவர்களை நீதிமன்ற வாசப்படிக்கு கொண்டு வரமுடியாத நீதிபதிகள், மக்களுக்காகப் போராடியதற்காக போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது, பிணை வழங்கக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக பொய் சொல்கிறார்கள் என்பதெல்லாம் தெரிந்தும் வழக்கிலிருந்து விடுவிக்கவில்லை.
காட்சி -3 செய்யாறு கீழமை நீதிமன்றம
பொதுவாக, பிணையில் ஜாமின் கொடுப்பதற்கான வழக்குகள் எல்லாம் காலையிலோ அல்லது மதிய அமர்வில் முதலிலோ எடுக்கப்படும். ஏனென்றால் அப்போதுதான் விரைவில் சிறையில் இருந்து வெளியே வர முடியும் என்பதுதான் வழக்கம். ஆனால், செய்யாறு நீதிமன்றத்தில் அப்படி இல்லை. காலை 10 மணி முதல் மாலை நீதிமன்றம் முடியும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும். சில சமயம் பிணை உத்தரவை கையில் வாங்க இரவு 7 மணி கூட ஆகும்.
ஜாமீன் கொடுக்க வந்த ஒருவர் சொன்னார் “ஒரு நாள் முழுக்க உட்கார வைக்கிறாங்களே இதுக்கு பயந்துதான் ஒரு கேசுக்கு நான் வரவே இல்லை. தொழிலில் 2 லட்ச ரூபாய் நட்டாமாயிடுச்சு”. அந்த நீதிமன்றத்தில் திரும்பும் பக்கமெல்லாம் ஒவ்வொரு டேபிளுக்கும் மொய் வைக்க வேண்டும். இதுவெல்லாம் மறைமுகமாக அல்ல; வெளிப்படையாக மிகவும் பட்டவர்த்தனமாக.
இவர்கள் ஜாமின் கொடுக்க கேட்கும் ஆதாரங்களை தயார் செய்ய வி.ஏ.ஓ க்கும் மொய் எழுத வேண்டும். ஜாமின் கொடுக்க வேண்டுமென்றால் போலீசு, நீதிமன்றம், வி.ஏ.ஓ ஆகியோர் கூட்டணிக்கு இந்தியன் சினிமாபட ரேஞ்சில் ‘முக்கியமான பேப்பர் ’ ( பணம் ) கொடுத்தால்தான் முடியும் என்று மக்கள் குமுறுகிறார்கள்.
![]() |
![]() |
![]() |
எவ்வளவுதான் கொடுத்தாலும், பிணை கிடைத்துவிட்டாலும் தங்கள் பங்கிற்கு ஏதாவது கெடுதல் செய்தே ஆக வேண்டும் என்ற மனோநிலையில் ஜாமின் தாரர்களை ஏற்கும் நீதிபதியும், வி.ஏ.ஓ வும் சில நாட்களை கடத்தி விடுகிறார்கள். எமது தோழர்களின் ஜாமினிலும் அப்படித்தான் முயற்சித்தார்கள்.
ஒரு பெயில் கேசைப் பற்றி இப்படி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் எதுவென்றால், மக்களை காப்பதே என் வேலை என்று சொல்லிக்கொள்ளும் காவல்துறை, நீதிபரிபாலனம் செய்வதே என் வேலை என்று சொல்லிக்கொள்ளும் நீதிமன்றம், அதிகாரவர்க்கம் ஆகியவை இன்று எப்படி தான் வகுத்துக்கொண்ட விதிகளை தூக்கியெறிந்து மக்களுக்கு எதிரானதாக மாறி, மக்களை வாட்டி வதைக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
எங்கள் ஊருக்கு சாராயக்கடை வேண்டாம் என்று சொல்வதற்கு கூட இங்கு யாருக்கும் உரிமை இல்லை..நான் வைப்பதுதான் சட்டம் என்கிறது போலீசு.
இதை தட்டிக் கேட்க வேண்டிய நீதிமன்றம், போலீசு சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறது.
மக்கள் சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவுக்கு ஜாமீன் என்றால் உடனே கிடைக்கும், உழைக்கும் மக்களுக்கு சொத்து இல்லை எனில் பிணை கிடைத்தாலும் சிறையில்தான் சாக வேண்டும்.
இனியும் இந்த அரசமைப்பு முறையின் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்?
![]() |
![]() |
![]() |
– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு