ஓங்கட்டும் நாட்டுப்பற்று! ஒழியட்டும் மறுகாலனியாக்கம்!
மார்ச்-23 : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள்: மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக கடைபிடிப்போம்!
அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே!
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச்-23, 1931.

வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை கெஞ்சிப்பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால், போராடி விடுதலையை சாதிக்க வேண்டும் என்று வெகுண்டெழுந்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த மாணவர்களும், இளைஞர்களும் கம்யூனிச ஒளியில் அந்த காந்திய காரிருளை கிழித்து போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்தப் போராளிகளைத்தான் அன்று காந்தியும் காலனியாதிக்கவாதிகளும் தீவிரவாதிகள் என்று அவதூறு செய்தனர். விடுதலைக்காகப் போராடிய மக்களை குற்றப் பரம்பரையினராக்கி கண்காணித்து கொடுமைபடுத்தியது ஆங்கிலேய ஏகாதிபத்தியம்.
அந்த காலனியாதிக்கம்தான் ஒழிந்துவிட்டதே அதற்கென்ன இப்போது என்று கேட்கிறீர்களா? அது ஒழிந்து விடவில்லை. ஆட்கள்தான் மாறி இருக்கிறார்கள். அன்றைய காலனியாதிக்க கொடுமைகள் மறுகாலனியாக்கம் என்ற மறு உருவத்தில் தீவிரமாகி வருகின்றன.
வளர்ச்சி, வல்லரசு, முன்னேற்றம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளின் விளைவாக கல்வி, மருத்துவம், சுகாதாரம், தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் கையில்.

காடுகளும்,மலைகளும், இயற்கை வளங்களும் பன்னாட்டு – உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடப்படுகின்றன.
கார்ப்பரேட் முதலாளிகளின் அகோரபசி அடங்காததால் ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் மொத்த நாட்டையுமே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கூட்டிக்கொடுக்கிறார் மோடி.
அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டுவதற்கு வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு விசுவாசமாச் சேவை செய்தான் என்பதை வரலாற்றில் படித்திருப்போம். இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை அடிமையாக்க அந்த மீர்ஜாபரின் வாரிசாக இருந்து வேலை செய்து வருகிறார் மோடி.
இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடும் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் மீது வகை வகையான அரசுப் படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அடக்கி ஒடுக்கி வரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் கொண்ட அரசு, இன்னொரு பக்கம் போராடும் குணத்தை மழுங்கடித்து முடமாக்க டாஸ்மாக் சாராயம், ஆபாச சீரழிவுகளை அள்ளித்தரும் சினிமா – தொலைக்காட்சிகள் , பைக், செல்போன் நுகர்வு வெறி கலாச்சாரம் என ஏகாதிபத்திய நச்சுக் கலாச்சாரத்தை பரப்பி சீரழித்து வருகிறது.
இனியும் இந்த மறுகாலனியாக்கக் கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்வது அவமானம்.
- ஏகாதிபத்திய எதிப்புப் போராளி பகத்சிங் வாரிசுகளாக களமிறங்குவோம்.
- தேசவிடுதலைப் போரை முன்னெடுப்போம்.
- மறுகாலனியாக்கத்தை வீழ்த்தி நாட்டை மீட்டெடுப்போம்.
நாட்டுப்பற்றும் தன்மான உணர்வும் கொண்ட மாணவர்களே, இளைஞர்களே இந்த தேசவிடுதலைப்போரில் உங்களையும் இணைத்துக்கொள்ள அழைக்கிறது பு.மா.இ.மு.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி