privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

மாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

-

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் திமிரை முறியடித்த மாணவர்கள் போராட்டம்!

டந்த மார்ச் மாதம்  09.03.2015  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தில் உள்ள ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் CSE முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ரூத்ஷைனி தற்கொலைக்கு  முயன்று கல்லூரியின்  3-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். தற்போது  மாணவி ரூத்ஷைனி மிகவும் மோசமான நிலையில்  தூத்துக்குடி லட்சுமி  பாலிகிளினிக்கில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

இந்த சம்பவம் நடந்த தினத்தன்று கல்லூரியில் நடந்த அகமதிப்பீட்டுத் தேர்வில் அந்த மாணவி காப்பியடித்தாக ஆசிரியர்கள் திட்டியுள்ளனர். அதனால்தான் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக நிர்வாகம் பொய் சொல்லி வருகிறது. ஆனால் மாணவி ரூத்ஷைனியை தனியாக ஒரு அறையில் வைத்து மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக திட்டியுள்ளனர் ஆசிரியர்கள்.

தன் பெற்றோருக்கு ஃபோன் செய்து தருவதாகவும் நீங்கள் அவர்களிடம் பேசுங்கள் என மாணவி கூறியுள்ளார். அதற்கு, “நீ பெற்றோருக்கு தான் ஃபோன் பண்றியா இல்லை வேற எவனுக்காகவது ஃபோன் பண்றியா? யாருக்குத் தெரியும்” எனத் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்துதான் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தான் உண்மை.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
மாணவி ரூத்ஷைனியை தனியாக ஒரு அறையில் வைத்து மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக திட்டியுள்ளனர் ஆசிரியர்கள்.

ஆனால், செமஸ்டர் தேர்விலேயே கல்லூரி நிர்வாகம் பிட்டு பேப்பர் கொடுத்து மாணவர்களை எழுத வைத்து தான் தன் அந்தஸ்தையும், அட்மிஷனையும் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில், “காப்பியடித்ததை கண்டித்ததால்தான் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்” என திமிருடன் பேசி வருகிறது, கல்லூரி நிர்வாகம்.

தன்னை யோக்கியவனாக காட்டிக் கொள்ளும் இந்த நிர்வாகம்தான் மாணவி கீழே குதித்தவுடன்  அவளை காப்பாற்றும் நோக்கில் தூக்கச் சென்ற சக மாணவர்கள் 4 பேரின் மீது ரூ 1000 அபராதம் விதித்துள்ளது. மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட மாணவியை பார்க்க வேண்டும் என நிர்வாகத்திடம் கெஞ்சிய மாணவர்களை தேர்வு எழுதிவிட்டு செல்லுமாறு அச்சுறுத்தி தடுத்துள்ளது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் திமிரை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.

நிர்வாகம் “உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்? நாங்கள் இது போனறு பல சம்பவங்களை பார்த்து விட்டோம். அதையே மறைத்து விட்டோம். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சாதாரணம்” என வெளிப்படையாகவே திமிருடன் கூறியது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சுவரொட்டி

கல்லூரி நிர்வாகத்தின் மேலும் சில ‘சிறப்பம்சங்கள்’ :

1. 8 நிமிட இடைவெளியில் 1000  மாணவர்கள் சிறுநீர் கழித்து விட வேண்டும். தாமதமானால் அபராதம்.
2. மாணவர்களை பொம்பள பொறுக்கியெனவும், மாணவிகளை ஆம்பள பொறுக்கியெனவும்  ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவது.
3. அதிகக் கட்டணம் வாங்கிக் கொண்டு குறைவான கட்டண ரசீது கொடுப்பது.
4. மாணவர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அதை வைத்தே மிரட்டுவது.
5. மாணவர்கள் மத்தியிலேயே உளவாளிகளை உருவாக்கி சகமாணவர்களை உளவு பாக்க சொல்லி மிரட்டுதல் என இன்னும் நீளும் அந்த பட்டியல்.

கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் திமிரை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல், கலெக்டரிடம் மனு கொடுப்பது எனவும், பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது எனவும் தொடர்ந்தது மாணவர்களின் போராட்டம். பிறகு மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நிர்வாகம்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
“பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மாணவிக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும்.”

“பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மாணவிக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் “மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனவும் பேச்சுவார்த்தையில் மாணவ பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகமும், காவல்துறையும் 3 நாட்கள் கெடு கேட்டனர் . அதனை அங்கீகரித்து மாணவர்கள் தங்களின் அன்றைய போராட்டத்தை முடித்துள்ளனர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டனர்

பிறகு தான் தெரியவந்தது. அந்த 3 நாள் கெடு என்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் தனக்கேயுரிய பாணியில் மிரட்டி பணிய வைப்பதற்காக இவர்கள் நடத்திய நாடகம். பிறகு தான் இந்த பிரச்சனையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலையிட்டது!

போராடும் மாணவர்களை குழுவாக திரட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சனையை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாக “உயிர்பலி வாங்கத்துடிக்கும் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி” என்ற தலைப்பில் போஸ்டர் போட்டு பரவலாக மக்கள் கூடும் இடங்களிலும், பிற கல்லூரிகளிலும் ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
இந்த பிரச்சனையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலையிட்டது.

திமிர் பிடித்த ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்”  என்ற தலைப்பில் 5000 பிரசுரம் போட்டு அனைத்து கல்லூரிகளிலும் விநியோகிக்கப்பட்டது.

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என இணைய தளங்களில்  பிரசுரம், போஸ்டர் என பிரச்சாரம் பல்லாயிரம் மக்களைச் சென்று அடைந்தது. அதனைக் கண்டு நடுநடுங்கி போன நிர்வாகம் மறுப்பு செய்திகளை இணைய தளங்களில் பரப்பத் தொடங்கியது. பொய்களையும் அவிழத்து விட்டது. ஆனால்  அவை அனைத்தையும முறியடித்தனர் மாணவர்கள்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
பிரச்சாரம் பல்லாயிரம் மக்களைச் சென்று அடைந்தது.

அதற்குள்ளாகவே ஏனைய பொறியியல் கல்லூரிகள், அரசு கலைக்கல்லூரிகள் என அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டனர். அதற்கு பிறகு அனைத்து கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்ட கமிட்டி உருவாக்கப்பட்டது.

அடுத்த கட்ட போராட்டமாக  அனைத்து கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக முழக்கமிட்ட படியே சென்று மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
கலெக்டரோ, “இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இதுக்காகவெல்லாம் இப்படி போராடலாமா” என தட்டிக் கழித்தார்.

ஆனால் கலெக்டரோ, “இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இதுக்காகவெல்லாம் இப்படி போராடலாமா” என தட்டிக் கழித்தார். நம்மை அந்த இடத்தைவிட்டு காலி பண்ண வேண்டும் என்பதற்காகவே, “நான் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என வாய்வழி உத்தரவு கொடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கலைந்தோம். கிட்டத்தட்ட ஒரு வாரத்தை கடந்த நிலையில் அன்று வரை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்கக் கூட வரவில்லை.

நிர்வாகமும், காவல் துறையும் கூட்டு சேர்ந்து கொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டும் வேலைகளைத்தான் மும்முரமாக செய்து கொணடிருந்தனர்.

ஆனால், இதையெதையும் கண்டு அஞ்சாத மாணவர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகினர். கடைசியாக, “சாகும் வரை உண்ணாவிரதம்” என்ற போராட்டத்தில் குதித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
போராட்டம் முதல்கட்ட வெற்றியை அடைந்தது.

அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர் கலெக்டர், தாசில்தார், எஸ்.பி மற்றும் கல்லூரி நிர்வாகம். பிறகு மாணவர்கள், பெற்றோர்கள், தாசில்தார், கல்லூரி நிர்வாகம் என அனைவரின் முன்பும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. மாணவியின் மருத்துவச் செலவு முழுவதையும் நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அதனடிப்படையில் 3,12,000 ரூபாய் பெற்றோருக்கு வழங்கியது கல்லூரி. நிர்வாகத்தின் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு காவல் துறை சார்பாக உறுதியளிக்கப்பட்டது! போராட்டம் முதல்கட்ட வெற்றியை அடைந்தது.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆனால் முழுவதுமாக அம்பலப்பட்டு அம்மணமாக நின்ற கல்லூரி நிர்வாகம் சும்மாவிடுமா என்ன? தனது அடுத்தகட்ட சதியை தொடங்கிவிட்டது! போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களை பழிவாங்கத் தொடங்கிவிட்டது.

‘வருகை பதிவு இல்லை’, ‘கல்விக்கட்டணம் பாக்கியுள்ளது’, ‘போராட்டத்தால் கல்லூரியின் சொத்திற்கு சேதம் ஏற்பட்டுவிட்டது’, ‘கெட்டுவிட்டது’ என பல காரணங்களை முன் வைத்து மாணவர்களை பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்கும் மேலாக கல்லூரியை வாழ்த்தி மாணவர்களின் பெற்றோர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டும் என மிரட்டி வருகிறது. அதனையும் தாண்டி நிர்வாகமே மாணவர்களின் சார்பாக ஒரு போஸ்டரை போட்டு ஒட்டியுள்ளது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
நிர்வாகமே மாணவர்களின் சார்பாக ஒரு போஸ்டரை போட்டு ஒட்டியுள்ளது.

இந்த சதித்தனத்தையெல்லாம் எதிர்த்து உறுதியுடன் போராடி வருகின்றனர் மாணவர்கள்.

இந்தப் போராட்டத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள்

1. துவக்கத்தில் தன்னெழுச்சியாக போராடிய மாணவர்கள் பிறகு ஒரு அமைப்பாக மாற்றிக் கொண்டனர். அதனை அனைத்து கல்லூரி அமைப்பாக மாற்றிக் கொண்டனர். வேலைகளை திட்டமிட்டு  பிரித்துக் கொண்டு நடைமுறைப்படுத்தினர். இதன் மூலம் தான் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் உணர்ந்துள்ளனர்.

2. பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவச் செலவு (கிட்டதட்ட 3.5 லட்சம் ரூபாய்) முழுவதையும் முதலில், மாணவர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

3. ஒவ்வொரு கட்டத்திலும் நிர்வாகத்தின் எதிர் நடவடிக்கைகளையும், சதித்தனங்களையும் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்; முறியடித்து வருகின்றனர்.

4. பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும், போராடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளனர்.

5. தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் மேடைக்கு முன் வைத்துள்ளனர். வாய்ப்புள்ள அனைத்து வகையான பிரசுரம், போஸ்டர், இணையதளம், பேருந்து பிரச்சாரம், கல்லூரி வாயில் பிரச்சாரம் என அனைத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தூத்துக்குடி.