Monday, July 26, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலது கையில் கோமியம் இடது கையில் ஹாம்பர்கர்

மாட்டுக்கறி தடைச் சட்டம் : வலது கையில் கோமியம் இடது கையில் ஹாம்பர்கர்

-

சுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சித் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க. மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாட்டை வெட்டினால் மகாராட்டிரத்தில் 5 ஆண்டு சிறை, மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள், அரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை. மாட்டை விற்கும் விவசாயி தொடங்கி, வாங்குபவர், லாரி டிரைவர், வெட்டுபவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள். மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு போலீசு ஏட்டுகூட வீடு புகுந்து சோதனை செய்யலாம்.

சதீஷ் சோலங்கி
“குடும்பத்திற்கே சோறு போட முடியாத நிலையில், நாங்கள் பசுக்களை எப்படி பராமரிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்து விவசாயி சதீஷ் சோலங்கி.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி கொலைக்குற்றமாக இருந்தாலும் ஒருவர் குற்றவாளி என்று போலீசு தான் நிரூபிக்க வேண்டும். ஆனால், மாட்டைக் கொன்றதாகவோ தின்றதாகவோ நீங்கள் கைது செய்யப்பட்டால், நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளாதவரை நீங்கள் குற்றவாளிதான் என்கின்றன, ம.பி, மகாராட்டிரா, டில்லி மாநில சட்டங்கள்.

மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் நோக்கம். எனவேதான் அம்மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இன்னொரு பொடா சட்டமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம், இந்து மதத்தினர் பசுவைப் புனிதமாக கருதுவது குறித்துப் பல புனைகதைகளை சங்கப் பரிவாரம் பரப்பிவந்த போதிலும், மத உணர்வைப் புண்படுத்துவதால் மாடு வெட்டுவதைத் தடை செய்வதாக இச்சட்டம் கூறவில்லை. கால்நடைச் செல்வத்தைப் பாதுகாப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு அவசியம் என்று மதச்சார்பற்ற மொழியில் தந்திரமாகப் பேசுகின்ற, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடு பிரிவு 48-ன் கீழ்தான் இச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இது பார்ப்பனியத்தின் கபட வேடத்துக்கு இன்னொரு சான்று.

மாட்டுக்கறிக்கு தடைஇசுலாமியர் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர்தான் மாட்டுக்கறி தின்னும் பழக்கமே இந்துக்கள் மத்தியில் பரவியது என்பது சங்கப் பரிவாரம் பரப்பி வரும் முக்கியமான கட்டுக்கதை. கிறித்தவமும் இசுலாமும் தோன்றுவதற்கு 1500 ஆண்டுகள் முன்னதாகவே, மாடுகளை யாகத்தில் பலியிடுவதும் புரோகிதப் பார்ப்பனர்கள் அவற்றை உண்டு கொழுப்பதும் எல்லை மீறிய அளவில் நடந்துள்ளன. ரிக் வேதத்தில் தொடங்கி இராமாயணம் வரையிலான பலவற்றிலும் பார்ப்பனர்கள் பசு மாமிசம் தின்றது பலவிதமாக விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. இதனை அம்பேத்கர், டி.டி.கோசாம்பி, டி.என்.ஜா முதலான ஆவாளர்கள் ஆதாரங்களுடன் அம்பலமாக்கியிருக்கின்றனர். விவேகானந்தரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால், அன்றைய விவசாய சமூகத்தின் மக்கள், பலியிடுதலை நிராகரித்த பவுத்தத்தையும், கொல்லாமையை வலியுறுத்திய சமணத்தையும் தழுவுவதற்கு, பார்ப்பனர்களின் மாடு தின்னும் வெறியும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்தி, தங்களுடைய சமூக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமானால், மாட்டுக்கறியைத் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் கவிச்சியை வெறுத்தார்கள் பார்ப்பனர்கள் என்பது வரலாறு.

இவையெல்லாம் நாம் கூறும் வரலாற்று விளக்கங்கள் மட்டுமல்ல, வேள்விகளில் பசுமாடுகளைப் பலியிடுவதும் சாப்பிடுவதும் சாத்திரப்படியும் சம்பிரதாயப்படியும் அவசியமானது என்று வலியுறுத்தி, செத்துப்போன சங்கராச்சாரி வழங்கியுள்ள அருளுரைகளை 1993-ல் ஆனந்தவிகடன் நூல் தொகுப்பாகவே வெளியிட்டிருக்கிறது. எனவே, கோமாதாவைக் கொல்வது இந்து மதத்தின் வழிபாட்டுரிமை.

பா.ஜ.க.வின் பசு வதைத் தடைச் சட்டங்களால், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25, பார்ப்பனர்களுக்கு வழங்கியிருக்கும் மாடு வெட்டும் உரிமையைப் பறிக்க முடியாது என்பதே உண்மை. இந்தச் சட்டத்தினால், கறிக்கடை பாயையும், கறி தின்னும் சூத்திர, தலித், பழங்குடி மக்களையும்தான் கைது செய்ய முடியும். இதில் யாருக்காவது சந்தேகமிருந்தால், கருவறைத் தீண்டாமை பார்ப்பனர்களின் மத உரிமை என்று உச்சநீதி மன்றத்தில் வாதாடிவரும் மூத்த வழக்குரைஞர் பராசரனிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.

மும்பை ஆர்ப்பாட்டம்
மாட்டுக்கறி தடைச் சட்டத்திற்கு எதிராக முசுலீம்கள், தாழ்த்தப்பட்டோர், ஏழைகள் உள்ளிட்ட பல பிரிவினரும் இணைந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

பசுவின் புனிதம் என்பது வடிகட்டிய பொய். இது குறித்த கருத்து பார்ப்பன மதத்திலேயே சுமார் 8-ம் நூற்றாண்டு வாக்கில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆய்வுரித்துத் தின்னும் புலையர் என்று கூறித் தீண்டாமையை நிலைநாட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்தக் கருத்து, பிற்காலத்தில் விடுதலைப் போராட்டத்தை பார்ப்பன இந்து தேசியமாகத் திரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் திலகர் அறிமுகப்படுத்திய விநாயகர் ஊர்வலத்தைப் போலவே இதுவும் இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் துருப்புச்சீட்டு. அவ்வளவே.

கலவரத்தைத் தூண்டும் கருவியாக அயோத்திப் பிரச்சினை அரங்கிற்கு வருவதற்கு முன்பு வரையில் இராமன் இருந்த இடத்தில், மாடுதான் இருந்து வந்தது. கோயில் வாசலில் கோமாதாவை வெட்டி விட்டார்கள் முஸ்லிம்கள் என்ற வதந்தியைப் பரப்பித்தான், நூற்றுக்கணக்கில் கலவரம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை வெட்டியிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். காலிகள்.

கோயில் வழிபாட்டை ஆக்கிரமித்துக் கொண்டதாக இருக்கட்டும், புலால் உணவைத் துறந்ததாக இருக்கட்டும், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவற்றையெல்லாம் தனது மேலாதிக்க நோக்கத்துக்குப் பார்ப்பனியம் பயன்படுத்திக் கொண்டதோ, அவற்றையெல்லாம், சமூகத்தின் இலட்சியப் பண்பாடாக அது சித்தரித்து வந்திருக்கிறது. அந்த வகையில் புலால் உணவை மறுக்கின்ற பார்ப்பன-பனியா பண்பாட்டை இந்துக்கள் அனைவரின் பொதுப்பண்பாடாக காட்ட தற்போது முனைந்திருக்கிறது. 2003-ல் ஜெயலலிதா கொண்டுவந்த கிடா வெட்டு தடைச்சட்டமும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

எம்.கே.ஆர் ஃப்ரோசன் ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
மதன் அபோத் என்ற இந்து முதலாளி டெல்லியில் நடத்திவரும் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் – எம்.கே.ஆர் ஃப்ரோசன் ஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

இருப்பினும், ஆகப் பெரும்பான்மையான மக்கள் புலால் உண்பவர்கள் என்பது மறுக்கவியலாத உண்மை. மாட்டுக்கறியோ ஏழைகளின் மலிவான மாமிச உணவு. இந்தியாவின் புலால் உற்பத்தி ஆண்டுக்கு 63 லட்சம் டன். இதில் 40 இலட்சம் டன் மாட்டுக்கறிதான். 22 லட்சம் டன் இந்தியாவில் உண்ணப்படுகிறது. 18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வட கிழக்கிந்திய மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு எவ்வித தடையும் கிடையாது. கேரளா, தமிழ்நாடு, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் பயன்படாதவை என்று சான்றளிக்கப்பட்ட பசுக்களை வெட்டலாம். ஆந்திரா, பீகார், ஒரிசா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் காளைகளை வெட்டலாம். இப்படி பலவிதமாக சட்டம் இருக்கக் காரணமே, சிறுபான்மை மதத்தினர் மட்டுமின்றி, தலித் மக்கள், பழங்குடியினர், பல மாநிலங்களில் சாதி இந்துக்கள் உள்ளிட்டோர் மாட்டுக்கறி உண்பதுதான்.

இருந்த போதிலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் இசுலாமியர்கள் என்பதால் அச்சமூகத்தைப் பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் வக்கிர நோக்கம் இச்சட்டத்தைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஆனால், இச்சட்டம் முஸ்லிம்களைப் பாதிப்பதைக் காட்டிலும் அதிகமாக விவசாயிகளையும் தலித் மக்களையும் ஏழைகளையும்தான் பாதிக்கிறது.

“பெண்டாட்டி பிள்ளைக்கே சோறு போட முடியாமல் தவிக்கும் நாங்கள் பால் சுரக்காத, உழவுக்குப் பயன்படாத மாட்டைப் பராமரிக்க நாளொன்றுக்கு 200 ரூபாய் எப்படி செலவு செய்வோம்? பயன்படாத மாட்டை விற்றால்தான் புதிய மாடு வாங்க முடியும். விற்பது குற்றம் என்றால், இனி மாடே வேண்டாம் என்று தலை முழுகிவிட வேண்டியதுதான்” என்று குமுறுகிறார்கள் மகாராட்டிரா விவசாயிகள்.

பா.ஜ.க. கும்பல் புளுகுவதைப் போல மாட்டுக்கறி விற்பனையின் காரணமாக மாடுகளின் எண்ணிக்கை குறையவில்லை. 2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2007-ல் இருந்ததைக் காட்டிலும் மாடுகளின் எண்ணிக்கை 7.16% அதிகரித்திருக்கிறது. இந்த தடைச் சட்டத்தின் காரணமாக, பால் மாடுகளையும் உழவு மாடுகளையும் வைத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகள் இனி மாடு வளர்ப்பது கட்டுப்படியாகாது என்று முடிவு செய்தால், அதன் விளைவுதான் மோசமாக இருக்கப்போகிறது. பயன்பாடில்லாமல் போன குதிரைகள் காலப்போக்கில் அருகிப் போனதைப் போல, பல்வேறு ரகங்களைச் சேர்ந்த நாட்டு மாடுகள் நிரந்தரமாக அழிந்துவிடும்.

இன்று பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. கூட்டுறவு பால் உற்பத்தி அமைப்பான அமுல் நிறுவனத்தை குஜராத்தில் உருவாக்கிய குரியனுக்கு இதில் முக்கியப் பங்குண்டு. பசுவதைத் தடைச்சட்டம் பால்மாடு வைத்திருக்கும் விவசாயிகளை அழித்துவிடும் என்று சங்கராச்சாரியிடமே சென்று வாதாடியவர் குரியன். விளைநிலத்திலிருந்து விவசாயியை விரட்டி விட்டு, கார்ப்பரேட் விவசாயத்துக்கு கால்கோள் இடுவதைப் போல, பால் உற்பத்தியிலிருந்தும் விவசாயியை விரட்டுவது, இந்த சட்டத்தின் பின்புலத்தில் மோடி போட்டிருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்

உலகில் மாட்டுக்கறி (எருமை மாடு) ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் முன்னணி மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனங்கள் ஆறில் நான்கின் முதலாளிகள் இந்துக்கள். அவற்றில் மும்பையை தலைமையிடமாக கொண்ட இரண்டு நிறுவனங்கள், அல் கபீர், அரேபியன் எக்ஸ்போர்ட் என்று இசுலாமியப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருப்பதை முஸ்லிம் மிர்ரர் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. நிறவெறி பிடித்த பார்ப்பனியம், பசு மாமிச ஏற்றுமதிக்குத்தான் தடை விதித்திருக்கிறது. எருமைக்கறி ஏற்றுமதியை அனுமதித்திருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு கோ மாமிசத்தையும் எருமைக்கறி என்று லேபில் ஒட்டி ஏற்றுமதி செய்கிறார்கள் மேற்படி ஹிந்து ஏற்றுமதியாளர்கள். பத்திரிகையாளர் வீர் சங்வி இதனை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அதேபோல, மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் குஜராத். மாட்டுக்கறி தடை செய்யப்பட்ட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மாட்டுக்கறிக்கு நட்சத்திர விடுதிகளில் தடை இல்லையாம். ஏனென்றால், அது இறக்குமதி செய்யப்பட்ட கோமாமிசமாம். ஏற்றுமதிக்கும் தடை இல்லை, இறக்குமதிக்கும் தடை இல்லை. உள்நாட்டு உபயோகத்துக்குத்தான் தடை!

காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பிளவுபடுத்த பசுவதையைப் பயன்படுத்திக் கொண்ட பார்ப்பனியம், இன்று மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப எடுத்திருக்கும் புதுப்பிறவி இது. வலக்கரத்தில் கோமியம், இடக்கரத்தில் ஹாம்பர்கர்! கேலிக்கூத்துதான். ஆனால், இதனை வீழ்த்தத் தவறினால் குஜராத்தைப் போன்றதொரு ஊழிக்கூத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

– மருதையன்
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________

  1. இதுக்கு இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டியது இல்லை… மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டம் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது… புடையிலை தடை சட்டம், பொது இடத்தில் புகை பிடித்தால் 1000 ரூபாய் அபராதம் என பல நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்கள் “பேப்பர்” வடிவில் மட்டுமே இருக்கும்… சைக்கிளில் “லைட்” இல்லாமல் சென்றால் அபராதம் விதிக்கும் சட்டம் இன்னும் அமலில் உள்ளது, ஆனால் சர்க்கார் அதை நடைமுறை படுத்துவதில்லை… சில மாதங்களில் இதுவும் மறந்து போகும்…தேவையில்லாம் இதை போராடி பெரிது படித்தாமல் இருந்தாலே சரி.

    • நீங்கள் சொல்ற சட்டம் எல்லாம் அணைத்து இந்தியர்களையும் பாதிப்பவை.
      இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பாதிக்கிறது .

      இதை காவல்துறை ,அரசியல்வாதிகள் டாங்கோ தவறாக பயன்படுத்தாது என்று என்ன நிச்சயம் ? உண்ணும் உணவு கூட சட்டத்திற்கு பயந்து உன்ன வேண்டுமா ?

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க